LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, January 19, 2018

மலையின் உயரம் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

மலையின் உயரம்
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)
(* From my forthcoming eleventh poem -collection எதிர்வினை)



ஒருபோதும் மலைகளாக முடியாதவர்கள்,
மலைமேல் ஏறக்கூட முடியாதவர்கள்
மலையின் அடிவாரத்தில் நின்று அண்ணாந்துபார்த்தாலே
மளுக்கென்று கழுத்து சுளுக்கிக்கொள்கிறவர்கள்
மலையிலிருந்து உருளும் ஒரு கல்லைக் காட்டி
மலை மாபாதகம் செய்துவிட்டதாக 
மண்ணை வாரித்தூற்றுகிறார்கள்;
காலமெல்லாம் கையில் கற்களோடு
சுற்றிக்கொண்டிருப்பவர்கள்
பாவனைக் கண்ணீர் பெருக்கிக்
கருணைக்கடலாகிவிடுகிறார்கள்.
கனியிருப்பக் காய் கவரலாமோ என்ற குறட்பாவை
மேற்கோள் காட்டி கையோடு
தனித்துவமான தமது வசைபாடலை
ஒலிக்கச்செய்கிறார் கோரஸ்களோடு.
கலி முத்திப் போச்சுஎன்பதாய் கவனமாய்
நவீன தமிழில் கருத்துரைத்து
எலிப்பிள்ளை என்றுரைப்பார் கிளிப்பிள்ளையாய்
வலிய சிங்கத்தை.
எத்திசையிலும் அலைபாய்ந்திருக்குமவர் கண்கள்
பித்தளையாகக் காட்டி ஒரு ஒப்புநோக்கலில்
தன்னைப் பத்தரைமாற்றுத் தங்கமாகப் பறைசாற்ற
எங்கேனுமிருப்பாரோ இளிச்சவாயர்கள் என்று கண்காணித்தபடி.
ஒருவரிடம் காரியம் ஆகவேண்டியிருந்தால் அவரை ஆதரிப்பார்;
இன்னொருவரிடம் இன்னொரு காரியம் ஆகவேண்டியிருந்தால் 
அவரையும் ஆதரிப்பார்.
பாரபட்சமே நீதிநெறியாக
கையில் எப்போதுமிருக்கும் துலாக்கோல்
தட்டின் அடியில் ஒட்டிய புளியோடு.
எவரைப் பரிச்சயப்படுத்திக்கொண்டால் என்ன ஆதாயம்
என்ற மனக்கணக்கில்,
மருந்துக்கும் புத்தகங்களைத் தொடாமலேயே
சேருமிடம் சென்று வென்று கொன்று மென்று
பாஸ்மார்க், முதல் வகுப்பில் தேர்ச்சி, டிஸ்டிங்ஷன் 
தங்கப்பதக்கம் என்று படிதாவிப்படிதாவிச் 
செல்பவர்களுக்குத்தான்
குறிப்பாக மலையைக் கண்டால் வெறுப்போ வெறுப்பு.
தட்டாமாலை தாமரப்பூ சுத்திச்சுத்தி வந்தாராம்என்ற
குழந்தைக்குதூகலமாய்
விளையாட வாயேன்என்று வெள்ளந்தி பாவனையில் 
மலையை அழைப்பார்;
தலையைத் தழைத்தால் முகடு வெட்ட வாகாய்
வெட்டரிவாளை ஒளித்துக்கொண்டு.
இறங்கிவர மறுக்கும் மலையைப்
பெருமுதலாளி என்று பழிப்பார் _
இருபத்தியிரண்டு செல்லப்பிராணிகள் வைத்திருப்பார்.
இன்னும் என்னென்ன ரகங்கள் இங்கே என்றெண்ணி
புன்னகை பூக்கிறது
இயல்பே உயரமான மலை.
உயரேயிருந்து பார்க்க எல்லாம் தெரியும் மலைக்கு.
மலையை மடுவாக்கும் கனவைக்கூட நாம் கண்டுவிட இயலாது.
முன்னே நின்று நீ உறுமுவதெல்லாம்
முனகல் மட்டுமே மலைக்கு;
முட்டிமோதினாலோ சேதாரம் உன் தலைக்கு.


Top of Form

No comments:

Post a Comment