LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, January 21, 2025

விலங்கும் மனிதரும் வன்மமும் ஒடுக்குமுறையும்

 


இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத்தரகர்களும் என்ற கோபிகிருஷ்ணனின் சிறுகதைத் தொகுப்பில் [தமிழினி வெளியீடு (2002)] மகான்கள் என்ற தலைப்பிட்ட சிறுகதையின் ஆரம்ப வரிகள் இவை:


“நீங்கள் சர்க்கஸ் பார்த்திருப்பீர்கள். கரடி மோட்டார் சைக்கிள் விடுவதை, யானை ஆசையுடன் அழகியைத் தன் தும்பிக்கையால் வளைத்துத் தூக்குவதை, நாய் தீ வளையத்தி னூடே தாவி வெளியேறுவதை குதிரைகள் வட்டமாக ஓடுவதை, சிங்கம் தனக்கு சம்பந்த மில்லாத சிறு ஸ்டூல் மீது ஏறி நிற்பதை, புலி இரட்டைக் கயிற்றில் நடந்து சிரமப்படுவதை எல்லாம்.

மேலோட்டமாகப் பார்க்கப் போனால் இது விலங்கின மானுட சங்கமம் போல் தோன்றும். விஷயம் அப்படி அல்ல. மனிதன் இம்மிருகங்களை இம்சைப்படுத்தித் தனது ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக்கொள்கி றான். இதில் உறவு ஏதும் இல்லை.

வன்மம், ஒடுக்குமுறை என்ற அடிப்படையில் உறவு ஏற்பட எந்தச் சாத்தியமும் இல்லை.”

கோபிகிருஷ்ணன் (மகான்கள் என்ற தலைப்பிட்ட கதையில் இடம்பெறும் வரிகள்)


Like
Comment
Send

இரங்கற்பா - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)

 இரங்கற்பா

’ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

பின்பக்கத்தாளின் கீழ்க்கோடியில்
பொடி எழுத்துகள் அடுக்கப்பட்ட வரிகளில்
கருப்பு-வெள்ளையிலோ
கண்கவர் வண்ணத்திலோ,
அல்லது _
இரண்டாம் பக்கத்தில்
சற்றே பெரிய அச்சிலான
இரு பத்திகளில்
இல்லை, டோலக்கு ஆட ஆட
அதற்கேற்ப தலையும் கையும் அபிநயிக்க
மைக்கை நேராக உங்கள் குரல்வளைக்குள் இறக்கி
கருத்துரைக்கச்சொல்லும்
இருபது தேசிய, பிரதேசிய, பரதேசிய
முக்கியத் தொலைக்காட்சிச் சானல்களில்
சில சாவுகள் அடக்கம்செய்யப்பட்டுவிடுகின்றன_
வெறும் செய்தியாக மட்டுமே.

* சமர்ப்பணம்: 
ஜல்லிக்கட்டில் இறந்தவர்களுக்கு, இறந்துகொண்டிருக்கிறவர்களுக்கு) 

இரண்டுமே சரியல்ல

 

‘சினிமாவில் ஒருவர் நூறு பேரை அடித்து வீழ்த்தி வெற்றி கொள்ளும் அசாத்தியமான காரியமே திரும்பத்திரும்ப வீரசாகசமாகக் காட்டப்படுகிறது இன்றளவும்.


நிஜத்தில் ஒரு காளையைப் பலர் துரத்தி விரட்டி வெருட்டிப் பிடித்து அடக்கப் பார்ப்பது வீரமாகக் காட்டப்படுகிறது.


இரண்டுமே சரியல்ல.

ஆபாசம் என்பது....

 ஆபாசம் என்பது.....


ஆபாசம் என்பதை பெண்ணின் உடல், ஒழுக்கம் சார்ந்ததாக மட்டுமே பார்ப்பது பலருக்குப் பழக்கமாகிவிட்டது; வசதியாக இருக்கிறது.


ஆனால், குழந்தைகளைக் கிளிப்பிள்ளைகளாகப் பழக்கப்படுத்தி சில கருத்துகளைப் பேசவைப்ப தும், கொடிபிடிக்கவைப்பதும்கூட ஆபாசம் தான்.


அகங்காரம் அறியாமை அன்னபிற….. லதா ராமகிருஷ்ணன்

அகங்காரம் அறியாமை அன்னபிற…..
லதா ராமகிருஷ்ணன்

சிலரிடம் இந்தக் குணாம்சம் இருப்பதை வெளிப்படையா கவே பார்க்கமுடியும். சிலரிடம் இது அத்தனை வெளிப் படையாக இருக்காது, என்றாலும் இருக்கும்.

அதாவது, எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் கருத்து ரைக்கும் அறிவாற்ற லும் தகுதியும் தனக்கு மட்டுமே இருக்கிறது என்ற நினைப்பு.

இத்தகையோர் கருத்துரைமை, பேச்சுரிமை என்று தெளிவாகக் குரல் கொடுப்பார்கள். ஆனாலும், ஒரு கருத்தை மற்றவர் உரைத் தால் மட்டம் தட்டுவார்கள். அதே கருத்தை பிறிதொரு சமயம் வேறொரு வழியில் தன் புதிய சிந்தனையாக முன்வைப்பார்கள்.
தான் ஒருவரைப் புகழ்ந்துபேசினால் அது நியாயமான, சீரிய கணிப்பு. மற்றவர் ஒருவரைப் புகழ்ந்து பேசினால் அது ஆக்கங் கெட்ட நகைப்புக்குரிய செயல்.

அந்த மற்றவர் செய்த எத்தனையோ நல்ல காரியங்க ளைப் பற்றி மறந்தும் பேசமாட்டார்கள். ஆனால், அவர் தன் நிலைத்தகவலில் பகிர்ந்த ஒரு செய்திக்காக(அந்தச் செய்தியில் கிடைத்த ஏதோ வொரு நற்செய்தியின் தாக்கத்தால் அப்படிச் செய்திருக் கலாம்) கட்டம் கட்டி அவரை மதிப்பழிக்கத் தயங்கமாட்டார்கள்.

இதையெல்லாம் நட்புரீதியாகச் செய்வதாக வேறு திட்டவட்ட மாகத் தெரிவிப்பார்கள். அப்படித்தான் திட்டவட்ட மாக நம்புகிறார்களா என்று தெரியவில்லை.

மற்றவர்களுக்கு மூளையே இல்லை என்றோ அல்லது வயது காரணமாக மூளை மழுங்கிவிட்டது என்றோ மிக எளிதாக ஒருவரை மட்டந்தட்டி விடுவதன் மூலமே தங்கள் மூளைத் திறனை மிகைப்படுத்திக் காட்டிக்கொள்வது நம்மிடையே உள்ள சிலரிடம் புரையோடியிருக்கும் ஒருவித நோய்க்கூறு.

சுய பரிசீலனை மட்டுமே இதற்கு சிறந்த மருந்து.

 


Saturday, January 18, 2025

தமிழிலக்கிய வீச்சும் விரிவும் பிறவும்.... ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 தமிழிலக்கிய வீச்சும் விரிவும் பிறவும்....

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



ஒட்டுமொத்த தமிழிலக்கியத்தின்
சட்டாம்பிள்ளையாக
சர்வரட்சகராக
சட்டவல்லுனராக
சினேகிதராக
சோதரராக
செல்லப்பிள்ளையாக
கிள்ளைமொழிக் காதலியாக
சொல்லவல்லாததொரு சுத்தப்பிழம்பாக
உள்ள சொல்லுக்கெல்லாமப்பாற்பட்ட
சொப்பனார்த்த தேவகணமாக
மொழியை சரியான வழியில் செலுத்தி
தமிழிலக்கியத்தை அடையாளப்படுத்துபவராக
அடுத்தகட்டத்திற்கு அழைத்துச்செல்பவராக
அதுவாக இதுவாக எதுவாகவும்
எல்லாமுமாக
இவரவரே
மன்னுலகில் அங்கிங்கெனாதபடி
ஊர்வலம் நகர்வலம் நாடுவலம்
வந்தவண்ணமிருக்க
இன்னுமின்னுமான இக பர மொழிகளில்
இன்றிலிருந்து இருநூறு ஆண்டுகளுக்கு
விறுவிறுவென மொழிபெயர்க்கப்பட்ட
வாறிருக்க _
இருவார பிரம்மாண்ட கண்காட்சியின்
ராட்ஷஸ ராட்டினங்கள் நிரம்பிய
அரங்கிற்கு வெளியே
சிறு தெருக்களில்
வழக்கம்போல்
அருமையாய்ச் சுழன்று
கண் நிறைக்கும்
கொள்ளைக் குதூகலமளிக்கும்
குட்டிக் குடைராட்டினங்கள்!

இயல்பு -ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 இயல்பு

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

முகபாவங்களை முகமூடிகளாக அணிந்திருப்பவர்கள்
மொழியும் வார்த்தைகளுக்குள்ளிருந்து முழுப்பூசணிக்காய்கள்
மெல்ல மெல்ல எட்டிப்பார்க்கின்றன
மிகப் பெரிதான ஒரு சிரிப்பால்
அவற்றின் மீது ஒரு திரையைப் போர்த்த
அவர்கள் மும்முரமாக முனைந்துகொண்டிருக்கையிலேயே
அவர்தம் பொய்மையிலிருந்து புதிதாய் முளைக்கும்
சில பூசணிகள் போகப்போக
அவர்களாகவே உருமாறிவிடுகின்றன.






தொண்டருக்குத் தடைசெய்யப்பட்டிருக்கும் ஞானம் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 தொண்டருக்குத் தடைசெய்யப்பட்டிருக்கும் ஞானம்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
அவர்களிருவரும் அத்தனை அந்நியோன்யமாக கைலுக்கித்
தோளில் கையிட்டு அரவணைத்து புகைப்படத்திற்காக என்பதைத் தாண்டிய அளவில்
மனம்விட்டுச் சிரித்தபடி ‘போஸ்’ கொடுத்திருப்பதைப் பார்த்து
அவனுக்குள்ளிருந்த தொண்டர் விசுவாசி ஆதரவாளர் பக்தர்
அலமலங்க விழிக்கிறான்.

அவர்கள் தான் இவனையும் இவனொத்தவர்களையும்
இப்பிறவியில் இனியிருக்குமோ இருக்காதோவென இழுபறியிலிருக்கும்
ஏழேழ் பிறவிக்கும் ஜென்மப்பகை கொண்ட
இருதரப்பினர்களாக்கி
சொற்கூர்வாட்களை அவர்கள் மனங்களில் சேகரிக்கச் செய்து
அகிம்சை பேசியவாறே அந்த ஆயுதங்களைக் கண்டமேனிக்கு
எதிரித்தரப்பு மீது எறிந்துகொண்டேயிருக்கச் செய்தவர்கள்.

அவர்களிருவரும் இன்று அப்படிச் சிரித்தபடி யொருவருக்கொருவர்
நெருங்கிநின்றிருப்பதை
அன்பின் அடையாளமாய்
சகோதரத்துவத்தின் சிறப்புணர்த்துவதாய்
மனித மாண்பைப் பற்றி மடக் மடக்கென்று நீரருந்தும்
வேகத்தின் பன்மடங்கில்
நிகழ்ச்சித்தயாரிப்பாளர் போற்றிப்புகழ
நீளும் வழிகளெல்லாம் அடைபட்டுப் போய்
நிராயுதபாணியாக நிற்கும்
நிஜத் தொண்டர் விசுவாசி ஆதரவாளர் பக்தர்
நாளையேனும் பெறுவாரோ ஞானம்….

குடித்தனம் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 குடித்தனம்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
புதுவீடு செல்கிறேன்.

வாடகைக்குத்தான் என்றாலும்
விரியுலகே நம்முடையதாக இருக்கும்போது
வசிப்பிடம் மட்டும் எப்படி வேறாகிவிடும்!

வாடகையை மட்டும் மாதாமாதம்
ஐந்தாம் தேதிக்குள் கட்டிவிட முடியவேண்டும்!

ஒவ்வொரு முறை வீடு மாறும் போதும்
வீடு மாறிச்செல்பவர்களும் ஏதோவொரு விதத்தில் மாறுகிறார்கள் போலும்.

அட்டைப்பெட்டிகளுக்குள் பொதியப்பட்ட இகவாழ்வை
ஒரு வீட்டிலிருந்து வழியனுப்பி
இன்னொரு வீட்டிற்குள் அதை மீண்டும்
வெளியே எடுத்து விரிக்கும்போது
காணாமல் போய்விடும் சில
சீப்புகளும் புத்தகங்களும்தான் என்று நிச்சயமாகச் சொல்லிவிட முடியவில்லை.

இடம்பெயரும் முன் சில நாட்களும்
இடம்பெயர்ந்த பின் சில நாட்களும்
ஒருவித அந்தரத்தில் அலைக்கழியும்
வாழ்க்கை.

பிறகும் பூமியில் கால்பதிக்கும் என்ற உறுதியில்லை
யென்பதும் உண்மைதான்.

நானின் தூல மூட்டுகளிலும்
சூக்கும மூட்டுகளிலும்
தீரா வலியெடுக்கும்.
தூங்கினால் சரியாகக்கூடும்….

புதுவீட்டின் அக்கம்பக்கத்து மனிதர்களிடம்
நம்மை நிரூபித்துக்கொள்ளவேண்டும்…
என்னவென்று என்பதுதான்
தொடரும் புதிராய்.

Friday, January 17, 2025

கவிதையாதல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவிதையாதல்


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
நாடுமல்ல காடுமல்ல நான் கவிதை
யென்றது;
நரி காகம் கதையல்ல நான் கவிதை
யென்றது;
நான்குவரித் துணுக்கல்ல நான் கவிதை
யென்றது;
நீள நீள மறுமொழியல்ல நான் கவிதை
யென்றது;
நிறையக் கேட்டுவிட்ட தத்துவமல்ல நான் கவிதை
யென்றது;
நான்குமறைத் தீர்ப்பல்ல நான் கவிதை
யென்றது;
நான்கு பழமொழிகளின் திரட்டல்ல நான் கவிதை
யென்றது;
நச்சென்ற எதிர்வினையல்ல நான் கவிதை
யென்றது;
நாக்கால் மூக்கைத் தொடுவதல்ல நான் கவிதை
யென்றது;
நாய்வால் நிமிர்த்தலல்ல நான் கவிதை
யென்றது;
நன்றியுணர்வோ நபும்சகமோ அல்ல நான் கவிதை
யென்றது;
நகையின் இருபொருளுணர்த்தலல்ல நான் கவிதை
யென்றது
நல்முத்துமணியணிக்கோலமல்ல நான் கவிதை
யென்றது
நவரத்தின மயிற்பீலியல்ல நான் கவிதை
யென்றது
நட்சத்திரங்களின் எண்ணிக்கையல்ல நான் கவிதை
யென்றது
நிலவின் துண்டங்களல்ல நான் கவிதை
யென்றது
நல்லது நல்லது சொல் சொல் இன்னும் சொல்
என்றதற்கு
’ந’விலேயே வரிகளெல்லாம் தொடங்குவதல்ல கவிதை
யென்றது சொல்லிச் சென்றது.
நாணித் தலைகுனிந்தென் கவிதை (நற்)கதியிழந்து நின்றது.