LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, July 10, 2025

’காளி’த்துவக் கவிதைகள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 1.யாதுமாகி நின்றாய் காளி.....

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

வெளிபரவித் திரிந்து நிரம்பித்தளும்பும்
காற்றை
வேகவேகமாகத் தமதாக்கிக்கொள்ள
வலமும் இடமுமாய்
வட்டமடித்துக்கொண்டிருந்தார்கள்.
சின்னக் குடுவை முதல்
பென்னம்பெரிய பீப்பாய் வரை
அவரவர் வசதிக்கேற்ப
வழித்துத் திணித்துக்கொண்டு
ஆளுயரக் அண்டாவிலோ
அந்த வானம் வரை உயரமான
தாழியிலோ
நிரப்பிவைக்க முயன்றால் எத்தனை
நன்றாயிருக்கும்
என்று அங்கலாய்த்தபடி
நானே காற்றுக்கு அதிபதி
நானே காற்றின் காதலன்
நானே காற்றின் ஆர்வலன்
நானே காற்றின் பாதுகாவலன்
நானே காற்றைப் பொருள்பெயர்ப்பவன்
நானே காற்றை அளந்து தருபவன்
நானே காற்றைக் குத்தகைக்கு எடுத்திருப்பவன்
நானே காற்றைக் கூண்டிலடைத்திருப்பவன்
என்று நானே நானேக்களால்
நன்கு வளர்ந்தவர்கள்
நாளும் மூச்சுத்திணறியவாறிருக்க
நான்கு வயதுக் குழந்தையொன்று
தளர்நடையிட்டுவந்து
நன்றாய்த் தன் காலி உள்ளங்கைகளைத்
திறந்து காண்பித்துச்
சொன்னது:
“என் கையெலாம் காற்று!”

***


2. போதமாகி நின்றாய் காளி!

சொப்பனங்கள் சொல்லற்கரியவை!
அத்தனை அடர்ந்த
அரூப ஓவியம்போல்….
அடியாழம் தொடும்
இருண்மைக்கவிதைபோல்….
ஒன்றையேனும் ஓரளவேனும்
கோர்வையாய்ச் சொல்லமுடிந்தால்
வரமருளப்பெற்றதாய்!
உறக்கத்தின் விளிம்பில்
விசித்திரமான வாலோடு
தன்னைப்போலொரு நிழலுருவம்
வளையவருவதைப் பார்த்தவள்
விறுவிறுவென அரைவிழிப்பெய்தி
யதை வரிவடிவில் முழுமையாக்கி
முடிக்கப்புறப்பட்டபோது
அவள் தோளில் அத்தனை அழகிய
பஞ்சவர்ணக்கிளியொன்று
வந்தமர்ந்தது!
நெற்றிப்பொட்டில் இரண்டறக்
கலந்தன
சந்திரனும் சூரியனும்!
பெருங்கோபத்தில் அவள்
வெட்டிவீழ்த்திய
கெட்டவர்களெல்லாம்
பேரன்பில் புண்ணியாத்மாக்களாக
மாறி
அவளை சூழ்ந்துகொண்டு
கட்டிக்கொண்டனர்!
மனங் கனிந்துருகி யவள்
விழிகளிலிருந்து
கண்ணீர் தீர்த்தமனைத்தாய்
வழியத்தொடங்கியபோது _
சட்டென்றொரு கடுஞ்சூறாவளி வீசி
கனவின் மேலெல்லாம்
கனத்த போர்வையாய்
படர்ந்து மண்டியது
பெரிய பெரிய பூட்டுகளுடன்
பாழும் தூசி.
சுற்றிலும் அந்தகாரம்.
சிதறடிக்கப்பட்டு
எங்கெங்கோ சிக்கிச்
சுருண்டு கிடந்தன
சொப்பன மென்னிழைகளால்
பின்னப்பட்ட வரிகள்.
வருத்தத்தோடு சிரித்துக்கொண்டாள்
பிரகதீசுவரி
மூவேழுலகும் கனவென்றும் நனவென்றும்
தினந்தினம்
கண்ணாமூச்சியாடிக்கொண்டிருக்கும்
மாகாளியறியாதவையா
மிகுபுயல்கள்?

***
3. குட்டிப்பெண் காளீஸ்வரி!
கயிறிழுக்கும் போட்டி உக்கிரமாக நடந்துகொண்டிருக்கிறது.
இருபுறமுமிருக்கும் இரண்டு குழுக்களும்
பிறவி வன்முறையாளர்களாய் இழுத்துக்கொண்டிருந்தனர்.
ஒரு குழுவில் ஒருவரது கை
சற்றே தளர
சரேலென்று பின்சரிந்து விழுந்தனர்
இருகுழுக்களில் ஒன்று
சமயங்களில் இரண்டுமே.
ஆளாளுக்குக் கைகொடுத்துத்
தூக்கிவிட்டவாறே
அடுத்த சுற்றுக்குத் தயாராகின்ற
இருதரப்பினருக்கும்
கிடைத்த சிறிது இடைவேளையில்
தேனீர் தரப்படுகிறது.
லோட்டாவின் சூட்டில்
கனன்றெரிகின்றன கயிறின்
கீறல்கள்
வெட்டுக்காயங்கள்
வீங்கிவிட்ட உள்ளங்கைகள்.
பார்த்துக்கொண்டிருந்த சிறுமி
ஒன்றும் புரியாமல் கேட்கிறாள்:
“நீங்களெல்லோரும் ஏன்
இந்தக் கயிறையிழுக்கிறீர்கள்?”
“இதுவொரு போட்டி.
வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு
உண்டு”.
“வீரத்திற்கோர் விளையாட்டு இது.”
திக்கற்றவர்களுக்குத் துணைநிற்பதல்லவா
வீரத்தின் சாரம்.
வீணுக்கு இழுக்கவேண்டாம் கயிறை.
அதற்கும் வலிக்குமே!
வாருங்கள் !
கரங்கோர்த்துத் தட்டாமாலை தாமரைப்பூ
விளையாடுவோம்!”
சொன்னவள் நாவில் இனித்த சொற்களைக்
கேட்டவர் காதுகளிலெல்லாம் சுநாதம் பாய
தன் வலி மறந்து கயிறு களிநகைபுரிய
மண் சிலிர்க்க மனம் நிறைய
தோளோடு தோள்சேர்ந்து
வீடு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்
தெய்வங்களாய் மானுடர்கள்.
சிறுமி அகிலாண்டநாயகியின்
பேரானந்தச் சிரிப்பு
வெளியெங்கும் ரீங்கரித்தவாறு.

பங்களிப்பின் பல்பொருள் அகராதி : ஓர் அறிமுகம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பங்களிப்பின் பல்பொருள் அகராதி : ஓர் அறிமுகம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
கவனமாக வெளிச்சமூட்டப்பட்ட
ஒளிவட்டங்களுக்கு அப்பால்
காரிருளார்ந்த நள்ளிரவில்
மினுங்கிக்கொண்டிருக்கின்றன
நட்சத்திரங்கள்.
கருத்தாய் மேற்கொள்ளப்
பட்ட
ஒத்திகையின் பிறகான
கைத்தட்டல்களுக்கு மேலாய்
ககனவெளியில் கலந்திருக்கின்றன
ஒருகையோசைகள்.
காண்பதும் காட்சிப்பிழையாகும்;
கேட்பதும் அழைப்பாகாதுபோகும்...
ஆனபடியால் ஆகட்டும் _
உம் ஒளிவட்டங்கள் உமக்கு;
எம் விண்மீனகங்கள் எமக்கு.
1

INSENSITIVITYயின் இருபக்கங்கள் : பெரிசு – கிழவர் லதா ராமகிருஷ்ணன்

 INSENSITIVITYயின் இருபக்கங்கள் : பெரிசு – கிழவர்

லதா ராமகிருஷ்ணன்



வயதின் காரணமாக உடலில், தோற்றத்தில் கண்டிப்பாக மாற்றங்கள் நிகழ்கின்றன என்றாலும் வயது என்பது உண்மையில் மனதால் நிர்ணயிக்கப் படுகிறது என்று தோன்றுகிறது.
சமீபத்தில் யதேச்சையாக தொலைக்காட்சியில் காணநேர்ந்த பழைய திரைப்படக் காட்சியொன்றில் 60 வயது நிரம்பிய கதாநாயகி ‘இனி தன் வாழ்க்கை சூன்யம் என்று அழுவதைக் காணநேர்ந்தது. வேடிக்கையாகவும் விசனமாகவும் இருந்தது. வாழ்வு சூன்யமாக வயதா காரணம்?
பாதிப்பேற்படுத்தாத ‘தலைமுடிச்சாயம் எல்லாம் வந்துவிட்ட பின்பு, நிறைய மருந்து மாத்திரைகள் கிடைக்கும்போது, முதுமை என்பது குறித்த சமூகத் தின் பார்வையில் நிறைய மாற்றம் ஏற்பட்டுவிட்ட நிலையில் இந்த 60 வயது இப்போது பழைய 60 வயதாக பாவிக்கப்படுவதில்லை என்பதைப் பார்க்க முடிகிறது.
ஆனாலும் நிறைய திரைப்படங்களிலும் தொலைக் காட்சித் தொடர்களிலும், (இதன் தாக்கத்தால் என்றும் சொல்லலாம்) தெருவில் எதிர்ப்படும் இளையதலை முறையினர் மத்தியிலும் ‘பெரிசு’ என்று கேலியாக 60, 60+ வயதினரைக் குறிக்கும் வார்த்தை பரவலாகப் புழங்குகிறது.
‘ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லாதது, வீணாக தனக்குத் தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பது, வாயைப் பொத்திக்கிட்டுப் போக வேண்டியது, என இந்த ஒற்றைச்சொல் பலவாறாகப் பொருள்தருவது.
சுருக்கமாகச் சொல்வதென்றால், சமூகம் என்பது இந்த வயதிலானவர்களையும்(60, 60+ அதற்கு மேல்) உள்ளடக்கியது, இவர்களையும் உள்ளடக்கியே முழுமை பெறுகிறது என்ற புரிதலை அறவே புறந்தள்ளும் சொல் இந்த ‘பெரிசு’.
சமீபத்தில் இந்தச் சொல்லுக்கு இணையான கிழவர் / கிழவர்கள் என்ற, ஒப்பீட்டளவில் நந்தமிழ்ச் சொல்லை தன்னளவில் அந்தப் பிரிவைச் சேர்ந்த ஒரு சீரிய இலக்கியவாதி யும் இளக்காரமாகப் பயன்படுத்தியிருக்கும் INSENSITIVITYஐ எண்ணி வருத்தப் படாமல் இருக்கமுடியவில்லை.

Monday, June 30, 2025

மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் ( THE CONQUEST OF HAPPINESS ) - பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்

 மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்

https://puthu.thinnai.com/2025/06/29/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81/

https://puthu.thinnai.com/2025/06/29/

( THE CONQUEST OF HAPPINESS _
by BERTRAND RUSSEL
பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் நூல் - முதல் அத்தியாயம் தமிழில் - திண்ணை இணையதளத்தில் 29.6.2025
https://puthu.thinnai.com/2025/06/29/
பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் தனது முன்னுரையில் இவ்வாறு கூறுகிறார்:
“இந்த புத்தகம் கற்றறிந்த சான்றோர்களுக்கானது அல்ல. அல்லது, வாழ்வியல் ரீதியான ஒரு பிரச்சினையை வெறுமே பேசிக்கொண்டிருந்தால் போதும் என்பதாக பாவிப்பவர்களுக்கு அல்ல. இந்த நூலின் இனியான பக்கங்களில் ஆழமான தத்துவமோ அல்லது ஆழ்ந்த புலமையையோ காண இயலாது. பொது அறிவு அல்லது நடைமுறை அறிவு என்று நான் நம்புகின்ற ஒன்றால் உத்வேகம் அளிக்கப்பட்ட சில கூற்றுக்களை ஒருங்கிணைத்துத் தருவது மட்டுமே என் நோக்கமாக அமைந்துள்ளது. நான் இதில் வாசகர்களுக்குத் தந்திருக்கும் செய்முறை விளக்கங்களைப் பற்றி நான் சொல்லிக்கொள்வதெல்லாம் இதுதான்: அவை என்னுடைய அனுபவத்தாலும், அவதானிப்பாலும் உறுதிசெய்யப் பட்டவை. அவற்றோடு பொருந்திய அளவில் நான் இயங்கியபோதெல்லாம் அவை எனதேயான மகிழ்ச்சியை அதிகரித்திருக்கின்றன. இந்த ஆதாரத்தின் அடிப்படையில், இங்குள்ள பெருந்திரளான ஆண்களும் பெண்களும் மகிழ்ச்சியை அனுபவிக்காம லேயே இருப்பவர்கள், மகிழ்ச்சியின்மையால் துயருற்றி ருப்பவர் களாக உள்ளவர்கள், தங்களுடைய நிலைமைக் கான காரண காரியங்கள் பரிசோதிக்கப்பட்டு அதிலிருந்து தப்பிப்பதற்கான வழிவகை ஒன்று பரிந்துரைக் கப்பட்டிருப்பதை இந்த நூலில் கண்டறியக் கூடும். நல்லவிதமாக மேற்கொள்ளப் படும் முயற்சியின் மூலம் மகிழ்ச்சியற்றிருக்கும் பலர் மகிழ்ச்சி அடைய முடியும் என்ற நம்பிக்கையில் தான் நான் இந்த நூலை எழுதியிருக்கிறேன்.
PUTHU.THINNAI.COM
மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் – திண்ணை

சொல்ல வேண்டிய சில திரைப்படம், தொலைக்காட்சி சீரியல், சமூகம்

சொல்ல வேண்டிய சில  திரைப்படம், தொலைக்காட்சி சீரியல், சமூகம்

https://puthu.thinnai.com/2025/06/29/

https://puthu.thinnai.com/2025/06/29/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d/

- லதா ராமகிருஷ்ணன்

திண்ணை இணைய இதழ் - 29.6.2025

அரசுப் பள்ளிகளும், தரமான கல்விக்கான அடித்தட்டு மக்களின் அடிப்படை உரிமையும்

 அரசுப் பள்ளிகளும், தரமான கல்விக்கான அடித்தட்டு மக்களின் அடிப்படை உரிமையும்

https://puthu.thinnai.com/.../%e0%ae%85%e0%ae%b0%e0%ae.../

_லதா ராமகிருஷ்ணன்
திண்ணை இணைய இதழ் - ஜூன் 3,2025


எந்த நாட்டு மக்களாக இருந்தாலும் சரி, கல்வி என்பது அவர்களின் அடிப்படை உரிமை அப்படி தரப்படும் கல்வி தரமானதாக இருக்க வேண்டியது அவசியம் அரசு பள்ளி ஆசிரிய பெருமக்களுக்கு தனியார் பள்ளி ஆசிரிய பெருமக்களை விட சம்பளமும் சலுகைகளும்…

கவிஞர் ஆத்மாஜீவுக்கு உதவிதேவை

 கவிஞர் ஆத்மாஜீவுக்கு

உதவிதேவை

திண்ணை இணைய இதழ் ஜூன் 3, 2025


_ லதா ராமகிருஷ்ணன்

காலக்ரமம் என்ற சிற்றிதழைக் கைக்காசு போட்டு நடத்தியவர். கணிசமான எண்ணிக்கையில் தரமான கவிதைகள் எழுதியிருப்பவர்; எழுதிவருபவர் கவிஞர் ஆத்மாஜீவ். சமீபகாலமாக உடல்நலன் குன்றி......

உடலின் மனம் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 உடலின் மனம்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

பாலியல் தொழிலாளிதான் அவள்
அண்ணே அண்ணே என்று பகலில் விளிப்பவர்களோடு அன்றன்றைய இரவுகளில் நெடுஞ்சாலை மேம்பாலத்தடி அதிகாலை யிருளில்
இடுக்குமுடுக்கில் படுத்தெழவேண்டிய பிழைப்பு
அவசர அவசரமாய் ‘சோலி’ முடிப்பவர்கள்
அவளளவில் அருளாளர்கள்.
அன்னாரொருவரிடமிருந்து கிடைத்த பணத்தில்
அடுத்த வீட்டில் இரண்டு மூன்று மணிநேரங்கள் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுவந்திருக்கும்
நான்கு வயதுமகனுக்கும் ஆறு வயது மகளுக்கும் தெருவோரக்கடையிலிருந்து டீ பன் வாங்கிக்கொண்டு விரைந்தாள்
வழியில் குறுக்கிட்ட வாடிக்கையாளரொருவன்
வரச்சொல்லி யழைக்க
’விழித்துக்கொண்டு காத்திருப்பார்கள் குழந்தைகள்’
எனச் சொல்லி கையிலிருந்ததைக் காட்ட
”அட, வாடீ” என்று இடுப்பை வளைத்து இழுத்தவன் கையை
வெடுக்கென கடித்து அகன்றவளின்
ஒவ்வொரு பல்லும்
பிளேடாய்
பிச்சுவாக்கத்தியாய்
அருவாமணையாய்
அரிவாளாய்….

நிகழ்த்துகலை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நிகழ்த்துகலை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)





இன்னொருவர் தலைமீது காகம்
எச்சமிட்டுச் சென்றால்
அருகிருப்பவருக்கு அப்படியொரு சிரிப்பு.
தன் தலையில் விழவில்லையே என்ற இறுமாப்பு.
மனிதத் தலைகள் காகங்களின் இலவசக் கழிப்பறைகள்
என்று கோணவாய்ச் சிரிப்போடு
தத்துப்பித்தென்று சில முத்திரை வாசகங்களை
உரிய ஏற்ற இறக்கங்களைக் குரலில் வரவழைத்து
உரத்துச் சொல்வது அவர்தம் தனிச்சிறப்பு.
விட்டால்
காக்காய்க்கு நல்லவரை அடையாளங்காணத் தெரியும்
என்று கதைக்கவும் தயங்கமாட்டார்கள்.
புறம்பேசி முடித்த பிறகு மறவாமல் சொல்லிக்கொள் வார்கள்
‘நமக்கெதற்கு பொல்லாப்பு’
சரி தப்பு என்பதெல்லாம்
அவரவருக்குக் காப்பாகவும் அடுத்தவருக்கு ஆப்பாகவும்
உருமாறும் திறமெழுத வேறொரு (Half-Boiled) KAFKAவால்தான் முடியும்
குப்புற விழுந்தாலும் ஒட்ட வழியில்லாதபடி மீசையை
மழித்துக்கொண்டுவிடுவதுதானே புத்திசாலித்தனம்
கழுகு மூக்கில் நாம் சுண்டெலியாகும்வரை
பழகாது வலி;
தத்துவம், ஆன்மிகம், அபத்த நாடகம், எக்ஸிஸ்டென்ஷியலிஸம், சந்தர்ப்ப சூழல், குறிப்புரை பொழிப்புரை பரப்புரையெனத் தேவையான பழமொழி புதுமொழிகளோடு ஆங்காங்கே பீடமமைத்துப்
பிப்பிப்பீ டும்டும்டும் கொக்கரக்கோ பெப்பரப்பே யென
கலந்துகட்டிக் கூட்டாஞ்சோறிடுவதாய் ஆகப் பெருமுழக்கமிடுவது
அடடாவோ பழக எளிதான பழியறு வாழ்நெறி
அடி தெறி
என வாழ்ந்துகொண்டிருப்பார் சிலபலர்
இங்கே ஒப்பாரும் மிக்காரும் இலராக….