LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, March 5, 2025

அவரவர் வேலை அவரவருக்கு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 அவரவர் வேலை அவரவருக்கு

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
மீறல் என்பது மட்டுமே மந்திரச்சொல்லாக இருந்தது.
மீறல்களில் சின்ன மீறல் பெரிய மீறல்
தேவையான மீறல் தேவையற்ற மீறல்
அர்த்தம் மிக்க மீறல் ஆக்கங்கெட்ட மீறல்
இயல்பான மீறல் தருவிக்கப்பட்ட மீறல்
உள்ளார்ந்த மீறல் உருவேற்றப்பட்ட மீறல்
இன்னும் எத்தனையோ உண்டென்றறியாமல்
வெறுமே அந்த மந்திரச்சொல்லை உச்சாடனம் செய்தாலே
அற்புத விளக்கு ஒன்றல்ல ஆயிரம் கைவசமாகும்
என்று அரைகுறையாய் சொல்லித் தந்தவர்கள் தருகிறவர்களுக்கு
அதன்படி செயல்பட்டு அந்த இருட்குகைக்குள்
அகப்பட்டு
புதையலேதும் கிடைக்காமல் வதைபடும்
அப்பிராணி சீடர்களுக்கு
அடைக்கலமளிக்க அவகாசமிருப்பதேயில்லை.

ஒரே பாதை வெவ்வேறு கால்கள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 ஒரே பாதை வெவ்வேறு கால்கள்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
அவரவர் பயணங்களுக்காகப் பாதையின் நீள அகலங்களும்
இருமருங்கிலுமான மரங்களும் மைல்கற்களும்
தெருவோரக் கடைகளும் திருப்பங்களும்
மறுசீரமைக்கப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன.
அவர் நடக்கும்போது அந்தச் சாலையோரங்களிலிருந்த
அருநிழற் தருக்கள்
அடுத்தவர் நடக்கும்போது மாயமாய் மறைந்துபோய்விடுகின்றன.
அதற்கு பதில்
அங்கே கூர்முனைக் கற்கள் இறைந்துகிடக்கின்றன.
அவர் நடக்கும்போதெல்லாம் அங்கே நாள்தவறாமல் இளநீர் வெட்டிக்கொண்டிருக்கும் வியாபாரி
அடுத்தவர் அவ்வழியே செல்லும்போது
வெடிகுண்டு வண்டியில் கூவிக்கொண்டே செல்கிறார்.
அவர் நடக்கும்போது வீசும் தென்றல்
அடுத்தவர் நடக்கும்போது சூறாவளியாகிவிடுகிறது.
அவர் நடக்கும்போது ஆயிரத்தெட்டு யோசனைகளோடு சென்றாலும்
வழுக்கிவிட அங்கேயிருக்காத சாணிமொந்தையும் போட்டுடைத்த பூசணிக்காயும்
நாறும் சாம்பார்ப் பொட்டலமும் செத்த எலியும்
குழியும் குண்டும் வழியெலாம் உருண்டோடும் கோலிகுண்டுகளும்
யாவும் அடுத்தவர் செல்லும்நேரம்
அங்கே ஆஜராகிவிடுகின்றன.
அப்படியுமிப்படியும் ஆடித் தள்ளாடித் தத்தளிக்கும் ஒருவரை
யடுத்தவர் தம்பிடி பெறாதவர் என்று எக்களிப்பதும்
வம்படியாய்ப் பிடித்திழுத்துத் தள்ளிவிடுவதும்
சாலைவிதிகளிலேயே மீறப்படாமல் மிக கவனமாய்ப்
பேணப்படுவதாகிறது.
அடிக்கடி விபத்துகள் நேரும் அந்த அபாயகரமான வளைவு
மட்டும் இருந்தவிடத்திலேயே இருந்துவிடுமா என்ன….

காரணகாரியம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 காரணகாரியம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

கருத்துக் கந்தசாமி’ என்று
எதற்குச் சொல்லவேண்டும்?
கந்தசாமிகள் மட்டுமா
கருத்துச் சொல்கிறார்கள்?
அப்படிச் சொல்வது கந்தசாமி என்ற பெயருடையவர்க ளைப் பரிகசிப்பதாகாதா?
பழிப்பதாகாதா?
பொதுவாக சாமியையும் குறிப்பாக கந்த சாமியையும்
என்றுகூடச் சொல்ல முடியும்….
சீக்கியர்களைப் பார்த்துச் சிரித்துச் சிரித்து
சகட்டுமேனிக்கு பகடிசெய்து திரித்து
குலுங்கி வலிக்கும் வயிறுகளில் இன்னமும்
நகைச்சுவையுணர்வு செரிமானமாகாமலேயே……
கந்தசாமி என்ற பெயர்
அந்தப் பெயருடையவரை மட்டும் குறிப்பதில்லை
என்று புரிந்துகொள்ளவியலாத அளவு
அறிவீலியில்லை நான்.
இருந்தாலும்,
நானும் கருத்துச் சொல்ல
ஒரு காரணம் வேண்டாமா?
அதனால்தான்.......

கேள்வி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கேள்வி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
சில கேள்விகளை
சிலர் கேட்கும்போது மட்டும்
அதைக் கேட்கும் சிலர் மட்டும்
அந்தச் சிலர் மட்டுமே
அந்தக் கேள்விகளைக் கேட்டதாய்
கேட்கமுடிவதாய்
முடிந்த மட்டும் வாய்பிளந்து விழி விரித்து
வியந்துபோகிறார்களே ஏன்
என்ற கேள்வி
யின்று மட்டும்
கடந்துசெல்லப்படலா
மெனில்
இனி வரும் நாளில்
கேட்கப்படலாம்
முணுமுணுப்பாக
அல்லது மிக கணீரென
என்று மட்டும் சொல்லத்தோன்றுகிறது.
அம்மட்டே யாகுமாம் யாவும் என்ப.....

ஊருக்கு இளைத்தவர்களும் உத்தம உபதேசிகளும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஊருக்கு இளைத்தவர்களும்

உத்தம உபதேசிகளும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
மகானுபாவர்கள்.
மரணத்திற்கான காரணங்களை மனப்பாடமாய் அறிந்தவர்கள்.
இன்னாரின் சாவுக்கு இன்னின்ன கேடுகளை
கிலோ கணக்கில் சந்தையில் விற்பதில் கைதேர்ந்தவர்கள்.
மனிதநேயம், சமூக அக்கறை, அறச்சீற்றம்,
என்று எத்தனை கிரீடங்களை கைவசப்படுத்திவிட முடிகிறது!
கொள்ளை லாபம்தான்!
வெள்ளையும் சொள்ளையுமாய் கடையில் அமர்ந்தபடி
வழிபோவோர் வருவோரையெல்லாம் ஆழாக்கில்
அளந்துபார்த்தல்
அப்படியொரு சுவாரசியமான பொழுதுபோக்கு.
ஒரு இறப்பைக்கூட துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தத்
தெரிந்தவர்கள்.
இறந்தவரின் மனைவி, மக்களுக்காக இரு சொட்டு முதலைக்கண்ணீர் வடித்து
திரும்பவும் கரித்துக்கொட்ட ஆரம்பிப்பார்கள்.
இறந்தவனைக் கண்டந்துண்டமாய் வெட்டி
கெட்டித்துப்போய்விடுவதற்கு முன்பாகவே பிணத்தின் குருதியை
ருசித்துப் பருகிக்கொண்டே.
மரணதண்டனை கூடாதென்பார்கள் _
வன்மக்கங்குகளை வாரியிறைத்தவாறே
அன்புசெய்வோம்; அனைவரையும் நேசிப்போம் என்பவர்களைப் பார்த்து
என்ன செய்வதென்று புரியாமல்
அங்கே நின்றுகொண்டிருக்கிறார்கள்
கள்ளமற்ற சின்னப்பிள்ளைகள் –
அன்பைக் கொள்ளைகொள்ளையாய்க் கொடுத்த அப்பன்
அசையாமல் மண்ணில் படுத்திருப்பதை
வெள்ளமென வழியும் கண்ணீரோடு பார்த்தபடி.

முப்பரிமாணக் கண்ணோட்டம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 முப்பரிமாணக் கண்ணோட்டம்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



இன்னார் சொல்வதால் அன்னாரைக் கொல்வதற்கு
அன்னார் hundred percent பாவியுமில்லை -
இன்னார் hapless அப்பாவியுமில்லை.
முதல் கல்லை எறிய முந்தும் கைகள் இங்கே இருபத்தியெட்டா இருநூற்றிப் பதினெட்டா?
மேலும், என் துப்பாக்கியிலிருப்பதோ ஒரேயொரு தோட்டா

தீரா ஆசை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 தீரா ஆசை

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

எல்லோர் பக்கத்திலும் நின்றபடி

நிழல்படம் எடுத்துக்கொள்கிறார்கள்.

காற்றும் நானுமா யொரு நிஜப்படம்

எடுத்துத்தரவேண்டும் யாரேனும்…..

Tuesday, March 4, 2025

அன்பே உருவாதலு'க்கான அதி எளிய வழி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

அன்பே உருவாதலு'க்கான
அதி எளிய வழி
- ‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
யார் என்ன எழுதினாலும் அநாயாசமாக ‘லைக்’கிட்டுத் தள்ளிக்கொண்டிருந்த கை ஒருநாள் சுளுக்கிக்கொண்டுவிட்டது.
அமிர்தாஞ்ஜன், டைகர் பாம், பிண்ட தைலம்
எதுவும் உதவிக்கு வரவில்லை.
அந்தக் கைக்குரியவருக்கு
அழுகையழுகையாய் வந்தது
ஆரேனும் தன்னை அன்பிலாக் காட்டான்,
சகமனிதவிரோதி,
மன்னிக்கத் தெரியாத மிருகம்,
அ- புரட்சியாளர்,
அசிங்கம்பிடித்த விருப்புவெறுப்புவாதி,
அநியாய சார்பாளர்,
அனுதினம் பாரபட்சம் பழகுபவர்
இன்னும் என்னென்னவோ எண்ணிவிடுவார்களே
இவருமவரும்
தெரிந்தவர்களும் தெரியாதவர்களும்
இருப்போரும் இல்லாதாரும்
கல்லாரும் கற்றாரும்
உள்ள விருப்புவெறுப்புக்கேற்ப
உற்றார் உறவினர் நட்பினர் விரோதிகள்
எல்லோரும் ….
என்ற கவலையில்
விறுவிறுவெனத் தலைசுற்றியது அவருக்கு.
மாற்றுக்கருத்திருந்தாலும் மறைத்து ’லைக்’ இட மறவாமலிருப்பதே
மகோன்னத மனிதப் பண்பு!
இடதுகையால் எழுதும் பழக்கத்தைக் கற்றுத்தராத
பள்ளிமீதும் கல்லூரி மீதும்
கடகடவென்று வசையை அள்ளியிறைக்கத்
தொடங்கிய மனதை
பிரயத்தனத்தோடு அடக்கிக்கொண்டார்.
அவருடைய ’லைக்’கிற்கு அப்பாலாகக்கூடாது அவையும்.
இத்தனை கரைபுரண்டோடும் அன்புநிறை
பத்தரைமாற்றுத்தங்க வித்தகரின்
இன்றைய லைக்குகளுக்காகக் காத்துக்கொண்டிருக்காமல்
தன்பாட்டில் இயங்கிக்கொண்டிருக்கிறது
ஃபேஸ்புக்
என்பதே அன்னாரின் இன்னாளுக்கான
ஆகப்பெரும் துக்கமாக……..

கவிதையின் விதிப்பயன் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவிதையின் விதிப்பயன்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

நீங்கள் மர்மம் என்றால் அது மர்மம்;
அதுவே இன்னொருவர் சொன்னால்
அதர்மம்.
மர்மமெனக்கோருணர்வென்றால்,
மனநிலையென்றால்
உங்களுக்கு அது கத்தி கபடா கொலை
துப்புத்துலக்கலாக
இருக்கக்கூடாதா என்ன?
உயிரின் ஊற்றுக்கண் ஆகப்பெரிய
மர்மமென்றால்
பர்மா நீரல்ல நிலமென்கிறீர்கள்!
கவிதையின் சர்வமும் நானே என்று
எத்தனை தன்னடக்கத்தோடு
கர்வங்கொள்கிறீர்கள்!
அதைக் கண்டு மலைத்துயர்ந்த
என் இருபுருவங்களும்
இன்னமும் இறங்கி இயல்புநிலைக்குத்
திரும்பியபாடில்லை.
கர்மம் கர்மம் _
இல்லையில்லை உங்களைச்
சொல்லவில்லை.
வர்மக்கலை பயின்ற நல்லறிவாளி நீங்கள்
நயத்தக்க வார்த்தைகளால்
வையத்தொடங்கினாலோ
நான்கைந்து வட்டுகள்
நிச்சயமாய் நகர்ந்துவிடும் முதுகெலும்பில்
நன்றாகவே அறிவேன்…
மற்றெல்லோரையும் முட்டாள் எனச்
செல்லமாகவும் சினந்தும் குட்டியும்
இட்டுக்கட்டியும்
தன்னைத்தானே அரிதரிதாமெனக் கட்டங்கட்டிக்
காட்டுவோர்
பலரையும்கூட பரிச்சயமுண்டெனக்கு
என்பதுதான் பிரச்சினையே.
கர்மவினையென்று கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே
நான் குறிப்பிடும் கர்மமும் அதுவேயென்று
எங்குவேண்டுமானாலும்
துண்டுபோட்டுத் தாண்டிவிடுகிறேன்.
பயன்படுத்திய பழையது போதுமா?
புதிதாக வாங்கவேண்டுமா?
நிர்மலமும் மலமும் வேறுவேறென்று
உறுதியாகத் தெரியுமென்றாலும்
கர்மமும் கருமமும் ஒன்றா அல்லவா என்று
சொல்லமுடியாதிருக்கிறது.
துர்மரணமோ கல்யாணச்சாவோ _
இருத்தலும் இருபதுவரிக் கவிதை
இயற்றலும்..
திருத்தமான இருபதுக்கும்
குறியீடாகும் இருபதுக்குமிடையேயான
பிரிகோடுள்ள வரை _
எவர் மறுத்தால் என்ன?
அவரவர் மர்மம் அவரவருக்கு.