LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, May 21, 2018

இரவு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)


(லதா ராமகிருஷ்ணன்)


வலியின் உபாதை யதிகமாக
முனகியபடி புரண்டுகொண்டிருக்கும் நோயாளிக்கு
இரவொரு பெருநரகம்தான்.
மறுநாள் அதிகாலையில் கழுமேடைக்குச் செல்லவுள்ள
கைதிக்கு கனவுகாண முடியுமோ இரவில்….
தெரியவில்லை.
எலும்புருக்கும் இரவி லொரு முக்காலியில் ஒடுங்கியபடி
தொலைவிலுள்ள தன் குடும்பத்தை
இருட்டில் தேடித் துழாவும் கண்களோடு
அமர்ந்திருக்கும் காவலாளிக்கு
இரவென்பதொரு இருமடங்கு பகலாய்….
போரற்ற பாருக்காய் ஏங்கிக்கொண்டே
அவரவர் நாட்டின் எல்லைப்புறஙளில்
ஆயுதந்தாங்கிக் கண்காணித்துக்கொண்டிருக்கும்
படைவீரர்களுக்கு
இரவென்பதும் இன்னொரு கண்ணிவெடியாய்….
ஒருவேளை சோறில்லாமல் தெருவோரம் படுத்துறங்கும்
பிச்சைக்காரருக்கு இரவென்பது
கனரக வாகனத்திற்கு பலியாகிவிடலாகும்
ரணகளமாய்
பிறரெல்லாம் உறங்கிக்கொண்டிருக்க
சிறுநீர் கழிக்கத் தனியாய் நகரமுடியாமல்
அதை யடக்கப் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருக்கும்
பெரியவருக்கு இரவொரு
கடக்கவியலா பெருந்துயராய்
இத்தனையும் தானேயாகிவிடுவதாய் உணரும் மனம்
கையறுநிலையில் கத்தித் தீர்த்த பின்னும்
இரவின் மாயக்கோல் வழி கிளம்பும்
முயலையும் புறாவையும்
கனவும் நனவும் குழம்பி மேலெழும்பும்
வண்ணக்குமிழ்களையும்
எண்ணியும் கண்டும் எண்ணியும் கண்டும்
என்றும் ராப்பித்தாகிவிடுகிறது தினம்!



Monday, January 22, 2018

இன்றல்ல நேற்றல்ல... ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

இன்றல்ல நேற்றல்ல...
 ரிஷி
(
லதா ராமகிருஷ்ணன்)



 வனஜா, கிரிஜாவளைஞ்சா நெளிஞ்சா….”
என்று அந்தக்கால திரைப்படமொன்றில் நாயகன் வாயசைக்க
படுஜாலியாகப் பாடிய ஆண்குரல்
நட்டநடுவீதியில் அந்தப் பெயருடைய பெண்களை (மட்டுமா)
முண்டக்கட்டையாக்கப்பட்டதாய் கூனிக்குறுகவைத்தது.

கலா கலா கலக்கலா…” என்று கேட்டுக் கேட்டு இன்னொரு குரல்
பகலில் வெளியே போகும் பெண்களையும்
இடைமறித்துக் கையைப் பிடித்து இழுத்து
Eve-torturing
செய்துகொண்டேயிருந்தது பலகாலம்.

நான் ரெடி நீங்க ரெடியா?’ என்று பெண்குரலில் பாடவைக்கப்பட்ட வரி
நடுரோடில்அழைப்புவிடுக்கப்பட்டு அவமானத்தில் பொங்கியெழுந்த பெண்களைப்
போலிகளாகப் பகடிசெய்து சிரித்தது.

ஓடக்கார மாரிமுத்து ஓட்டவாயன் மாரிமுத்துஎன விளித்து
ஊருக்குள்ளே வயசுப்பொண்ணுங்க சௌக்யமா
என்று விசேஷமாக விசாரித்த நாயகன்
ஹாசினிப்பெண்கள் பெருமிதப்பட்டுக்கொள்ளும் படத்தில்
தன் நண்பர்களோடு
ஊர்ப்பெண்களையெல்லாம், பிள்ளைத்தாய்ச்சிப் உட்பட,
பேர்பேராய்ப் பரிகசித்துப் பாடிய பாட்டு
பிரபலமோ பிரபலம்இளவட்டங்களிடையே மட்டுமல்ல.

கங்கா காவிரி ரம்பா ஊர்வசி அரசி கிளியோபாட்ரா
ஆப்பக்கடை அன்னம்மா
அத்தைமகள் ரத்தினமா, அடுத்தவீட்டு மாக்டலீனா
ரீனா மீனா தேவசேனாகாதரீனா செந்தேனா என்பேனா
மானே மச்சகன்னித் தேனே ….. மெல்லக் கடி, பெண் பேனே....’

அட, சினிமாவில் பெண்ணென்றாலே சதைமொந்தை தானே.

பெயர்பெயராய்ச் சொல்லிச்சொல்லிப்
பெண்ணைப் பண்டமாய்த் துண்டாடிக்கொண்டாடும்
பேராண்மையாளர்களுக்கெல்லாம்
மேடைக்குத் தகுந்தபடி மாறுவாள் ஆண்டாள்
தாயாகவும் தாசியாகவும்.

தேவ' 'சேர்ப்பதால் ஆவதென்ன?

வெறும் Euphemistic terms-இல்பெறக்கிடைப்பதா மரியாதை?

உம்ராவ்ஜானின் அழகியவிழிகளில் என்றுமாய் ததும்பியிருந்த
கண்ணீர் சொல்லும் பலகதை.

இல்லை, *Pretty Woman நாயகியிடம் கேட்டால்
பளிச்சென்று சொல்வாள் பதிலை!


(*Julia Roberts நடித்த படம். தெருவில் வாடிக்கையாளர்களுக்காக வலைவிரிக்கும் மலிவுப் பாலியல்தொழிலாளியாக இருப்பவள் நல்லவனான செல்வந்தன் நாயகனோடு ஒரு வாரம் இருக்க நேர்ந்ததில், அவளுக்கு சமூகத்தாரிடம் நேரும் அவமானங்கள்; பின், நிரந்தர உறவில் நம்பிக்கை யில்லாதவனான நாயகன் சகல வளங்களோடும் அவளைத் தன்னோடு இருக்கச்சொல்லி அழைக்கும்போது ஏற்க மறுத்து கௌரவமான வாழ்க்கைத் துணையாக்கிக்கொள்ள முடியுமானால் வருகிறேன் என்று சொல்லும் பெண்பாத்திரம்).


கோதையும் குறிசொல்லிகளும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

கோதையும் குறிசொல்லிகளும்

ரிஷி
(
லதா ராமகிருஷ்ணன்)



ஊர்ப்பெண்களின் பிறப்பை, ஒழுக்கத்தையெல்லாம்
கேள்விக்குறியாக்குவதே
பாரிய தீர்வுபோலும் பிரச்சனைகளுக்கெல்லாம்.
பேர்பேராய் கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

மாதொருபாகனை One Part Woman என்றா லது மிகப்பெரிய பெண்விடுதலை முழக்கமல்லோ.

ராவணனே பரவாயில்லை யென்று ஜானகி நினைத்ததாக
முற்பிறவியில் அசோகவன மரமாயிருந்து
சீதையின் மனதிற்குள் கிளைநீட்டி ஒட்டுக்கேட்டதாய்
புட்டுப்புட்டு வைத்தவர்கள்
இன்றுகால இயந்திரத்தில் பின்னேகி
கோதையின் படுக்கையறைக்குள்
எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆணுக்குப் பெண்ணிங்கே இளைப்பில்லை காண்
இதிலும்தான்.

அவரவர் வாழ்க்கையில் ஊரை அனுசரிப்பதாய்
ஆயிரம் வேலிகளுக்குள் வாகாய் வாழ்ந்திருப்பவர்கள்
அடுத்தவீட்டு ஆணிடம் சொக்கி பக்கம்பக்கமாய் ஆண்டாள் கவிதையெழுதியதாகப் பேசியும்
ஜாலிக்கு ஆண்டாளை தாசியாக்கியும்
கைபோன போக்கில் தூசுதட்டிக்கொண்டிருக்கும்
அரிப்புகளும் வக்கரிப்புகளும் யாருடையவையோ….

அருஞ்சொல்லா யிங்கே அறிவிக்கப்படும் அப்பதத்தின்
சமகாலப் பொருளை (சர்வகால உட்பொருளை)
புறமொதுக்கிப் பேசுவோர்
அவரவர் திருநாமங்களின் முன் அதை
அடைமொழியாக்கிக்கொள்வாரோ
வெனக் கேட்டால்
அடிக்கவந்துவிடுவாரோ….?



SAY NO TO LIES


SAY NO TO LIES