LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, September 9, 2019

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் 3 கவிதைகள்



ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் 3 கவிதைகள்

 

1.  

      1. இருத்தலியலில் மனசாட்சியின் முக்கியப் பங்களிப்பு

தன்னிடமில்லாத மனசாட்சியை என்னிடம் எதிர்பார்த்தவரிடம்
அதெப்படி நியாயம் என்றேன்.
தன்னிடம் இல்லாத நியாயத்தை என்னிடம் எதிர்பார்த்தவரிடம்
அதெப்படி சரியாகும் என்றேன்.
தன்னிடம் இல்லாத சரியை என்னிடம் எதிர்பார்த்தவரிடம்
இன்னுமென்னென்னவோ விதங்களில் நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம்
கிடைத்த ஒரே பதில் _
'என் தவறுகள் மிகச் சரி
உன் பிழைகள் ஏற்கவேண்டும் கொலைப்பழி
முடிந்த மட்டும் கூட்டிக் கழி
எம்மட்டில் இதுவே என் வழி'.
விழி பிதுங்க வாயடைத்து நின்ற எனக்கு
யாருடைய மனசாட்சியோ அருவ அச்சுருவில்
குறுஞ்செய்தி யனுப்பிருந்தது:
மனசாட்சி இல்லாத மனிதர்களே யில்லை
என்னவொன்று _
பலநேரங்களில் பலருடையவை கூண்டிலேறி
பொய்சாட்சியமளித்துவிடுகின்றன.

Ø  
2.  மறைக்கப்படும் உண்மைகள்




மைக்கேல் ஜாக்சனிடமிருந்து காப்பியடித்தால்
மிக உடனடியாக மாட்டிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்
எனவே, பாகிஸ்தானிய பிரபலப் பாடலிசையை
சுட்டுக்கொள்ள கட்டுச்சோற்றுடன் கிளம்பிவிடுகிறவர்கள்
நிறைய பேர் நம்மிடையே அன்றும் இன்றும்.
அப்படித்தான்
புள்ளிவிவரங்களைக் கொட்டிப்பேசி
அறிவாளிப்பேச்சாளர்களாகிவிடுவோர் அனேகம்.
தரப்பட்ட தரவுகளின் உண்மைத்தன்மை அறிய
நிறையவே மெனக்கெடவேண்டும் என்பதோடு
கிடைத்த விவரங்களைப் பகிர்வதும்
அத்தனை சுலபமல்ல.
அப்படித்தான்
இன்று பெரியாளாகிவிட்ட பத்திரிகையாளரொருவர்
சிரியாவின் வளர்ச்சியைப் புகழ்ந்துபேசினார்.
தன் நாட்டை மறைமுகமாக ஒப்பிட்டு மதிப்பழிப்பது
என்றுமான Hidden Agenda.
மடாக்குடியர்களும் மண்ணாந்தைகளல்ல.
பல்வலி யுடன் 'இல்' திரும்பிய கையோடு
கூகுளில் தேடியதில் கிடைத்த முதல் தகவலறிக்கை:
சிரியாவின் பரப்பளவு:
71,498 square miles (185,180 square kilometers).Aug 1,
2019

மக்கட்தொகை :
183 லட்சம் (*2019 Estimate)
இந்தியாவின் பரப்பளவு:
3,287,263[6] km2(1,269,219 sq mi)[d]
மக்கட்த்தொகை:
13392.00 லட்சம் (2017)

Ø  

3.  தூரிகை
நிறங்களுக்கு நிறையவே உண்டு தனித்துவங்கள்.
இரண்டறக்கலந்து செய்யும் மாயாவினோதங்கள் மொழிமீறியவை.
பச்சையோ, வெண்மையோ, சிவப்போ ஊதாவோ
நிறங்களின் பெயர்கள் நிறங்களுக்கு மட்டுமானவையல்ல.
எனில், நிறங்கள் அந்தப் பொருள்களுக்கு மட்டுமானவையுமல்ல.
மாணாக்கர்களை ஒப்புநோக்கி மதிப்பழிக்கலாகாது
மயிலைப் பார்த்து வான்கோழி ஆடியதாக ஏன் சொல்லவேண்டும்?
அவரவருக்குப் பிடித்த நிறம் அவரவருக்கு.
அதற்காய் அடுத்த நிறங்களைத் தூற்றியாகவேண்டுமா என்ன?
விடியலுக்கு சாம்பல்நிறம் அல்லது வெளிர்வெண்மை
இளங்காலைக்கு துளிர்மஞ்சள்
மதியம் கண்ணைப்பறிக்கும் பாதரசம்
அந்திக்கு ஆரஞ்சு, காவி அல்லது அடர்சிவப்பு
முன்னிரவுக்குக் கருநீலம்
பின் இரவுக்கு அடர் கருமை
பின்னிப்பிணைந்து நாளும் நிலம் மீதான நம் இருப்பை
வண்ணமயமாக்கிக்கொண்டிருக்கும் நிறங்கள்.
மகத்தான Multi-colour ஓவியம் வாழ்க்கை.


Ø

No comments:

Post a Comment