குரலற்றவர்களின் குரல்களாகிறவர்கள்
அவர்கள் நம் குரலாகிறார்கள்;
ஊமையாக நாம் இருக்கவேண்டுமென்று விரும்புகிறார்கள்;
நம்மை வாயடைத்துப்போகச் செய்கிறார்கள்.
அவ்விதமாய் நம்மை அவர்களின் ஊதுகுழல்களாக்கி விடுகிறார்கள்.
அவர்கள் 'வா' என்கிறார்கள்; நாம் வருகிறோம்;
'போ' என்கிறார்கள். போகிறோம்
‘ஆமாம்’ என்கிறார்கள்
அவர்களுக்கு ‘கோரஸ்’ பாடுகிறோம்.
’இல்லை’ என்கிறார்கள்
அவர்கள் சொல்லை எதிரொலிக்கிறோம்.
அவர்கள் ‘குறைவு’ என்கிறார்கள் _
‘அதிகம்’ என்ற பொருளில்;
மூன்று என்கிறார்கள் நான்குக்கு.
நாம் அவர்களை நம்புகிறோம்
என்றும் போலவே..
பேராசை உந்தித்தள்ள பரபரவென்று
ஏணியில் மேலேறியவாறே
அவர்கள் நமக்குக்கற்றுத்தருகிறார்கள்
உப்பை சர்க்கரையென்று சொல்ல.
மூளைச்சலவை செய்து உருவேற்றுகிறார்கள்
நஞ்சை அமுதமென்று நம்ப.
எல்லாநேரமும் நம்மை அவர்கள் கைவசமே
கட்டுண்டிருக்குமாறு மாயம் செய்து
அவர்களே நமது காவல்தேவதைகள் என்று
கையடித்துச் சத்தியம் செய்யாத குறையாகக்
கூறியவாறிருக்கிறார்கள்.
எல்லாம் நல்லதாகவே இருக்கும்_
நாம் அவர்கள் கூறுவதைக் கேட்டு நடக்கும்வரை
எப்படியோ நமக்கு அவர்களது நிஜமுகம் தெரியவந்தால்
நம் கருத்தை நாம் உரைக்க முனைந்தால்
அழிக்கவேண்டிய
இலக்காக நம்மைக் கொண்டு
அவர்கள் நம்மை எல்லாவழிகளிலும்
வாய்பொத்தியிருக்கச் செய்ய முனைவார்கள்.
அதிர்ந்துபோய்
ஒருவழியாக
நாம் எதிர்த்தெழுந்தால்
நம் குரல்வளையை அறுப்பார்கள்;
அல்லது கைத்துப்பாக்கியால் நம்மை
வழியனுப்பிவைப்பார்கள் _
இறுதி யாத்திரைக்கு.

No comments:
Post a Comment