நீலகண்டக் கவி பாரதி
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
(*12, செப்டம்பர் 2021 பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது)
சொன்னதெல்லாம் சொல்லாததையும் சுமந்ததாக
சொல்லாத எதையெல்லாம் சுமந்து போனாயோ
சுப்ரமண்ய பாரதீ…
சொப்பனவாழ்க்கையின் சூட்சுமத்தை
இப்பொழுதும் பாடிக்கொண்டிருப்பாயோ?
செத்து
முடித்த பின்னான இத்தனை
வருடங்களில்
இன்னொரு சொர்க்கம் சமைத்திருப்பாயோ ?
தனியொருவனுக்குணவிலாதுபோவதறியா
பிரபஞ்சமதில் உனக்கு
முன்னும் பின்னுமான
வரகவிகளோடு
இறக்கை
விரித்துப் பறந்தவாறே
இலக்கியம் பேசிக்கொண்டிருப்பாயோ?
இயற்றிக்கொண்டிருப்பாயோ நந்தமிழில்
சுந்தரக்கவிதைகளை?
அந்திப்பொழுது அங்கு
நீலார்ப்பணமாயிருக்குமோ?
பட்டுக்கருநீலப் புடவை
பதித்த
நல்வயிரமாய
நட்சத்திரங்களைத் தொட்டுணர முடியுமோ?
நாலுமே
பலித்திட வரமருள
இயலுமானால்
நல்குவா யதை
நாங்கள் கேட்கத் தயங்கினாலும்.
நினைவுநாளில் மறுபடியும் பிறந்துகொண்டிருக்கும்
நீயாகி
நானாகி
அவராகி
அதுவாகி வானாகி
மண்ணாகி _
வாழ்வாங்கு வாழட்டும் வாழ்வு.
வெந்துமடியட்டும்
ஏற்றத்தாழ்வு..
No comments:
Post a Comment