LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, February 14, 2019

மலையும் மலைமுழுங்கிகளும் - 2 - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

மலையும் மலைமுழுங்கிகளும் - 2


ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


{சமர்ப்பணம்: அர்ப்பணிப்பு மனோபாவத்தோடு ஒருவர் மேற்கொண்ட புத்தகப்பணியின் பயனை அடிப்படையாகக் கொண்டு இலக்கிய உலகில் இடம்பிடித்த பின் ஏறிய ஏணியை எட்டியுதைக்க சதா கால் அரிப்பெடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கு}



எத்தனை நாட்களுக்குத்தான்
எட்டியுதைத்துக் கொண்டேயிருப்பீர்கள் 
ஏறிவந்த ஏணியை?


நூலேணியாக இருந்திருப்பின்


கால்சிக்கித் தலைகீழாகி 
நீங்கள் உருண்டுபுரண்டிருக்கக்கூடும்.


மரத்தாலானது என்றால் 
நீங்கள் உதைக்கும் உதைக்கு
அதன் கட்டைகள் சில உடைந்தும் 
கயிறு பிரிந்தும்
தெறித்துவிழுந்து 
கடைசிப் படியில் நீங்கள் 
கிடக்கநேர்ந்திருக்கும் இதற்குள்.

ஆனால், வெறும் ஏணியல்ல அது – 
மலை.

அற்பர்களின் காணெல்லைக்கப்பாலிருக்கிறது 
அதன் தலை.

காசின் சுவடறியாது அதன் விலை 
என்பதே என்றுமான உண்மைநிலை.

இது வெறும் எதுகை-மோனை யில்லை.

அந்தரவெளியே அதன் தஞ்சமாக -
கிருஷ்ணகல்யாணக் கச்சேரிகளுக்கும்
பொச்சரிப்புகளுக்கும்.
என்றுமிருந்ததில்லை பஞ்சம்.

உங்களால் உய்த்துணரவியலா 
ஓராயிரம் சிலைகள்
அதனுள் 
உயிர்த்தெழக் காத்திருக்கின்றன.

எத்தனைதான் எட்டியுதைத்தாலும் 
முட்டிமோதினாலும்
நொறுங்கிமுறியப்போவது 
உங்கள் எலும்புகளே 
என்பதைக்கூட உணரமுடியாத அளவு
அத்தனை வீராதிவீரர்களா நீங்கள்?

கோராமையாக இருக்கிறது.

எட்டியுதைக்க மட்டுமே பணிக்கும் 
உங்கள் கால்களை 
நீங்கள் உண்மையிலேயே மதிப்பவராயிருந்தால்
கட்டப்பாருங்கள் அவற்றின் உதவியோடு _

குட்டிக் குன்றையாவது.

*

No comments:

Post a Comment