LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, August 1, 2025

வாசிப்பு வாசகப்பிரதி வாசிப்பனுபவம்

 வாசிப்பு வாசகப்பிரதி வாசிப்பனுபவம்

_லதா ராமகிருஷ்ணன்

கவிஞர் ஜெயதேவனின் கவிதை இது:

நிசப்தமான அறையில் ' ணங்' என்ற ஒலியுடன் சிதறி விழுகிறது
சற்று முன் நான் தேநீர் குடித்து விட்டு
மேசையில் வைத்த பீங்கான் குவளை.
எங்கிருந்து வந்தது இந்த ஒலி
குவளைக்குள்தான் இருந்ததா?
எனில்
நான் பருகிய தேநீருக்குள்ளும் சில
ஒலிச் சிதறல்கள் போயிருக்குமா.
பலா மரத்திலிருந்து விழுந்த
கூழம் பலா போல் சிதறிக் கிடக்கும்
பீங்கான் துண்டில் எந்தத் துண்டிடம்
கேட்பேன்.
" இத்தனை ஒலியை உள்ளுக்குள் வைத்திருந்தும்
ஏன் இதுவரை ஒரு வார்த்தை கூட என்னிடம் பேசவில்லை.
குறைந்தது ஒரு காலை வணக்கமாவது
சொல்லியிருக்கலாமே தினமும்"

******
(* " ஒரு நாள் என்பது 24 மணி நேரம் அல்ல" தொகுப்பிலிருந்து)
கவிஞர் ஜெயதேவனின் இந்தக் கவிதையில் கீழே விழுந்து உடையும் பீங்கான் கோப்பை உண்மை யாகவே விழுந்திருக்கலாம்.
ஆனால், முழுமையாக அந்தக் கோப்பை இருந்த போது வெளிப்படாத ஒலி அது கீழே விழுந்து உடைந்தபோது எப்படி வந்தது, எங்கிருந்து வந்தது என்ற கேள்வியை முன்வைப்பதன் மூலம் அந்தக் கோப்பையைக் குறியீடாக்கி வாழ்க்கை குறித்த, உறவு குறித்த பல கேள்விகளை முன்வைப்பதாகவே என் வாசகப்பிரதி விரிகிறது.
தேனீர்க்குவளை முழுமையாக இருந்த அத்தனை நேரமும் அந்த ஒலியும் அதில்தான் இருந்ததா என்ற கேள்வி அப்படியானால் ‘நான் பருகிய தேனீருக்குள் ளும் சில ஒலிச்சிதறல்கள் போயிருக்குமா என்ற கேள்விக்குக் கவிஞரை இட்டுச்செல்கிறது.
வாழ்வில் நம்மால் பகுத்துணரமுடியாத பல இருக் கின்றன என்று சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம்.
‘இருக்கும்போது உணரமுடியாதது இல்லாமல் போன பிறகு உணரப்படுவதாய், உறவின் பிரிவைக் குறிப்பு ணர்த்துவதாய்க் கொள்ளலாம்.
‘நிசப்தமான அறை’ என்று கவிஞர் குறிப்பிடுவது தூல அறையைத் தானா அல்லது மனமெனும், வாழ் வெனும் சூக்கும அறையையா? நிசப்தம் மனதின் சமன்நிலையா? மனம் உணரும் தனிமையா? இரண்டுமா?
//’நான் பருகிய தேனீருக்குள்ளும் சில ஒலிச்சித றல்கள் போயிருக்குமா//’ என்ற வரியை அர்த்த ரீதியாய் பிரித்துப்பார்க்க முற்படுவதற்கு முன்பாக அந்த வரியின் கவித்துவம் மனதை ஈர்த்துவிடுகி றது!
பருகிய தேனீருக்குள் சில ஒலிச்சிதறல்கள் கலந்திருந் தால் அவை கவிதைக்குள் தேனீர் குடித்தவருக்குள் ளும் போயிருக்குமல்லவா! அப்படிப் போனதால் தான் இந்தக் கவிதை உருவாகியிருக்குமோ!
//‘பலா மரத்திலிருந்து விழுந்த கூழம்பலா போல் சிதறிக்கிடக்கும் பீங்கான் துண்டில்’ //
- உடைந்த பீங்கான் துண்டுகளுக்கு இத்தகைய ஒப்புமையை நான் படித்த நினைவில்லை. கூழம் பலா என்பது ஒருவகை பலாவாக இருக்கும் என்று நினைக்கிறேன். அல்லது, பலாவின் வளர்ச்சிக் கட்டங்களில் ஒன்றாய்....நகரிலேயே பிறந்து வளர்ந்து உரித்த பலாச்சுளைகளையே பரிச்சியம் கொண்டவள் என்பதால், சரியாகத் தெரியவில்லை. பலாப்பழம், பீங்கான் இரண்டிலும் ஒளிரும் மினுமினுப்பு உண்டு என்பதும் நினைவுக்கு வருகிறது.
//சிதறிக்கிடக்கும் பீங்கான் துண்டில் எந்தத் துண்டிடம் கேட்பேன்// - எப்படிப்பட்ட பரிதவிப்பு இது!
’சிதறிக்கிடக்கும் பீங்கான் துண்டில் என்பதை கவிஞர் பிரக்ஞாபூர்வமாகக் கையாண்டிருக்கலாம், அல்லது, கவிதையைச் சொல்லும் போக்கில் ஒருமை, பன்மை நினைவை விட்டு நழுவியிருக்க லாம் முன்பு ஒருமுறை ‘சோற்றுப்பருக்கைகள் தொண்டையை அடைத்தது என்று எழுதியிருந்த கவிஞரை அதுகுறித்துக் கேட்டபோது ‘ எல்லாப் பருக்கைகளுமாகச் சேர்ந்து ஒரு மொந்தையாகித் தானே தொண்டையை அடைத்தது. தனித்தனியாக அல்லவே’ அதனால் தான் ஒருமையில் ’அடைத்தது’ என்று எழுதினேன் ‘ என்று பதிலளித்தது ஞாபகம் வருகிறது. கவிதையில் இலக்கணத்தை ஒரேயடி யாகக் கைவிடலாகாது என்றாலும் கவிதை இலக்கணம் மட்டுமல்லவே! ‘இங்கே கவிஞர் ‘சிதறிக் கிடக்கும் பீங்கான் துண்டில்’ என்பதில் ‘குவளை’ என்னும் முழுமையே பல பின்னங்களால், பகுதிகளால் ஆனவையே என்ற குறிப்பு தொக்கிநிற்ப தாகத் தோன்றுகிறது. ’உண்மையில் முழுமை என்று ஏதேனும் உண்டா என்ன? என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது.
அதுவும், என்ன கேட்க நினைக்கிறார் கவிதை சொல்லி?!
//இத்தனை ஒலியை உள்ளுக்குள் வைத்திருந்தும் ஏன் இதுவரை ஒரு வார்த்தை கூட என்னிடம் பேசவில்லை
குறைந்தது ஒரு காலைவணக்கமாவது சொல்லியிருக்கலாமே தினமும்?!//
நிசப்தமும் அமைதியும் இருவேறு பொருள்களைக் கொண்டவை. சமயங்களில் அர்த்தங்கள் overlap ஆவதும் உண்டு.
இந்தக் கவிதை குறித்து நிறைய எழுதலாம். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் கவிதையில் வரும் அறையும், நிசப்தமும், உடைந்த தேனீர்க் கோப்பை யும், தொண்டைக்குள் இறங்கி உதிரத்தில் கலந்துவிட்ட தேனீரும், உடைந்த பீங்கானிலிருந்து வெளிப்படும் ஒலியும், தேனீர்க்கோப்பையிடம் காலை வணக்கமாவது சொல்லியிருக்கலாமே என்று விசனத் தோடு கூறும் கவிதைசொல்லியும் இவையாவும் நேரிடையான அர்த்தத்திலும் குறியீடுகளாகவும் வாழ்வு குறித்து விரிக்கும் காட்சிகளும் உணர்வுகளும் நிறைவான வாசிப்பனுபவத்தைத் தருபவை. இந்தக் கவிதை இடம்பெற்றிருக்கும் தொகுப்பின் தலைப்பு
" ஒரு நாள் என்பது 24 மணி நேரம் அல்ல" - ஒற்றைவரிக் கவிதை!
கவிஞர் ஜெயதேவனின் இன்னொரு கவிதை பிறப்புக்கும் இறப்புக்குமான இடைவெளி’ என்று தொடங்கும்

பிறப்புக்கும் இறப்புக்குமான
இடைவெளி
ஒரு காற்றுக்குமிழுக்கும்
இன்னொரு காற்றுக்குமான இடைவெளிதான்
கண்ணாடிக் குடுவைக்குள்
புகுந்த நீர்த்துளி காய்வதற்கான
காலத்துளி அளவுதான்
துளிருக்கும் உதிர் சருகுக்கும்
பனிப்படலத்திற்கும்
அதன் உலர்தலுக்குமான
கால எல்லைதான்
உள்மூச்சு வெளிவரும்
அந்நொடியாகவோ
வெளிச் சுவாசம் நுரைப்பை தொடும் இடைக்கணமோ கூட.
குழந்தையின் கொலுசொலி
முதியவளின் வெற்றிலை உரல்
இடிப்பொலி நம் காது தொடும்
தூரம்தான்
நீண்டவெளியில் நீ என்பதற்கும்
நான் என்பதற்குமான அடையாள
புள்ளிகள் மறைந்து
சுத்த சூன்யமாகும்
காலதீதம்தான்.
விண்ணீர்த் துளி மண் தொடும்
இடைவெளி கூட அல்ல
பிறப்புக்கும் இறப்புக்குமான இடைவெளி.
ஜெயதேவன்

வாக்குமூலம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வாக்குமூலம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஊ….......லல்லல்லா…………ஊ…......லல்லல்லா…….......
ஊகூம், ஏலேலோ உய்யலாலா….
உளறிக்கொட்டிக்கொண்டிருப்பேன்;
உதார்விட்டுக்கொண்டிருப்பேன்
ஒருபோதும்
உனக்கொரு சரியான பதில் தர மாட்டேன்….
ஊ….......லல்லல்லா…………ஊ…......லல்லல்லா…….....
ஊகூம், ஏலேலோ உய்யலாலா…..
வச்சிக்கவா? வச்சிக்கவா? வச்சிக்கவா வச்சிக்கவா….?
எச்சில் வழியக் கேட்பவன் இறுதியில்
‘‘உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ளே’ என்று சொல்லித்
தப்பித்துவிடும் உலகில்
பதிலளிக்காமல் போக்குக் காட்டுவதெல்லாம் மிக எளிது
ஊ….........லல்லல்லா……….ஊ…....லல்லல்லா…...........
ஊகூம், ஏலேலோ உய்யலாலா…
இணையற்ற என்னைப் பார்த்தா வினவத் துணிகிறாய்?
இல்லாத நூலிலுள்ள எழுதாத பக்கங்கள் எனக்கு மனப்பாடம் தெரியுமா?
பார்த்தாயல்லவா – மார்க்வெஸ்ஸின் ஒரு வரியில்
(மாங்காய் மடையர்களிடம்) என்னை மேல்தாவியாக்கிக் காட்டும்
மேலான வித்தை தெரிந்துவைத்திருக்கிறேன்.
ஊ…......லல்லல்லா………......ஊ…...லல்லல்லா….......
ஊகூம், ஏலேலோ உய்யலாலா
தர்க்கநியாயங்களை கணமேனும் எண்ணிப்பார்ப்பேன் என்றா நினைக்கிறாய்?
அநியாயம், அக்கிரமம் என்றே அலறுவேன் அரற்றுவேனே தவிர
தப்பித் தவறியும் தெளிவா யொரு பதிலைத் தரமாட்டேன்.
பின்வாங்கலை கடந்துபோவதாய் பொருள்பெயர்த்துவிட்டால் போயிற்று.
ஊ…........லல்லல்லா………..ஊ….லல்லல்லா…...............
ஊகூம்,ஏலேலோ உய்யலாலா
துணிவிருந்தால், தில்லாலங்கடியோ, கேட்டுப் பார் கேள்வியை
திரட்டிவைத்திருக்கும் கருத்துமொந்தைகளை
விறுவிறுவென விட்டெறிவேனே தவிர
மறந்தும் பதிலளிக்க மாட்டேன்.
ஊ….....லல்லல்லா………...ஊ…......லல்லல்லா….............
ஊகூம்,ஏலேலோ உய்யலாலா
மீண்டும் அறிவுறுத்துகிறேன், புண்ணாக்கு விடைவேண்டி
வலியுறுத்தினாலோ
மளமளவென்று கிளம்பும் என் அய்யய்யோ வென்ற அலறல்கள்;
அதி வன்மம் நிறை உளறல்கள்.
ஊ….......லல்லல்லா………..ஊ….......லல்லல்லா…...........
ஊகூம்,ஏலேலோ உய்யலாலா
காலோ, அரையோ முக்காலோ, தெக்காலோ வடக்காலோ
எங்கெங்கு காணினும் தமிழ்க்கவிதைக் காவல்தெய்வம் நானாகி
ஊனாகி உயிராகி பேனாகி அரிக்கும் பணியில்
இருபத்திநான்குமணிநேரமும் என்னை இயக்கிக்கொண்டிருப்பது
வன்மம் என்பார் உன்மத்தர்கள் ஆம்
ஊ…........லல்லல்லா……… ஊ…......லல்லல்லா…...........
ஊகூம், ஏலேலோ உய்யலாலா…..
அடுத்தொரு கேள்வி கேட்டால் பின்னும் எட்டியுதைப்பேன் வெட்டிப் புதைப்பேன்….
இன்னும் பல செய்தவாறு செய்வதெல்லாம் நீயே என்பேன்
தின்பேன் என்னென்னவோ இவ் வின்னுலகம் உய்யவே.
என்னையா கேள்வி கேட்கிறாய் அப்போதைக்கப்போது?
இந்தா உனக்கொரு பெப்பே;. இப்போதைக்கு இது.
ஊ…........லல்லல்லா……….....ஊ…......லல்லல்லா…..........
ஊகூம்,ஏலேலோ உய்யலாலா ….
0

புரியும்போல் கவிதைகள் சில….. ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 புரியும்போல் கவிதைகள் சில…..

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


1.
குட்டை குளம் ஏரி ஆறு கடல் சமுத்திரம்
இன்னும் கிணறு வாய்க்கால் நீர்த்தேக்கங்கள்
எல்லாமும் மழையுமாய்
எங்கெங்கும் நீராகி நிற்கும் நிலத்தில்தான்
தண்ணீர்ப் பற்றாக்குறையும் குடிநீர் கிட்டாநிலையும்
எனத் தெள்ளத்தெளிவாய்த் தத்துவம் பேசுவோர்க்குத்
தெரியுமோ
ஒரு துளி நீரில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையும்
அவற்றின் அலை-துகள் நிலையும்
களி நடனமும் பிறவும்….?
2.
ஒன்றிரண்டு மூன்றுநான்கு ஐந்தாறு எட்டுபத்து….
ஏழும் ஒன்பதும் விட்டுப்போனதேன்
என்று வாய்ப்பாடு ஒப்பித்தலாய்க் கேட்பதற்கு முன்
இரண்டான ஒன்றின் நான்கான மூன்றின்
ஆறான ஐந்தின் பத்தான எட்டின்
நேர்க்கோடுகள், நெளிவு சுளிவுகள்
வாத்தின் எலும்பு மார்பக வளைவு
வாலுடன் காத்தாடி சிரசாசன நிலை
உள்வாங்கிய சறுக்குமரம்
இருவட்டச்சிறைகளுக்குள்ளிருந்து
வெளியேறும் வழி –
என எண்ணிப்பார்த்துக்கொள்ள
எத்தனையோ இருக்கு பார்.
3.
சிட்டுக்குருவி காக்கை புறா கோழி குயில் கழுகு மயில்
வான்கோழி இன்னுமுள ஈராயிரத்திற்கு மேலான
பறவையினங்களில்
விரும்பித் தேன்குடிப்பது எது
தேன்குழலைக் கடிப்பது எதுவெனத்
தெரியுமோ எவருக்கேனும்…?
அட, தெரியாவிட்டால்தான் என்ன?
ருசியறியாதவரை தேன் வெறும்
பிசுபிசுப்பானஅடர்பழுப்புநிற திரவம்தான்.
அருந்திய பறவை ஆனந்தமாய்ச் சிறகடிப்பதைப் பார்த்து
அடித்துப்பிடித்து உண்டிவில்லைத் தேடிக்கொண்டிருப்போர்
கண்டிலரே வெளியெங்கும் பறத்தலின் காற்றுத்தடங்களை.
உண்டல்லோ அவ்வண்ணமாய் புரியாக் கவிதையும்!
4
ஸ்கூட்டி, பைக், கார், லாரி, குப்பை லாரி
மினி பஸ், மாம்பலம் – டு – லஸ் மாக்ஸி பஸ்
ரயில் கப்பல் ஆகாயவிமானம்……
எல்லாம் இருந்தும் கடற்கரையில்
கையைத் தலைக்கு அண்டக்கொடுத்தொருவன்
அண்டவெளிக்குள் பல உன்னதங்களைக் கண்டவண்ணம்
படுத்திருக்கிறானே….
அந்த வேளையில் பயணம் என்ற சொல்லின் அர்த்தம்
அவனுக்குப் பிரத்யேகமானது.
அவன் நகர்வதாகவே தெரியவில்லையே என்று
அங்கலாய்த்து
அத்தனை முனைப்போடு
அங்கொன்றும் இங்கொன்றுமாய் கற்களைத் திரட்டி
அவன் மீது குறிபார்த்து எறிவதில் காட்டும் அக்கறையில்
ஒரு துளி கவிதை மீது காட்டினாலும் போதும் –
நிறையவே புரிந்துவிடும்.
5.
திருக்குறள் நாலடியார் குறுந்தொகை
நற்றிணை தேவாரம் திருவாசகம்
சித்தர் பாடல்கள் சிலப்பதிகாரம்
எல்லாம் புரிந்துவிட்டதுபோலும்
புரியாக் கவிதை எழுதுகிறான் என
புகார் மேல் புகார் அளித்தவண்ணம்
அண்டவெளியைக் கூண்டிலேற்றி
குறுக்குவிசாரணை செய்ய
முடிந்தால் நிலவறைக்குள் அடைத்துவிடவும்
அன்றும் இன்றுமாய் அவர்கள்
ஆயுதபாணிகளாய் வந்தபடி வந்தபடி…..
காக்கும் கவிதை காக்க
அகாலத்தின் விரிபரப்பில்
காற்றுச்சித்திரங்களைத் தீட்டிக்
களித்திருப்பானே கவிஞன்!
6
இந்த வாசகருக்குப் புரியுமென்று
வெந்த சாதம் பற்றி எழுதினார்’
வந்ததே கோபம் வேறொருவர்க்கு.
பச்சைக் காய்கறிகளே சத்துள்ள உணவு
என்று கடித்துக்குதறிவிட்டார்.
வம்பெதற்கு என்று
நெல்லிக்கனியின் மகத்துவம் குறித்தொரு
கவிதை எழுதினார்.
பாகற்காயைப் பற்றிப் புனையத் தோன்றவில்லையே என்று
கண்டனத்தைப் பதிவு செய்தார் இன்னொரு வாசகர்.
ஆகா மறந்துவிட்டேனே என்று அளப்பரிய வருத்தத்துடன்
மருந்துக் கசப்புக்கோர் எடுத்துக்காட்டு பாகற்காய்
எனக் கவிதையெழுத
சுண்டைக்காயின் கசப்பைச் சொல்லாமல் விட்ட பாவி
என மண்ணை வாரித் தூற்றிச் சென்றார்
மா வாசகரொருவர்.
என்ன செய்வதென்றே தெரியாமல்
எழுதியவற்றையெல்லாம் கிழித்தெறிந்துவிட்டு
உறங்கச் சென்றார் கவிஞர்.
கனவிலும் அந்த வாசகர்கள் வந்து
அவர் உருகியுருகி யெழுதியதையெல்லாம்
உள்வாங்க மனமின்றி
கருகக் கருகக் கண்களால் எரித்து
சாம்பலை காலால் கெந்திவிட்டு
கெக்கலித்துக்கொண்டிருந்தார்கள்.
7
இரவு இரண்டுமணியைத் தாண்டிவிட்டது.
உறக்கம் வந்தும் உறங்க முடியாமல்
வரிகள் சில மனதிற்குள் குறுகுறுக்கின்றன.
கொஞ்சுகின்றன.
ஏந்திக்கொள்கின்றன.
வெளியே கூட்டிக்கொண்டுபோயேன் என்று கையைப்
பிடித்திழுக்கின்றன.
எழுதத் தொடங்கும் நேரம்
எழுதும் நேரம்
எழுதி முடிக்கும் நேரம்
நானே கவிதையின் பாடுபொருளாய்
இலக்கு வாசகராய் –
விலகிய பார்வையில்.
அதிவிழிப்பு நிலையில்…..
சாதியின் பெயரால் சக கவிஞர்களைச் சிரச்சேதம் செய்பவர்கள்
தமிழ்க்கவிதைத் தாளாளர்களாய்
கண்டம் விட்டுக் கண்டம் தாண்டிச் சென்றவண்ணம்.
இன்னும் ராமேசுவரத்தைக்கூடக் கண்டிலேன் நான்.
என்றாலும், ”குறையொன்றுமில்லை” எனச் சொல்வேன் –
மறைமூர்த்திக் கண்ணனிடம் இல்லை -
மனம் நிறைக்கும் கவிதையிடம்.
பின் ஏன் திண்ணைக்கு அனுப்புகிறாய் என்பார்க்கு:
”கல்லுக்குள் தேரைக்கு உணவிருக்கையில்
என் கவிதைக்குள் கரைபவரும் எங்கோ இருக்கக்கூடும்தானே!”
8
அனா, ஆவன்னா, இனா ஈயன்னா உனா
ஊவன்னா
ஏனா ஏயன்னா ஐயன்னா ஃன்னா….
ஆனா,, ஏனாம் அட, ஆவலா, இக ஈயமா
உர, ஊதா, எர, ஏற, ஐய, ஃப்பா இல்லை
யென்ற கேள்வியின்
எல்லைக்கப்பால் என்னைத் தள்ளிக்கொண்டு
செல்கையில்
எதிரே வந்த சிறுமி
“உய்னனக்கு இய்னிந்த பேய்னச்சுப்
பிய்னடிக்குமா?”
என வினவிச்
சென்றாளே, சென்றாளே….

STAGE by 'rishi" (Latha Ramakrishnan)

 STAGE

by 'rishi"
(Latha Ramakrishnan)
On the dais
and in the rows of seats _
everywhere men and women,
including those invisible in the empty ones,
each a separate horizon
simultaneously, in unison
each intent on playing the assigned role
to perfection….
Friend
Foe
Freak
Fool…
Hole after hole we dig
deep and deeper
but to unearth never
the whole….
Curtain raises;
Words flow -
Torrential;
Terribly superficial;
Heartfelt;
Hyperboles;
Sensible;
Sweet nonsense;
Slightly sarcastic;
Sugar-coated;
Bitter-tinged;
Hope-filled;
Heartrending;
Faces with hearts reflected
Wholly or partly
Fill the auditorium....
As everything else
this show too comes to a close.
Accompanied by melting moments
I step into the lane;
with night glistening
start walking in the rain.

அரங்கம்
மேடையில் _
கீழே வரிசையாக இருந்த இருக்கைகளில் _
எங்கு பார்த்தாலும் ஆண்களும் பெண்களும்,
அங்கிருந்த காலி நாற்காலிகளில்
அருவமாயிருந்தவர்கள் உட்பட…..
ஒவ்வொருவரும் ஒரு தனி தொடுவானம்
அதே சமயம், ஒருங்கிணைந்தும்.
அவரவருக்கென்று தரப்பட்டிருக்கும் பாத்திரத்தை
அப்பழுக்கற்று நடிக்கும் அதிமுனைப்போடு…..
நண்பன்
எதிரி
வினோதன்
முட்டாள்
குழி குழியாய்த் தோண்டிக்கொண்டிருக்கிறோம் நாம்
ஆழமாய் இன்னும் ஆழமாய்
ஒருபோதும் முழுமையை அகழ்ந்தெடுக்கலாகாமல்
திரை மேலேறுகிறது;
சொற்கள் பொங்கிப்பாய்கின்றன;
வெள்ளமாய்
கள்ளமாய்
அதி மேலோட்டமாய்
ஆத்மார்த்தமாய்
உயர்வுநவிற்சிகள்;
பக்குவமானவை;
இனிய உளறல்கள்;
சிறிதே எள்ளலுடன்;
மேலே இனிப்பு தடவப்பட்டவை;
கசப்புத் தோய்ந்தவை;
நம்பிக்கை தளும்புவன;
இதயத்தை பிளப்பன.
தத்தம் இதயம் முழுமையாகவோ பகுதியளவோ
பிரதிபலிக்கின்ற முகங்கள்
அரங்கை நிறைக்கின்றன.
எல்லாவற்றையும் போலவே
இந்த நிகழ்வும் முடிவுக்கு வருகிறது.
உருகும் தருணங்களோடு
குறுகலான சந்தொன்றில் நுழைகிறேன்.
இருள் மின்ன
நடக்கலானேன் மழையில்.
(Originally written in English by me an d translated into Tamil by myself _ latha ramakrishnan)