LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, January 16, 2017

சீதைக்கும் பேசத் தெரியும் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

சீதைக்கும் பேசத் தெரியும்
ரிஷி
(
லதா ராமகிருஷ்ணன்)


ராமன் என் அன்பன்.
அவனோடு நான் அற்புதமான பொழுதுகளைக் கழித்திருக்கிறேன்.
நாங்கள் என்னவெல்லாம் பேசியிருக்கிறோம் தெரியுமா?
ஒவ்வொன்றும் அட்சரலட்சம் பெறும்!
எப்படியெல்லாம் கூடிக்களித்திருக்கிறோம் தெரியுமா?
ஆரண்ய மரங்கள் கதைப்பாட்டுப் படிக்கும்!
அவன் என்னை சந்தேகப்பட்டது ஒரு சறுக்கல்;
அதற்காய், என்னைக் கடத்திச்சென்றவனை நான்
காதலிப்பேன் என்று கிறுக்குவதா?
பெண்ணை வலுக்கட்டாயப்படுத்துபவன் கயவனல்லவா?
கதாநாயகன் என்கிறீர்களே?
எனதுரிமையைப் பேசுவதாய் என்னை ஏன் இன்னுமின்னும் சிறுமைப்படுத்துகிறீர்கள்?
கடத்திச் சென்றவனுக்குக் கெடுக்கத் தெரியாதா என்ன?
கிட்டே நெருங்கினால் தலை வெடித்துச் சிதறும் என்பதால்
எட்ட நின்றே ஏங்கிப் பார்த்தான்.
கையெட்டும் தூரத்தில் மண்டோதரி இருக்க
என்னென்ன கெட்ட வார்த்தைகளைப் பேசினான் தெரியுமா?
என்னைப் பொறுத்தவரை துட்டனே யவன்.
அவனுக்கும் வழக்குரைஞர் வைத்துக்கொள்ளும் உரிமையுண்டு.
ஆனால், நான் அவனை உள்ளூர நேசித்தேன் என்று பொய்பேசி
பாதிக்கப்பட்ட என்னைக்கொண்டே பாதகன் அவன் விடுதலையை வாங்கித்தரப் பார்க்கவேண்டாம்.
உங்கள் மனைவி, மகள் கடத்தப்பட்டால்
இப்படித்தான் மனிதநேயம் பேசுவீர்களா?
என் அன்பன் ராமபிரான் என்னை சந்தேகப்பட்டான்.
யாரால்? யார் செய்த காரியத்தால்?
சந்தேகப்பட்டதற்காய் எத்தனை அலைபாய்ந்திருக்கும் என் 
அன்பன் மனம் என்று எனக்குத் தெரியும்.
ஆறாக்காயம்தான், 
அதற்காய் ராவணன் கையாலா மருந்திட்டுக்கொள்வேன்?
ஏன் எல்லோருமே என் விஷயத்தில் வெவ்வேறுவிதமாய்
ராவணனாகவே நடந்துகொள்கிறீர்கள்?


ஷெர்லாக் ஹோம்ஸு’ம்(நானே!) ’வாட்ஸனு’ம்(நானே!) - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

ஷெர்லாக் ஹோம்ஸும்(நானே!) ’வாட்ஸனும்(நானே!)

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

நகசமும் நகரசமும் 'தும்பிக்கை-தந்த'ப் பிராணியின்
ஒருபொருட்பன்மொழியாக, பல்பொருளொருமொழியாகும்
நகாயுதம் குறிக்கும் பறவைகளிலும் விலங்குகளிலு முள
கொம்பும் வாலும் கடைவாய்க் கூர்பல்லும், வளைநகமும்,
வண்ணச்சிறகும் இன்னென்னவும் பதிலியாகுமோ உன் என் ஒரு சொல்லுக்கு?
நகுலன் சிவனும் அறிஞனும் பஞ்சபாண்டவர்களில் ஒருவனும் மட்டும்தானா? நல்ல கவியும்தானே!
நகிலம் நக்கிதம் நசலுண்டாக்க,
நிழல்யுத்தம் செய்தவன் மன நகுலம் மூச்சுத்திணறும் நாகமின்றியே.
நகதியன்ன நல்வார்த்தைகள் சொல்பித்து நசைநர்
நகுதத்தினடியில் வழிநடத்திக் கிடத்த,
அந்த நக்கவாரப் பக்கவாட்டுகளி லுள்ள நீர்நிலைகளில்
நக்கரமுண்டா வென்றறியும் நகுதாவும் உண்டோ?
நகேசனின் உள்ளாழத்தில் நடுங்கத்தொடங்கிவிட்டதோ நிலம்?
என் நகரூடத்திற்கும் நகாசிக்கு மிடையே உள்ளோடும் நரம்புகளின் சிக்குகளை சிடுக்குகளை நானே நேரிடையாய் காணமுடியுமோ?
நக்கிரை, நக்குடம் என்றே நாசியைச் சுட்டும் நகாசுவேலை
நவீனமா? புராதனமா
?
(பி.கு: தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதி ஒன்றின் பக்கங்களைப் புரட்டிப்பார்க்க நேர்ந்தபோதுஎன்ற எழுத்தின் பக்கங்களில் கீழ்க்கண்ட பல வார்த்தைகளையும், அவற்றிற்கான அர்த்தங்களையும் படித்தேன். மலைப்பாக இருந்தது! அதன் விளைவே இக்கவிதை! – ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)
நகரூடன்மூக்கு
நக்கிரைமூக்கு
நக்குடம் - மூக்கு
நகாசிநெற்றி
நகதிபொன்கட்டி, கருவூலம்
நகரசம்யானை
நகசம்யானை
நகாசுவேலைபொற்கொல்லர்களால் செய்யப்படும் நுணுக்கமான பொன்நகை வேலைப்பாடு
நகாயுதம்சேவல், சிங்கம், புலி, கருடன், கழுகு
நகிலம்பெண்ணின் மார்பகம்
நகுலம்கீரி
நகுதாமாலுமி
நகுத்தம்புங்கமரம்
நகுலன்சிவபெருமான், அறிஞன், பஞ்சபாண்டவருள் ஒருவன்
நகேசன்மலைகட்குத் தலைவனாகிய இமயமலை.
நக்கரம்முதலை
நக்கவாரம்ஒரு தீவு, வறுமை
நக்கிதம்இரண்டு
நசலாளிநோயாளி
நசல்நோய்
நசைநர் - நண்பர்கள்

பறவைப்பார்வை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

பறவைப்பார்வை
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


புள்ளினம் பேசாது;
புதுக்கண்டுபிடிப்புகள் அதற்கில்லை;
ஆறாம் அறிவில்லை;
அந்த நாள் ஞாபகம் வந்ததில்லை
யார் சொன்னது சகவுயிரே….
எம் ஒரு சிறகடிப்பு உங்கள் ஓராயிரம் வார்த்தைகளைப் பொருளற்றதாக்கும்;
எங்கள் ஞாபக விரிவு வாமனனின் மூவடித்திறம்.
இருந்தும் நாம் ஒருங்கிணைந்த வெளியொன்றில்
என் சிறகை உனக்கு உயில் எழுதவும்
உன் குரலில் உருகிக் கரையவும்
ஏங்கும் என் மனதின் கனாவில்
நாமொரு உடலின் முதலும் முடிவுமாய்.

* * * * *

உணவுக்கான இரையாக கணப்பொழுதில்
சுட்டுவீழ்த்திவிட்டால்கூடப் பரவாயில்லை.
காலில் நூல் கட்டி வானத்தில் பறக்கவிட்டு
ஒரேநேரத்தில் அத்தனை பேரும்
கைத்துப்பாக்கிகளை உயரே குறிபார்த்து நீட்டும்போது
என்னமாய் நடுங்கித் துவள்கிறது என் சின்ன மனம்….
வலுவிழந்துபோகும் இறக்கைகளுடன்
வானக்கூரையின் கீழ் என்னைக் காப்பாற்றிக்கொள்ள வழிதெரியாமல் எப்படியெல்லாம் பரிதவித்துப்போகிகிறேன்…..
அவர்கள் கையிலிருப்பது பொம்மைத்துப்பாக்கிகளாம்
ஆனால் என் உயிர்வலி எத்தனை உண்மையானது.

சில நேரம் Sea-gull;
சில நேரம்சிட்டுக்குருவி;
சில நேரம் காகம்;
சில நேரம் சக்கரவாகம்;
சில நேரம் கொக்கு;
சில நேரம்…….
எக்குத்தப்பாய் போட்டுவிட்ட எதுகைக்கு
மோனை கிடைக்காத துக்கத்தில்
உனக்குள்ளிருக்கும் நீ பார்த்தறியாபுல்புல்பறவை
இசைக்க மறக்க,
இன்றோ என்றோ இன்றான என்றோ
என்றான இன்றோ
இந்தக் கவிதை தொடர்வதும்,
காலாவதியாவதும்
கவிதை யாவதும்
ஆகாததுமான யாவுமே
ஆன வாழ்வின்
ஆகச்சிறந்த கொடுப்பினை

(நீயே)தானாக.

நன்றி நவிலல் (சக கவிஞர்களுக்கு) - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

உரித்தாகும் நன்றி
ரிஷி 
(லதா ராமகிருஷ்ணன்
தேன்மொழியைப்
பொருள்பெயர்ப்பதறியா

கிறக்கமும் தடுமாற்றமுமே
உள்ளுறை சாரமெனத் தெளியும் திறம்
உறுவாழ்வின் அருவரமாய்.



(To: THENMOZHI DAS AND ALL OTHER FELLOW-POETS)


நன்றி நவிலல்


(சக கவிஞர்களுக்கு)

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

மொழிபெயர்க்கும்கவிதைகளெல்லாம்
என் மனவழியின் கிளைபிரியும் பாதைகளாய்….
மேசையின் இருபுறமும் அமர வாராமலேயே
தேனீர் அருந்துபவர்கள்,
இரவில் வலி மிக எழுதிய கவிதையை
பகலில் படித்து நெருப்புக்காயம் பெறுபவர்கள்,
கனவில் காதலியை அரவணைத்து
களிப்பா, கலக்கமா என்று புலனாகா
அந்தரவெளியில்
மனம் கனத்திருப்போர்,
கானகத்துளிநிலக் கண்ணாடியில்
தன் விசுவரூபம் கண்டு தவிப்போர்,
குழந்தைத் தொழிலாளியாய் அழுதிருப்போர்,
இறுதி யாத்திரை செல்லும் உடலில் தன்னைப்
பொருத்திக்கொள்வோர்,
அதுவேயாய், குறியீடாய் பொழிமழையின் அழகில்
தானழிந்திருப்போர்....

ஆன அனைவரிலும் தானாய் முளைக்கின்றன
என் பாதங்களும், காதங்களும்
!