LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, September 10, 2019

விரலின் குரல் - ‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)


விரலின் குரல்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

இளையராஜாவின் அற்புத இசை ராஜேஷ் வைத்யாவின் வீணையில்.....விரல்கள் குரல்களாகிப் பாடும் விந்தை என்னை என்றுமே அதிசயத்தில் ஆழ்த்துவதுஇந்த வீணைக்காரருக்கு இந்த என் கவிதையை சமர்ப்பணம் செய்கிறேன்.

அந்த விரல்களிலிருந்து பரபரவென்று பாய்ந்திறங்கி வீணைவெளிக்குள் சென்றவர்கள்
உள்ளிருந்து உருகிப்பாடுவது
அரங்கமெங்கும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.
அல்லது வீணைவெளியிலிருந்து அவர்கள் விரல்களுக்குள் ஏறிக்கொண்டார்களா?
அந்த அருவ சேர்ந்திசைக்காரர்களைப்
பார்க்கவேண்டும்போலிருக்கிறது.
இனம்புரியா நிறைவில் கனிந்தொளிரும் முகங்களைப் பார்க்க
அத்தனை அழகாயிருக்கிறது!
வீணைத்தந்திகளின் மீது துள்ளிக்குதித்துக் களித்தும்,
கண்ணீர் விட்டுக் கதறியும்,
காலெட்டிப்போட்டுக் காலாதீதத்திற்குள் எட்டிப்பார்ப்பேன் என்று பிடிவாதம்பிடித்தும்,
கத்துங்கடல் முத்துகளைக் கோர்த்துக்காட்டும்,
கடைசிச் சொட்டு வாழ்வை கணநேரம் தரிசிக்கச் செய்யும்,
அமுதமே மழையெனப் பெய்யும்
அந்த விரல்களின் நுனிகளிலிருக்கும்
கண்ணுக்குத் தெரியாத சின்ன வாய்களில்
கண்ணனின் அகில உருண்டையைக்
காண ஏங்கிக் கசியும் விழிகள்.
இலக்கணமறியா இசையால் ஆட்கொள்ளப்பட்ட மனம்
அந்த விரல்நுனிகளுக்கும் வீணைத்தந்திகளுக்கு மிடையேயான
ஆகர்ஷணத்தால் ஆட்கொள்ளப்பட்டஅணுத்துகளாகி
MANI BHAUMIK
இன் CODE NAME GOD நன்றியுடன் நினைவுகூர்கிறது.
இருமடங்கு உயிர்த்தலை சாத்தியமாக்கிய
சில மனிதர்களும் தருணங்களும் தொலைதூரத் திலிருந்து
என்னைப் பார்த்துக் கையசைக்க
இசை யொரு கண்ணாமூச்சி யாட்டமாக என்னை
யெங்கெங்கெல்லாமோ தேடச்செய்யும் இந்நேரம்
என்னைநானே தொலைத்தபடியும் கண்டுபிடித்த படியும்…….
______________________________________________

No comments:

Post a Comment