LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, February 13, 2025

க.நா.சு என்கிற படைப்பிலக்கியவாதி – விமர்சகர் - மனிதர்

 க.நா.சு என்கிற

படைப்பிலக்கியவாதி – விமர்சகர் - மனிதர்

லதா ராமகிருஷ்ணன்
(*10.2.2019 தேதியிட்ட சமீபத்திய திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)
( “இலக்கிய விமரிசனத்தால் ஏதோ அளவுகோல்களை நிச்சயம் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று நினைப்பதும் தவறு. இலக்கியத்தில் எந்தத் துறையிலுமே ஒரே ஒரு விதிதான் உண்டு. அந்த விதி என்னவென்றால், எப்படிப்பட்ட விதியும் இலக்கியாசிரியன் எவனையும் கட்டுப்படுத்தாது என்கிற விதிதான் அடிப்படையான விதி. இலக்கிய விமரிசனத்தின் முதல் நோக்கு இந்த விதியை இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவர்கள் எல்லோருக்கும் எடுத்துச்சொல்வதுதான் - - க.நா.சு)

க.நா.சு – [கந்தாடை சுப்ரமணியம்]
[ ஜனவரி 31, 1912 -டிசம்பர் 18, 1988]

[இந்தச் சிறு கட்டுரையை நான் இப்போது எழுதுவதற்குக் காரணம் க.நா.சுவின் பிறந்தநாள் ஜனவரி 31(1912) என்பதா? இல்லை. இலக்கிய விமர்சகராகத் தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்பவர்கள், விமர்சனம் என்ற பெயரில் சக-படைப்பாளிகளைக் கேவலப்படுத்துபவர்கள் க.நா.சு பெயரையும் அடிக்கடி மேற்கோள் காட்டுவதால் க.நா.சுவின் விமர்சன அணுகுமுறையே இந்தவிதமாகத்தான் அமைந்திருந்தது என்று யாரும், குறிப்பாக இளைய தலைமுறையினர் எண்ணிவிட லாகாது என்பதற்காகவே இதை எழுதத் தோன்றியது].

எழுத்தாளர் க.நா.சுவின் நூற்றாண்டுவிழா என்று நினைக்கிறேன். சென்னை, மயிலையில் ஸ்ரீராம் அறக்கட்டளை –விருட்சம் சார்பாக ஒரு கூட்டம் நடந்தது. நானும் பேசினேன்.
க.நா.சுவின் வாழ்நாளில் கடைசி ஒன்றரை இரண்டு வருடங்கள் – அவர் சென்னைக்கு வந்துசேர்ந்த பின் தன எழுதுவதைப் பிரதியெடுக்க உதவிக்கு ஆட்கள் தேவை என்பதாக அவர் கூறியிருந்ததைப் படித்து ‘சாகித்ய அகாதெமி விருது வாங்கியவர் நீங்கள். உங்களுக்கு உதவ எத்தனையோ பேர் இருப்பார்கள். எனக்கும் அந்த வாய்ப்பு கிடைக்குமானால் அதை மிகப்பெரிய கௌரவமாகக் கருதுவேன்’ என்றெல்லாம் நான் எழுதியனுப்பிய தபால் அட்டைக்கு ‘அப்படியெல்லாம் யாரும் உதவிக்கு இல்லை. நீங்கள் வரலாம். ஆனால், சன்மானம் எதுவும் தர இயலாது’ என்பதாக சுருக்கமாக பதில் வந்தது. அப்போது நான் மந்தைவெளியில் இருந்தேன். அவர் மயிலாப்பூர் கோயில் பக்கம். அதன்பின் அவருடைய இறப்புவரை தினமும் காலையில் இரவுப்பணி முடிந்து வீடு செல்லும் வழியில் அவர் வீட்டுக்குச் செல்வது வழக்கமாகியது. அவர் சொல்லச் சொல்ல எழுதுவதும், அல்லது அவருடைய எழுத்தாக் கங்களைப் பிரதியெடுத்துக் கொடுப்பதும் வழக்கமாகியது. அவருடைய கையெழுத்து சிற்றெறும்புகள் ஊர்ந்துசெல்வதைப்போல் சின்னச்சின்னதாக அடித்தல் திருத்தல் இல்லாமல் இருக்கும். அப்போது தினமணிக்கதிரில் பணிபுரிந்துகொண்டிருந்த தேவகி குருநாத் நான், இன்னும் ஒருசிலரால் மட்டுமே அவற்றைத் தெளிவாக வாசிக்க முடியும்.

இந்த விஷயங்களையும், க.நா.சுவுக்கு புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் கௌரவப் பேராசிரியராகப் பணி கிடைத்தபோது அவர் கேட்ட ஊதியமே 2000 ரூபாய் தான். அதற்கடுத்து அந்தப் பதவியில் அமர்ந்தவர் 10000போல் வாங்கினார்! க.நா.சுவின் தேவைகள் மிகவும் குறைவு. மிகவும் எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் அவர். தன்னுடைய தந்தையாரின் திதியன்று லஸ் கார்னரில் இருக்கும் சுகி நிவாசுக்கு அவருடைய மனைவியையும், கூடவே என்னையும் அழைத்துச்சென்று நல்ல சாப்பாடு வாங்கிக் கொடுத்தார். சாப்பிட்ட பிறகு வெகு சாதாரணமாக அன்று அவருடைய தந்தையாரின் திதி என்ற விவரத்தைத் தெரிவித்தார். அவரிருந்த தெருவழியாக சாமி ஊர்வலம் வரும்போது, ‘நான் போய் பார்க்கவில்லையே என்று சாமி என்னைப் பார்க்க வருகிறார்’ என்று வேடிக்கையாகச் சொல்வார்.’ என்பதையெல்லாம் நான் என் உரையில் குறிப்பிட் டேன்.

கூட்டம் முடிந்து திரும்பும்போது எழுத்தாளர் பிரபஞ்சன் இதை யெல்லாம் நீங்கள் கட்டுரையாக எழுதலாமே லதா” என்றார். இதுநாள் வரை நான் எழுதவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, நினைவுகளை நாம் எழுதும் போது அதில் ஒன்றிரண்டு இடைச்செருகல்கள் சேர்ந்துவிடக் கூடும். இரண்டு, ‘இந்தப் பெரிய எழுத்தாளரை எனக்குத் தெரியும்’ ‘அந்தப் பெரிய பிரபலத்தை எனக்குத் தெரியும் என்றெல்லாம் ‘ஃபிலிம்’ காட்டுவது எனக்கு ஒத்துவராத விஷயம்.

ஆனால் இன்று க.நா.சு என்ற மனிதரைப் பற்றி, படைப்பிலக்கிய வாதி - விமர்சகரைப் பற்றி எழுதவேண்டிய தேவையை உணர்கிறேன். எனவேதான் இந்தச் சிறிய கட்டுரை – எழுதுவதற்கு இன்னும் நிறையவே உள்ளது).

ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் பழகுவதற்கு எளிய மனிதர் க.நா.சு. எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். வன்மமான பேச்சு அவரி டமிருந்து வெளிப்பட்ட தில்லை. குரு-சிஷ்ய பாவத்தில் அவர் யாரிடமும் அளவளாவியதில்லை. அவ்வமயம் வந்துகொண் டிருந்த ஞானரதம் இலக்கிய இதழுக்குத் தான் எழுதியவற்றை என்னிடம் கொடுத்து படிக்கச் சொல்லியதுண்டு.

அதிகாரத்திற்கும் அலட்டலுக்கும் அவர் என்றுமே அடிபணிந்த தில்லை. தன்னை ஒரு இலக்கிய-விமர்சன அதிகாரபீடமாகவும் அவர் நிறுவ முயன்றதேயில்லை. சக எழுத்தாளர்களுடைய படைப்புகள் குறித்த அவருடைய விமர்சனத்தில் தனிமனிதத் தாக்குதலோ, மதிப்பழிப்போ இருக்காது. முகமறியாத எத்த னையோ இளம் எழுத்தாளர் களைப் பாராட்டி எழுதியிருக்கிறார்.

அவர் கவிஞர், புதின எழுத்தாளர், சிறுகதையாசிரியர் – கூடவே விமர்சகரும். அவரிடத்திலிருந்த படைப்பிலக்கியவாதி விமர்ச கரின் எல்லை குறித்த கறாரான பார்வையைக் கொண்டிருந்தார். விமர்சனத்தின் தேவையை வலியுறுத்தியதைப் போலவே விமர்சகர்கள் எவ்வாறு இயங்கவேண்டும் என்ற தெளிவான பார்வையையும் கொண்டிருந்தார். இரு விமர்சகர்கள் என்ற தலைப்பிட்ட அவருடைய கவிதை இது: [மயன் என்ற பெயரில்தான் அவருடைய பெரும்பாலான கவிதைகளை எழுதியிருக்கிறார்].
இது க.நா.சுவின் கவிதை:

இரு விமர்சகர்கள்
இவர்கள் இரண்டுபேருமே விமர்சகர்கள்தான்
ஒருவன் ஏதோ புஸ்தகத்தைக் குறிப்பிட்டு இது
மிகவும் நன்றாக இருக்கிறது – ஒவ்வொருவனும்
படித்துத்தான் ஆக வேண்டும் என்று சொல்லி
என் பொறுப்புச்சுமையை அதிகரித்துவிடுகிறான்
மற்றவன் அதே புஸ்தகத்தை அலசி அலசித்
தன் கெட்டிக்காரத்தனம் புலப்படப் பலவும்
எழுதி நேரம் போய்விட்டது; அவன் விமர்சனத்தைப்
படித்ததே போதும்; புஸ்தகத்தைப் படிக்க வேண்டிய
அவசியமில்லை என்று என் பொறுப்பைக் குறைத்து
விடுகிறான். இருவரும் விமர்சகர்கள் தான்!
(க.நா.சு கவிதைகள் சந்தியா பதிப்பக வெளியீடு, 2002, பக்கம் 46]

விமர்சனத்தின் தேவையைப் பற்றி தெளிவான பார்வை கொண்டிருந்தது போலவே விமர்சகர்களின் தகுதி, அணுகுமுறைகள் குறித்தும் தீர்மானமான கருத்துகளைக் கொண்டிருந் தார். அவருடைய விமர்சனக்கலை நூலில் இவ்வாறு கூறுகிறார்:

“குறிப்பிட்ட ஒரு இலக்கியத்தின் தரம் பூராவையும் இலக்கிய விமர்சனம் மூலம் எடுத்துச்சொல்லிவிட முடியுமா என்று கேட்டால், முடியாது என்றுதான் பதில் தரவேண்டும். அதனால்தான் ஷேக்ஸ்பியரை யும், டாண்டேயையும் பற்றி இத்தனை நூல்கள் தோன்றியும் (பள்ளி நூல்களைப் பற்றி இப்போது விவாதிக்கவேண்டாம்) இன்னும் பல நூல்கள் தோன்றிக்கொண்டேயிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட சிறுகதையையோ, கவிதையையோ, நாவலையோ அலசிப் பார்த்து இதிலுள்ள இலக்கிய நயம், அம்சம், தரம் எல்லாம் இவ்வளவுதான் என்று எடைபோட்டுச் சொல்லிவிட முடியாது. ஆனால், இன்னின்ன நயங்கள், தரங்கள், அம்சங்கள் இப்படியிப்படியாக ஏற்பட்டிருக்கின்றன என்று சுட்டிக்காட்ட முடியும். இலக்கிய உருவத்தையும், அந்த உருவத்தை நமக்கு நிர்மாணித்துத் தருகிற வார்த்தைகளையும், ஆசிரியரின் கருத்துகளையும், சூழ்நிலையையும், அதனால் எழுந்த கோயிலையும், குச்சையும், இலக்கிய விமரிசனம் நல்ல வாசகனுக்குச் சுட்டிக்காட்ட முயலுகிறது. இந்த நூலின் நோக்கம் இது என்று சொல்லும்போதே , வார்த்தைகளால் எழுந்த இதன் நோக்கம் பலதரப்பட்டது, இதிலே பல கோணங்களும் திருப்பங்களும் தொனிக்கின்றன என்பதையும் காட்ட இலக்கிய விமரிசனம் பயன்படுகிறது. இதோ கதவு, திறந்துகொண்டு உள்ளே போகலாம் என்றோ; இதோ மலர். நுகரலாம் என்றோ; இதோ பாதை, நடக்கலாம் என்றோ நல்ல வாசகனுக்குச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவதுதான் இலக்கிய விமர்சகன் செய்யவேண்டிய காரியம் என்று நான் என்ணுகிறேன். கதாகாலட்சேபக் காரர்கள், ஒரு வரிக் கவிதைக்கு எட்டுப் பக்கப் பிரசங்கம் செய்பவர்கள் செய்யவேண்டிய காரியம் அல்ல இலக்கிய விமரிசகன் செய்யவேண்டிய காரியம். நல்ல கவிதையை(சிறுகதையையோ நாவலையோ) சுயம் கவிதையாக அப்படியே தரவேண்டுமே தவிர அதிலே பட்டணத்துப் பால்காரனாகத் தண்ணீர் ஊற்றிப் பெருக்கித் தரக்கூடாது இலக்கிய விமர்சனம் என்பது வெளிப்படை.

”கம்பனுடைய காவியத்தைப் பற்றி விமரிசனம் செய்ய முன்வருபவன், கம்பனுடைய கவிதையை முக்கியமாகக் கருதி விமரிசனம் செய்யவேண்டுமே தவிர ‘என் கெட்டிக்காரத்தனத்தைப் பார், என் அறிவைப் பார் என்றெல்லாம் கம்பன் கவிதைக்குப் புறம்பானதை, இல்லாததைச் சொல்லி கதாகாலட்சேபம் செய்வதை இலக்கிய விமரிசனம் என்று சொல்லமுடியாது.

“ஆனால் அதற்காக இலக்கிய விமரிசகன் அறிவற்ற ஒரு சூனியத்தில் நிற்கிறான் என்பதல்ல. அவன் அறிவெல்லாம், அவன் திறனெல்லாம் அவன் படித்த படிப்பெல்லாம் அவன் விமர்சனம் செய்யும் நூலுக்குள் அடங்கி நிற்கின்றன. அதை மீறிய எதையும் அவன் கவனிப்பதேயில்லை. தாட்சண்யம், பரிவு, அநுதாபம், பெரியவர், சின்னவர், காலத்தால் முந்தியவர், பிந்தியவர் என்பதெல்லாம் இலக்கியத்துக்கும் விமர்சனத்துக்கும் புறம்பான அப்பாற்பட்ட விஷயங்கள்”
என்கிறார். [விமரிசனக் கலை – க.நா.சு]

ஆக, விமர்சகர் என்பவருக்கும் அடிப்படைத் தரநிர்ணயங்கள் இருக்கின்றன. ’காலதேவனுடைய நிர்தாட்சண்யத்துடன் பரிவு என்பதே காட்டாமல்தான் இலக்கிய விமரிசனம் செய்தாக வேண்டும்’ என்று கறாராகக் கூறும் க.நா.சு, “எதையும் அநுதாபத் தோடு பார்க்கவேண்டும் என்று சொல்கிறார்கள், இலக்கியத்தில் அநுதாபம் தேவையில்லை. எந்த இலக்கியாசிரியனுக்கும் யாருடைய அநுதாபமும், ஊக்குவித்தலும் தேவையில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது’ என்றும் கூறத் தவறவில்லை! விமர்சனம் செய்வது என் பிறப்புரிமை என்று கூறுபவர் ‘ ஒரு சிட்டுக்குருவியின் விழுகையில்கூடக் கடவுளின் கையைக் காண முடியும் என்று ஹாம்லட் சொல்லுவதாக ஷேக்ஸ்பியர் எழுதுகிறார். எல்லாக் கவிதைகளின் வரிகளிலும் கடவுளின் கையைக் காண முடியும்’ என்றும் கூறத் தவறவில்லை.
(கலை நுட்பங்கள் வேள் பதிப்பகம் வெளியீடு, டிசம்பர் 1988, பக்128)
கலைநுட்பங்கள் என்ற அவருடைய கட்டுரைத் தொகுப்பில், “கடைசியாக, இலக்கியத்துக்கு எதிராகக் கடைசி ஆய்தமாக உபயோகப்படுத்தக்கூடியது ஒன்றுண்டு. இந்த ஜனநாயக யுகத்தில் யாரோ ஆயிரம் இரண்டாயிரம் பேர்வழிகள் ஆஹா, ஊஹூ என்று சொல்லிக்கொண்டிருக்கிற நூல்களை இலக்கியம் என்று எல்லோர் தலையிலும் இலக்கியவாதிகள் கட்டுகிறார்கள். எழுதுவதெல்லாம் இலக்கியம் ஆகாது என்கிறார்கள். ஏதோ குறிப்பிட்ட சில நூல்கள் தான் இலக்கியம் என்கிறார்கள். விமர்சனம், காலம் இரண்டுமாகச் சேர்ந்துகொண்டு இன்று எழுதப்படுவதில் பெரும்பகுதியையும் அழித்துவிடுகின்றன எனவும் (பக் – 44).இப்படிப்பட்ட காரியங்களால் இலக்கியப்படிப்பு தேவையா என்கிற கேள்விக்கு தேவையில்லை என்று பதில் சொல்லவே எங்களுக்குத் தோன்றுகிறது என்று சொல்பவர்கள் நம்மிடையே இருக்கலாம்’ என்று சுட்டிக்காட்டுகிறார். ‘இலக்கியம் என்பதை எல்லோரும் படிப்பதில்லை. சிலர்தான் படிக்கிறார்கள், அதிலும் மிகச்சிலரே தங்களிடமிருக்கும் ஒரு தன்மையால் பிறரிடம் காணப்படாத ஒரு குணாதிசயத்தினால் சிருஷ்டிக் கிறார்கள். இலக்கியம், கலை என்பதெல்லாமே ஒரு குறுகிய வட்டத்திற்குள் தான் பயிலப்படுகிற மாதிரி தோன்றுகிறது. அப்படிப்பட்ட கலைகள் இலக்கியங்க ளைத்தான் நாம் சிரமப்பட்டு மூவாயிரம் ஆண்டு களாக வளர்த்துவந்திருக்கிறோம்” என்று அவர் கூறுவதை ஒருவகையில் ஏற்றுக்கொள்ள முடிந்தாலும், ‘எழுதுவதெல்லாம் இலக்கியம் ஆகாது’ என்ற கூற்றின் உண்மையை நாம் ஏற்றுக்கொண்டாலும் இன்னொருவகையில் அப்படிச் சொல்பவர்களின் விமர்சனத் தகுதியையும், விமர்சன நேர்மையையும், பாரபட்சத்தன்மை யையும் நாம் அவதானித்துப் பார்க்கவேண்டிய தேவையும் உள்ளது. இத்தகைய இலக்கியவாதிகள் யார் என்பதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியது அவசியம்.

அகராதி என்ற தலைப்பிட்ட அவருடைய கவிதை இது:
நான் சொல்லக்கூடிய
வார்த்தைகள் எல்லாம்
இதோ இந்த அகராதியில்
அடங்கியுள்ளன.
இந்த அகராதியை எடுத்து
உங்கள் மேல் வீசி எறிந்தால்
என்னை ஒரு கவி என்று
ஏற்றுக்கொள்வீர்களா?
நான் செய்யக்கூடிய காரியங்கள்
எல்லாமே இந்தப் பத்து
விரல்களில் அடக்கம்.
என் விரல்களைக் கண்டு
நான் காரியவாதி என்று
கண்டுகொள்வீர்களா?

அவருடைய கட்டுரைகளையெல்லாம் படிக்கிறபோது வெளியிலிருந்து பெறும் விமர்சனம் என்பதைவிட ஒரு வாசகர் தன் ஆழ்ந்த வாசிப்பின் மூலம் தானேயொரு தரமான விமர்சகராக மாறுவதே சிறந்தது என்ற கருத்துடையவராக க.நா.சு இருந்தார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

விளையாடும் பூனைக்குட்டி - க.நா.சுவின் கவிதையை முன்னிறுத்தி சில அவதானிப்புகள் - லதா ராமகிருஷ்ணன்

 விளையாடும் பூனைக்குட்டி

க.நா.சு( ‘எழுத்து’ – ஏப்ரல் 1959)
_ லதா ராமகிருஷ்ணன்

ஒரு கவிதை கவி மனதில் எப்படி உருவாகிறது? மனதிலி ருந்து தாளில் வரிகளாகும் போக்கில் அதில் நேரும் மாற்றங்கள் என்னென்ன? அவற்றில் பிரக்ஞாபூர்வமாக நேரும் மாற்றங்கள், கவியறியாமல் நேரும் மாற்றங்கள் என்னென்ன? இதையெல்லாம் தன் ஒரு கவிதையை முன்வைத்து கவிஞர்கள் எழுதினால் உண்மையான கவிதையார்வலர்களுக்கு (கவிஞர்களும், வாசகர்களே) அவற்றிலிருந்து நிறைய வழிகள் கவிதைக்குள் கவியுலகில் நுழைய ஏதுவாய் புலப்படலாம்.
ஒரு கவிதையை கவி என்ன நினைத்து எழுதினாரோ அதேயளவாய் ஒரு வாசகர் உள்வாங்குவது சாத்தியமா? அது அவசியமா? ஆனால். ஒரு கவிதை அது என்ன நினைத்து எழுதப்பட்டதோ அதற்கு நேர்மாறான அர்த்தத்தை ஒரு வாசகர் மனதில் தந்தால் அது கவியின் தோல்வி என்றோ வாசகரின் தோல்வி என்றோ கொள்ளவேண்டுமா?
கவிதையின் அத்தனை வார்த்தைகளும், வரிகளும் ஆற்றொழுக்காய் முற்றான ஒற்றை அர்த்தத்தை தரவேண்டியது அவசியமா? அகல்விரிவான விவாதங்களுக்கு உள்ளான, உள்ளாகிவரும் கேள்விகள் இவை.
ஒரு கவிதை தனக்குப் புரியவில்லை என்பதால் அது கவிதையேயில்லை என்று சொல்பவர்களிடம் நாம் விவாதித்துப் பயனில்லை; விவாதிக்கவேண்டி யதில்லை. ஆனால், உண்மையான ஆர்வத்தோடு, கவிதை புரியவில்லையே என்று வருத்தப்படும் வாசகர்களை அப்படி கடந்துசென்றுவிட இயலாது; அப்படிச் செய்யக்கூடாது.
இந்த நோக்கில் எனக்குப் புரியும் அளவில் சில பிடித்த கவிதைகளைத் தந்து அதில் எனக்குக் கிடைத்த அர்த்தத்தை தரத் தோன்றுகிறது.
முதலில் ‘விளையாடும் பூனைக்குட்டி’ என்ற தலைப்பிலான கவிதை:
க.நா.சு ( ‘எழுத்து’, ஏப்ரல் 1959(க.நா.சு கவிதைகள் (சந்தியா பதிப்பகம் – 2002) தொகுப்பிலிருந்து
விளையாடும் பூனைக்குட்டி
மல்லாந்து படுத்துக் கால்நீட்டிக்
குறுக்
கிக்கயிற்றின் துணியைப் பல்லால்கடித் திழுத்துத்
தாவி எழுந்து வெள்ளைப்
பந்தாக
உருண்டோடி கூர்நகம் காட்டி
மெலிந்து சிவந்த நாக்கால்
அழுக்குத் திரட்டித் தின்னும்
பூனைக்குட்டி _
என்னோடு விளையாடத் தயாராக
வந்து நின்று, என் கால்களில் உடம்பைச்
சூடாகத் தேய்த்துக்கொண்டு நிமிர்ந்து
அறிவு ததும்பும் கண்களுடன் என்னைப்
பார்க்கிறது. அப்போது நான்
சிலப்
பதிகாரம் படித்திருந்து விட்டேன்.
பின்னர்
நான் அதை விளையாட
‘மியாவ் மியாவ் ஓடி வா’
என்று கூப்பிடும் போது நின்று
ஒய்யாரமாக ஒரு பார்வையை என்
மேல் வீசிவிட்டு மீன் நாற்றம்
அடிக்கும் கொட்டாவி விட்டுக்கொண்டே
அடுப்படியிலே போய்ச் சுருண்டு படுத்துக்கொள்கிறது
பூனைக்குட்டி.
கவி பூனையைப் பற்றித்தான், பூனையின் இயல்பை மட்டும்தான் எழுதினாரா? அல்லது, பூனை ஒரு குறியீடா? கண்ணில் பட்டு மனதைக் கவர்ந்த ஒரு காட்சியைக் கவிதையாக்குதல் நடப்பதுதான். க.நா.சுவின் ‘கூஃபி’ என்ற அவருடைய வளர்ப்புநாயைப் பற்றிய கவிதை மிகவும் பேசப்பட்ட கவிதை.
ஆனால், இந்தக் கவிதையை வெறும் காட்சிப்படுத்தலாக மட்டுமே அந்தக் கவி எழுதியிருப்பாரா?
ஒரு வாசகராக எனக்கு இந்தக் கவிதை தரும் அர்த்தாக்கங்கள் அனைத்தும் கவி வழியானதா? என் மனம் வழியானதா?
கவிதை காட்சிப்படுத்தும் பூனைக்குட்டி மல்லாக்கப் படுப்பதும், காலை நீட்டுவதும், கயிறு நுனியை இழுப்பதும் – எல்லாமே அது இயல்பாகச் செய்வதா? அல்லது கவிதைக்குள்ளிருப்பவரின் கவனத்தைக் கவரச் செய்கிறதா?
அப்படி கவனத்தை எதற்குக் கவரவேண்டும்? அன்போடு முதுகை வருடித்தருவார் என்ற எதிர்பார்ப்பிலா? குடிக்கப் பால் தருவார் என்பதற்கா?
அறிவு ததும்பும் கண்களோடு பூனை பார்ப்பதாகச் சொல்லும் கவி அப்போது நான் சிலப்பதிகாரம் படித்திருந்துவிட்டேன் என்கிறார். இதில் சிலப்பதிகாரம் என்ற நூலின் பெயர் ஒரு நூல் என்ற அளவில் இடம்பெறுகிறதா? அல்லது, குறிப்பாக எதையேனும் உணர்த்துகிறதா?
அறிவுததும்பும் கண்களைக் கொண்ட பூனை என்ற விவரிப்பு எனக்கு சென்னையில் வெள்ளம் வந்தபோது ஐந்துநாட்கள் முதல் மாடி நெருங்கு மளவு வந்துவிட்ட நீரைப் பார்த்துக்கொண்டே மொட்டைமாடிக்குச் செல்லும் படிக்கட்டுகளில் இருந்தவண்ணம், கீழே தரைபெயர்ந்தால் என்னாவது என்று திரும்பத்திரும்ப எழும் நினைப்பை வலுக்கட்டாயமாகத் தள்ளிவிட்டபடி நின்றுகொண்டிருந்ததை நினைவுபடுத்துகிறது.
அதுவரை பூனையைப் பற்றி நான் பெரிதாக நினைத்ததில்லை. ஆனால், அந்த வெள்ளத்தில் ஒரு பூனை தன்னந்தனியாகத் தன்னைக் காத்துக் கொள்ளப் போராடிக்கொண்டிருந்ததைப் பார்த்தோம். வெள்ளத்தின் உயரம் ஏற ஏற அது ஜன்னல், ஜன்னலின் மேற்புறம் இன்னும் மேலே என்று தாவிக்கொண்டே யிருந்தது.
வெள்ளத்தில் அடித்துக்கொண்டுவரும் கட்டை, பலகையைப் பார்த்தால் அது பாதுகாப்பானதா என்று ஒற்றைக்காலை வைத்துப் பார்த்து பின் வேண்டா மென்று முடிவெடுக்கும். காப்பாற்ற வந்தவர்களை யும் அது நம்பவில்லை. இறுதியில், கீழே தரைக்குப் பத்தடி உயரத்தில் இருந்தது ஒரே பாய்ச்சலில் ஒரு பெரிய மரத்தின் மீதும் அங்கிருந்து மொட்டைமாடிக் கும் குதித்தது. மூக்கில் ரத்தம். எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் ஒரு சிறுமி இருந்தாள். நாங்கள் மருந்து போட்டோம். "பூனைக்கு எத்தனை புத்தி பார்!" என்றால் ‘என் ஃப்ரெண்ட்’ ஆயிற்றே’ என்று முகத்தில் மகிழ்ச்சி பளபளக்கச் சொல்வாள்.
அதன்பின் வேறு வாடகைவீட்டுக்குப் போகும் வரை அதை மதிப்பார்ந்த உறவாக பாவித்து சாப்பாடு, பால் வைப்பது வழக்கமாகியது. உடல்நிலை சரியாகி, ஊரில் நீரும் வடிந்த பிறகு பூனை வரும், சாப்பிடும், சற்று நேரம் மாடிப்படிக்கட்டில் தூங்கும், பின் போய்விடும்.
அன்பு என்ற பெயரில் ‘என்னைக் கொஞ்சு என்னைக் கொஞ்சு’ என்று கெஞ்சாது. ஒரு சரிநிகர்சமானமான மனப்பாங்கில் அது நடந்துகொண்டது நெகிழ வைத்தது. வீட்டை காலிசெய்தால் அது என்னாகும் என்றெல்லாம் மனம் அலைபாய்ந்தது. அதற்கு என்ன தெரிந்ததோ, நாங்கள் காலிசெய்வதற்கு மூன்று நாட்கள் முன்பிருந்து அது எங்கள் வீட்டுக்கு வருவது நின்றுவிட்டது.
க.நா.சுவின் இந்தப் பூனைக்குட்டி அதையெல்லாம் நினைவுக்குக் கொண்டுவருகிறது. ஒரு கவிதை நமக்குப் பிடித்துப்போவதற்கான காரணங்களில் ஒன்று இந்தவிதமான association of ideas என்று சொல்லலாம்.
ஆனால், கவிதையின் மையப்புள்ளி எது? கவிதைக்குள்ளிருக்கும் நபர் சாவகாசமாய்ப் படித்து முடித்து தன் கவனத்தை பூனைமீது திருப்பும்போது அது தனக்கான இரையைத் தேடிக்கொண்டு(மீன் நாற்றம் அடிக்கும் கொட்டாவி விட்டுக்கொண்டே) உண்டுமுடித்து அடுப்படியிலே போய்ச் சுருண்டு படுத்துக்கொண்டுவிடுகிறது. அப்படியென்றால் அந்தப் பூனைக்குட்டி அவரிடம் வந்தது சாப்பாட்டுக் காகவா? அது அவரோடு விளையாடத் தயாராக இருந்ததே? அறிவு ததும்பும் கண்களோடு அவரைப் பார்த்ததே! அவருடைய கால்களில் உடம்பைச் சூடாகத் தேய்த்துக் கொண்டதே!
’பூனைக்குட்டியாய் காலையே சுத்திக்கொண்டி ருக்காதே’ என்று வேலையிலிருக்கும் தாய் தன் கவனத்தை ஈர்க்க முயலும் குழந்தையிடம் சொல்லக் கேட்டிருக்கிறேன். கணவன் அல்லது மனைவி தன் இணை குறித்து மூன்றாமவரிடம் வேடிக்கையாய் முன்வைக்கும் சில விமர்சனங்கள் அந்த இணையை எத்தனை குன்றிப்போகச் செய்யும் என்பதையும் நாம் பார்த்திருக்கலாம்.
பக்கத்தில் இருப்பதுதானே – தன்னுடையதுதானே என்று பாராமுகமாய் இருந்துவிட்டால் பின் எந்த அன்பும் அதேயளவாக இருக்காதுபோய்விடும். காலைச் சுற்றிவரும் பூனைக்குட்டி கூட, ஒரு கட்டத்திற்குப் பின் தன் பாட்டில் சென்றுவிடும். தனக்கான இரையைத் தேடக் கற்றுக்கொண்டுவிடும்.
ஏதொன்றையும் நாம் உண்மையிலேயே மதித்தால் அது எதுவாக இருந்தாலும், யாராக இருந்தாலும் உரிய கவனம் தந்து, கவனிப்பு தந்து நடத்தவேண்டியது / நடக்கவேண்டியது அவசியம்.
உங்கள் அன்புக்குரியவரை நேசித்தால் மட்டும் போதாது. அவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள். அவர்களிடம் அவர்களை நீங்கள் பொருட்படுத்து வதை வெளிப்படுத்துங்கள்; அவர்கள் உங்களுக்கு முக்கியம் என்பதைப் புலப்படுத்துங்கள். தொலைக் காட்சி நிகழ்ச்சி பாணியில், குதித்துக் கூச்சல் போட்டு அல்ல. அன்பைத் தெரிவிக்க வழிகளா இல்லை?
கணவனோ, காதலியோ, தாயோ, நண்பரோ, பிள்ளையோ - Take it for granted ஆக உங்கள் அன்பிற்குரியவரை பாவிக்காதீர்கள், நடத்தாதீர்கள். மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்கக்குழையும் விருந்து என்றார் வள்ளுவர். விருந்தினரே அப்படியென்றால் நெருங்கிய உறவு உங்கள் பாராமுகத்தால் எத்தனை காயப்பட்டுப் போவார்கள்? நம்மைப் பிறர் அப்படி நடத்தினால் நம் மனம் எத்தனை உள்ளாழ வலியை உணரும்?
க.நா.சுவின் பூனைக்குட்டி கவிதையைப் படிக்கும்போதெல்லாம் இந்தவிதமான என்ணங்கள் தவறாமல் ஏற்படும். நாளை மறுநாள் Valentine’s Day. க.நா.சுவின் இந்தக் கவிதையிலுள்ள பூனைக் குட்டியை நினைவில் கொள்வோம். தவறவிடும் தருணங்கள் திரும்பக் கிடைக்காது என்ற புரிதலோடு வாழ்க்கையை, உறவுகளை அணுகப் பழகுவோம்.

All reactions:
இயற்கை, Sivarasa Karunakaran and 7 others

துளிஞானம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

                                                 துளிஞானம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
குறையென்றால் குறைக்கவும்
கூட்டென்றால் கூட்டவும்
கைவசப்படவில்லை
காலமும்
கவிதையும்.






சிறுமிகளின் இரட்டைச்சடையும் குதிரைவாலும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

சிறுமிகளின் இரட்டைச்சடையும் குதிரைவாலும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



குட்டிப்பெண்ணுக்கு அவளுடைய அம்மா எப்போதுமே அத்தனை இறுக்கமாக இரட்டைச்சடை பின்னிவிடுவாள்
காதுகளின் பின்புறமும் பிடரியிலும் நெற்றிப்பொட்டுகளிலும் வலி தெறித்தெழும்.
தாளமுடியாமல் சிணுங்கினால் நறுக்கென்று குட்டுவிழும்.
நடுமண்டையும் சேர்ந்து வலிக்கும்.
அல்லது குதிரைவால்.
கோடையில் கசகசக்கும்.
ஆனால் அம்மாவுக்குப் பெண் நாகரீகமாக இருக்கவேண்டும்.
அதாவது, அவர் வகுத்த நாகரீக வரம்பெல்லைக்
குட்பட்ட அளவில்
அவர் வகுத்தது அம்மம்மா வகுத்திருந்ததில் பாதி
அச்சு அசலாகவும் பாதி புறந்தள்ளப்பட்டு
திரிந்து உருமாறியதாகவும்.
பள்ளிக்குச் சென்றபின் கூந்தலை அவிழ்த்துவிட்டுக்கொள்ளலாமென்றால்
வகுப்பில் எல்லோருமே விறைத்துக்கட்டிய பின்னல்களும் அல்லது கசகசக்கும் குதிரைவால்களுமாயிருக்க
பாடமெடுக்கும் கைகளில் இருக்கும் இல்லா
திருக்கும் பிரம்புகளின்
நீள அகலம் நினைவில் பேயாகத் தலை
விரித்தாடும்.
அன்று அப்படியொரு தலைவலி வந்தபோது
அம்மா அலறியடித்துக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றாள்.
மருத்துவர் ‘அறிவுகெட்டத்தனமா இத்தனை இறுக்கமாகப் பின்னியிருக்கிறீர்களே – நரம்புகளே அறுந்துவிடுமளவு?’ என்று கோபமாகக் கேட்டபோது அன்பு அம்மாவின் முகம் துவண்டுபோவதைக் காணப்பொறுக்காத சிறுமி
’ அம்மாவை ஏன் திட்டுகிறீர்கள் – இப்படிப் பின்னுவதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது’ என்றாள்.
‘அறிவுகெட்டத்தனமா’ என்று மருத்துவர்
கூறியிருக்கத் தேவையில்லை’.
யாகாவாராயினும் நாகாக்க.
மருத்துவர் சொன்னது அவளுடைய மீட்சிக்கான தருணம் என்று அந்தச் சிறுமிக்குப் புரிந்திருக்க வழியில்லை…
ஓர் அந்நியர் அன்பு அம்மாவை முட்டாளென்று திட்டக்கேட்டு முட்டிக்கொண்டு கோபம் வரத்தானே செய்யும்…
மகள் சொன்னதைக் கேட்டு அகமகிழ்ந்துபோன அம்மா அடுத்தநாளிலிருந்து இன்னும் இறுக்கமாகப் பின்னக்கூடும்.
புரிந்தும் புரியாமலுமான குழப்பத்தில் உறங்கத்தொடங்கினாள் சிறுமி.

மூன்றாவது நதிகளுக்கு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 //2024, 14 FEBRUARY - மீள்பதிவு//

மூன்றாவது நதிகளுக்கு
***********************************
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
*********************************************************************
(அலைமுகம் என்ற தலைப்பிலான என் முதல் தொகுப்பில் இடம்பெறுவது)
..........................................................................................................................
*கல்லூரி நாட்களில் ஷேக்ஸ்பியரின் கதாபாத்திரம் ஹாம்லெட் எனக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. நடிகர்களில் மம்முட்டி. அவர் அனந்தேட்டன் என்ற பெயரில் ஒரு சரித்திரக் கதாபாத்திரமேற்று நடித்த படத்தைப் பார்த்த தாக்கத்தில் எழுதப்பட்ட கவிதை இது. படம் பெயர் நினைவில்லை. (எனது முதல் கவிதைத் தொகுப்பில் - அலைமுகம்- இடம்பெறுகிறது)
கால வரையறைக்குட்படாத, நெடுந்தொலைவுப் பிரியம், வாழ்வியல் பலன் எதிர்பாரா அன்பு உண்டுதானே!
......................................................................................................................................
மூன்றாவது நதிகளுக்கு
***********************************
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
**********************************
ஒவ்வொரு அசைவிற்கும்
உள்ளலை கொள்ளும் வைரப்பளீரிடலாய்,
காற்றை வாரியணைக்கக் கரங்களில் பெருகும்
காட்டாற்றுத்தினவாய்,
உடைந்து விடாதபடி குமிழ்களை
அடைகாத்துக் கொள்ளக்
கடுந்தவமியற்றும் மனதின் காலாதீதமாய்
அசந்த நேரத்தில் வசப்படுத்தி விட்ட இந்த
உயிர்ப்பின் ரஸவாதத்தை
ஊமையாய் சுமந்து கொண்டிருக்க முடியவில்லை
உரக்கப் பாட வேண்டும்
கண்டம் கானாமிர்தமாய்
காடுமலை மேடெல்லாம் கரைந்துருகப்
பாடிப் பரவ வேண்டும்
அண்டசராசரமும் காண
ஆனந்தக் கூத்தாட வேண்டும்
வரவேற்பிற்கும் பிரிவுபச்சாரத்திற்கும்
இடைநிரம்பியது வாழ்க்கை
வழியில் - ஆறாவதிலோ, அடுத்த மரத்திலோ
எனக்கான அம்பு
அழியு முன்
என் உயிர்க்கோலப் புள்ளிகள்
கோடுகளையெல்லாம்
கொண்டாடி விட வேண்டும்
உன்னையும்
அனந்தேட்டா!
அறிய மாட்டா யென்னை
அதனாலென்ன?
ஹாம்லெட்டுக்கும் தெரியாது!

(*மம்முட்டிக்கு)

வல்லமை தாராயோ…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 2019, FEBRUARY 9 - மீள்பதிவு//

வல்லமை தாராயோ….
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
’கல்லடி பட்டாலும் சொல்லடி பட்டாலும்
நல்லபிள்ளைக்கழகு சிரித்துக்கொண்டேயிருப்பது’
என்று திரும்பத்திரும்பப் பரிந்துரைத்துக்கொண்டிருக்கிறார்கள்
நல்லவர்கள் சிலர்; நாலும் தெரிந்தவர்கள்…

ஏலாதய்யா எம்குலச் சாமிகளே……
என்ன செய்ய…
வாலைக் குழைக்கத் தெரியாத ஏழைக் கவிக்கு
வாய்த்த முதுகெலும்பு வளையாதது.

சூடு இருக்கிறது
சுரணையிருக்கிறது.

அரணையைப் பாம்பென்றால் ஆமாம்சாமி போட
’கீ’ கொடுத்தால் கைதட்டும் பொம்மையில்லையே கவி.

கருணைக்கொலை யென்ற பெயரில் காலங்காலமாய் பல கவிகளைக்
கைபோன போக்கில் கழுவிலேற்றிவருபவரின்
அருங்காட்சியகச் சுவர்கள் அரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன
அறம்பாடலால்.

பாதகஞ் செய்பவரைக் கண்டா லவர் முகத்திலுமிழ்ந்துவிடச் சொன்ன
பாரதி காற்றுபோல்;
யாரொருவரும் கக்கத்திலிடுக்கிக்கொண்டுவிட முடியாது.

அம்மையப்பனாய் அறிவார்ந்த நண்பனாய்
அன்பே உருவான வாழ்க்கைத்துணையாய்
மொழி யிருக்கிறது.

இம்மை மறுமைக்கு இதுபோதும் –
வேறெந்த ஆசானும் தேவையில்லை.

பொந்தில் வைத்த அக்கினிக்குஞ்சுகளும்
வெந்து தணியும் காடுகளும்
வளர்கதையாக _

விரியும் பாதை. செல்வழி தொலைவு
சொற்பநேரமே இருப்பு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சாமி கவிதை.
சரணம் கவிதை.

வணக்கம் சொல்லி விடைபெறுகிறோம்
ஒரு சிறு பிரார்த்தனையோடு:
உம்மைப் பெண்டாளனென்றும் புல்லுருவியென்றும்
அம்பலத்தில் நாக்குமேல பல்லுபோட்டுப் பேசும்
நீசத்தனம்
யார்க்கும் வாய்க்காதிருக்கட்டும்.