LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, June 20, 2023

PEEPING TOMகளும் பூமிஜா(சீதா)ப் பிராட்டியும்

 PEEPING TOMகளும் 

பூமிஜா(சீதா)ப் பிராட்டியும்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

இரவுபகலாய் இடையறாப் பட்டிமன்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஐந்து நட்சத்திர விடுதிகளின் அகன்ற கூடங்களில் ஒன்றில்

ஆரண்யமாய் ஆங்காங்கேபேப்பர் மஷாய்மரங்கள் நட்டுக் கட்டமைக்கப்பட்ட அரங்கொன்றில்

ஆன்றோரென அறியப்பட்டோர் அவைகளில்

அடுக்குமாடிக்கட்டிடத்தின் மொட்டைமாடிப் பந்தலில்

இலக்கியப் பெருமான்களுக்கிடையே

இணையவழிகளில் _

இன்னும்

ஆர்ட்டிக் அண்டார்ட்டிக் துருவப் பிரதேசங்களிலும்

புவியின் தென் அரைக்கோளப்பிரதேசங்களின்

பெங்குவின்களைப் பார்வையாளர்களாகக் கொண்டும்

சீதை இராவணனோடு உறவுகொண்டாளா?

கொண்டாள்!

கொண்டாளே !!

கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது

[அது பதிவு செய்யப்பட்ட கைத்தட்டல் என்பது

பாவம் நிறைய பேருக்குத் தெரியாது]

தன்மானத்திற்கு இழுக்கு என்றானபோது

காதலித்த ராமனையே உதறிவிட்டுச்சென்றவள்

கடத்தியவனையா வரிப்பாள்?

விஜய் Zee Sun இன்னும் நான் பார்க்காத சேனல்களின்

மெகாத்தொடர்களில்

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்

மாமியார் நாத்தனார், முதலாளி தொழிலாளி

மூத்த அண்ணன் இளைய அண்ணன்

வில்லியும் நல்லவளும்

ஐந்து வயதுச் சிறுமியும்

அடுத்த நாள் பிறக்கப்போகும் குறைப்பிரசவக் குழந்தையும்

மாறி மாறிச் செய்யும்

வகைவகையான சத்தியங்கள்

சடங்குகள் குறிபார்த்தல், சகுனம் பார்த்தல்

இத்தியாதிகளுக்கிடையிலிருந்து ஒரு பூக்குழியைத்

தேர்ந்தெடுத்து

கோயில் வாசலில் பரத்தி

அதில் நடந்து தன் பத்தினித்தனத்தை

நிரூபிக்கச் சொல்லும்

மெத்தப் படித்தவர்கள் மிட்டா மிராசுதாரர்கள்

மெகாத்தொடர் மாண்பாளர்களை

மெல்ல ஒரு பார்வை பார்த்து

மேலே நடக்கிறாள் பூமிஜா.

மனம்நிறை மணாளனுக்கு நிரூபிக்கவோ

மக்களுக்குப் புரியவைக்கவோ

-ஒரு முறை நெருப்பில் இறங்கி

மீண்டாயிற்று…..

முறைவைத்து மனம்பிளந்து பார்த்தவர்களாய்

மறுபடி மறுபடி

கடத்தியவனை மருவியவளாய்க்

காட்ட முனையும் குணக்கேடர்களுக்காய்

அவள் வனத்தில் தீ மூட்டினால்

அது தன்னை மட்டுமல்லாமல்

அன்னை நெருப்பையே அவமதிப்பதாகும்.

அவள் அறிவாள்தானே?

அடுத்த விளம்பரதாரர் யார் மாட்டுவார் என்று

ஆலோசித்தபடி

அய்யனார் சிலையின் காலடியில்

வில்லனும் நல்லவனும் சேர்ந்து

மெகாத்தொடர் கதாபாத்திரங்களில் ஒருவரை

(குத்துமதிப்பாக அந்தத் தங்கையாக இருக்கலாம்

அல்லது தாத்தாவாக இருக்கலாம்)

கொலைசெய்வது குறித்து காரசாரமாக

கீழ்ஸ்தாயியில் வாக்குவாதம் நடத்திக்கொண்டிருக்கும்

அரைத்தமாவுக் காட்சிகளைக்

கச்சிதமாய் வழித்தெடுத்துமுடித்துவிட்டு

வெளியேறும்போது படக்குழுவினர்

கன்னத்தில் போட்டுக்கொண்டபடி

அல்லது கிண்டலாய்ச் சிரித்தபடி

'பொறுப்புத்துறப்பு' என்ற நொறுக்குத்தீனியை

சுவைக்கத்தொடங்கியதைக் கண்டு

துன்பம் வரும் வேளையிலே சிரிக்கப் பழகியவளாய்

புன்னகைக்கிறாள் பூமிஜா.


*

Sunday, March 19, 2023

தன்மதிப்பு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 தன்மதிப்பு

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)




பென்னம்பெரிய வெறுப்புகள் உண்டு. என்றாலும்

அவளுக்கிருப்பதெல்லாம் சின்னதொரு விருப்பம் மட்டுமே.


கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதாகச் சொல்லமுடியா விட் டாலும்

கால்களை சற்று எட்டிப்போட்டாலே கொஞ்ச நாட்களில்

சென்றுசேர்ந்துவிடக்கூடிய

அந்த அதி சிங்கார நகரில் அரண்மனை உப்பரிகையில்

சிம்மாசனத்தில்

தலையில் பொருந்தியிருக்கும் கிரீடம் பார்வையை

மறைக்காமலிருக்கும்படியாக

அரசன் அமர்ந்து கண்களால் நகர்வலம் வந்து

கொண்டிருக்கும் நேரம்

அதேவழியாய் அவள் வீதியுலா வரவேண்டும்.


அந்தச் சக்கரவர்த்தியின் கண்களில் ஏதோவொரு அகாலத்தில்

வனாந்திரத்தில் ஏற்பட்ட பரிச்சயத்தின் நினைவு விரிக்கும்

இணைமனிதபாவம் பயம் பிரமிப்பு பரவசம்

பதற்றம் பழகிய ஈரம் எல்லாவற்றையும்

அந்நியமாய்ப் பார்த்தபடியே

பார்வையை சாம்ராஜ்யபதியின் தலைக்குமேலாய்

விட்டுவிடுதலையாகிப் பறந்துகொண்டிருக்குமொரு

சிட்டுக்குருவிக்காய்உயர்த்தவேண்டும்.


அதன் சிறகடிப்பைக் பார்த்தபடியே

எங்கேயும் தடுக்கிவிழுந்துவிடாமல்

அந்த மாமன்னனுடைய முகத்தின்

சுக்குநூறான துண்டங்களை

முதுகின் கண்களால் கண்டுரசித்தபடி

அந்த வழியைக் கடந்தேகிவிடவேண்டும்.

கட்டிடக்கலை வரலாறு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 கட்டிடக்கலை வரலாறு

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
(*15 மார்ச், 2023 அன்று பதிவுகள் இணைய இதழில் பிரசுரமான கவிதை)

கைவசமிருக்கும் கற்களையும் மணலையும் சிமெண்ட்டையும் ஜல்லியையும் தண்ணீரையும் கலந்து கட்டிக்கொண்டிருக்கிறாய்…
இந்தக் கற்களும் மணலும் சிமெண்ட்டும் ஜல்லியும் தண்ணீரும் தரமானவையா போதுமானவையா
என்று சரிபார்க்க உனக்கு நேரமில்லை மனமுமில்லை.
தினசரிச் சந்தையில் சுலபமாய் மலிவு விலைக்கு வாங்கவும்
விற்கவும் முடிகிறது.
அப்படிக் கட்டப்படுவதைக் கண்காட்சியாகப் பார்த்து மகிழ
அன்றாடம் சாரிசாரியாக ஆட்கள் வருகிறார்கள் எனும்போது
அதற்கான அல்லது அதைக்கொண்டு அருங்காட்சியகமும் பல்பொருள் அங்காடியும் அமைக்கப்படுவதுதானே புத்திசாலித்தனம்.
தரமற்ற அளவில் நிர்மாணிக்கப்படுமொரு கட்டிடம் இடிந்துவிழுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதனால் நேரும் இழப்புகளும் அதிகம்.
ஒப்புநோக்க வார்த்தைகளால் கட்டப்படுவனவற்றுக்கு
அத்தகைய அபாயங்கள் குறைவு.
எத்தனை பலவீனமாகக் கட்டப்பட்டிருந்தாலும்
உறுதியானது என்று மற்றவர்களை நம்பவைக்கும் உத்திகளை
நேர்த்தியாகக் கையாளத் தெரிந்தால் போதும்.
காலத்துக்கும் அது உறுதியாக நிற்கும்.
அவ்விதமாய் கட்டப்படுவதன் அடி முடி காணா தலைமுறையினர்
அவற்றில் வாசம் செய்தபடி
அவற்றுக்கு வாடகை செலுத்தியபடி
அவற்றினூடாய் வாழ்ந்தேகியபடி
அவர் மீது இவரும் இவர் மீது அவரும் வெறுப்புமிழ்ந்தபடி….
அவர்களைக் காட்சிப்பொருளாக்கியபடி கட்டிடவியாபாரத்தில்
கொள்ளை லாபம் ஈட்டிக்கொண்டிருப்பவர்களை
கனவான்களாக காருண்யவாதிகளாக காண்பதும்
காட்டுவதுமாய்
ஊட்டிவளர்க்கபட்டுக்கொண்டிருக்கும்
கட்டிடக்கலை வரலாறு.