LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, January 19, 2018

இன்னொரு வாழ்வு ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இன்னொரு வாழ்வு
 ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
 (*from my forthcoming 11th poem-collection எதிர்வினை)


வழிதவறி தொலைந்த குழந்தையாய்,
நம்பிக்கைத்துரோகத்துக்கு ஆளான
காதல்வயப்படவர்களாய்,
நாய்வாலின் நிமிராச் சுருளாய்,
மஞ்சளாகிக்கொண்டே வரும் இலையின்
அலைக்கழிப்பாய்,
மொழியறியாப்பாடலொன்றின்வழி யான
மனத்தளும்பலாய்
கண்முன்னே களவுபோகும் காலம் வரவாக்கும்
கையறுநிலையாய்
ஆழ்மனதில் குழம்பித்தவிக்கிறது
கவிதைபோல் ஒன்று.

v       

குற்றச்சாட்டல்ல கவிதை;
குறுக்குவிசாரணையல்ல.
கூண்டுக்கைதியல்ல கவிதை;
கடுங்காவல்தண்டனையல்ல.
வாதப்பிரதிவாதங்களல்ல கவிதை;
வழக்காடுமன்றமல்ல.
வாக்குமூலமல்ல கவிதை;
விலங்கிட்ட கரங்களல்ல.
முகமூடியல்ல கவிதை;
மூதுரைகளுமல்ல.
முத்துமணிவயிரமல்ல கவிதை
முழக்கயிறல்ல.
பகையல்ல கவிதை;
போருமல்ல;
வியூகமல்ல கவிதை;
வெற்றியுமல்ல.
விழவல்ல கவிதை;
விழிநீரல்ல;
வித்தகமல்ல கவிதை;
விளம்பரமல்ல…..

அரைத்தூக்கத்தி லாழ்ந்துபோன மனதில்
கணநேரக் கனவாய் கரையுமோர் அசரீரி:
உடல் பொருள் ஆனந்தி…..’


v 

உறக்கக் கரையோரம்
இருக்கும்போதும்
தண்ணீரில் மிதந்துவரும் புட்டியும்
அதனுள்ளிருக்கும் காகிதத்துண்டும்
தவறாமல் தெரிகிறது
விழிக்குள்ளான விழிகளுக்கு _
விரியுங் காட்சியின் கருணை
யருங் கவிதையாக.


v 

குறுக்கே மறிக்கும் உறக்கத்தை
கைகளால் சுருட்டியெடுத்துக்
கக்கத்தில் இடுக்கிக்கொண்டு
மனமும் விரலும் மணத்துயிர்க்க
மறுபிறவியெடுக்கவேண்டும் கவிதையில்


v 

No comments:

Post a Comment