LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, June 10, 2025

படைத்தால் மட்டும் போதுமா? - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 படைத்தால் மட்டும் போதுமா?

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)


எந்த மேடையில் எந்தெந்தப் பெயர்களைப் பட்டியலிடவேண்டும்
என்று தெரிந்துவைத்திருக்கும் எளிய சூட்சுமம்கூடக் கைவரப்பெறாதவர்
எத்தனை சிறந்த எழுத்தாளராயிருந்தா லென்ன?
என்ன இருந்தாலும் அந்த மேடையில் அவர்
இந்தப் பெயரைச் சொன்னது அபத்தம்.
இந்த மேடையில் அந்தப் பெயர்களைச் சொன்னது அபச்சாரம்
ஏதோ அழைத்தார்களே என்று
எந்தவிதமான ’ஹோம்வர்க்’கும் செய்யாமல் போய்
பேசத்தொடங்கினால் எப்படி?
நான்கைந்து மேடைகளில் அவரைப் பேச அழைத்தவர்கள்
நல்லது என்று தான் மனமார நம்புவதைப் பேசுபவர் நமக்கெதற்கு
என்று ஒருமனதாக முடிவெடுத்தனர்.
பிறகு எத்தனையோ இலக்கியக்கூட்டங்கள் நடந்தேறின.
அந்தப் படைப்பாளி அழைக்கப்படவேயில்லை.
அப்பா, ஏன் இப்போதெல்லாம் கூட்டத்திற்கு அழைப்பதில்லை உங்களை?
போனால் அழகான பூங்கொத்து கொண்டுவருவீர்களே என்றாள் மகள்.
பின்னே, பொற்கிழியா கிடைக்கும் என்று
வழக்கம்போல்அலுத்துக்கொண்டாள் மனைவி.

நிலை(ப்)பாடு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நிலை(ப்)பாடு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அதிகபட்சமாக அறுபதுபேர் கூடியிருக்கும் அரங்கில் அவர்
ஆயிரம்பேர் இருப்பதான மயக்கத்தில் இருகால்களால் உருண்டவாறிருக்கிறார்.
பொருட்படுத்திக் குனிந்து அரிய முத்து என்று கையிலெடுத்து
விறுவிறுவென அரங்கெங்கும் பொடிநடையாய் நடந்து அவரிவரெவரெவரிடமோ தன்னை அறிமுகப்படுத்தி
தன் அருமைபெருமைகளையெல்லாம்
சிறு சிறு ஹைக்கூ கவிதைகளாகவோ
அல்லது இறுதியற்ற நீள்கவிதையாகவோ
விரித்துரைப்பார் என்ற அவரது நம்பிக்கை
பொய்யாக
சுருட்டியெறியப்பட்ட காகிதக்கிழிசல்களாய்
சிறு பெரு பாதங்களால் இரக்கமற்று எத்தப்பட்டும்
திரும்பத்திரும்ப அரங்கரங்காய்ப் போய்க்கொண்டிருந்தவருக்கு
அறுபதென்பது அறுபதாயிரமாய்ப் புரியத்தொடங்கியபோது
அவருக்கு வயது அறுபத்தொன்பதுக்கு மேலாகியிருந்தது.
வருத்தமாயிருக்கிறது அவரைப் பார்க்க
கவிதைக்கான மனப்பிறழ்வின் முழுவிழிப்பை
யொருபோதுமடைய மாட்டாதவர்கள்தான்
புகழுக்கான பிரமைபிடித்தவர்களாகி
விடுகிறார்கள் என்று
அவரிடம் எப்படிச் சொல்லிப் புரியவைப்பது?

ஏற்ற இறக்கங்கள் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஏற்ற இறக்கங்கள்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

முனைப்பாகப் படித்துக்கொண்டிருந்தார் கேள்விகளை
மனக்கண்ணால்.
நான்கைந்து சொற்கள், சொல்வழக்குகள் தரப்பட்டிருந்தன
வினாத்தாளில்.
ஒவ்வொன்றுக்கும் ஐந்து முதல் ஐம்பது வரை மதிப்பெண்கள்.
’மலையேறிவிட்டது காலம்’ என்ற வரியை மொழிபெயர்க்க
எத்தனை முயன்றும் முடியாமல்
மூச்சுத்திணறிக்கொண்டிருந்தார் மொழிபெயர்ப்பாளர்.
’வடக்கிருத்தல்’ என்ற சொல்வழக்கு நல்லவேளையாக தரப்பட்டிருக்கவில்லை.
அதற்காய் ஆறுதலடைய முடியாதபடி
‘அவன் சரியான சாம்பார்’
ஆறாவது கேள்வியாக இடம்பெற்றிருந்தது.
தலைசுற்றவைக்க அதுபோதாதென்று
’விழல்’ கண்ணில் பட்டு
அழத்தூண்டியது.
’கீழே விழலா’ ’விழலுக்கு இறைத்த நீரா’ என்று
contextஇல் வைத்துப் புரிந்துகொள்ளலாமென்றால்
இருபொருளையும் தருமொரு சொல்லாயிருந்த அது
அத்தனை வெள்ளந்தியாய்ச் சிரித்துக்கொண்டிருந்தது.
முதலில்,
மலையேறிவிட்ட காலத்தை இறக்கவேண்டும்.
எப்படி?
முதன்முதலில் காலம் மலையேறியது எப்போது?
எதன்பொருட்டு ஏறியது?
மலையில் வடக்கிருக்கிறதோ காலம்?
ஒருவேளை இது ஆங்கில columnமோ?
சாம்பார் ஜெமினிகணேசன் மட்டும்தானா?
வேறு யாரேனுமா?
நிஜமா நிழலா சாம்பார்?
அப்படியானால் குறியீடு நிழலா?
நிழல் shadow நிழல் shade….
ஒன்றும் இரண்டும் மூன்றென்பது
சரியும் சரியல்லவும் _
மொழிபெயர்ப்பிலும்.
மொழியேறியும் இறங்கியும்
வழிபோகியபடி
இருந்தவிடமிருந்தவாறு
காத்துக்கொண்டிருக்கிறது காலம்
ஏறவும் இறங்கவுமான மலைக்காக.
காத்துக்கொண்டிருக்கிறார்கள்
மொழிபெயர்ப்பாளர்கள் சிலரும்
மிகச் சரியான இணைச்சொற்களுக்காய்.
’போயும் போயும் இதற்காகவா பொழுதை வீணடிப்பார்கள்’
என்று வேறு சிலர்
கையில் கிடைத்த வார்த்தைகளைக்கொண்டு
குத்துமதிப்பா யொரு பொருளைத் தந்து
பத்தரைமாற்று இலக்கணப் பிழைகளோடு
அயர்வென்பதறியாமல்
பெயர்த்துக்கொண்டிருக்கிறார்கள் இருமொழிகளை.

பூதகணங்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பூதகணங்கள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

(*நான்காம் தொகுப்பு – காலத்தின் சில ‘தோற்ற’ நிலைகள்
(2005 இல் வெளியானது)
1
காலாதிகாலம் குடுவைக்குள்ளிருந்துவரும் பூதம்.
மூச்சுத் திணறி விழி பிதுங்கி
வெளிவந்தாகவேண்டிய நாளின்
நிலநடுக்கங்களை
நன்றாக உணர முடியும் அதன்
நானூறு மனங்களால்.
முதலில் தகரும் குடுவையின்
உறுதியை
அறுதியிட்டபடி நகரும்
பகலிரவுகள்.
பாவம் பூதம் குடுவை காலம், நான் நீ யாவும்….
2
நிராதரவாய் ஒரு மூலையில் சுருண்டு கிடக்கும்
பூதத்திற்கு
ஆடிக்கொரு நாள் அரைவயிற்றுக் கஞ்சியும்
அமாவாசைக்கொரு நாள்
சிறு துளி நிலவும்
ஈயப்படும்.
செவிக்குணவு ஸ்ருதிபேதங்கள்,
நிராசைகளின் பேரோசைகள்,
நாராச நிசப்தங்கள்
என்றாக
போகும் வழியெல்லாம் பெருகிவரும் அகதிமுகாமில்
இருகால் மிருகங்களாய் சிறு
புழுப் பூச்சிகளாயும்
பாவம் பூதம் குடுவை காலம் நான் நீ யாவும்….
3
வாரிசைப் பெற்றெடுக்காததால்
வெறும் பூனையாகிவிடுமோ பூதம்?
எலியைக் குடுவைக்குள் விட்டால்
என்ன நடக்கும் பார்க்கலாமென
காதுங் காதுமாய் கிசுகிசுத்துக்கொண்டார்கள்.
கத்தித் தீர்த்தார்கள் குரல்வளை கரிந்தெரிய.
குடுவை மூடியைத் திறக்கத் துணிவில்லை.
உள்ளே
தனது மூன்றடி மண்ணுக்காய்
தவமிருந்துகொண்டிருக்கக்கூடும் அது.
பாவம் பூதம் குடுவை காலம் நான்
நீ யாவும்…..
4
இன்னும் தன்னை நுண்ணுயிராக்கிக்கொண்டு
இரத்தவோட்டத்தில் நீந்திச்செல்லும் பூதம்
இரப்பை, நுரையீரல், மலப்பாதை, சிறுநீரகமென
மென்மேலும் பயணமாகி
உடலியக்கத் தொழில்நுட்பத் திறன் கண்டு
வெட்கிப் போனதாய்
அடிமுடியெல்லாம் செந்நிறமணிந்து
கோலம் புதிதாகக் கொண்டாடிய கணமொன்றில்
குடுவை தாயின் கருவறையாகத் தோன்ற
தலைசாய்த்துக் கண் மூடியது
கோபதாபங்களில்லாது.
பாவம் பூதம் குடுவை காலம் நான்
நீ யாவும்….
5
வீதியெங்கும் பெருகியோடிக்கொண்டிருக்கின்றன
கழிவுநீர்கள்…..
பாதாளச் சாக்கடையிலிருந்து கிளம்பிவரும்
மனிதவுடல் நாறும் மலக்கிடங்காய்.
கண்ணாடியின் சன்னத்திலான மென்தேக
இடுப்பின் வளைவு தாங்கும்
குடங்கள் எண்ணிறந்ததாய்.
ரயில் நிலையப் படிக்கட்டுகளின் ஓரங்களில்
நீளும் கைகளின் மொண்ணை விரல்கள்
தகரத்தை விழுங்கியதாய் இருமியவாறு.
வராத சவாரிக்காய் விழி பூத்திருக்கும்
சைக்கிள்ரிக்‌ஷாக்காரர்.
சுடச்சுட ‘சிங்கிள் டீ’யை கை வேக
விநியோகிக்கும்
விடலைச் சிறுவர்கள்.
சீறிச்செல்லும் வாகனங்களுக்கிடையே
சிக்கிநிற்கும் வெறுங்காலாட்கள்….
வர்ணமயமாக்கலுக்கு அப்பால் அவர் தம்
கால்களின் வெறுமை
உயிர்நிலையைக் கிழித்தெறிய
காதறுந்த ஊசியும் கூட வராத வாழ்வில்
அழிந்துகொண்டிருப்பவர்களுக்கு
ஆதரவாக
தன் விசுவரூபத்திற்கான ஏக்கம்
தாக்கி மோதும் எப்போதும்.
பாவம் பூதம் குடுவை காலம் நான்
நீ யாவும்…..

மோசமான முன்னுதாரணங்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மோசமான முன்னுதாரணங்கள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

இலக்கிய மாபெரும்வெளியின் நீள அகலங்களை
அளந்துகூறும் உரிமைபெற்றவர்
தான் மட்டுமே
என்ற நினைப்புள்ளவர்கள்;
துலக்கமான விமர்சனம் என்ற பெயரில்
வழக்கமான வன்மத்தூற்றலையே
கலக்கிக் குழப்பி வாரியிறைப்பவர்கள்;
பலமெல்லாம் தன் எழுத்தென்றும் சுகவீனமே
பிறர் படைப்பெனவும்
பலகாலமாய் நம்பிக்கொண்டிருப்பவர்கள்;
தன்னை முன்னிறுத்தாதவர்களின்
மௌனக்கடலில்
ஆனமட்டும் மீன்பிடித்து விற்பவர்கள்;
அதுவே வணிகவெற்றிச்சூத்திரமாக
அன்றாடம் கடைவிரித்துக்கொண்டிருப்பவர்கள்;
மாற்றுக்கருத்தாளர்களைக் மதிப்பழிப்பதற்கென்றே
மிகுகொச்சை வார்த்தைகளை
முடிந்துவைத்திருப்பவர்கள்;
மதிப்பார்ந்த சொற்களில் சதா கூர்வாளை
மறைத்துவைத்திருக்கும்
புன்மதியாளர்கள்;
பெருங்கடலின் நட்டநடுவில் தன்னால்
வெறுங் காலில் நிற்கமுடியும் என்று
உருவேற்ற முடிந்தவர்க்கெலாம்
உருவேற்ற முனைபவர்கள்;
ஒருமை பன்மை தன்மை முன்னிலை
யெல்லாமும்கூட
தன் காலடியில் தெண்டனிட்டு மண்டியிட்டுக் கொண்டிருப்பதாக
இன்கனா கண்டிருப்பவர்கள்;

ஒரு ரோஜா தன் எழுத்தால் தான்
ரோஜாவாகிறது என்று தன்னைத்தானே
தாஜா செய்துகொள்பவர்கள்;

”ஆஜா…. ஆஜா” என்றும் “வா வா வா” என்றும்
‘வாரே வாஹ்’ என்றும் WOW! HOW WONDERFUL!’ என்றும்
அறிந்த மொழிகளிலெல்லாம் தனக்குத்தானே
ஆரத்தியெடுத்துக்கொண்டிருப்பவர்கள்;

பளபள இலக்கிய பல்லக்கில் பவனி வந்தபடி
பல்லக்குத்தூக்கிகளின் பட்டியலை
கவனமாய் கண்காணித்துக்கொண்டிருப்பவர்கள்:

காலத்திற்குமாய் ஆவணப்படுத்திக்
கொண்டிருப்பவர்கள்;

படைப்பகராதியின் அத்தனை சொற்களையும் அவற்றுக்கான பல்பொருள்களையும்
நடையாய் நடந்துநடந்து தானே கண்டுபிடித்துக்
கொண்டுவந்துசேர்த்ததாய்
தான் நம்புவதுபோல் எல்லோரும்
நம்பவில்லையே
என்று வெம்பிக்கொண்டிருப்பவர்கள்;

நல்ல இசையொன்றை இனங்கண்டு சொல்லி
கூடவே இன்னொரு நல்ல இசையை
நாராசமெனவும் சொல்லி
அதை அழகியல் அறிவியல் அருளியல்
அறவியல் சார் அரசியல் பேசி
அலசித்தள்ளி
அதி எளிதாய் அநியாயத்தை
நியாயமாக்கப் பார்க்கும்
அராஜவாதிகள்;

அடியில் புளி ஒட்டிய துலாக்கோலை
நியாயத்தராசாகப் பிடித்திருக்கும் அவர்தம்
கைகள்
HANDWASHஐ அடிக்கடி பயன்படுத்தி
கொரோனாத்தொற்றிலிருந்து மீள முடியும்….

அடிமுடியெங்கும் ஆழப் பற்றியிருக்கும்
'தானா'ன நோய்த்தொற்றிலிருந்து
சற்றும் மீள முடியுமோ…?

UPS & DOWNS - REMINISCENSES OF MR.VENKATESH

 UPS & DOWNS  - 

REMINISCENSES OF MR.VENKATESH




“வாழ்க்கை சீட்டுக்கட்டு விளையாட்டைப் போன்றது.’’ என்று எதிலோ படித்திருக்கிறேன். ஒரு குலுக்கலில் இணையும் சிலர் மறுகுலுக்கலில் விலகிச்சென்று விடுகிறார்கள்.

அப்படித்தான், நானும், நான் பெரிதும் மதிக்கும் பத்மினி மேடமும் முடிந்தபோது சென்றுவரும் பூங்காவில் திரு. வெங்கடேஷை சந்திக்க நேர்ந்தது.

மனைவி இறந்த பிறகு ஏறத்தாழ 26 வருடங்கள் தனியாக வாழ்ந்துவருபவர்.

(தேவையெனில் வந்து உதவுவதற்கு அவருடைய மகளும் மருமகனும் மற்ற உறவினர்களும் இருக்கிறார்கள்).

எங்களிருவரின் வலைப் பூக்கள் குறித்துப் பேசும்போது தனக்கும் வலைப்பூ இருந்தால் நன்றாயிருக்கும் என்று விருப்பம் தெரிவித்தார். அவருடைய வலைப்பூ ஆரம்ப மாகி அதில் அவர் ஆர்வமாகப் பதிவேற்றும் கட்டுரைகள் என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அவருடைய வலைப்பூவில் இடம்பெற்றது.

அவருடைய ஆங்கில மொழித் தேர்ச்சியையும், எழுத எடுத்துக் கொள்ளும் விஷயங்களையும் அவற்றை சுவாரசியமாக வெளிப்படுத்தும் பாங்கையும் பார்த்தபோது அவற்றை நூலாக வெளியிடலாமே என்று தோன்றியது. அவற்றையும் அவற்றோடு என்னுடைய மொழிபெயர்ப் பையும் இணைத்து ஒரு நூலாக வெளியிட்டேன்.

இப்போது மின் – நூல் வடிவில் திரு வெங்கடேஷ் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கட்டுரை களும் அவற்றுக்கான எனது மொழபெயர்ப் புகளும் இடம்பெற்றுள்ளன. அமேஸான் Paperback பதிப்பில் ஆசிரியரின் ஆங்கிலக் கட்டுரைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
தோழமையுடன்
லதா ராமகிருஷ்ணன்

ANAAMIKAA ALPHABETS
BOOKS PUBLISHED THROUGH AMAZON DIRECT PUBLISHING AS E-BOOK AND PAPERBACK EDITION.
AMAZON LINKS :
AMAZON KINDLE BOOK(DIGITAL) AND PAPERBACK EDITION OF MR.G. VENKATESH'S COLLECTION OF ESSAYS TITLED UPS 7 DOWNS (a blogger's musings) originally published by ANAAMIKAA ALPHABETS.

IN THE ORIGINAL BOOK ALONG WITH THE ENGLISH ARTICLES MY TAMIL TRANSLATIONS OF THEM ARE ALSO THERE. IN THE KINDLE EDITION(E-BOOK) OF THIS VOLUME THE TAMIL TRANSLATIONS ARE THERE. IN PAPERBACK EDITION THE ENGLISH ARTICLES

(the author wrote these articles originally in English and uploaded them in his blog) are there. i thak the author for giving me permission to publish his book as kindle book and amazon paperback book. - Latha Ramakrishnan