LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label பறவைப்பார்வை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts
Showing posts with label பறவைப்பார்வை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts

Monday, January 16, 2017

பறவைப்பார்வை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

பறவைப்பார்வை
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


புள்ளினம் பேசாது;
புதுக்கண்டுபிடிப்புகள் அதற்கில்லை;
ஆறாம் அறிவில்லை;
அந்த நாள் ஞாபகம் வந்ததில்லை
யார் சொன்னது சகவுயிரே….
எம் ஒரு சிறகடிப்பு உங்கள் ஓராயிரம் வார்த்தைகளைப் பொருளற்றதாக்கும்;
எங்கள் ஞாபக விரிவு வாமனனின் மூவடித்திறம்.
இருந்தும் நாம் ஒருங்கிணைந்த வெளியொன்றில்
என் சிறகை உனக்கு உயில் எழுதவும்
உன் குரலில் உருகிக் கரையவும்
ஏங்கும் என் மனதின் கனாவில்
நாமொரு உடலின் முதலும் முடிவுமாய்.

* * * * *

உணவுக்கான இரையாக கணப்பொழுதில்
சுட்டுவீழ்த்திவிட்டால்கூடப் பரவாயில்லை.
காலில் நூல் கட்டி வானத்தில் பறக்கவிட்டு
ஒரேநேரத்தில் அத்தனை பேரும்
கைத்துப்பாக்கிகளை உயரே குறிபார்த்து நீட்டும்போது
என்னமாய் நடுங்கித் துவள்கிறது என் சின்ன மனம்….
வலுவிழந்துபோகும் இறக்கைகளுடன்
வானக்கூரையின் கீழ் என்னைக் காப்பாற்றிக்கொள்ள வழிதெரியாமல் எப்படியெல்லாம் பரிதவித்துப்போகிகிறேன்…..
அவர்கள் கையிலிருப்பது பொம்மைத்துப்பாக்கிகளாம்
ஆனால் என் உயிர்வலி எத்தனை உண்மையானது.

சில நேரம் Sea-gull;
சில நேரம்சிட்டுக்குருவி;
சில நேரம் காகம்;
சில நேரம் சக்கரவாகம்;
சில நேரம் கொக்கு;
சில நேரம்…….
எக்குத்தப்பாய் போட்டுவிட்ட எதுகைக்கு
மோனை கிடைக்காத துக்கத்தில்
உனக்குள்ளிருக்கும் நீ பார்த்தறியாபுல்புல்பறவை
இசைக்க மறக்க,
இன்றோ என்றோ இன்றான என்றோ
என்றான இன்றோ
இந்தக் கவிதை தொடர்வதும்,
காலாவதியாவதும்
கவிதை யாவதும்
ஆகாததுமான யாவுமே
ஆன வாழ்வின்
ஆகச்சிறந்த கொடுப்பினை

(நீயே)தானாக.