LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, September 4, 2025

மௌனம் ஒரு காவல் தேவதை - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மௌனம் ஒரு காவல் தேவதை

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
மௌனம் சம்மதமென்று,
சீக்காளிமனதின் சுரவேக பலவீனமென்று
யார் சொன்னது?
மௌனம் ஒரு மந்திர உச்சாடனம்.
ஒரு மாயக்கோல்.
ஒரு சங்கேதமொழி.
ஒரு சுரங்கவழி.
சொப்பனசங்கீதம்
அரூபவெளி.
அந்தரவாசம்.
அனாதரட்சகம்.
முக்காலமிணைப்புப் பாலம்.
மீமெய்க்காலம்.
மொழிமீறிய உரையாடல்.
கதையாடல் ஆடல் பாடல்.
மனசாட்சியற்றவரிடம் நம் வார்த்தைகள்
மண்டியிட்டுத் தெண்டனிடுவதைத்
தடுக்கும் சூத்திரம்.
பாத்திரம் அறிந்து நாம் இடும் பிச்சை.
ஆத்திரத்தின் வடிகால்.
அடிமன வீட்டின் திறவுகோல்.
யாரிடமும் நம்மை நிரூபித்தாகவேண்டிய
கட்டாயத்திலிருந்து விடுதலை.
ஆய தற்காப்புக் கலை.
அவரவர் இமயமலை.
நெருங்கியிருப்பவரையும் கணத்தில்
நெடுந்தொலைவிலாக்க எறியப்படும்
சூட்சுமக்கல்.
நித்தமும் நெஞ்சொளிரும் வானவில்.
பித்தாகிநிற்கும் சொல்.
வலியாற்ற மனம் தயாரிக்கும்
அருந்தைலம்.
கொடியவிலங்குகளிடமிருந்து காக்க
நம்மைச் சுற்றிக் கனலும் எரிவளையம்.
கடல்நடுவே கரையாகும் மணல்திட்டு.
அடர்மழை.
நள்ளிரவின் உயிர்ப்பு.
நிலவின் புன்சிரிப்பு.
இன்னும்……
9

என்னை விட்டுவிடுங்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 என்னை விட்டுவிடுங்கள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
நன்றாகவே அறிவேன் ஐயா –
நீங்கள் என்னை நலம் விசாரித்து
நயத்தக்க நாகரிகத்துடன் நாலும் அளவளாவுவதெல்லாம்
சில பல செய்திகளை என்னிடமிருந்து சேகரித்து
நான் சொல்லாததைச் சொன்னதாய் செய்தி பரப்பவே.
ஊர்வன பறப்பனவுக்கு உள்ளதெல்லாம் ஐந்தே அறிவுதானாம்
உங்களுக்குத் தலா பத்துப் பதினைந்துகூட இருக்கலாம்.
உயர்வானவராகவே இருங்கள், ஆனால்
அடுத்தவரை அவமதிப்பதற்கும் அவதூறு பேசுவதற்குமே
அவையென்று ஆகிவிட்ட அவலத்தை
இன்றேனும் எண்ணிப்பாருங்கள்.
ஆன்றோரே! சான்றோரே! மீண்டும்
மன்றாடிச் சொல்கிறேன் _
உங்கள் போட்டி பொறாமைகள் பொல்லாப்பு
பொச்சரிப்புகளையெல்லாம்
நீங்கள்தான் சுமக்கவேண்டும்,
அவரவர் சிரசுகளில்.
என் தலையில் ஏற்றப்பார்க்காதீர்கள்.
பனங்காயின் கனத்தையும் சுமக்கலாகும்
என் குருவித்தலையால், தேவையெனில்;
உங்கள் குப்பைக்கூளங்கள் கழிசடைகளையெல்லாம்
வழிநீளச் சுமந்து ஆவதுதான் என்ன?
இல்லாததை இருப்பதாக, இருப்பதை இல்லாததாகப்
பொல்லாங்கு சொல்லிச் சொல்லி
என்ன கண்டீர்?
நல்லோரே வல்லோரே -
சொல்லுங்கள்.
பித்துப்பிடித்ததுபோல்
தெரிந்தவர் தெரியாதவர் தலைகளையெல்லாம் ஏன்
எத்திக்கொண்டேயிருக்கிறீர்கள்?
பெருமதிப்பிற்குரியோரே! பெருந்தகைகளே!
உத்தமர்களில்லை நீங்கள்,
அறிவேன்;
உன்மத்தர்களுமில்லை.
உங்களைக் கலந்தாலோசிக்காமல்,
உரக்க வழிமொழியாமல்
சுயம்புவாய் எழுதுபவர் கைவிரல்களை அறுத்தெறியும் வெறியில்
உங்கள் நாவிலும் எழுதுகோல் முனையிலும் பிச்சுவாக்கத்தியோடு
நகர்வலம் வந்துகொண்டிருக்கிறீர்கள்.
மோதிரம் அணிந்திருப்பதொன்றே உங்களுக்கான தகுதியென்று
தேடித்தேடித் தலைகளைக் குட்டுகிறீர்கள்
ரத்தம் சொட்டச்சொட்ட.
ரணகாயமடைந்தவர்கள் நன்றிபாராட்டவேண்டும் என்று
மனதார விரும்பும் உங்கள் மனிதநேயம்
மெய்சிலிர்க்கவைக்கிறது.
மறவாமல்
எரிகொள்ளியை எல்லா நேரமும்
முதுகுப்புறம் மறைத்தபடியே
நட்புபாராட்டிவருகிறீர்கள்.
என்றேனும் நெருப்பு உங்களையே பதம்பார்த்துவிடாமல்
கவனமாயிருங்கள்
(உங்களுக்குச் சொல்லித்தரவேண்டுமா என்ன!)
எப்படியோ போங்கள் _
என்னை விட்டுவிடுங்கள்.

கலைடாஸ்கோப் கவிதைகள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

கவிமூலம்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

சொன்ன சொல் சொக்கத் தங்கமெனில்
சொல்லாதது வைரமெனச்
சான்றோர் மொழிய
'இல்லை
அது என்னிடம் இல்லாத
என் செல்ல நாய்க்குட்டி '
என்கிறான் சிறுவன்.

சட்டி அகப்பை நாம்
’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



எதுவும் தெரியாவிட்டாலென்ன –
பரவாயில்லை
எல்லாம் தெரிந்ததாகக் காட்டிக்கொள்வதே
(உன்) அறிவின் எல்லையான பின்….
முன்னுக்கு வந்துவிட்டால் பின்
உண்மையென்ன பொய்யென்ன அறிவில்….
என்னவொன்று
கண்ணுங்கருத்துமாய் என்னதான் நீ
மறைத்தாலும்
புரையோடிய புண்வலியாய்
பொய் கொல்லும் நின்று..


சரிநிகர்சமானம்
’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


எனது நம்பிக்கை உங்களுக்கு நகுதற்குரியது;
நக்கலுக்குரியது.
எனக்கு அறிவிருப்பதையே நீங்கள் அங்கீகரிக்க மறுக்கிறீர்கள்;
எனக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு என்பதைக்
கணக்கிலெடுத்துக்கொள்ள ஒப்புவதில்லை
ஒருபோதும்.
ஒரு குழந்தையின் மழலைப்பேச்சையும்
கிறுக்கல்களையும்
அணுகுவது போன்றே
என் மாற்றுக்கருத்துகளை அணுகும் உங்களுக்கு
என்மீது இருப்பது அன்பென்றால்,
சகமனித மரியாதையென்றால்
அத்தகைய அன்பை மதிப்பை
மறுதலிப்பதே யென் சுயாபிமானமாக.

ஆம் இல்லையாம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அன்பு என்பது
உணர்வாகவும்
சொல்லாகவும்
உண்மையாகவும்
பொய்யாகவும்
விரிந்தும்
சுருங்கியும்
விலகியும்
நெருங்கியும்
கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருக்கிறது.
களைத்துப்போகச் செய்தாலும்
புண்ணாக்கினாலும்
ஒன்று மீதமில்லாமல் எல்லாத் தூண்களின்
பின்னாலும்
ஓடியோடித் தேடியபடியே
நாம்…….








மெய்யுணர்தல்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

May be a doodle of tree and text
விசுவரூபம் இயல்பாயிருக்குமொருவர்க்கும்
விசுவரூப வேடந்தரித்த ஒருவருக்கு
மிடையேயான
ஆறுவித்தியாசங்களைக் கண்டுபிடிக்கச்
சொல்லிக்
கேட்டிருந்த புதிர்ச்சித்திரத்தில்
குறைந்தபட்சமாக அறுநூறு வித்தியாசங்களைக்
கண்டுபிடிக்க முடிந்ததில்
விசுவரூப வேடந்தரித்தவரை
வெகு இயல்பாய்க் கடந்துசெல்லவும்
விசுவரூபமே இயல்பாய்க் கொண்டவரை
வெகு இயல்பாய் விழுந்து வணங்கவும்
முடிகிறது.

சொல்ல வேண்டிய சில - திரைப்படம், தொலைக்காட்சி சீரியல், சமூகம் - _ லதா ராமகிருஷ்ணன்

சொல்ல வேண்டிய சில திரைப்படம், தொலைக்காட்சி சீரியல், சமூகம்

(திண்ணை இணைய வார இதழில் - அரசியல்-சமூகம் பிரிவில்)

_ லதா ராமகிருஷ்ணன்

http://puthu.thinnai.com/2025/06/29/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d/






Saturday, August 23, 2025

அலுவல் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அலுவல்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
எதிரே தெரிந்த சுவரொட்டியில்
பதவிசாய் சிரித்துக்கொண்டிருந்த
பெண்ணைச் சுட்டிக்காட்டி
பாவம் பிரசவத்தின்போது வீங்கியிருந்த
இவள் வயிறு
எத்தனை பாரமாயிருந்திருக்கும்
என்றார் அடுத்திருந்தவர்.
எதற்கு வம்பென்று ஆமாமாம் என்று
சொல்லியபடியே
அடுத்துவரும் பேருந்து
என்ன வழித்தடம் என்று
கண்களை உருப்பெருக்கிக்
கண்ணாடியாக்கப்
பிரயத்தனப்பட்டார் இவர்.
வாழ்வுப் பிரயத்தனத்தில்
ஒருவேளை இவள்
சோரம்போயிருந்திருப்பாளோ,
என்று மேலும் கேட்டார்
முதலாமவர்.
போயிருக்காவிட்டாலென்ன,
போனதாகச் சொல்வது
வெல்லமல்லவா உமக்கு
என்று தன்னையும் மீறிச்
சொல்லியவண்ணம்
வண்டியில் முண்டியடித்துக்கொண்டு
ஏறினார் இவர்.All reactions:

சொல்லவேண்டிய சில….. மூத்த குடிமக்களும் சமூகமும்

 சொல்லவேண்டிய சில…..

மூத்த குடிமக்களும் சமூகமும்

(www.puthu.thinnai.com)

http://puthu.thinnai.com/2025/08/10/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95/


சில நாட்களுக்கு முன்பு படிக்க கிடைத்த செய்தி இது பெங்களூருவில் உள்ள மூத்த குடிமக்கள் இல்லத்தில் மே மாதத்தில் சேர்க்கப்பட்ட 84 வயது கணவரும் அவருடைய மனைவியும் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்கள் தன் மனைவி செய்யும் சாப்பாடு அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் அவர்களே விரும்பித்தான் மூத்த குடிமக்கள் இல்லத்தில் தங்களை சேர்க்க சொன்னதாக கூறி இருக்கும் அவர்களுடைய மகன் தன்னுடைய பெற்றோரின் இறப்பு குறித்து புகார் அளித்திருக்கிறார் ஆனால் இந்த செய்தியை படிக்கும் போது அது விரட்டில் இந்த மூத்த குடிமக்கள் எடுத்த முடிவாக இருப்பதற்கான வாய்ப்புகளை அதிகம் என்று தோன்றுகிறது தற்கொலைக்கான காரணம் குறித்த கடிதம் எதுவும் எழுதி வைக்கப்படவில்லை.

சில ஊர்களில் வயதானவர்களின் மரணத்தை இறைவாக்க முடியாமல் விரைவாக முடியாமல் படுத்து கிடப்பவர்களுக்கு இளநீர் புகட்டுவது வழக்கம் என்று படித்திருக்கிறேன் அது குறித்து எழுத்தாளர் கவிஞர் எம்டி முத்துக்குமாரஸ்வாமி 

ஜூலை 13 அன்று தனது ஃபேஸ்புக் நிலைத்தகவல் பகுதியில் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அது இங்கே பெட்டிச்செய்தியாகத் தரப்பட்டுள்ளது.


மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் (THE CONQUEST OF HAPPINESS – BERTRAND RUSSEL) அத்தியாயம் 3 போட்டி

 மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் (THE CONQUEST OF HAPPINESS – BERTRAND RUSSEL)

அத்தியாயம் 3
போட்டி
https://puthu.thinnai.com/2025/08/10/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f-2/

(தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்)
அமெரிக்காவில் உள்ள எந்த மனிதரையும் அல்லது இங்கிலாந்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் எந்த மனிதரையும், வாழ்வின் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் அவர்களைத் தடுக்கும் மிக முக்கிய விஷயம் எது என்று கேட்டால் அவர் வாழ்தலுக்கான போராட்டம் என்றே பதில் அளிப்பார். அதை மிகவும் உண்மையாகவே அவர் கூறுவார். அதை அவர் தீர்மானமாக நம்புவார். ஒரு குறிப்பிட்ட வகையில் அது உண்மையே. ஆனால், இன்னொரு வகையில் – இது மிகவும் முக்கியமானது – அது அப்பட்டமான பொய்;