LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, January 21, 2025

இன்றல்ல நேற்றல்ல.... ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இன்றல்ல நேற்றல்ல....

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
’வனஜா, கிரிஜா – வளைஞ்சா நெளிஞ்சா….”
என்று அந்தக்கால திரைப்படமொன்றில் நாயகன் வாயசைக்க
படுஜாலியாகப் பாடிய ஆண்குரல்
நட்டநடுவீதியில் அந்தப் பெயருடைய பெண்களை (மட்டுமா)
முண்டக்கட்டையாக்கப்பட்டதாய் கூனிக்குறுகவைத்தது.

”கலா கலா கலக்கலா…” என்று கேட்டுக் கேட்டு இன்னொரு குரல்
பகலில் வெளியே போகும் பெண்களையும்
இடைமறித்துக் கையைப் பிடித்து இழுத்து
Eve-torturing செய்துகொண்டேயிருந்தது பலகாலம்.

’நான் ரெடி நீங்க ரெடியா?’ என்று பெண்குரலில் பாடவைக்கப்பட்ட வரி
நடுரோடில்அழைப்புவிடுக்கப்பட்டு அவமானத்தில் பொங்கியெழுந்த பெண்களைப்
போலிகளாகப் பகடிசெய்து சிரித்தது.

‘ஓடக்கார மாரிமுத்து ஓட்டவாயன் மாரிமுத்து’ என விளித்து
ஊருக்குள்ளே வயசுப்பொண்ணுங்க சௌக்யமா
என்று விசேஷமாக விசாரித்த நாயகன்
ஹாசினிப்பெண்கள் பெருமிதப்பட்டுக்கொள்ளும் படத்தில்
தன் நண்பர்களோடு
ஊர்ப்பெண்களையெல்லாம், பிள்ளைத்தாய்ச்சிப் உட்பட,
பேர்பேராய்ப் பரிகசித்துப் பாடிய பாட்டு
பிரபலமோ பிரபலம் –இளவட்டங்களிடையே மட்டுமல்ல.

’கங்கா காவிரி ரம்பா ஊர்வசி அரசி கிளியோபாட்ரா
ஆப்பக்கடை அன்னம்மா
அத்தைமகள் ரத்தினமா, அடுத்தவீட்டு மாக்டலீனா
ரீனா மீனா தேவசேனா… காதரீனா செந்தேனா என்பேனா
ஆ… மானே மச்சகன்னித் தேனே ….. மெல்லக் கடி, பெண் பேனே....’

அட, சினிமாவில் பெண்ணென்றாலே சதைமொந்தை தானே.

பெயர்பெயராய்ச் சொல்லிச்சொல்லிப்
பெண்ணைப் பண்டமாய்த் துண்டாடிக்கொண்டாடும்
பேராண்மையாளர்களுக்கெல்லாம்
மேடைக்குத் தகுந்தபடி மாறுவாள் ஆண்டாள்
தாயாகவும் தாசியாகவும்.

தேவ' 'சேர்ப்பதால் ஆவதென்ன?

வெறும் Euphemistic terms-இல்பெறக்கிடைப்பதா மரியாதை?

உம்ராவ்ஜானின் அழகியவிழிகளில் என்றுமாய் ததும்பியிருந்த
கண்ணீர் சொல்லும் பலகதை.

இல்லை, *Pretty Woman நாயகியிடம் கேட்டால்
பளிச்சென்று சொல்வாள் பதிலை!

(*Julia Roberts நடித்த படம். தெருவில் வாடிக்கையாளர்களுக்காக வலை விரிக்கும் மலிவுப் பாலியல்தொழிலாளியாக இருப்பவள் நல்லவனான செல்வந்தன் நாயகனோடு ஒரு வாரம் இருக்க நேர்ந்ததில், அவளுக்கு சமூகத்தாரிடம் நேரும் அவமானங்கள்; பின், நிரந்தர உறவில் நம்பிக்கை யில்லாதவனான நாயகன் சகல வளங்களோடும் அவளைத் தன்னோடு இருக்கச்சொல்லி அழைக்கும்போது ஏற்க மறுத்து கௌரவமான வாழ்க்கைத்துணையாக்கிக்கொள்ள முடியுமானால் வருகிறேன் என்று சொல்லும் பெண்பாத்திரம்).

ஆளுமை - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஆளுமை

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஆம், நான் ராணிதான்.

தங்கமும் வைரமும் இழைத்த கிரீடத்தை
விட
இந்தச் சிறகுகள் செருகப்பட்ட மணிமகுடம்தான்
விலைமதிப்பற்றது எனக்கு.

நட்சத்திரங்களோடு விளையாடப்போகவேண்டும்.

ஐஸ்க்ரீமும் பொம்மைக்காரும் வாங்கிவரப்போகின்றன
சிங்கமும் புலியும்.

நடுக்கடலில் எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது திமிங்கலம்.

தின்பண்டம் ஏதாவது தரும்.

தத்துப்பித்தென்று பேசுவது குழந்தையின் இயல்பென்கிறீர்கள்;

ஆம் _

வளர்ந்தவர்களுக்கு அழகு
குத்திக்கிழிப்பது.
 reactions:

எளிய வேண்டுகோள் - 'ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 எளிய வேண்டுகோள்

'ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
என் அன்பில் உயிர்க்கும்
குட்டியானை.

நீங்கள் பழமும் தரவேண்டாம்;

பள்ளத்தில் விழச்செய்து
கால்களில் சங்கிலியும் இடவேண்டாம்.

இன்னும் அரைமணிநேரம்
எங்களை விளையாட விடுங்கள் போதும்.

பின் என் குட்டியானை மீண்டும் உங்கள்
கைப்பாவையாகிவிடும்;

நானும்.



இரண்டு மூன்று - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இரண்டு மூன்று

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

என் தலையாய் எண்ணியிருந்தது
இன்னொரு கண்ணசைவிற்கேற்ப
முன் பின் மேல் கீழ் இட வலமாய்
அசைந்த அசைவில்
அன்று ஆட்டங்கண்டது ஆன்மாவின்
அடித்தளமென்றால்
அது அப்பட்டமான understatement…..
ஆர்வமே உருவாய் பீறிட்டெழுந்த
கேள்விகளுக்கெல்லாம்
இரவல் குரல்வழியே தரப்பட்ட பதில்கள்
முதுகைப் பிடித்துத் தள்ளி விரட்டியதில்
கதியற்று விழுந்த இடத்தின் கூர்கற்களும்
சுட்டெரிக்கும் வெயிலும்,
சாக்கடையும் சிறுநீரும் நரகலுமாய்
பதம் பார்த்தது பெருவலி.
ரணமாற்றும் மூலிகைகள் அடர்ந்த
எஞ்ஜீவ மலையிருக்கும் இதிகாசத்தை
நானேதான் எழுதிக்கொண்டாகவேண்டும்.
சிறுமையும் வெறுமையும் இருளென
மேற்கவியத்
திரும்பிவந்தேன் சவமாய்.
உவமான உவமேயங்களுக்கப்பால்
மனமுணர்ந்த அவமானத்தை
விழுங்கிப் பசியாற்றிப்
படுத்துக்கொண்டேன் பாடையில்.
பின், மெல்ல மெல்ல மீள்பிறவி.
கோடையுண்டுதான் குளிரின் பின்…..
நினைவிறுக்கத் தலைசுற்றும்போதெல்லாம்
தனக்குத்தானே நீர் பருகத் தந்து
நின்று நிதானப்படுத்திக்கொண்டு
நகர்ந்துகொண்டிருக்கிறது மனது.
மற்றுமொன்று என்றாலும் நாள் நாள்தானே….
கற்றது கையளவு.
கல்லாத கடலளவு காலத்தை கைகொண்டு அள்ள
இல்லாது போய்விடலாகாது என் வாழ்வின் மிச்ச மீதி.
திரும்பத்திரும்ப ஏன் வந்துகொண்டிருக்கிறது
தன்மானமிழக்கச் சபிக்கப்பட்ட அந்த
இரண்டு மூன்று தேதி…..




பிரதியும் வாசகரும் வழிகாட்டியும் வாசிப்பும் ....... லதா ராமகிருஷ்ணன்………

 ......................................................................................................................................

பிரதியும் வாசகரும் வழிகாட்டியும் வாசிப்பும் .......

லதா ராமகிருஷ்ணன்………

ஒரு கதையை எப்படி உள்வாங்குவது, ஒரு கதை தரமான கதையா, மேம்போக்காக எழுதப்பட்ட கதையா என்று எப்படித் தெரிந்து கொள்வது என்பதை அறிந்துகொள்ள வாசகர்களுக்கு வழி காட்டும், எழுத்துகள் ஒருவகையில் தேவையாக இருந்தாலும் இன்னொரு வகையில் அவை ஏதோவொரு வகையில் வாசகப் பிரதிகளை முடக்கி விடுவதாகவே தோன்றுகிறது. இப்படித்தான் ஒரு பிரதியை அணுகவேண்டும் என்று ஏதோவொரு வகையில் வாசகரை மூளைச்சலவை செய்வதாகவே தோன்றுகிறது.

 

ஒரு கதையை அணுகும் விதங்கள் அல்லது வழிகள் என்று சொல்லாமல் அணுகும் விதம் அல்லது வழி என்று சொல்வதி லேயே ஒரு ஒற்றை வாசகப் பிரதியை வலியுறுத் தும் போக்கு புலப்படுகிறது. ஒரு பிரதி ஏதோ வொரு விதத்தில் வாசகரிடம் தாக்கம் ஏற்படுத்தும்போது அவர் அதை உள்வாங்க ஆர்வங் காட்டுகிறார். அதன் உள்ளும் வெளியும் திரிந்து அது குறித்த கூடுதல் தகவல்களை, நுட்பங்களை சேகரிக்க முற்படுகிறார்.


இன்றைய காலகட்டத்தில் இதற்கு எந்தவொரு வழிகாட்டி யின் துணையுமின்றி ஒரு வாசகராலேயே தேவையான கூடுதல் விவரங்களைபிரதி எழுதப்பட்ட பின்புலம், அதில் இடம் பெற்றுள்ள குறியீடுகள், பிரதியை எழுதியவர் குறித்த விவரங்கள் அன்னபிறபெற முடி யும்.

 

ஒரு சாதாரண புனைவு-புனைவுப் பிரதியை விமர்சனம் / திறனாய்வு மூலம் ஆஹா ஓஹோ என்று வாசக மனங்களில்புதிய வாசகர்கள் மனங்களில் மட்டுமல்லபதியவைக்க முடியும். அதேபோல், மொழிபெயர்ப்புப் பிரதிகளைப் பொறுத்த அளவிலும் கூட செய்ய முடியும்.

 

பிரதிகளை நல்ல எண்ணத்தோடு ஒருவர் அறிமுகப் படுத்த, அதை எப்படி அணுகுவது என்று வழிகாட்ட ஒருவர் முற்பட்டாலும், அவரையுமறியாமல் தன்னுடைய வாசகப்பிரதியே சரியானதாக, மேலானதாக முன்வைக்கும், வலியுறுத்தும் தன்மை வெளிப்பட்டு விடுகிறது.

 

இது குறித்து இன்னும் நிறைய எழுத இருக்கிறது….