LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, February 26, 2019

பிழைப்பு - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


பிழைப்பு

ரிஷி’ 
(லதா ராமகிருஷ்ணன்)



ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க எங்களை விட்டால் யார்?”
கோழைகளல்ல நாங்கள் மேடைதோறும் தூக்கவில்லையா வாள்?”
வாழையடிவாழையாக எங்களுக்கே தானே உங்கள் வாக்குஎன்பார்
மட்டந்தட்டித் தீர்க்கவேண்டிய எதிர்க்கட்சித் தலைவரை
கட்டங்கட்டிக் கச்சிதமாய்ப் போட்டுத்தாக்கிவிட்டு
அவரவர் கட்சி கொடுத்திருக்கும் இரண்டு லட்சம் அல்லது இருபது லட்சம் விலையுள்ள காரில் கட்டுசெட்டாக ஏறிக்கொண்டு
சுவர்களிலெல்லாம் முழங்கிக்கொண்டிருக்கும் தத்தம் தானைத்தலைவர்களின்
திருவுருவப்படங்களை தரிசித்தபடியே
கவரைகவனமாகத் திறந்து உள்ளிருக்கும் ரொக்கத்தைத் தம் பைக்குள் திணித்தபின்
மறவாமல் நாளை மகனுக்கொரு கட்சிப்பதவி கிடைக்க
அந்த ஆளைப் பார்க்கப் போகவேண்டும்;
மயிலாப்பூரின் மையப்பகுதியிலுள்ள ஏக்கராக்களை மேற்பார்வையிட வேண்டும்
வளைத்துப்போட வாகானதா என்று;
களைப்பாகத்தான் இருக்கும் விமானத்தில் பறந்தாலும்…..
அதையெல்லாம் பார்த்தால் முடியுமா _
வறுத்த முந்திரியை வழிநீள வாயில்போட்டுக் கொறித்துக்கொண்டே போகவேண்டியதுதான்
என்று ஆகவேண்டிய மக்கள்நலத்திட்டங்களை
மனதுக்குள் பட்டியலிடத் தொடங்குவார்.

(*(பின்குறிப்பு: இலக்கியவாதி விதிவிலக்காக இருக்கவேண்டும் என்று சட்டமா என்ன?)


·         

பொருள்பெயர்த்தல் _ ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)


பொருள்பெயர்த்தல்
_ ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

நல்லதோர் நாலுவரி்கவிதையென்றார் ஒருவர்
கேட்டு
நாலுவரியே கவிதையென்று
சொல்லாமல் சொல்வதாய்
நாலுவரிகளாக கூட்டிப்போட்டு
எழுதிக்கொண்டே போனார் ஒருவர்.
நாலுவரிகள் வரைந்து 
நவீனசித்திரக்கவிதையென்றார் ஒருவர்.
சொத்துவரி, வருமானவரி என்று இன்னுமிரண்டை
சேர்த்தெழுதிக்கொண்டிருந்தார் ஒருவர்.
இன்னொருவர்
நாலு வரி என்றெழுதி 
பூர்த்திசெய்தார் கவிதையை.

கண்மணி தமிழ்! - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

கண்மணி தமிழ்!
 ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் அள்ளித்தரும் 
வள்ளன்மை
மழை, காற்று, சூரியனுக்கு மட்டுமா?
நிற்க நிழல் தரும்; நிழலெனக் கூடவரும்
நட்பாகச் சொல்லித்தரும்
நாலும் மேலும் நாளும் தந்து
இன்துணையாகும்
அன்புத்தமிழ்
என்றும் நம்மைப் புரந்துகாக்கும்


v      

Monday, February 18, 2019

சேர்ந்திசை ‘ரிஷி’ - (லதா ராமகிருஷ்ணன்)

சேர்ந்திசை


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அவசர யுகம் இது
NO TIME TO STOP AND STARE.
இதில் ஒவ்வொரு நிகழ்வுக்கும் காரணகாரியங்களை
அலசியாராய்ந்து பார்க்க
அவகாசமிருக்கிறதா என்ன?
ஆயிரம் வேலையிருக்கு அவரவருக்கு.
அப்படியென்றால் கருத்து சொல்லாமலிருக்கலாமே
என்கிறாயா?
THAT’S NOT FAIR.
நான் அறிவாளியென்று அடுத்தவர்
தெரிந்துகொள்ளவேண்டாவா?
WARE, WHERE
உச்சரிப்பு ஒன்றே என்றாலும் பொருள்வேறு
உள்ள எழுத்துகள் வேறு என்று
எனக்குப் புரியவைக்கப் பார்க்கிறாயா?
BEWARE
பார்த்து நடந்துகொண்டால் பிழைத்தாய்.
LIFE IS A VANITY FAIR
இந்த வாசகத்திற்கு இங்கே என்ன அவசியம் வந்தது
என்று கேட்கப் போகிறாயா?
I DON’T CARE.
இதோ, எல்லாவற்றிற்குமான அந்த ஒற்றைச்சொல்லை மொழியப்போகிறேன்.
வழிமொழியாவிட்டால் வந்துசேரும் பழி
சொல்லிவிட்டேன்.
இன்னுமா ஏதோ சொல்ல முன்வருகிறாய்?
DON’T YOU DARE.





Saturday, February 16, 2019

மலையும் மலைமுழுங்கிகளும் - 1 - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

மலையும் மலைமுழுங்கிகளும் 1
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

{சமர்ப்பணம்: அர்ப்பணிப்பு மனோபாவத்தோடு ஒருவர் மேற்கொண்ட புத்தகப்பணியின் பயனை அடிப்படையாகக் கொண்டு இலக்கிய உலகில் இடம்பிடித்த பின் ஏறிய ஏணியை எட்டியுதைக்க சதா கால் அரிப்பெடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கு}



யாருமே நுழையமுடியாத அடர்ப்பெருங்காட்டிற்கப்பால் 
ஆகாயமளாவ
அடிக்கு அடியிருந்த வழுக்குப்பாறைகளெங்கும்
படர்ந்திருந்தன பலவகை முட்கள்.


கைக்காசை செலவழித்து, மெய்வருத்தம்
பாராதொழித்து
உயிரைப் பணயம் வைத்து
கயிறு அறுந்துவிழுந்தபோதெல்லாம்
காற்றை இறுகப்பிடித்துக்கொண்டு
உள்ளங்கைகளெங்கும் சிராய்த்துக்
குருதி பெருக
உடலின் அயர்வில் உயிர் மயங்க
மலையை வாகாய் சீரமைத்ததோடு
படிக்கட்டுகளையும் செதுக்கி முடித்தான்.


ஆர்வமாய் ஏறியவர்கள்
சிகரம் தொட்ட பின் சுற்றிலும் பார்த்தால்
காணக்கிடைத்ததெல்லாம் சொர்க்கம்!


நறுமணப்பூக்களும்
மூலிகை மரங்களும்
அதியமான் நெல்லிக்கனிகளாய்க் கிடந்தன!


அரிய புள்ளினங்கள்!
பரவும் தரிசனப் பேரொளி!


மாற்றான் சிந்திய வியர்வையில்
முன்னேறுவது எப்படி என்று
முப்பதே நாட்களில் கற்றுக்கொள்வதில்
கைதேர்ந்த சிலர்
விறுவிறுவென ஏறத்தொடங்கினார்கள்.


எல்லாவற்றையும் செல்ஃபியில்
சிக்கவைத்ததோடு
அருமருந்து மூலிகைகளையும்
அள்ளித்திணித்துக்கொண்ட பின்
கடைவிரிக்கத் தோதான இடத்தைக்
கச்சிதமாய்க் கணக்குப் பண்ணியவாறே
கீழிறங்குகையில்
காலந்தாக்கி சற்றே உடைந்திருந்த
ஒரு படிக்கட்டு முனையை
கவனமாய்ப் படம்பிடித்துக்கொண்டார்கள்.


கடைசிப்படியில் காலைவைத்ததுமே
கூவத்தொடங்கினார்கள் –
கேவலம் ஒரு படிக்கட்டைக் கூட
சரியாகக் கட்டத் தெரியவில்லை யென்று.


இன்னொருவன் மாங்குமாங்கென்று
உழைத்து
முதுகுடையத் தாங்கிப்பிடித்து
நிமிர்த்தி நிற்கவைத்த மலையைத்
தமக்கு வெள்ளிக்காசு தரும் சுற்றுலாத்தலமாக
மாற்றிக்கொண்டதோடு நில்லாமல்
மலையபிமானத்தோடு நடந்துகொண்டவனை
வசைபாடும் வித்தகம்
சில மெத்தப்படித்த மேல்தாவிகளுக்கே உரிய
’ஹை_ஃபை’ வர்த்தகம்.


அதுபற்றியும் பேசுமோ என்றேனும்
அவர்களின் ஏதாவதொரு 'பென்னம்பெரிய' புத்தகம்….?

Thursday, February 14, 2019

மலையும் மலைமுழுங்கிகளும் - 2 - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

மலையும் மலைமுழுங்கிகளும் - 2


ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


{சமர்ப்பணம்: அர்ப்பணிப்பு மனோபாவத்தோடு ஒருவர் மேற்கொண்ட புத்தகப்பணியின் பயனை அடிப்படையாகக் கொண்டு இலக்கிய உலகில் இடம்பிடித்த பின் ஏறிய ஏணியை எட்டியுதைக்க சதா கால் அரிப்பெடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கு}



எத்தனை நாட்களுக்குத்தான்
எட்டியுதைத்துக் கொண்டேயிருப்பீர்கள் 
ஏறிவந்த ஏணியை?


நூலேணியாக இருந்திருப்பின்


கால்சிக்கித் தலைகீழாகி 
நீங்கள் உருண்டுபுரண்டிருக்கக்கூடும்.


மரத்தாலானது என்றால் 
நீங்கள் உதைக்கும் உதைக்கு
அதன் கட்டைகள் சில உடைந்தும் 
கயிறு பிரிந்தும்
தெறித்துவிழுந்து 
கடைசிப் படியில் நீங்கள் 
கிடக்கநேர்ந்திருக்கும் இதற்குள்.

ஆனால், வெறும் ஏணியல்ல அது – 
மலை.

அற்பர்களின் காணெல்லைக்கப்பாலிருக்கிறது 
அதன் தலை.

காசின் சுவடறியாது அதன் விலை 
என்பதே என்றுமான உண்மைநிலை.

இது வெறும் எதுகை-மோனை யில்லை.

அந்தரவெளியே அதன் தஞ்சமாக -
கிருஷ்ணகல்யாணக் கச்சேரிகளுக்கும்
பொச்சரிப்புகளுக்கும்.
என்றுமிருந்ததில்லை பஞ்சம்.

உங்களால் உய்த்துணரவியலா 
ஓராயிரம் சிலைகள்
அதனுள் 
உயிர்த்தெழக் காத்திருக்கின்றன.

எத்தனைதான் எட்டியுதைத்தாலும் 
முட்டிமோதினாலும்
நொறுங்கிமுறியப்போவது 
உங்கள் எலும்புகளே 
என்பதைக்கூட உணரமுடியாத அளவு
அத்தனை வீராதிவீரர்களா நீங்கள்?

கோராமையாக இருக்கிறது.

எட்டியுதைக்க மட்டுமே பணிக்கும் 
உங்கள் கால்களை 
நீங்கள் உண்மையிலேயே மதிப்பவராயிருந்தால்
கட்டப்பாருங்கள் அவற்றின் உதவியோடு _

குட்டிக் குன்றையாவது.

*

Wednesday, February 13, 2019

துளிஞானம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

துளிஞானம்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


குறையென்றால் குறைக்கவும்
கூட்டென்றால் கூட்டவும்
கைவசப்படவில்லை
காலமும்
கவிதையும்.

இல்லாதிருக்கும்….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


இல்லாதிருக்கும்…..
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

 
பாழுங்கிணறின் ஆழம்
புலிவாய்ப் பெரும்பிளவு
ஆயிரங்குளவிக்கொட்டு
பலிபீடம்
உருள்தலை
பசித்தவயிறு
பிரார்த்தனையின்
எட்டாத் தொலைவு
சுட்ட சட்டியை விட்டுவிடாக் கை
மைபோட்ட வெற்றிலை காட்டும்
முகம்
கொடூரப் பேயாட்டம்
கூர்தீட்டிய வாள்
முனைக் குரல்வளை
காணாமல் போன குழந்தையின்
விசும்பல்தடம்
உள்ளிழுக்கும் நச்சுப்புதர்க்காடு
ஓடுடைந்த வீட்டிலிறங்கும் கருநாகம்
காகத்தின் எச்சம் மண்டையை எரிக்கும்
கண்கிழித்துருவாகுமொரு கனவு
எனக்கென வந்த நிலவு
தேய்வழிச்செலவு
உண்ண உணவு அருந்த நீர்
சுவாசிக்கக் காற்று சிறகடிக்க வானம்
செரிமானமாகா அவமானம்
இருந்தும்
அதிரூபம்
அருமருந்து
அன்றாடம்
ஆயினும்
அதிசயம்
ரகசியம்
சொல்லும் கிளிப்பிள்ளை
சொக்கத்தங்கம்
சூக்குமக்கவிதை
சிதம்பரம்.