LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, February 13, 2025

மூன்றாவது நதிகளுக்கு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 //2024, 14 FEBRUARY - மீள்பதிவு//

மூன்றாவது நதிகளுக்கு
***********************************
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
*********************************************************************
(அலைமுகம் என்ற தலைப்பிலான என் முதல் தொகுப்பில் இடம்பெறுவது)
..........................................................................................................................
*கல்லூரி நாட்களில் ஷேக்ஸ்பியரின் கதாபாத்திரம் ஹாம்லெட் எனக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. நடிகர்களில் மம்முட்டி. அவர் அனந்தேட்டன் என்ற பெயரில் ஒரு சரித்திரக் கதாபாத்திரமேற்று நடித்த படத்தைப் பார்த்த தாக்கத்தில் எழுதப்பட்ட கவிதை இது. படம் பெயர் நினைவில்லை. (எனது முதல் கவிதைத் தொகுப்பில் - அலைமுகம்- இடம்பெறுகிறது)
கால வரையறைக்குட்படாத, நெடுந்தொலைவுப் பிரியம், வாழ்வியல் பலன் எதிர்பாரா அன்பு உண்டுதானே!
......................................................................................................................................
மூன்றாவது நதிகளுக்கு
***********************************
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
**********************************
ஒவ்வொரு அசைவிற்கும்
உள்ளலை கொள்ளும் வைரப்பளீரிடலாய்,
காற்றை வாரியணைக்கக் கரங்களில் பெருகும்
காட்டாற்றுத்தினவாய்,
உடைந்து விடாதபடி குமிழ்களை
அடைகாத்துக் கொள்ளக்
கடுந்தவமியற்றும் மனதின் காலாதீதமாய்
அசந்த நேரத்தில் வசப்படுத்தி விட்ட இந்த
உயிர்ப்பின் ரஸவாதத்தை
ஊமையாய் சுமந்து கொண்டிருக்க முடியவில்லை
உரக்கப் பாட வேண்டும்
கண்டம் கானாமிர்தமாய்
காடுமலை மேடெல்லாம் கரைந்துருகப்
பாடிப் பரவ வேண்டும்
அண்டசராசரமும் காண
ஆனந்தக் கூத்தாட வேண்டும்
வரவேற்பிற்கும் பிரிவுபச்சாரத்திற்கும்
இடைநிரம்பியது வாழ்க்கை
வழியில் - ஆறாவதிலோ, அடுத்த மரத்திலோ
எனக்கான அம்பு
அழியு முன்
என் உயிர்க்கோலப் புள்ளிகள்
கோடுகளையெல்லாம்
கொண்டாடி விட வேண்டும்
உன்னையும்
அனந்தேட்டா!
அறிய மாட்டா யென்னை
அதனாலென்ன?
ஹாம்லெட்டுக்கும் தெரியாது!

(*மம்முட்டிக்கு)

No comments:

Post a Comment