LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, July 17, 2023

நிழலும் நிஜமும்…. லதா ராமகிருஷ்ணன்

நிழலும் நிஜமும்.....

லதா ராமகிருஷ்ணன்




திரைப்படத்தின் கனமான காட்சிகளை, படத்தின் நடுவில், அல்லது இறுதியில் இடம்பெறும் உச்சக்கட்டக் காட்சியை, திருப்புமுனைக் காட்சியை நடிப்பதற்கு முன் அதில் பங்குபெறும் கதாநாயக நாயகி கள் யாரிடமும் பேசமாட்டார்கள், அந்தக் காட்சியின் கனத்தை மன தில் உள்வாங்கியவர்களாய் பாத்திரமாகவே மாறியிருப் பார்கள், அதிலிருந்து மீள அவர்களுக்கு கொஞ்ச நேரமா கும்’ என்றெல் லாம் திரைப்படம் சார்ந்த கட்டுரைகளிலும், பேட்டிகளிலும் படித்ததுண்டு.

ஒரு நடிகர் தான் நடிக்கும் எல்லாப் பாத்திரங்களாகவும் எந்நேரமும் வாழ்ந்துகொண்டிருக்க இயலாது. எழுதும் படைப்பிலேயே அமிழ்ந்துவிட்டால் படைப்பாளியால் அந்தப் படைப்பை சிறப்பாக எழுதவியலாது என்றும் சொல்ல முடியும்.
ஆனால், ஒரு அழுத்தமான கதைக்கருவைக் கொண்ட திரைப்படத்தில் நடித்தவர்கள் படப்பிடிப்பில் நடந்த வேடிக்கைகளை மட்டுமே பேசி வெடிச்சிரிப்புகளை அவையோரிடம் உண்டாக்கும்போது அந்தப் படம் உருவாக்கப்பட்ட நோக்கமே அடிபட்டுப்போய் விடக்கூடிய அபாயமிருக்கிறது.
மாமன்னன் படம் பார்க்கவில்லை. ஆனால் அதன் கதை குறித்துப் படித்தேன். சிற்சில காட்சிகளை யூட்யூபில் பார்த்தேன். அதில் நடிக்கும் கலைஞர்கள் எல்லோருமே சிறப்பாக செய்திருக்கிறார் கள் என்று பரவலாகப் பேசப் படுகிறது. படமும் முக்கியமான கதைக்கருவைக் கொண்டிருக்கிறது.
ஆனால், யூட்யூபில் இந்தப் படம் குறித்து பார்க்கக் கிடைக்கும் காணொளிகளிலெல்லாம் நடிகர்கள் அதிலுள்ள கனமான காட்சிகளையெல்லாம் பற்றிச் சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கொண்டே யிருக்கிறார்கள். கனமான காட்சிகளை நடிக்கும்போதெல்லாம் என்னவெல்லாம் வேடிக்கை பேசினோம், குறும்பு செய்தோம் என்று சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கொண்டே யிருக்கிறார்கள்.
இப்படியே செய்துகொண்டிருந்தால் படத்தை எடுத்த நோக்கமும் வணிக ரீதியானதே (அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் – ஆனால், அதுவே முழுமுதற்காரணமாகி விடலாகாது) என்று எண்ணும்படியாகிவிடும்.
படத்தின் இயக்குனர் தவிர படத்தின் கதாநாயகன், மாமன்னனாக நடிப்பவர் என்று எல்லாமே அழுத்தமான காட்சிகளையும் சிரிக்கச் சிரிக்க விவரித்துக் கொண்டே போகிறார்கள். பார்க்க என்னவோ போலிருக்கிறது.
இனியேனும் அவர்கள் அந்தக் காட்சிகளிலிருந்து, கதாபாத்திரங் களி லிருந்து தாங்கள் பெற்ற சமூக-அரசியல் தெளிவுகளைப் பற்றி அரங்குகளில் IN ALL SERIOUSNESS பேசவேண்டும்.

குழந்தைகளும் கவிஞர்களும் - லதா ராமகிருஷ்ணன்

 குழந்தைகளும் கவிஞர்களும்

லதா ராமகிருஷ்ணன்


*கலீல் கிப்ரானின் மிகச் சிறந்த கவிதைகளில் ஒன்று கீழே தரப்பட்டுள்ளது.

குழந்தைகள்
கலீல் கிப்ரான்
(*தமிழ் மொழிபெயர்ப்பு : லதா ராமகிருஷ்ணன்)

உங்களுடைய குழந்தைகள் உங்களுடைய பிள்ளைகளல்ல
அவர்கள் வாழ்வின் தனக்கான தாகத்தின் மகன்களும் மகள்களுமாவர்.
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள் ஆனால் உங்களிடமிருந்து அல்ல.
அவர்கள் உங்களோடு இருப்பினும் உங்கள் உடைமைகள் அல்ல.
நீங்கள் அவர்களுக்கு உங்கள் அன்பைத் தரலாம்,
ஆனால் சிந்தனைகளைத் தர இயலாது.
ஏனெனில் அவர்களுக்கென்று சுயமான எண்ணங்கள் இருக்கின்றன.
அவர்களுடைய உடல்களுக்கு நீங்கள் உறைவிடமாகலாம்
அவர்களுடைய ஆன்மாக்களுக்கு இயலாது.
காரணம், அவர்களுடைய ஆன்மாக்கள்
உங்களால், கனவிலும், செல்லவியலாத
நாளையெனும் இல்லத்தில் வசிக்கின்றன,
நீங்கள் அவர்களைப்போலாக முயலலாம்
ஆனால் அவர்களை உம்மைப்போலாக்க எண்ணவேண்டாம்.
ஏனெனில் வாழ்க்கை பின்னோக்கிச் செல்வதில்லை;
நேற்றிலேயே தயங்கிநிற்பதில்லை
நீங்கள் விற்களைப்போல
உங்கள் குழந்தைகள் உயிருள்ள அம்புகளாய் அவற்றிலிருந்து
விசையுடன் அனுப்பப்படுகிறார்கள்
வில்லாளி எல்லையின்மையின் பாதைமீதான
குறியிலக்கைக் காண்கிறார்
அவர் உங்களைத் தன் முழுவலிமையோடு வளைக்கிறார்
தன் அம்பு வேகமாய் வெகுதூரமாய்ச் செல்ல.
வில்லாளியின் கையில் வளைவது
மகிழ்வானதாகவே அமையட்டும் உமக்கு
ஏனெனில் பறந்துசெல்லும் அம்பை அவர்
பெரிதும் விரும்புவது போலவே
நிலைகொண்டிருக்கும் வில்லையும் நேசிக்கிறார்.
_______________________________________________

கலீல் கிப்ரானின் ’குழந்தை’ ஒரு குறியீடு
லதா ராமகிருஷ்ணன்
கலீல் கிப்ரான் 1883 ஜனவரி 6இல் லெபனான் நாட்டில். பிறப்பு. 1931 ஏப்ரல் 10இல் 48ஆவது வயதில் அமெரிக்காவில் இறப்பு. ஓவியர் கவிஞர் சிறுகதையாசிரியர், கட்டுரையாளர், தத்துவ, இறையியல் சிந்தனையாளர்.
1923இல் வெளியான இவருடைய படைப்பு The Prophet, கவித்துவமான ஆங்கில உரைநடையில் எழுதப்பட்ட தத்துவார்த்த கட்டுரைகளின் தொகுப்பு.
இளமைப்பருவத்திலேயே அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து விட்ட கலீல் அராபிய மொழியிலும் ஆங்கிலத்திலும் படைப்புகளைத் தந்தார். அராபிய உலகில் கலீல் இலக்கிய, அரசியல் புரட்சியாளராக பார்க்கப்படுகிறார்.
Shakespeare and Laozi(சீன தத்துவஞானி)க்குப் பின் இவருடைய கவிதைத்தொகுப்பே எல்லாக் காலத்திலும் அதிகம் விற்பனையாகிறது. The Prophet 110 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
இங்கே தந்துள்ள அவருடைய கவிதையின் பிற்பகுதி இறையியல் சார்ந்த தாக இருக்கிறதென்றாலும் இதன் முதல் பகுதி மிகச் சிறந்த வாழ்க்கைத் தத்துவமாக விரிகிறது.
ஒருவரின் குழந்தை என்பது அவருடைய உடமையல்ல என்று அத்தனை கவிநயத்தோடு எடுத்துரைக்கிறது.
இந்த வரிகளிலுள்ள குழந்தை என்ற வார்த் தைக்கு பதில் எழுத்தாளர் அல்லது படைப்பாளி அல்லது கவிஞர் என்று போட்டுக்கொண்டால் மிகவும் பொருத்தமாக இருக்கும், அப்பட்ட உண்மையாக இருக்கும் என்று அடிக்கடி தோன்று வதுண்டு.
ஒரு குடும்பத்தில் பிறந்தவரென்றாலும் எந்த வொரு எழுத்தாளரும் அந்தக் குடும்பத்தின் உடைமையல்ல. அவர் உலகம் முழுமைக்கு மானவர். அவரை, அவர் படைப்புகளை உள்ளன்போடு கொண்டாட உண்மையான வாசகர்கள் எல்லோருக்கும் உரிமையிருக்கிறது.
















(எனக்கு) எது கவிதை? _ லதா ராமகிருஷ்ணன்

(எனக்கு) எது கவிதை?

_ லதா ராமகிருஷ்ணன்




என்னை அழித்தாலும்

என் எழுத்தை அழிக்க இயலாது
என் எழுத்தை அழித்தாலும்
அதன் சப்தத்தை அழிக்க இயலாது
என் சப்தத்தை அழித்தாலும்
அதன் எதிரொலியை அழிக்க இயலாது
என் எதிரொலியை அழித்தாலும்
அதன் உலகத்தை அழிக்க இயலாது
என் உலகத்தை அழித்தாலும்
அதன் நட்சத்திரக் கூட்டங்களை அழிக்க இயலாது
என் நட்சத்திரக் கூட்டங்களை அழித்தாலும்
அதன் ஒழுங்கை அழிக்க இயலாது
என் ஒழுங்கை அழித்தாலும்
அதன் உள்ளழகை அழிக்க இயலாது
என் உள்ளழகை அழித்தாலும்
என்னை அழிக்க இயலாது
என்னை அழித்தாலும்
என்னை அழிக்க இயலாது
அழிப்பது இயல்பு
தோன்றுதல் இயற்கை

-ஆத்மாநாம்

With due respect to Poet Athmanam, இந்தக் கவிதையில் பிரகடனம் இருக்கும் அளவு poetic finesse இருப்பதாகப் படவில்லை எனக்கு. ஒருவேளை, அவர் எழுதிய காலத்தில் இந்த தொனியும் பார்வையும் புதுமை யாக இருந்திருக்கலாம். (அப்படியும் முழுமையாகச் சொல்ல முடியாது. பாரதியின் பல செறிவான கவிதைகளில் இந்தப் பிரகடனம் இன்னும் அடர்த்தியாக வெளிப்பட்டிருப்பதாய் உணர்கிறேன்).

அப்படியெனில், நல்ல கவிதை என்பதற்கு அது எழுதப்பட்ட காலத்தில் அதிர்வுகளை ஏற்படுத்துவது போதுமானதா? அல்லது, அது எல்லாக் காலத்திலும் புதுமையாக இருப்பதா? எல்லாக் காலத்திற்குமான , எல்லோருக்கும் பொதுவான விஷயங்களை எழுதுவதால் மட்டும் ஒரு கவிதை கவிதையாகிவிடுமா?

இவை ஒரு வாசகராக என்னுடைய கேள்விகள்.

ஆத்மாநாமின் பின்வரும் கவிதை அதிகக் கவித்துவம் வாய்ந்ததாக எனக்கு நிறைவளிப்பது.

இந்தச் செருப்பைப்போல்
எத்தனை பேர் தேய்கிறார்களோ
இந்தக் கைக்குட்டையைப்போல்
எத்தனை பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் சட்டையைப்போல்
எத்தனை பேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி
இத்தடனாவது விட்டதற்கு.

அதேபோல் ‘ராமச்சந்திரனா என்று கேட்டேன்’ என்று எல்லோரும் பாராட்டும் நகுலனின் கவிதை என்னப் பொறுத்தவரை கவிதையாக முடியாத வார்த்தை விளையாட்டுதான். அதில் எத்தனை ‘தத்துவச்செறிவு’ இருப்பினும்.

அதைவிட _

‘இருப்பதற்கென்று வருகிறோம்
இல்லாமல் போகிறோம்

என்ற கவிதை ‘இல்லாமல் போகிறோம்’ என்பதிலுள்ள ஒன்றுக்கும் ஏற்பட்ட அர்த்தத்தினால் வெறும் ஸ்டேட் மெண்ட் கவிதையாகச் சுருங்கிவிடாமல் தப்பிக்கிறது .

என்றாலும் இதை ,கவிதையென்று எப்படிச் சொல்ல?

இதைவிட ’அலைகள்’ என்ற தலைப்பிட்ட நகுலன் கவிதை அதன் ஆழ்மனப் பட்டவர்த்தன அலசல் தன்மையால் அதிகக் கவித்துவம் வாய்ந்ததாகப் படுகிறது.

அலைகள்
நேற்று ஒரு கனவு;
முதல் பேற்றில்
சுசீலாவின்
கர்ப்பம் அலசிவிட்டதாக;
இந்த மனதை வைத்துக்கொண்டு
ஒன்றும் செய்ய முடியாது’

இதைவிட கவித்துவம் வாய்ந்த கவிதையாக எனக்குப் படுவது நகுலனின் கீழ்க்கண்ட கவிதை:

நள்ளிரவில்
தனியாக
சூரல் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு
எழுதிக்கொண்டிருக்கிறான்
அருகில்
தரையில்
ஒரு பாம்பு
சுருண்டு கிடக்கிறது.
காலம் கண்ணாடியாகக் கரைகிறது
ஒரு நதியாக ஒரு ஜலப்ரளயமாகச்
சுழித்துச் செல்லுகிறது
விறைத்த கண்களுடன்
அதன் மீது செத்த மீன்கள்
மிதந்துசெல்கின்றன
எழுந்து கோட்-ஸ்டாண்டில்
தொங்கிக்கொண்டிருந்த
சவுக்கத்தை எடுத்து
ஒரே தெப்பமாக
நனைந்த
தலையைத் துடைத்துக்
கொள்கிறான்

இதில் வாசகப் பங்கேற்புக்கான சாத்தியம் அதிகம் இருக்கிறதென்று தோன்றுகிறது. Mere Statement, Mere Reportingஐத் தாண்டிய விஷயம் இருப்பதாகப் படுகிறது. அந்த அம்சம்தான் கவித்துவமா என்று என்னையே கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப் பார்வை எத்தனை தூரம் subjective என்றும்,

ஆத்மாநாமில் எழுதத் தொடங்கியவள் நகுலனில் ஏன் முடிக்கிறேன் என்றும்கூட...!


ஓர் எழுத்தாளராக இருப்பது....

ஓர் எழுத்தாளராக இருப்பது....

_ லதா ராமகிருஷ்ணன்

பெயர்பெற்ற படைப்பாளி, அதுவும் அயல்நாட்டைச் சேர்ந்தவர், அயல்மொழியைச் சேர்ந்தவர் இறந்தால் உடனே அவரைப் பற்றி அவசர அவசரமாக அஞ்சலிக் கட்டுரைகள், கருத்துரை கள் எழுதுவார்கள் சிலர்.

அந்தப் படைப்பாளியை ஆர்வமாக, அகல்விரிவாக வாசித்து, உள்வாங்கி உண்மையான நெகிழ்வோடு எழுதப்படும் அஞ்சலிக் கட்டுரைகளுக்கும் (கருத்துரைகளுக்கும்), அவரைத் தெரியும் என்று பாவ்லா காட்டி, பந்தா காட்டி பேருக்கு எல்லோரும் மேற்கோள் காட்டும் ஒன்றிரண்டு படைப்புகளின் தலைப்புக ளையே தாமும் தந்து எழுதப்படும் கட்டுரைகளுக்கும் (கருத்து ரைகளுக்கும்) எளிதாகவே வித்தியாசத்தை நம்மால் உணர முடியும்.
(பாரதியாரையே இப்படி மேம்போக்காக சில கவிதை களை மட்டுமே மேற்கோள் காட்டிப் பேசுபவர்கள் நிறைய பேர்)
சிலர் மாமன் – மச்சான் உறவுமுறையில் அந்தப் படைப் பாளியைப் பற்றி ஏதாவது சொல்வார்கள். அவருடைய படைப்பாற்றலை ஒருவித உடைமையுணர்வோடு எடுத்துரைப்பார்கள். அந்தப் படைப்பாளியைக் கொச்சையாக விமர்சித்து அது அவர் மீதான அதீத அன்பால் பிறந்தது என்பார்கள். அந்தப் படைப்பாளியைப் பற்றிப் பேசுவதன் மூலம் தம்மை பிராபல்யப்படுத்திக்கொள்ளப் பார்ப்பார்கள்; அறிவுசாலிகளாக நிறுவிக்கொள்ளப் பார்ப்பார்கள்.
அந்தப் படைப்பாளியை உண்மையாக ஆழ்ந்து படித்து உள்வாங் கிக் கொண்டவர்கள் மௌனமாக மனதுக்குள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருப்பார்கள்.
சமீபத்தில் இறந்த உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் மிலன் குந்தேரா இப்போது இந்தச் சுழலில் அகப்பட்டுக்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.
அவருடைய சில சிறுகதைகள் மட்டுமே படித்திருக்கிறேன்.

அவருக்கான அஞ்சலிக் கட்டுரையாக இரண்டு நாட்களுக்கு முன்பு டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழில் வெளியான கட்டுரை அகல் விரிவாக, மனப்பூர்வமாக எழுதப்பட்டிருந்தது.
அதில் மிலன் குந்தேராவைப் பற்றிய முத்திரை வாசகமாக, அவருடைய முத்திரை வாசகமாகத் தரப்பட்டிருந்த இரண்டு கூற்றுகள் இங்கே தரப்பட்டுள்ளன.

...................................................................................................................................
//HE RARELY GAVE INTERVIEWS AND BELIEVED WRITERS SHOULD SPEAK THROUGH THEIR WORK//.

//*அவர் பேட்டியளிப்பது அரிது. படைப்பாளிகள் தங்கள் படைப்பு கள் வழியாகப் பேசவேண்டும் என்று அவர் தீர்மானமாக நம்பினார்//

....................................................................................................................................
//TO BE A WRITER DOES NOT MEAN TO PREACH A TRUTH. IT MEANS TO DISCOVER A TRUTH//

_MILAN KUNDERA

(ஓர் எழுத்தாளராக இருப்பது ஓர் உண்மையை போதிப்பது அல்ல; ஓர் உண்மையைக் கண்டறிதலே.
மிலன் குந்தேரா
.......................................................................................................................................

RIPPLES AND BUBBLES - ‘rishi’ (Latha Ramakrishnan)

 RIPPLES AND BUBBLES

‘rishi’
(Latha Ramakrishnan)
(from the poem-collection
THE RAIN BEYOND & OTHER POEMS)


(1)

METAMORPHOSIS

Poems say nothing
Unless the reader becomes the poet

SYNOPSIS

Words in a poem are but
thorns and flowers in a jungle divine.

REALIZATION

Claps, applause _ can they
ever equal the joy of creating?

EXERCIZE

I walk along the vast expanse of
evergreen infinity of the world within.

PRAYER

Let me be wide awake in a
Dreamless full-throated sleep tonight.

PAST PRESENT FUTURE _‘rishi’ (Latha Ramakrishnan)

 PAST PRESENT FUTURE

_‘rishi’ (Latha Ramakrishnan)
(from my poem-collection
‘THE RAIN BEYOND & OTHER POEMS)

Time remained an endless ocean
of eight o’ clock
till the time we realized
that the clock had stopped
tick tock tock....

Thursday, July 6, 2023

சில நேரங்களில் சில சமூகப்பிரக்ஞையாளர்கள் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சில நேரங்களில் சில சமூகப்பிரக்ஞையாளர்கள்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
தனது வளையல்வட்டக் கிணறில்
இல்லாத முதலையின் வாலைப்பிடித்து
முறுக்கிச் சுழற்றி
அதைச் சாகடித்துவிட்டதாக மார்தட்டிக்கொள்பவருக்கும்
அனேக ’லைக்’குகள் அன்றாடம் கிடைத்தவாறே.
அங்கே இல்லாத முதலை அவர்களுக்குமானதாய்
அந்த வளையல்வட்டக்கயிறின்
சமுத்திரக்கரையோரம்
தனது வலிக்காத வாலுடன்
அநாதிகாலம் இளைப்பாறிக்கொண்டேயிருக்கிறது.

பொய்யிலே பிறக்கும் அழுகிய சொற்கள் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 பொய்யிலே பிறக்கும்

அழுகிய சொற்கள்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


சில பல சால்வைகளும் பூங்கொத்துகளும்
பட்டங்களும் பதாகைகளும்
சரவெடியாய்க் கிளம்பும் கரவொலிகளும்
நாளை கிடைக்கலாகும் பதவியும் வாகனமும் அதிகாரமுமாய்
ஆழ்ந்த கிறக்கத்திலிருக்கும்
காரியார்த்த இலக்கியவாதியொருவரின்
வாயிலிருந்து
கிளம்பியவாறிருக்கும் அழுகிய நாற்றம்பிடித்த சொற்கள்
முகஞ்சுளிக்க வைப்பவை எல்லோரையுமே
- அவரைத் தவிர.