கலைடாஸ்கோப் கவிதைகள்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
1. நம்பிக்கை
மாமழையின் கருணையும்
மகத்துவ சூரியனின் கருணையும்
சில நல்ல உறவுகளின் கருணையும்
பல அரிய தருணங்களின் கருணையும்
சிலருக்கேனும் உதவமுடியும் கருணையும்
நம்மை நாமே நம்பும் கருணையும்
நல்ல கவிதைகளின் கருணையும்
உள்ள வரை
மாபிச்சி மனம் மருகத் தேவையில்லை.
முன்பின் பார்த்தறியாத அரிய பறவையொன்றின்
ஒற்றைச் சிறகிதழ் காற்றில் மிதந்து வருவதைப்
போலொரு சொல்
மூச்சை உள்ளிழுக்கும்போதாயிருக்கலாம் _
அத்தனை மென்மையாக என் நுரையீரல்களுக்குள் நிறைந்து
என் இரத்தநாளங்களில் ஊடுருவிச் செல்லத் தொடங்குகிறது….
சொப்பனத்தில் எங்கென்றே சொல்லமுடியாத ஒரு வனாந்தரத்தில்
அல்லது ஒரு தெருவில்
நான் கால்கடுக்க நடந்துகொண்டிருக்கும்போது
ஒரு தேவதை எதிரே வந்து
‘என்ன வேண்டும் கேள்’ என்று சொன்னால்
பேந்தப்பேந்த விழிப்பதுபோலவே _
விழித்தபின் காலின்கீழ் எங்கோ புதையுண்டிருக்கும்
அந்த வனாந்திரத்தை அல்லது தெருவை
நினைவில் மீட்டுயிர்ப்பிக்க மீண்டும் மீண்டும் முயலும்
பிரக்ஞையின் கையறுநிலையாய்
காந்தும் அந்தச் சொல்……
பூங்கொத்தாகுமோ
உதிரிப்பூவாகவே நின்றுவிடுமோ
எப்படியிருந்தாலும்
இப்போது அது எனக்குள் தன்னை எழுதிக்கொண்டிருக்கும்
கவிதையாக….
3. இல்லாதிருக்கும் அகழி

காலத்தின் அடர்கருநிழல் படர்ந்த உருவம்
கண்ணெதிரே நிற்கக்கண்டும்
அடையாளந்தெரியாதுழலும் அக்கணம்
தான் செய்யாத குற்றத்திற்காகத்
தவித்துத் தண்ரனைையனுபவித்துக் கூனிக்குறுகி
அவமானப்பட்டுநிற்கும் உள்.
அடையாளமெனல் தோற்றக்கூறுகளுக்கு அப்பாலும்
நீண்டுகொண்டேபோக
அப்பட்ட அந்நியமாதலைக் காட்டிலும் அவலமாய்
அடுத்தடுத்து நிற்கும்போதும் இடையோடும்
கண்ணுக்குத்தெரியா அகழியில் மறைந்திருப்பன
முதலைகளோ மூழ்கடிக்கப்பட்ட மூச்சுத்துளிகளோ
மலர்களோ மறுவாழ்வோ
இறங்கிப்பார்த்துவிடலாமென்றால்
இல்லாதிருக்கும் அகழியின் நீராழம் கணுக்காலளவோ கழுத்தளவோ .......
கண்டறியும் வழியறியாது கலங்கிநிற்கும்
கால்களைக்
கீழிழுத்தவாறிருக்கும்
பிணமாய் கனக்கும் மனம்.
4. ஒட்டுத்தையல்களும்
கந்தலான வாழ்வுரிமையும்
வார்த்தைகள் சாமான்யர்களை மட்டுமே வழிமறிக்கின்றன
சாமான்யர்களுக்கு மட்டுமே குழிபறிக்கின்றன
சாமான்யர்களின் இறப்புக்குக் கிடைப்பதெல்லாம்
’செலக்டிவ்’ மௌனங்கள்; மறதிகள்
சாலை விபத்தை வெறுமே செல்ஃபி எடுத்து ஷேர் செய்து தலையை சிலுப்பிக்கொள்ளுதலே
சமூகப் பிரக்ஞையாக.
சின்னதா யொரு ரொட்டித்துண்டு கொடுத்துவிட்டாலோ
சட்டென்று தன்னை யொரு அன்னை தெரசாவாக்கிக் கொண்டுவிட
சொல்லியா தரவேண்டும்?
சாமான்யர்களுக்காக சதா உழைப்பதாக சொல்லிக்கொள்ளும்
சிலபலருக்கு சென்னை சீர்காழி ராஜஸ்தான்
ஸ்விட்ஜர்லாந்தில் சொந்தமாய்
அடுக்குமாடிக் கட்டடங்களும்
கிடுகிடுவென வளர்ந்தோங்கிய
பெருநிறுவன வியாபாரங்களும்.
சாமான்யர்களுக்கில்லை சுதந்திரங்கள்
பேச்சுரிமை கருத்துரிமை யாவும்
எட்டாக்கனியாக
சாமான்யர்களுக்கானதே தினந்தினம் செத்துமடியும் வாழ்க்கை யென்றாக
வரும்போகும் அற்பப்பதர்களுக்கெல்லாம்
வயிற்றுப்பிழைப்புக்காக வணக்கம் சொல்லி
மடங்கி வளைந்து முழந்தாளிட்டு
மனம் நொறுக்கும் வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு
மரத்துப் போய்விட்ட உணர்வுடன்
மடைதிறந்த வெள்ளமாய் பீறிடத்துடிக்கும்
சொற்களால் பிதுங்கும் இதழ்களை
இறுக்கித் தைத்துவைப்பதே
இயல்பாகிய
இகவுலக வாழ்வில்
இங்கே இன்று…..
இருந்திரந்து
இரந்திருந்து
இருந்திறந்து
இறந்திருந்து
இருந்திருந்திருந்திருந்து….













