LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, June 2, 2025

ஒரே ஒரு ஊரிலே……… ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஒரே ஒரு ஊரிலே………

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


’யார் மணிகட்டுவது’ என்பதை
’யார் கட்டிவிடப்போகிறார்கள்’ என்றும்
’யாரும் கட்ட வரமாட்டார்கள்’ என்றும்
’யாராலும் கட்டிவிடமுடியாது’ என்றும்
பேர்பேராய்த் தந்த பொருள்பெயர்ப்பைப்
பெரிதும் நம்பிக்கொண்டிருந்த பூனை _
இரவுபகல் பாராது
விரும்பிய நேரமெல்லாம் பாய்ந்து பிடுங்கி
பற்களால் பெருங்கூர் வளைநகங்களால்
பிய்த்தும் பிறாண்டியும்
தானியங்கள் நிறைந்திருக்கும்
கோணிப்பைகள்
பால் பாக்கெட்டுகள்
அந்த அறையில்
சலவை செய்யப்பட்டு
அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்
புதுத்துணிமணிகள்
பார்த்துப் பார்த்து கவனமாய் எழுதிய
கவிதைகள்
கணக்குவழக்குகள்
பத்திரப்படுத்திய முக்கிய ஆவணங்கள்
போர்வைக்கு வெளியே நீண்டிருக்கும்
பிள்ளைகளின் கணுக்கால்கள்
பிறந்தகுழந்தையின் மென்கன்னம்
என கிழித்துக் குதறி ரத்தம் கசியச் செய்து
ரணகாயமுண்டாக்கிக்கொண்டிருந்தது
இத்தனை காலமும்……
எலிகளிலிடமிருந்து ஆட்களைக் காக்கும்
வீட்டுக்காவலனாய்
விட்டால் காட்டுராஜாவாகக்கூடத் தன்னை பாவித்துக்கொண்டிருக்கும்போலும்……
இன்று தன் கழுத்தில் மணி கட்டப்பட்டது எப்படி
என்ற விடைதெரியாமல் அது
நழுவிப் பம்மி இருள்மூலையில் பதுங்க _
’பாவம் பூனை, அதன் பிரியத்தைப் புரிந்துகொள்ள
மனமற்றோர் மாபாவிகள்' என்று
’பிராணியெல்லாம் மனிதனுடைய கொத்தடிமைகளே’
என்று நித்தம் நித்தம் அத்தனை திராணியோடு
அடித்துப்பேசிக்கொண்டிருந்தவர்கள்
கோபாவேசமாக சீறத்தொடங்க _
பேய்மழைக்குக் குடை விரித்த பாங்கில்
வீடுகள் ஆசுவாசமடைய _
மணியோசைக்கு பயந்து பூனை
இருள்மூலையில் மலங்க மலங்க
விழித்துநிற்க_
’இந்தக் கதையில் நீதி உண்டோ ?’
எனக் கேட்டவரிடம்
உண்டென்றால் அது உண்டு;
‘இல்லையென்றால் அது இல்லை’ என்று
வெறும் உருவகமாகிவிட்ட பூனை
மனிதக்குரலில் ’மியாவ்விட்டு
மேலும் சொன்னது :
"கற்க கசடற".

குரலற்றவர்களின் குரல்களாகிறவர்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 குரலற்றவர்களின் குரல்களாகிறவர்கள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
குரலற்றவர்களின் குரலாக இருப்பதான பாவனையில்
அவர்கள் நம் குரலாகிறார்கள்;
ஊமையாக நாம் இருக்கவேண்டுமென்று விரும்புகிறார்கள்;
நம்மை வாயடைத்துப்போகச் செய்கிறார்கள்.
அவ்விதமாய் நம்மை அவர்களின் ஊதுகுழல்களாக்கி விடுகிறார்கள்.

அவர்கள் 'வா' என்கிறார்கள்; நாம் வருகிறோம்;
'போ' என்கிறார்கள். போகிறோம்
‘ஆமாம்’ என்கிறார்கள்
அவர்களுக்கு ‘கோரஸ்’ பாடுகிறோம்.
’இல்லை’ என்கிறார்கள்
அவர்கள் சொல்லை எதிரொலிக்கிறோம்.

அவர்கள் ‘குறைவு’ என்கிறார்கள் _
‘அதிகம்’ என்ற பொருளில்;
மூன்று என்கிறார்கள் நான்குக்கு.
நாம் அவர்களை நம்புகிறோம்
என்றும் போலவே..

பேராசை உந்தித்தள்ள பரபரவென்று
ஏணியில் மேலேறியவாறே
அவர்கள் நமக்குக்கற்றுத்தருகிறார்கள்
உப்பை சர்க்கரையென்று சொல்ல.
மூளைச்சலவை செய்து உருவேற்றுகிறார்கள்
நஞ்சை அமுதமென்று நம்ப.

எல்லாநேரமும் நம்மை அவர்கள் கைவசமே
கட்டுண்டிருக்குமாறு மாயம் செய்து
அவர்களே நமது காவல்தேவதைகள் என்று
கையடித்துச் சத்தியம் செய்யாத குறையாகக்
கூறியவாறிருக்கிறார்கள்.

எல்லாம் நல்லதாகவே இருக்கும்_
நாம் அவர்கள் கூறுவதைக் கேட்டு நடக்கும்வரை
எப்படியோ நமக்கு அவர்களது நிஜமுகம் தெரியவந்தால்
நம் கருத்தை நாம் உரைக்க முனைந்தால்
அழிக்கவேண்டிய
இலக்காக நம்மைக் கொண்டு
அவர்கள் நம்மை எல்லாவழிகளிலும்
வாய்பொத்தியிருக்கச் செய்ய முனைவார்கள்.

அதிர்ந்துபோய்
ஒருவழியாக
நாம் எதிர்த்தெழுந்தால்
நம் குரல்வளையை அறுப்பார்கள்;

அல்லது கைத்துப்பாக்கியால் நம்மை
வழியனுப்பிவைப்பார்கள் _
இறுதி யாத்திரைக்கு.

குறையொன்றும் இல்லை! - லதா ராமகிருஷ்ணன்

 குறையொன்றும் இல்லை!

(லதா ராமகிருஷ்ணன்)
(*மீள்பதிவு)


என் இலக்கியப்பணிக்குப் போதுமான அங்கீகாரம் கிடைக்க வில்லை என்பதாக அவ்வப்போது சிலரது ஆதங்க வெளிப்பாடுகள் பதிவுசெய்யப் படுவதைப் பார்க்கிறேன். அவர்களது அன்புக்கு நன்றி.
இம்மாதிரி ஆதங்கங்கள் வெளிப்படுத்தப்படுவதிலும் அரசியல் உண்டு என்பதையும் நான் அறிவேன். வேறொருவரைக் குறை சொல்லவோ, தன் பொருட்டோ, தனக்குப் பிடித்த இலக்கிய வாதியை முன்னிறுத்துவதற்காகவோ ’அவருக்கு அடை யாளம் கிடைக்கவில்லை, இவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை’ என்று ஒருவித ‘பகடைக்காய்’ நிலையில் ஒரு படைப்பாளியைச் சுட்டுவது.
இதை உண்மையான அக்கறையோடு சொல்பவர்களும் இருக்கி றார்கள்.
ஆனால், இந்த ஆதங்கம் தேவையில்லை – முக்கியமாக, என் பொருட்டு தேவையில்லை என்பதே என் கருத்து.
அது சரி, இலக்கியப் பணி என்று ஏதேனும் இருக்கி றதா என்ன?
ஒரு கவிதையை எழுதும்போது, அது ஒரு வாசிப்போராக என் னால் முதல் தரமான கவிதையாக ஏற்றுக் கொள்ளப்படாவிட்டா லும்கூட, எனக்குக் கிடைக்கும் வடிகாலும், வலி நிவாரணமும், பரவசமும் சொல்லுக்கப்பாற்பட்டது.
முழுக்க முழுக்க என் சுயநலத்திற்காகத்தான் எழுதுகிறேன்.
பின் ஏன் என் எழுத்தைப் பிறர் பார்க்கப் பதிவு செய்யவேண்டும்? பிரசுரிக்கவேண்டும்?
’ஏன் பதிவு செய்யலாகாது, பிரசுரிக்கலாகாது’ என்பதைத் தாண்டி என்னால் இதற்கு பதில் சொல்லத் தெரியவில்லை.
ஆனால், படைப்பு என்பது பணியல்ல என்பதே என் புரிதல்; நிலைப் பாடு.
குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக ஓர் இலக்கியப் படைப்பு எழுதப் பட்டாலும் கூட அதை எழுதுவதில் சம்பந்தப்பட்ட எழுத்தாளர் அல்லது கவிஞர் உணரும் நிறைவுதான் அதன் நோக்க நிறைவேற் றத்தைவிட மேலோங்கியிருப்பது.
சிற்றிதழ்களில் விரும்பி எழுதுபவர்கள் ‘உலகப் புகழின் மீதோ, அங்கீகாரத்தின் மீதோ அபிமானம் கொண்டா எழுதவருகிறார்கள்? அவர்களுக்கு நிலவரம் தெரியாதா என்ன? பின், ஏன் தொடர்ந்து அதிலேயே எழுதிக்கொண்டிருக்கிறார்கள்? சிற்றிதழ்களின் வாசகராக, படைப்பாளியாக இருக்கப் பிடிக்கிறது. அதனால்தான்.
சிற்றிதழ் எழுத்தாளர் என்பதில் ஒரு 'கெத்து' காட்டிக்கொள்ள முடியும். அதனால்தான்’ என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், அப்படிச் சொல்பவர்கள் பெரும்பாலும் சிற்றிதழில் எழுது பவர்களின் தரம் அறிந்து அந்த அளவு தங்களை உயர்த்திக்கொள்ள விரும்பாதவர்களாய், இயலாதவர்களாய் இருப்பார் கள்.
சிற்றிதழ்களில் ‘வெத்து’ எழுத்துகள் இலக்கியப் படைப் பாக இடம்பெறுவதில்லையா என்ன?
கண்டிப்பாக இடம்பெறுவதுண்டு. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், சாதாரண எழுத்தை அடர்செறி வான இலக்கியப் படைப்பாக சிற்றிதழ் வாசகர்களை வெகுகாலம் மூளைச்சலவை செய்துகொண்டிருக்கவியலாது.
கவிதை எழுதுபவர் கவிதையைப் பற்றிப் பேசவேண்டியது அவசி யமா? சிலருக்கு அது அவசியமாகப்படுகிறது. பேசுகிறார்கள். சிலருக்கு உரையாடல் களில், கலந்துரையாடல்களில் இயல்பா கவே ஆர்வமுண்டு்.
எனக்கு அது அவசியம் என்று தோன்றவில்லை.
ஒரு கவிதையைத் தனியாக அமர்ந்து அதன் ரகசியப் பேழைக ளைத் திறந்துபார்ப்ப தற்கும், அரங்கில் வகுப்பெடுப்பதாய், போதிப் பதாய் அந்த ரகசியப் பேழைகளை அத்தனை பேரின் முன்னிலை யிலும் கவிழ்த்துக்கொட்டுவதற்கும் மிக அடிப்படையான வித்தியாசம் இருப்பதாய் உணர்கிறேன்.
ஆனால், ஒரு படைப்பாளி இலக்கியத் திறனாய்வாளராகவும் செயல்படும்போது அவர் அதிகம் அறியப்படுகிறார் என்று தோன்று கிறது.
அறியப்படுதல், அதிகம் அறியப்படுதல் என்பதற் கெல்லாம் என்ன அளவுகோல்? Exit Poll மாதிரி ஏதேனும் இருக்கிறதா என்ன? Exit Poll நடந்தாலும் அது அறவே அரசியலற்றதாய் அமையும் என்று சொல்லவியலுமா என்ன?
உலகிலுள்ள அத்தனை வாசகர்களாலும் நான் அறியப்பட்டாலும் கூட கைகளால் அற்புதமான தொரு மண் குடுவையை வெகு அநா யாசமாய் உருவாக்கும் மாயக் கைவினைக்கலைஞர்களுக்கு நான் யாரோ தானே? ! கண்களையுருட்டியுருட்டி வெகு இயல்பாய் இட்டுக்கட்டி கதைசொல்லும் குழந்தைகளுக்கு நான் யாரோ தானே!
’இத்தனை ஆண்டுகாலம் இலக்கியப்பணி(?) செய்துள்ள இவரைப் பற்றி யாருமே பேசுவதில் லையே’ என்று என் பொருட்டு ஆதங்கத் தோடு எழுதுபவர்களுக்கு:
இத்தனை ஆண்டுகாலம் இலக்கியப்பணி(?) செய்துள்ள எத்தனை பேரைப் பற்றி நான் எழுதியிருக்கிறேன்?
நான் மொழிபெயர்த்துள்ள தரமான கவிஞர்களைக் காட்டிலும் நான் மொழிபெயர்க்காத தரமான கவிஞர் களின் எண்ணிக்கை அதிகமல்லவா?
இதில் யாரை யார் குறை சொல்வது?
குறை சொல்ல என்ன அவசியம்?
I COULD BE BOUNDED IN A NUTSHELL என்று விரியும் ஹாம்லெட்டின் வாசகம் நினைவுக்கு வருகிறது.
ஹாம்லெட்டை அலைக்கழிக்கும் கொடுங்கனவுகளும் எனக்கில்லை.
நான் எழுதிய கவிதைகளில், சிறுகதைகளில் நிறைவானவை எவை, அரைகுறையானவை எவை என்று ஒரு வாசகராக எனக் குத் தெரியும். எழுதும்போது கிடைக்கும் நிறைவு, நிவாரணம் மனதைச் சுத்திகரிக்கும்.
வேறென்னவேண்டும்?

இலக்கியப் பல்லக்குகளும் பல்லக்குத் தூக்கிகளும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இலக்கியப் பல்லக்குகளும் பல்லக்குத் தூக்கிகளும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
‘நான் காலையில் காபி குடிப்பதில்லை
அது ஆதிக்கசாதியின் அதிகாரம்’ என்று
அதி காரமாய் பேசுபவருக்காய்
நாற்காலியின் மீதேறி
நிலைதவறிவிழுந்துவிடும்படி நின்று
சரவெடியாய்க் கைதட்டுபவர்
ஏனோ கேட்பதில்லை
பின், என்ன குடிப்பது வழக்கம் என்று.

(கேட்டால் கிடைக்கலாம் பதில்
‘ENSURE’ என்று.

ஒரு பற்பசைத் தயாரிப்பு நிறுவனத்தை
பெருமுதலாளி யென்று அவர்
மேடை தவறாமல் சாடும்போதெல்லாம்
ஓடியோடிச் சென்று கைகொடுப்பவரும்
கேட்பதேயில்லை
அவர் காலகாலமாய்ப் பயன்படுத்துவது
பற்பசையா அல்லது
ஆலங்குச்சியா என்று.

நான்கு நிமிடங்களுக்கு முன்
இறந்துவிட்ட ஒருவருக்காக
ரத்தக்கண்ணீர் வடித்தவர்
ஐந்தாவது நிமிடத்தில்
ஐஸ்கிரீமை ஒயிலாய்ச் சுவைத்தபடி
சிரிக்கும்
தன் படத்தைப் பதிவேற்றுகிறாரே –
அது ஏன்
என்று எதுவுமே கேட்காமல்
அவருடைய எல்லாப் பதிவுகளுக்கும்
’லைக்’ –டிக் செய்பவர்களின்
கைத்தாங்கலில் நகர்ந்தவாறிருக்கு
முன்னவர் மிக நளினமாய் அமர்ந்திருக்கும்
முத்துப்பல்லக்கு.

உண்மைவிளம்பிகளின் பொய்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 உண்மைவிளம்பிகளின் பொய்கள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஒப்பனைகளை வெறுப்பதாகத்
தப்பாமல் தங்கள் நேர்காணல்களிலெல்லாம்
பறையறிவிப்பவர்களின்
ஆகப்பெரும் ஒப்பனை அதுவேயென்ற
உண்மை
உறைக்குமோ எப்போதேனும்
அவர்தம் குறையறிவின்
கறைமனதில்?

அச்சுப்பிழை என்னும் இலக்கிய அம்சம் - லதா ராமகிருஷ்ணன்

 அச்சுப்பிழை என்னும் இலக்கிய அம்சம்

லதா ராமகிருஷ்ணன்


ஒரு கவிதையின் புரியாமைக்கான முழுப் பழியையும் சிலர் (அல்லது பலர்) கவிஞரின் மீதே சுமத்திவிடுவது வழக்கம்.
ஒரு கவிதை அர்த்தமாவதிலும் அர்த்தமா காமல் போவதிலும் வாசிப்போர் பங்கு எதுவுமே யில்லை என்ற பார்வை எந்தவிதத்தில் நியாயம்?
அதே சமயம், இத்தனை வருட எழுத்து அனுபவத்தில் நான் உணர்ந்து கொண்ட இன்னொரு உண்மையும் உண்டு. ஒரு கவிதை புரியாமல் போவதற்கு மிக முக்கியக் காரணமாக அச்சுப்பிழை அமைந்துவிடு கிறது.
ஒரு கவிதையைத் தவறாகப் புரிந்துகொள்ளுவதற் கும், ஒரு கவிதை புரியவில்லையே என்று வாசகர் குழம்பித் தவிப்பதற்கும் பல நேரங்களில் அச்சுப்பிழை மிக முக்கியக் காரணமாகிவிடுகிறது.
இரண்டு தனித்தனி வார்த்தைகள் ஒன்றிணைந்து அச்சாகிவிடுவதும் அச்சுப்பிழையே; அர்த்தக்குழப்பத் தைத் தருபவையே.
உதாரணமாக a top என்றால் ‘ஒரு பம்பரம். அதுவே atop என்றால் மேலே, உச்சியில் என்ற பொருளைத் தருகிறது.
கவிதை என்பது BEST SELECTION OF WORDS IN THE BEST ORDER. அப்படி பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத் துப் பயன்படுத்திய ஒரு சொல், ஏன், ஒரு நிறுத்தற்குறி இடம் மாறிவிடும்போது வாசிப்போர் அந்தக் கவி தைக்கு வெளியே தள்ளப்பட்டுவிடுகிறார்.
எடுத்துக்காட்டாக, ’பள்ளியைப் பார்த்துக்கொண்டே நின்றான்’ என்பது ’பல்லியைப் பார்த்துக்கொண்டே நின்றான்’ என்று அச்சாகியிருந்தால் என்னவாகும்?
வழக்கமான கவிதை என்றால் அதன் ஒட்டுமொத்த அர்த்தத்தை மனதில் கொண்டு அது பல்லியாக இருக்க வழியில்லை பள்ளியாகத்தான் இருக்க வேண்டும் என்று புரிந்துகொண்டுவிட வழியிருக்கிறது. ஆனால், நவீன கவிதை என்றால், அப்படிச் செய்யவியலாது.
பெரும்பாலும் சிறுபத்திரிகைகள் தனிநபர்களின் அல்லது ஒரு சிறு குழுவின் இலக்கிய ஆர்வங்கார ணமாக நடத்தப்படுபவை என்பதால் அவற்றில் அச்சுப்பிழைகள் எத்தனை கவனமாக இருந்தாலும் சில பல இடம்பெற்றுவிடும்.
ஆசிர்யர் குழுக்களோடு நல்ல நிதிவசதியோடு நடத்தப் படும் இதழ்களிலும் அச்சுப்பிழைகள் அறவே இடம் பெறுவதில்லை என்று அறுதியிட்டு உறுதியாகச் சொல்லிவிட இயலாத நிலை.
முன்பெல்லாம் சில சிற்றிதழ்கள் இத்தகைய அச்சுப்பிழைகள் நேரிட்டால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதையும், சம்பந்தப்பட்ட கவிஞர் அது குறித்து எழுதும் ‘கோப’க் கடிதத்தைப் பிரசுரிப்பதையும் கடமையாகக் கொண்டிருந்தன. பின், படிப்படியாக அந்த அணுகுமுறை குறைந்துபோயிற்று.
சில பத்திரிகைகள் சில நட்சத்திர எழுத்தாளர்கள் விஷயத்தில் மட்டுமே அச்சுப்பிழைகளை சரிசெய்ய முன்வந்தன. எளிய கவிஞர்கள் விஷயத்தில் ‘இதுக் குப் போயி அலட்டிக்கலாமா?’ என்று அலட்சியமாக இருந்தன.
அச்சாகும் கவிதையில் ஒரு வார்த்தை, ஏன், வரி கூட மாறியிருப்பதைப் பார்த்து கவிஞரின் மனம் தன் கவிதை பிரசுரமாகியிருப்பதற்காக மகிழ்ச்சியடைய முடியாமல் அப்படி அலைக்கழியும்!
இலக்கிய இதழ்கள் நடத்துபவர்களெல்லாம் பெரும் பாலும் நண்பர்களாகவும் இருந்துவிடுவதால் அவர்களிடம் ஒரேயடியாக வரிந்துகட்டிக்கொண்டு சண்டையிடவும் முடியாது.
'என் கவிதை நன்றாக இருக்கக்கூடாது என்பதற்கா கவே அதில் ஓரிரு எழுத்தைப் பிழையாக அச்சிட்டிருக் கிறார் சிற்றிதழ் ஆசிரியர்' என்றெல்லாம் நான் மனதிற்குள் பொருமியதுண்டு!
இப்போதெல்லாம் இணைய இதழ்களுக்கு அல்லது ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவேற்றுவதற்காக கணினியில் நாமே அவசர அவசரமாக DTP செய்து அனுப்பும்போது நம்மையறியாமலே சில பிழைகள் ஏற்பட்டுவிடுகின்றன.
முகநூல் பக்கம் என்றால் திருத்திக்கொள்ள முடியும். இணைய இதழ் என்றால் அதை நடத்துபவர் மனம் வைத்தால்தான் பிழைத்திருத்தம் சாத்தியம்.
தன் கவிதையில் நேர்ந்துவிடும் அச்சுப்பிழை கவி மனதில் ஆறாத ரணமாக அவரை அமைதியிழக்கச் செய்தவண்ணம்.
இந்த அலைக்கழிப்பு இலக்கியத்தின் பிற பிரிவுகளில் இயங்குபவர்களுக்கும் கண்டிப்பாக ஏற்படும்.
இன்று ஒரு கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒரு தொகுப்பிலிருந்து முகநூல் பக்கமொன்றில் நான்கைந்து அச்சுப்பிழைகளோடு பதிவேற்றப் பட்டிருப்பதைப் பார்க்க நேர்ந்தது.
மொழிபெயர்ப்பாளர் மீது மிகுந்த மரியாதையை வெளிப்படுத்தியிருந்தார் பதிவேற்றியிருந்தவர். ஆனால், அவர் பதிவேற்றியுள்ள மொழிபெயர்ப்பில் இடம்பெறும் நான்கைந்து அச்சுப்பிழைகள் அந்த ஆங்கில மொழிபெயர்ப்பு இடம்பெற்றிருக்கும் தொகுப்பில் காணப்படும் அந்தப் பிரதியில் இல்லை.
அச்சுப்பிழைகளோடு தரப்படும் ஒரு மொழிபெயர்ப்புப் பிரதி, தவறாக தட்டச்சு செய்யப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியப் பாட்டைக் காட்டிலும் மொழிபெயர்ப்பாளரின் திறன்குறைவைப் புலப்படுத்துவதாக எடுத்துக்கொள் ளப்படுவதற்கான வாய்ப்பே அதிகம்.

உள்ளது இல்லாதபடியான அச்சுப்பிரதி _ ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 உள்ளது இல்லாதபடியான அச்சுப்பிரதி

_ ’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
Matt இல்லை Gloss என்பதாலோ என்னவோ
முகப்பு அட்டையிலுள்ள அவருடைய முகத்தில்
அறிவு தகதகத்துக்கொண்டிருக்கிறது _
அவராலேயே ஏற்றுக்கொள்ளமுடியாத அளவு.
வெறுப்பின் இருள் எப்போதும் மண்டியிருக்கும்
அவருடைய விழிகளில்தான் எத்தனை பரிவும் நேயமும்
Photoshop finishing என்பது இதுதானோ…?
படித்துமுடித்துவிட்டேன் என்கிறார் பக்கத்திலிருந்தவர்.
பிடித்திருக்கிறதா? என்று கேட்காமலிருக்கமுடியவில்லை.
’பிரமாதம்! எத்தனை கண்ணியமாக வாதங்களை
முன்வைத்திருக்கிறார்’ என்கிறார்.
’எத்தனை கவனமாக அவருடைய சொற்பொழிவுகளின் இழிசொற்கள், வன்மச்சொற்கள் வக்கிரச்சொற்கள் விலக்கப்பட்டிருக்கின்றன’
என்று சுட்டுகிறேன்.
சட்டென்று என் தலையைப் பிடித்து சுவற்றில் முட்டி
விரோதியாய் முறைத்தவாறு விலகிச் செல்கிறார்.

மாறும் அளவுகோல்களும் மொழிப்பயன்பாடுகளும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மாறும் அளவுகோல்களும் மொழிப்பயன்பாடுகளும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
“இல்லை இல்லை எங்கப்பன் குதிருக்குள் இல்லை”
என்று
திரும்பத் திரும்பக் கூறத்தொடங்கிவிட்டவர்களைப் பார்த்தபடி
குதிருக்குள் எட்டிப்பார்க்கச் செல்லத்தொடங்கிவிட்ட மக்களை _
”மாக்கள் என்று சொல்லிவிட்டார் உங்களை,
இனியும்
பேசாதிருக்கப் போகிறீர்களா?” என்று கேட்டவர்
அச்சு ஊடகங்களின் இரண்டறக் கலந்த அம்சமான
அச்சுப்பிழைகளைச் சுட்டிக்காட்டுவதில்
கைதேர்ந்தவர்.
அவருக்குத் தெரியும் மக்கள் மாக்களானது பிழை பார்ப்பிலான விடுபடல் என்று.
ஆனாலும் அது சொன்ன வாயின் இமாலயத் தவறென்று
திரும்பத் திரும்ப உருவேற்றிக்கொண்டிருப்பதோடு _
”சுப்பர் என்று சொல்லாமல் சுப்பன் என்று பெயர் வைக்கச் சொன்னது என்னவொரு மரியாதைகெட்ட தனம்” என்று வேறு சொன்ன கையோடு _
”அப்பர் என்னாமல் அப்பன் என்று நாங்கள் சொல்வது மரியாதைகெட்டத்தனமல்ல - மிகு அன்பில் விளைந்த உரிமை”
என்று, கேளாமலே ஒரு விளக்கத்தை வைத்ததைக் கேட்டபடியே _
குதிரிருக்கும் இடத்தை மேலும் நெருங்கிக்கொண்டி ருக்கும் மக்களைஎப்படி தடுத்து நிறுத்துவது
என்று புரியாமல் _
கடித்துப் பார்த்து கனியில்லை காயே என்று
அத்தனை திமிராய் தன் கருத்தையுரைக்கும்
அந்த நாயே கல்லில் அடிபட்டுச் சாகும் தன் விதியை
இப்படிக் குரைத்துக்குரைத்து எழுதிக் கொண்டா யிற்று என்றொருவர் அத்தனை பண்போடு தன் கருத்துரைக்க _
அதிகார வர்க்க அடிவருடி என்று அதி கார மாய் தப்புக்குறி போட்டு ஆயிரம் முறை காறித்துப்பியும்
ஆத்திரம் தீராமல் _
பன்றி பொறுக்கி நன்றி கெட்ட நாசப்பேயே நாலு கால் நரியைவிடவும் நீசநெஞ்சக்கார ஆண்டையே
இன்னும் நாண்டுகிட்டு சாகவில்லையா நீ
பேண்டு முடித்தபின்னாவது போக உத்தேச முண்டோ முழக்கயிறு வாங்க?” வென
நயத்தக்க நாகரிகமொழியில் மூத்திரத்தை சிறுநீர் என்றெழுதும் கவிதைவரிகள் காற்றில் பறந்துபோக
வார்த்தைக்கற்களை வீசிக்கொண்டேயிருக்கும் படைப்பாளிகள் சிலரும் _
”உடை உடை யந்தக் கடைந்தெடுத்த நீசமண்டை யை என்று _ ஆன்றோர்கள், ஆசிரியப் பெருமக்கள்,
அரசியல்வாதிகள், இன்னும் இன்னுமாய்
அத்தனை அமைதிப்புறாக்களைப் பறக்கவிட்டபடி
யிருக்க
ஒவ்வொரு புறாவின் காலிலும் கூர் கத்தி, அரை ப்ளேடு, பாட்டில்துண்டு, தகரத் தகடு, அமில பலூன் என பார்த்துப்பார்த்துக் கட்டப்படுவதை திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே _
மக்கள் இன்னுமின்னும் முன்னேறிக்கொண்டிருக் கிறார்கள்
குதிருக்குள் எட்டிப்பார்த்துவிட.