LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, September 19, 2023

மறுபக்கம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 மறுபக்கம்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமென்பார்
வடிகலனில் பொடிகற்களைக் கலந்தபடி;
ஒற்றை நாசித்துவாரம் மட்டுமே உள்ளதென்பார்
பக்கவாட்டுத் தோற்றத்தைப் பார்த்தபடி;
கருத்துரிமைக்காய் குரல் கொடுப்பார்
கனகம்மாவின் பார்வையைக் கொடும்பாவி எரித்தபடி;
பெண்முன்னேற்றப் பதக்கங்களைத் தந்திருப்பார்
தத்தம் சானல்களில் அவளைத் துகிலுரிந்தபடி;
வீணாப் போனவர்கள் எண்ணிக்கை
எக்கச்சக்கமாகிவிட்டதிப்படி
யென்று(ம்)
அங்கலாய்த்தபடி
காணாப்பொணமாக்கிவிட்டுக்
கண்ணீரஞ்சலிக் கூட்டங்கள் நடத்தியபடி;
ஒற்றை விடைக்கேற்ற ஓராயிரம் கேள்விகள்
கற்றுத்தரப்பட்டுக்கொண்டிருப்பது எப்படி
யெப்படி
தப்படி
அப்படி
யிப்படி
படி படி படி நாளும் படி மேலும் படி
கற்கக் கசடறக் கற்றபின் அதற்குத் தக நில்லாமல் எப்படி?
காணாமல்போன ‘கற்பவை’யைத் தேடி
திக்குத்தெரியாத காட்டில் ஓடியோடி
ஓடியோடி ஓடியோடி
ஓடியோடி ஓடியோடி….
இந்த நாளும் ஆடியடங்குகிறது
’அட சர்தான் போடி’ என்றபடி

ஊர்ப்பஞ்சாயத்து - ஊர்விலக்கம் _ லதா ராமகிருஷ்ணன்

ஊர்ப்பஞ்சாயத்து - ஊர்விலக்கம்

_ லதா ராமகிருஷ்ணன்


.................................................................................

அண்மையில் ஜூனியர் விகடனில் வந்த செய்தி இது.

தமிழகத்தில் சேலம் மாவட்ட கொளத்தூரைச் சேர்ந்த ஊர்ப்பஞ்சாயத்தில் கலப்புமணம் செய்தவர்களை ஊர்விலக்கம் செய்கிறார்கள்,
பெண்ணுக்கு கைம்பெண் என்ற பொருளைக் குறிக்கும் ‘மயிலு’ என்ற பட்டம் கட்டுகிறார்கள், ஊர்க்குத்தம் என்று பஞ்சாயத்து பகுத்தால் அதற்காக அம்மணமாய் பஞ்சா யத்தார் காலில் விழ வேண்டுமாம்.
பெற்றோர்களின் சம்மதத்துடன் நடந்திருக்கும் கலப்புத் திருமணத்திற்காக சம்பந்தப்பட்ட குடும்பத்தை ஊர் விலக்கம் செய்திருக்கிறார்களாம்.
காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் ‘ஊர் வழக் கத்தை மீறி உங்களால் வாழ முடியுமா’ என்று கேட்கிறார் களாம் காவல் அதிகாரிகள்.
படிக்கப் படிக்க தலை சுற்றியது; சூடேறியது.
இந்திய அரசியல் சாஸனப்படியான ஆட்சி நடக்கும் நாட் டில், நாட்டைச் சேர்ந்த மாநிலத்தில், அதுவும் மற் றெல்லா மாநிலங்களை விடவும் பகுத்தறிவில் சிறந்து விளங்குவதாகச் சொல்லிக் கொள்ளும் மாநிலத்தில் இப்படியொரு நிகழ்வு (இது விதிவிலக்கல்ல, வழக்கமாக நடைபெறுவது என்கிறார்கள்.
சட்டத்திற்குப் புறம்பான இந்த ஊர்ப்பஞ்சாயத்து நடை முறையை எதிர்க்கவும், ஒழிக்கவும் தற்போதைய அரசு முந்தைய அரசுகள் என்ன நடவடிக்கைகள் எடுத்திருக் கின்றன?
உண்மையாகவே எடுத்திருந்தால் இந்த நடைமுறைகள் இன்னமும் ஏன் கிராமப்புறங்களில் வழக்கத்திலிருக் கின்றன?
திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் பெரும் பாலானவற்றில் புகை பிடிக்கும் காட்சிகள், மதுவருந்தும் காட்சிகள் தவறாமல் இடம்பெறுகின்றன. கூடவே அதன் கீழே ’இக்கிணியூண்டு’ எழுத்துகளில் ‘குடி குடியைக் கெடுக்கும்’ போன்ற வாசகங்கள் மின்னல் வேகத்தில் ஓடிமறைகின்றன.
கோயில்களில் கொலை செய்வதற்கான திட்டங்களைத் தீட்டுவது, தடபுடலாக சீர் செனத்தி செய்வது, இந்துமதம் என்றாலே மூட நம்பிக்கைகள், முரட்டுத்தனமான சடங்கு சம்பிரதாயங்கள் என்றவிதமாய் காட்சிகளை அமைப்பது என்று வண்ணமயமாய் காட்சிகள் இடம்பெறு கின்றன.
ஊர்ப்பஞ்சாயத்து முறையை , கட்டப்பஞ் சாயத்து முறையை விலாவாரியாகக் காட்டாத மெகாத்தொடர் களே இல்லையெனலாம்.
இத்தகைய காட்சிகளை யெல்லாம் வெகு தாராளமாக அனுமதிப்பது எப்படி? இவை பார்வையாளர்கள் மனங்க ளில் என்னவிதமான தாக்கங்களை ஏற்படுத்தும்?
திரைப்படமோ, தொலைக்காட்சித்தொடரோ கருநிறப் பெண்கள், தேன்வண்ணப் பெண்கள் வெகு அரிதாகவே இயல்பான கதாபாத்திரங்களாக இடம்பெறுகிறார்கள்.
மாவு அப்பிய வெண்முகங்களும், மேனிகளாகவுமே பெண்களைக் காட்டவேண்டிய அவசியமென்ன?
அப்படியே கருநிறப் பெண்கள் இடம்பெற்றாலும் அவர்க ளுடைய கருநிறத்திற்காக அவர்கள் கேவலப்படுத்தப் படுவதாக, கண்ணீர்விட்டழுவதாகவே பெரும்பாலும் இருப்பார்கள். பகுத்தறிவுப் பாசறைகளிலிருந்து வெளிவரும் பிரம்மாண்டப் படங்களிலும் இதுவே வாடிக்கை.
உண்மையாகவே சமூக சீர்திருத்த நோக்கமும் இலக்கும் இருப்பின் அரசுகள் ‘எண்டெர்டெய்ன்மெண்ட்’ என்ற பெயரில் இத்தகைய மக்கள் விரோதப் படைப்பம் சங்களை எப்படி அனுமதிக்கலாம்?
இதுவா FREEDOM OF EXPRESSION?
கிராமங்களில் இன்னும் ஊர்ப்பஞ்சாயத்துமுறையை, அந்த அமைப்பு தரும் தண்டனைகளை அனுமதித்துக் கொண்டிருப்பது அரசுக்கு அழகா?
சமூகப் பொறுப்பு ஒவ்வொரு தனிநபருக்கும் உண்டு. அரசுக்கு அதிகம் உண்டு. Disclaimer, BlameGame உத்திக ளைக் கையாண்டு தம்மை தமக்கான சமூகப்பொறுப்பிலி ருந்து விலக்கிக்கொள்ள முயற்சித்தல் முறையல்ல.

தினம் நிகழும் கவியின் சாவு ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 தினம் நிகழும் கவியின் சாவு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


அடிவயிறு சுண்டியிழுக்க பசி உயிரைத்
தின்னும்போதும்
ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து
அங்கில்லாத பட்டுக்கருநீலத்தையும் பதித்த நல்வயிரத்தையும்
அன்பு மனைவிக்கோ ஆழ்மனக் காதலிக்கோ
சிறு கவிதையொன்றில்
குசேலனது அவிலென அள்ளி முடிந்துகொண்டு
தரச்சென்றவனை
ஒரு கையில் கடப்பாரையும்
மறு கைநிறைய ஈரச்சாணியும் ஏந்தி
வழிமறித்த வாசக - திறனாய்வாளர் சிலர்
கண்ணனை மறைமுகமாய் புகழ்ந்தேத்தும் நீ
கொடூர நீச மோச நாச வேச தாரி
யென் றேச, பழி தூற்ற
ஏதும் பேசாமல் காற்றுவெளியிடைக் கண்ணன் மனநிலையைக் கண்டுவர
தன்வழியே காலெட்டிப்போட்ட கவி
தனக்குத்தானே சொல்லிக்கொள்வான்:
’கிட்டும் வாசகப் பிரதிகள் வரம் மட்டுமல்ல...
கட்டுடைத்தலில் தட்டுப்படுவது
படைப்பாளியின் அடையாளம் மட்டுமல்ல’.

பாரதியார் கவிதையில் கிடைக்கும் வாசகப்பிரதிகள் -2

பாரதியார் கவிதையில் கிடைக்கும் வாசகப்பிரதிகள் -2


பாரதியாரின் இந்தக் கவிதையில் ஆரம்பம் முதல் இறுதிவரை யான கவிதைவரிகள் இணைந்தே கவிதை முழுமையடைகி றது என்று படுகிறது.

இருந்தாலும் கவிதையில் இடம்பெறும் ’சிவசக்தி’யின் பல்பரி மாணங்களே கவிதையைக் கவிதையாக்குகிறது என்று தோன்றுகிறது.

ஒரு கவியாய் பாரதியார் ‘சிவசக்தி’ என்ற சொல்லை ஒற்றைப் பரிமாண அர்த்தத்தில் கையாண்டிருப்பார் என்று தோன்ற வில்லை.

ஒரு வாசகராக நாம் அந்த வார்த்தையை எப்படி உள்வாங் குகிறோம் என்பதே நம் வாசகப்பிரதியாகிறது என்று தோன்று கிறது.


நல்லதோர் வீணை
மகாகவி பாரதியார்.

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

ஏழை வாக்காளரின் எளிய மடல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஏழை வாக்காளரின் எளிய மடல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

பெருந்தனம் வரவாக்கிக்கொள்ளலே
முழுநேர வேலையெனப்
பழகாமல்
தினந்தினம் வறுமையிலுழன்று
வதனம் பொலிவிழந்து
வாய்த்த மனம் கன்றி
யழியும்
வழியறு மக்களை
மெய்யாய் ஆதரித்துப் புரந்து காத்தலே
ஆட்சிக்கழகெனப்
புரிந்தவ் வழி யேகி
அனாதரட்சகராய்
மடியில் கனமின்றி
மணக்கும் சந்தனமாய்
மக்கள் பணியாற்றக்கூடும்
ஆன்றோர் சான்றோர்
அரசியல்வாதிகளுக்கெல்லாம்
அடியாழ மனமிருந்து
அனேகனேக வந்தனம்.

மாற்றுத்திறனாளிகளை மதிப்பழிப்பதா?

மாற்றுத்திறனாளிகளை மதிப்பழிப்பதா? 

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளுக்காகப் பணியாற்றும் அமைப்புகள் நாடாளுமன்ற உறுப்பினர் (திமுக) அ.ராசாவின் கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன

டைம்ஸ் ஆஃப் இண்டியா, செப்டெம்பர் 9, 2023.
[DISABILITY RIGHTS BODIES PROTEST AGAINST A.RAJA’S STATEMENT]
Times of India, Saturday 9, 2023
........................................................................................................................................

சனாதன தர்மத்தை எய்ட்ஸ்(HIV), தொழுநோய் (LEPROSY) ஆகியவற்றுடன் ஒப்பிட்டு திமுகவைச் சேர்ந்த முன் னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ராஜா பேசியதற்கு மாற்றுத்திறனா ளிகள் உரிமை அமைப்புகள் (DISBAILITY RIGHTS ORGANIZATIONS) கண்டனம் தெரிவித்துள்ளன.
THE LEPROSY MISSION OF INDIA இது குறித்து சம்பந்தப்பட்ட திமுக தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் தனது கூற்றை மறுபரிசீலனை செய்யவேண்டுமென்றும், அவருடைய கூற்று காரணமாக ஏற்பட்டிருக்கலாகும் பாதிப்புக்காக பொதுவெளியில் மன்னிப்பு கேட்கவேண்டு மென்றும் கோரப்பட்டிருக்கிறது.
இந்தக் கடிதத்தில் மற்ற உடற்குறபாடுடைய மாற்றுத்திறனாளி களுக்கான அமைப்புகளோடு தொழுநோயால் பாதிக்கப்பட்டிருப் பவர்களுக்காக இயங்கிவரும் ASSOCIATION OF PEOPLE AFFECTED BY LEPROSY (APAL)யும் இடம்பெற்றிருக்கிறது.
இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டிருப்பவர்கள் மத்திய அரசின் கீழ் இயங்கும் ‘உடற்குறைபாடுகளுடையவர் களுக்கான அதிகார-உரிமை அளித்தல் தொடர்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் DEPARTMENT OF EMPOWER MENT OF PERSONS WITH DISABILITY என்ற துறையின் தலை வருக்குக் கடிதமெழுதவும் திட்டமிட்டிருக்கிறார் கள்.

2016ஆம் ஆண்டு இயற்றப்பட்ட உடற்குறைபாடுகளுடைய மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டி ருக்கும் 21 வகையான உடற்குறைகளில் தொழுநோயிலிருந்து மீண்ட நபர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அமைப்பு (NATIONAL PLAT FORM FOR DISABLED PERSONS மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு மேம்படுத்தலுக்கான தேசிய மையம் [NATIONAL CENTRE FOR PROMOTION OF EMPLOYMENT FOR DISABLED PEOPLE (NCPEDP)] போன்ற அமைப்பு களை நடத்திவரும் சமூகநலச் செயல் பாட்டாளர்கள் திரு. ஏ.ராஜாவின் பேச்சு குறித்து ஆட்சேபணை யும் கண்டனமும் தெரிவித்துள்ளார்கள்.
சம்பந்தப்பட்ட திமுக தலைவருக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் நிகிதா ஸாரா, THE LEPROSY MISSION TESTன் COMMUNICATION AND ADVOCACY பிரிவின் தலைவர், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக் கும் மக்கள் பிரதி நிதிகள் தொழுநோய் போன்ற உடல்நலன் சார்ந்த விஷயங் களைப் பற்றிப் பேசும்போது மிகவும் கவனத் தோடும், பொறுப்புணர்வோடும் நடந்துகொள்ள வேண்டியது இன்றியமையாதது”, என்று குறிப்பிட்டுள்ளார்.
”தலைவர்களின் வார்த்தைகளும், கண்ணோட்டங்களும் பொது மக்களின் பார்வையிலும் நடத்தையிலும் பெருமளவு தாக்கம் ஏற்படுத்தும்” என்று மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அமைப்பின் (NATIONAL PLATOFROM FOR THE RIGHTS OF THE DISABLED) பொதுச் செயலர் திரு. முரளி தரன, “முன்னாள் மத்திய அரசின் அமைச்சராக இருந்த வரும், தற்போது நாடாளுமன்ற உறுப்பின ராக இருப்பவருமான ஒருவர் இப்படிப் பேசியிருப்பது மிகவும் வருந்தத் தக்கது. எய்ட்ஸ், தொழுநொய் போன்ற உடல்நலன் சார் ந்லைமைகளை இவ்வாறு மதிப்பழிக்கும் தொனியில் பேசி யிருப்பது மன்னிக்க முடியாதது”, என்று கூறியுள்ளார்.
NATIONAL CENTRE FOR PROMOTION OF EMPLOYMENT FOR DISABLED PEOPLE [NCPEDP)]யின் நிர்வாக இயக்குனரான திரு. அர்மான் அலி “தொழுநோயானது, மற்ற எந்த உடற்சார் நிலைமைகளைப் போலவே, சமூகப்புறக் கணிப்புக்கானதாய் பேசப்படலாகாது. தனிநபர்களை மதிப்பழிக்கும் வழியாகப் பயன்படுத்தப்படலாகாது. இம்மாதிரி மொழிப் பயன்பாட்டை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம். இத்தகைய பேச்சு தொழுநொயால் பாதிக்கப்பட்ட வர்களைப் புண்படுத்துவதோடு மட்டு மல்லாமல் இந்த நோய் ஒருவருக்கு இருப்பதை ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவப் பரிசோதனையின் மூலம் கண்டுபிடித்து குணப் படுத்தும் முயற்சிகளை மேம் படுத்துவதற்கும் முட்டுக்கட்டையாகிறது”, என்று அழுத்தமாய் எடுத்துரைத்திருக்கிறார்.

(தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்)

கண்டதைச் சொல்லுகிறேன்…… ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 கண்டதைச் சொல்லுகிறேன்……

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
சாலையோரமாய் ஒரு ஆளைச் சுற்றி நின்று
தர்ம அடி கொடுத்துக்கொண்டிருந்தார்கள்
சிலபலர்.
கோட்டுசூட்டு போட்டவர்களும் கரைவேட்டிகட்டியவர்களும்
நாட்டமைக்காரர்களாய் தீர்ப்பளித்துக்
கொண் டிருந்தார்கள்.
காலெட்டி நடைபோட்டுக்கொண்டிருந்
தோரெல்லாம்
கூட்டத்தை விலக்கி எட்டிப்பார்த்து
கைக்கெட்டும் தோள் அல்லது தலை
அல்லது காது அல்லது பின்மண்டை
அல்லது மேற்கை அல்லது முதுகு
அல்லது பிட்டம்
என ஆளுக்கொன்றிரண்டு அடி கொடுத்து
Photo-Shoot சமூகக்கடமையாற்றிமுடித்ததாய்
ஆசுவாசத்தோடு அப்பாலேகினார்கள்.
அட என்ன தான் செய்தான் பையன் என்று
அடித்த பின் அடுத்திருந்தவர் கேட்க _
அரைக்கணம் தடுமாறி பின்
’அதைத் திருடினான் இதைத் திருடினான்
அவரை எட்டி உதைத்தான்
இவள் கையைப் பிடித்திழுத்தான்’
என ஆளுக்கொரு காரணம் சொல்ல _
அவற்றின் உண்மைத்தன்மை நம்பகத்தன்மை
சொல்பவரின் தரம் அறம் யெதையுமே
அறியவோ சரிபார்க்கவோ விருப்பமின்றி
பொறுப்புமின்றி
சுரவேகத்தில் அவற்றை மனனம் செய்து
சேர்ந்திசையாகப் பாடியவாறே
கரகரவென்றந்தப் பையனை இழுத்துச்சென்று
அங்கிருந்த மரமொன்றில் கட்டிவைத்துப்
பின்னும் முண்டியடித்து அடிக்கத்
தொடங்கியவர்களில்
நிதி மோசடிக்காரர்கள்,
நிலக்கொள்ளைக்காரர்கள்
வரி ஏய்ப்பாளர்கள்
கையூட்டு பெறுவோர்
விஷங்கக்கும் பரப்புரைகளைக்
குரல்வளையிலிருந்து
துப்பித்துப்பியே
வீதியடைத்திருக்கும் மாடமாளிகைகளை
இப்போதும் எப்போதும்
வளைத்துப்போட்டிருப்பவர்
அன்னாரே, அன்னபிறரே
நன்னான்கு கைகளோடு
முன்னணியிலிருந்தார்கள்.

பாரதியின் கவிதைகளில் கிடைக்கும் வாசகப் பிரதிகள்

 பாரதியின் கவிதைகளில் கிடைக்கும்

வாசகப் பிரதிகள்


லதா ராமகிருஷ்ணன்

ஒரு கவிதை ஒற்றை அர்த்தத்தைக் கொண்டதாய் அனைவருக்கும் புரியும் அளவில் எழுதப்பட்டதாலேயே அது கவிதையாகிவிடுவதாகச் சொல்லமுடியாது.
அதேபோல்தான் புரியாக் கவிதையும்.
ஒரு மேலோட்டமான வாசிப்பில் அல்லது ஆழமான வாசிப்பில் கூட ஒரு கவிதை முழுவதுமாக நமக்குப் பிடிபடாதுபோகலாம்.ஆனாலும், அந்தக் கவிதையின் ஒரு வரி அல்லது ஒரு சொற்றொடர் அந்தக் கவிதை க்குள் நம்மை ஈர்த்துக்கொண்டுவிட முடியும்;
அப்படி, அந்தக் கவிதைக்கு இருக்கக்கூடிய நாம் அறியாத ஆழத்தை நமக்குக் கோடிகாட்டிவிடுவதுண்டு.
ஒரு கவிதையில் உள்ள அத்தனை சொற்களும் தனித் தனியான அளவில் அர்த்தம் புரிவதாலேயே கவிதையின் ஒட்டுமொத்த அர்த்தம் புரிந்துவிடுகி றது என்று சொல்லி விட முடியாது.
ஒரு கவிஞரை அவர் வாழுங்காலத்தில் அறிந்தவர்க ளால் அவர் என்ன நினைத்து, அல்லது அவர் எதை உட்குறிப்பாக உணர்த்தி ஒரு கவிதையை எழுதியிருக் கிறார் என்று புரிந்துகொள்ள வழியுண்டு.
இதைக்கூட திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. ஒரு கவிமனதின் அத்தனை அடர்காடுகளும் அவருக்கு எத்தனை நெருக்கமானவர்களுக்கும் அத்துப்படியாகி விடுவதில்லை. இன்னும் சொல்லப் போனால், முக்கிய மாக, ஒரு கவிஞரை சகமனிதராக நெருக்கமாக அறிந்தவர்களுக்கு அவர் கவிதை அணுகவியலாத தாகிறது என்றுகூடச் சொல்ல முடியும்.
இதில், பாரதியார் தங்களைக் கேட்டுக்கொண்டுதான் அவருடைய ஒவ் வொரு கவிதையையும் எழுதினார், அவருடைய ஒவ்வொரு கவிதை யின் ஒவ்வொரு சொல்லையும் தங்களுக்கு ஏற்புடைய பொருளில் மட்டுமே எழுதினார் என்பதாய் சிலர் ‘சிலுப்பி’க் கொண்டு பட்டிமன்றங் களிலும், திறனாய்வு நூல்களிலும் பேசி, எழுதித்தள்ளுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
அப்படி. தன்னோடு சமகாலத்தில் வாழ்ந்த யாரிடமா வது ‘இதை நினைத்துத் தான் இந்தக் கவிதையை எழுதினேன், இந்தப் பொருளில் தான் இந்த வார்த்தையைப் பயன்படுத் தினேன்’ என்று பாரதி கூறியதாகத் தெரியவந்திருக் கிறதா? எனக்குத் தெரிந்து இல்லை.
அப்படியிருக்கும்போது பாரதியின் இந்தக் கவிதை யில் எனக்குக் கிடைத்த வாசகப் பிரதி இது என்று சொல்லு வதே சரியாக இருக்கும் என்று தோன்று கிறது.
அப்படி இங்கே இடம்பெறும் பாரதியின் கவிதையில் எனக்குக் கிடைத்த, என்னை இந்தக் கவிதையை இன்றுவரை நேசிக்கச் செய்திருக்கும் வாசகப்பிரதி இது:
மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்
இந்தக் கவிதையில் இடம்பெறும் ‘வேண்டும்’ என்ற சொல் எனக்கு வேண்டும் என்ற கோரிக்கையா? இவை வேண்டிநிற்கும் மனப்போக்கா? வேண்டுதலா? யாருக்கு? பாரதி என்ற தனிநபரின், தனிநப ருக்கு மட்டு மான வேண்டுதலா? வேண்டிநிற்றலா? அல்லது, பலரின் பிரதிநிதியாக பிறந்த வேண்டுதலா?
‘நெருங்கின பொருள் கைப்படவேண்டும்’ – இது பொதுவான அர்த்தத் தில் கூறப்பட்டதா? அல்லது, குறிப்பாக எதையோ பூடகமாகப் பேசு கிறதா? பொருள் என்பது உயிருள்ளதா? உயிரற்றதா? நெருங்கின பொருள் கைப்படவேண்டும் என்பதில் ஒரு தொடுவான உறவு ஏதேனும் உட்குறிப்பாக உள்ளதா?
‘கனவு மெய்ப்பட வேண்டும்’ – ஒரு குறிப்பிட்ட கனவா? அப்படியென் றால் அது என்ன கனவு? அவரவருக்கு அவரவருடைய கனவு(கள்)! கனவு என்பது இங்கே இலட்சியக்கனவு என்பதாகக் கொள்ளத்தக்க அளவில் இடம்பெற்றாலும், அத்தகைய இலட்சியக்கனவு ‘நாட்டின் விடுதலை’ என்பதாக இருக்க வழியுண்டு என்றாலும் அது மட்டுமே தான் அந்த வரியின் ஒற்றை அர்த்தம் என்று திட்டவட்டமாக ஏன் நிறுவ முயலவேண்டும்?
‘தனமும் இன்பமும் வேண்டும்’ என்ற வரியில் தனம் என்ற சொல் செல்வவளத்தைத்தான் குறிக்கிறது என்று தீர்மானமாகச் சொல்ல முடியுமா? ஏன் சொல்ல வேண்டும்? தனமும் இன்பமும் தனித்தனியானது என்பது இங்கே கோடிகாட்டப்படுகிறதா? இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்று சுட்டப் படுகிறதா? தனம் என்பது பொருள்வளம் மட்டும்தானா? (தமிழ் அகராதியில் தனம் என்ற சொல்லுக்குத் தரப்பட்டிருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தகங்களில் ‘முலை’ என்பதும் ஒன்று).
’நெருங்கின பொருள் கைப்படவேண்டும்’ / கனவு மெய்ப்பட வேண்டும் / கைவசமாவது விரைவில் வேண்டும் / தனமும் இன்பமும் வேண்டும்’ _ என்ற இந்த நான்கு வரிகளிலுமான வேண்டுதல்கள், அல்லது ‘வேண் டும்’கள் தனித்தனியானதா? ஒன்றுக் கொன்று தொடர்புடையனவா?
பாரதி இறந்தபோது அவருக்கு வயது முப்பத்தி யெட்டு தான். அவர் ‘ஆண்-பெண்’ உறவைத் தனது பல கவிதை களில் நுட்பமாகப் பேசியவர். பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர், பல இலக்கியங்களை வாசித்தறிந்தவர் என்பதால் அவர் தன் கவிதை களில் பயன்படுத்தும் சொற்களை மிகவும் கவனமாக, பிரக்ஞாபூர்வமாகவே தேர்ந்தெடுத்திருப்பார்.
எளிய சொல் என்றாலும்கூட அதை எளிதாகப் புரிந்து விடும் அதே அர்த்தத்தில் மட்டுமே அவர் கையாண்டி ருப்பார் என்று எப்பேர்ப்பட்ட திறனாய்வாளர்களாலும் அறுதியிட்டு உறுதியாகச் சொல்லிவிட இயலாது.
அப்படி நிறுவவேண்டிய நிர்பந்தம் இருப்பதாக நினைத்து பாரதியின் ‘personal secretary’ யாகத் தங்க ளைத் தாங்களே நியமித்துக்கொண்டு பேசுபவர்க ளைப் பார்க்கப் பரிதாப மாக இருக்கிறது.
’தரணியிலே பெருமை வேண்டும்’ என்கிறார் பாரதி. ஊரிலே, நாட்டிலே என்று கூறுவதில்லை. அவர் கூறும் பெருமை அவர் வாழுங்காலத்திற் கானது மட்டுமா? அவருக்கானது மட்டுமா? (பெருமை என்ற சொல் லுக்கு ‘மிகுதி’ என்ற பொருளும் அகராதியில் தரப்பட்டிருக் கிறது. இந்த அர்த்தத்தில் பார்த்தால் தரணியிலே எல்லாமே நிறையக் கிடைத்து இல்லாமை இல்லாது போக வேண்டும் என்று அவர் வேண்டுவதாகவும் கூற முடியும்).
’கண் திறந்திட வேண்டும்’ – யாருடைய கண்? அறிவுக் கண்ணெனில் எந்த விஷயத்தில் தெளிவு பெற? ’மூடிக் கொண்ட பூனைக்கண்’ ஏதாவது இங்கே குறிப்புணர்த்தப் படுகிறதா? கண் திறந்தால் காணக் கிடைப்பது கனிவா? கனலா? காற்றின் வழித்தடங்களா?
காரியத்திலுறுதி வேண்டும் / பெண் விடுதலை வேண் டும் / - இந்த வரிகள் ஏதேனும் குறிப்பான காரியத்தை, விடுதலையைச் சுட்டுகின்றனவா?
’பெரிய கடவுள் காக்கவேண்டும்’ – ஏன் பெரிய கடவுள்? வெறுங்கடவுள் போதாததற்குக் காரணம் என்ன? பெரிய கடவுள் என்பதை பெருந் தெய்வம் என்பதாகப் பொருள் படுத்திக்கொள்பவர்களைப் பற்றிப் பேசிப் பயனில்லை. ’பெரிய கடவுள்’ என்று சொல்வது ஒரு பேச்சுவழக்காக இருக்கலாம். அல்லது, அவர் பேசும் பெரிய கடவுள் மனசாட்சியாக இருக்கக்கூடுமோ....
’மண் பயனுறவேண்டும்’ என்ற வரி எளிதாகப் புரிவது போல் தோன்றினாலும் அதில் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் இருக்கவியலும். மண் என்பது உலகமா? பயிர்நிலமா? யாரால் பயனுற வேண்டும்? எப்படி? பயன் என்ற சொல்லுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய, அதே சமயம், ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் உள்ளன.
’வானகம் இங்கு தென்படவேண்டும்’ – என்ற வரி விரித்து வைக்கும் அர்த்த சாத்தியப்பாடுகள் நிறைய. அங்கே தொலைதூரத்தில் இருப்ப தால் அதைப் பற்றிய அலங் காரக் கனவுகளும், பீதிக்கனவுகளும் நம்மி டையே நிறையவாய். ஒருவேளை அதை அருகில் பார்த்து விட்டால் பின் நம் மனங்களின் பிரமைகள் அகன்று இங்கான வாழ்க்கையை முழுவீச்சில் வாழ ஆரம்பித்து விடலாமோ? இதன் அடுத்த வரி ‘உண்மை நின்றிட வேண்டும்’ இந்த வரியோடு தொடர்புடையதாமோ?
‘ஓம் ஓம் ஓம்’ – என்ற இறுதி வரியைப் பொறுத்த வரை – ‘ஓம்’ என்னும் சொல்லுக்கு ’பிரணவ மொழி’, ’ஆம்’, ’செய்வோம்’ என்பதாய் வரும் தன்மைப் பன்மை விகுதி என ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங் கள் இருக்கின்றன.
பாரதியின் இந்தக் கவிதைக்கு இதுதான் அர்த்தம், இதுவே சிறந்த வாசிப்பு என்று நிறுவுவதல்ல நான் செய்வது. மாறாக, அப்படி நிறுவ வேண்டிய தேவையில்லை என்ற கருத்தை முன்வைப்பதும், அப்படி நிறுவப் பார்ப்பவர்க ளின் போதாமையை கோடிகாட்டுவதுமே என் நோக்கம்.
எல்லாவற்றையும் விட மேலாக _
பாரதியின் இந்தச் சிறு கவிதை சகலமும் புரிந்துவிட்டாற் போல் பலராலும் மேற்கோள் காட்டப்படும் இந்தக் கவிதை யில் இடம்பெற் றுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தசாத்தியப்பாடுகளை, வாசகப்பிரதி களை எடுத்துக் காட்டவும், அதன் காரணமாக இந்தக் கவிதை என் வாசக மனதுக்கு மிகவும் பிடித்த நவீன கவிதைகளில் ஒன்றாக இருப்பதைப் பகிர்ந்துகொள்ளவுமே இந்தச் சிறு கட்டுரை.

DISCLAIMER

GUILTY

.........................

DECRYING ONE AS GUILTY

MANY FREE THEMSELVES
FROM FEELING GUILTY