மறுபக்கம்
வடிகலனில் பொடிகற்களைக் கலந்தபடி;
ஒற்றை நாசித்துவாரம் மட்டுமே உள்ளதென்பார்
பக்கவாட்டுத் தோற்றத்தைப் பார்த்தபடி;
கருத்துரிமைக்காய் குரல் கொடுப்பார்
கனகம்மாவின் பார்வையைக் கொடும்பாவி எரித்தபடி;
பெண்முன்னேற்றப் பதக்கங்களைத் தந்திருப்பார்
தத்தம் சானல்களில் அவளைத் துகிலுரிந்தபடி;
வீணாப் போனவர்கள் எண்ணிக்கை
எக்கச்சக்கமாகிவிட்டதிப்படி
யென்று(ம்)
அங்கலாய்த்தபடி
காணாப்பொணமாக்கிவிட்டுக்
கண்ணீரஞ்சலிக் கூட்டங்கள் நடத்தியபடி;
ஒற்றை விடைக்கேற்ற ஓராயிரம் கேள்விகள்
கற்றுத்தரப்பட்டுக்கொண்டிருப்பது எப்படி
யெப்படி
தப்படி
அப்படி
யிப்படி
படி படி படி நாளும் படி மேலும் படி
கற்கக் கசடறக் கற்றபின் அதற்குத் தக நில்லாமல் எப்படி?
காணாமல்போன ‘கற்பவை’யைத் தேடி
திக்குத்தெரியாத காட்டில் ஓடியோடி
ஓடியோடி ஓடியோடி
ஓடியோடி ஓடியோடி….
இந்த நாளும் ஆடியடங்குகிறது
’அட சர்தான் போடி’ என்றபடி
No comments:
Post a Comment