தன்மதிப்பு
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
அவளுக்கிருப்பதெல்லாம் சின்னதொரு விருப்பம் மட்டுமே.
கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதாகச் சொல்லமுடியா விட் டாலும்
கால்களை சற்று எட்டிப்போட்டாலே கொஞ்ச நாட்களில்
சென்றுசேர்ந்துவிடக்கூடிய
அந்த அதி சிங்கார நகரில் அரண்மனை உப்பரிகையில்
சிம்மாசனத்தில்
தலையில் பொருந்தியிருக்கும் கிரீடம் பார்வையை
மறைக்காமலிருக்கும்படியாக
அரசன் அமர்ந்து கண்களால் நகர்வலம் வந்து
கொண்டிருக்கும் நேரம்
அதேவழியாய் அவள் வீதியுலா வரவேண்டும்.
அந்தச் சக்கரவர்த்தியின்
கண்களில் ஏதோவொரு அகாலத்தில்
வனாந்திரத்தில் ஏற்பட்ட பரிச்சயத்தின் நினைவு விரிக்கும்
இணைமனிதபாவம் பயம் பிரமிப்பு பரவசம்
பதற்றம் பழகிய ஈரம் எல்லாவற்றையும்
அந்நியமாய்ப் பார்த்தபடியே
பார்வையை சாம்ராஜ்யபதியின்
தலைக்குமேலாய்
விட்டுவிடுதலையாகிப் பறந்துகொண்டிருக்குமொரு
சிட்டுக்குருவிக்காய்உயர்த்தவேண்டும்.
அதன் சிறகடிப்பைக்
பார்த்தபடியே
எங்கேயும் தடுக்கிவிழுந்துவிடாமல்
அந்த மாமன்னனுடைய
முகத்தின்
சுக்குநூறான துண்டங்களை
முதுகின் கண்களால் கண்டுரசித்தபடி
அந்த வழியைக் கடந்தேகிவிடவேண்டும்.
No comments:
Post a Comment