இடுப்பில் பொருத்திக்கொள்கிறேன்
என்பதால்
குழந்தையின் விஸ்வரூபம் எனக்குத் தெரிந்ததாகிவிடுமா என்ன?
வாய்க்குள் தெரியாத அகிலத்தை
மனதிற்குள் பார்க்க முடிய வேண்டும் நமக்கு.
அர்த்தம் புரிவதற்கு முன்பாகவே நம்மை
உள்ளுக்கிழுத்து முத்துக்குளிக்கவைக்குமொரு கவிதையின் ஆழத்தை
எதைக்கொண்டு அளப்பது?
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.
தெய்வம் இல்லையென்பார்க்கு
குழந்தை இசையொத்தது எனல் நன்று.
அன்பிற்கும் அதிகாரத்திற்கும் தனக்கு
வித்தியாசம் தெரியுமென்பதை
உதட்டைப் பிதுக்கி ஒரு துளி கண்ணீரை
வெளியேற்றி
எத்தனை தெளிவாக உணர்த்துகிறது குழந்தை!
நாம் தான் அதை உள்வாங்கத்
தவறிவிடுகிறோம்.
பித்தம் தலைக்கேற
மொழியைக்
குழந்தையாக பாவிப்பதற்கு பதிலாக
குழந்தைத் தொழிலாளியாக நடத்தத் தொடங்கிவிடுகிறோம்.
ஒரு கட்டத்தில் நம் வளர்ச்சி முடங்கிவிட
நம்மைத் தாண்டி வளர்ந்துகொண்டேயிருக்கும் குழந்தை.
2. மொழிவாய்
இவரிடம் இறக்கையாய் விரிந்து பறக்கிறது
பிள்ளையின் மழலையில் புதிதாய்ப் பிறக்கிறது
முதியவர் குழறலில் அதன் வேர் தெரிகிறது
ஒரு வியாபாரி கணக்குவழக்காய்
கைவரப்பெற்றிருப்பது
ஓர் ஓவியரின் வண்ணக்கலவைகளில்
இரண்டறக் கலந்திருப்பது
யார் யாரோ நகமும் சதையுமாக வழியமைத்துக்கொடுப்பது.
தீராத தாகத்திற்கெல்லாம் நீராகி
அமுதமுமாவது
கண்ணிமைப்போதில் இடம் மாறும் வித்தை
யதன் கூடப்பிறந்தது
காலத்திற்கும் அதற்குமான கொடுக்கல்வாங்கல்கள்
கணக்கிலடங்காது
அவரவர் வழிச்செலவுக்கான கட்டுச்சாதமாய்
தாகம் தணிக்கும் நன்னீராய்
தண்காற்றாய் தலைச்சுமையாய்….
கூடவேயிருக்கும் மொழி
இன்னொரு மேனியாய்
இதயமாய் மூளையாய்…
கூடுவிட்டுக்கூடுபாயவும் வழிகாட்டும்.
இன்றுமென்றும் நம் காலைமாலையாய்
நன்றும் தீதும் பிறிதுமாய் தேடிவந்து
தட்டிக்கொடுத்தும் முட்டுக்கொடுத்தும்
எட்டையும் நான்கையும் பெருக்கியும் கூட்டியும்
கழித்தும் வகுத்தும் பகுத்துரைக்கும்.
அழுகையில் அலறலில் ஆங்கார வசையில்
அதிமதுர இசையில்
அத்தரிபாட்சா கொழுக்கட்டைச்சுவையில்
அனார்க்கலியின் ஆடல்பாடலில்,
அழியாக் காதலில்.
அம்மாவின் இருப்பில்
அடிமனப் பெருவிருப்பில்
அங்கிங்கெனாதபடி யிருக்கும்
வீடுபேறாய மொழி யழிவதில்லை.
நாடிலியானோர் ஒருபோதும் மொழியிலி
யாவதில்லை.
3.மொழிவழி
திக்குத்தெரியாத காட்டில் தேடித்தேடி இளைக்கு
மென் நோயும் மருந்துமாகும் மொழியின்
வழியெல்லாம் பறக்கும் மின்மினிப்பூச்சிகள்
விண்மீன்களாய் சந்திரசூரியர்களாய்
ஒளிவழிந்தொளிர
குழந்தைப் பருவமும் குழந்தைக்கான பருவமும்
இருவேறாய்ப் புரிய
திக்குத்தெரியாத காடாகப் படரும் மனதின்
கிளைகளெல்லாம் பூபூத்துக் காய்காய்க்க
நகரும் வனமாய் மொழிசொல்லும் வழி செல்லும்
பகலும் இரவும் விரிந்துகொண்டேபோக
அங்கங்கே சில திருப்பங்களில்
இறக்கைகளும் இலவம்பஞ்சுத்திரள்களும் தந்து
களைப்பாற்றித் தேற்றும்
மொழியின் வள்ளன்மைக்கு என்ன
கைம்மாறு செய்யவென்ற கேள்வியில்
மீண்டும் திக்குத்தெரியாத காட்டில்
தேடித்தேடி இளைக்கு மென்
நோயும் மருந்துமாகும் மொழி….
***
4. மொழிபெருங்கருணை
வழியேகும் அடரிருள் கானகத்தில்
கைப்பிடித்து அழைத்துச்செல்லும் மொழி
குழிகளிலிருந்தும் கட்டுவிரியன்களிலிருந்தும் காத்து
உயிர்பிழைக்கும் வழி கற்றுத் தந்தவாறு
பழிபாவங்களுக்கஞ்சி சில ஒழுக்கங்களுக்குட்பட்டுப்
போகுமாறெல்லாம் என்னை உயிர்ப்பித்தபடி
சுழித்தோடும் நதியாக தாகம் தீர்த்து
கரையோரங்களில் பூவாய்ப் பூத்து
சோர்ந்துபோகாமல் தீர்ந்துபோகாமல் மனதை அறிவை
அவற்றின் அருவசேமிப்பையெல்லாம்
காவல்காத்தவாறு
கூடவே வரும் அருந்துணைக்கு
யாது கைம்மாறு செய்யலாகும்
ஏழை யென்னால்
காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி நிற்பதல்லால்.....











