என் உயிலை எழுதிவைக்கவேண்டிய நாள்
வந்துவிட்டது. சொத்து ஒன்றும் இல்லாவிட்டாலும்
உயில் எழுதவேண்டும் _ அது புருஷ லக்ஷ்ணம்
என் பெட்டிகளில் நிரம்பியுள்ள கிழிசல்
காகிதங்களை எல்லாம் உலகத்துச் சர்வகலா
சாலைகளுக்குத் தந்துவிடுகிறேன் – அதைவிடச்
சிறப்பாக அவர்களால் கிழிக்கமுடியாது. நான்
உபயோகிக்காத எண்ணற்ற வார்த்தைகளை
அகர முதலியில் உள்ளதையும் இல்லாததையும்
எனக்குப் பின் வருகிற கவிகளுக்கு அளித்து
விடுகிறேன். நான் சம்பாதித்த சொல்ப
ஊதியத்தை என்னை எழுத்தாளனாக்கி
பெருமை கொள்ள எண்ணி நம்பிக்கையுடன்
உயிர் நீத்த என் தகப்பனாருக்குத் தந்து
விடுகிறேன். எத்தனையோ ஆசைகள்
ஏக்கங்கள் ஏமாற்றங்கள் என் ஆயுளில்
என்னைப் பின் தொடர்ந்து வந்துள்ளன.
அவற்றை உலகுக்குத் தந்துவிடுகிறேன்.
என் நல்ல பெயரை ஊரிலுள்ள கேடிகள்
பகிர்ந்துகொள்ளட்டும். காணாத என் கண்களை
பார்வையுள்ளவர்கள் பகிர்ந்துகொள்ளட்டும்.
என் எதிர்காலத்தை என் மனைவி ராஜிக்கு
அன்பளிக்கிறேன்.
யேட்ஸ் என்ற ஆங்கிலக் கவி தன் வாரிசாக ‘நிமிர்ந்து நடப்பவர்களை’ நியமித்தான். என்
சுற்றுவட்டத்தில், இந்தியவில் நிமிர்ந்து
நடப்பவர்களையே காண முடியவில்லை. எல்லோரும்
கூனிக்குறுகி குனிந்து தரையில் பூமிக்கடியில்
எதையோ தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் தேடுமிடம் அவர்களுக்குக் கிடைக்கட்டும்.
பட்டுவிட்ட கடன்களையெல்லாம் யார்யாரிடம்
சொல்லி வாங்கினேனோ அதையே திரும்பவும்
சொல்லி அவர்களிடமே கடனாகத் திருப்பி
விடுகிறேன்
தங்களுக்குத் தாங்களே வரவு
வைத்துக்கொள்ள அவர்களுக்குச் சக்தி
பிறக்கட்டும். சேமித்துவைத்த உபயோகப்
படாத என் அறிவை யெல்லாம் அதை
உபயோகிக்கத் தெரியதவர்களுக்குத் திரும்பவும்
தந்துவிடுகிறேன். அறிவுக்களஞ்சியங்களை
நிரப்பட்டும் _ வெளியில் வந்து செயல் படாதிருப்பது
நல்லது. எனக்குக் கல்லறையே வேண்டாம்.
அப்படிக் கல்லறை தவிர்க்க முடியாததானால்
அதில் ஒரு பெயரும் பொறிக்கப்படவேண்டாம்.
எனக்கு அறிமுகமான பல தெய்வங்களை யெல்லாம்
இருளடர்ந்த பல கோயில்களில் யார் கண்ணிலும்
படாத சிற்பங்களாக நிறுத்திவைத்துவிடுகிறேன்.
நான் இன்னும் எழுதாத நூல்களை என் பிரசுர
கர்த்தர்கள் தாராளமாகப் பிரசுரித்து லாபம்
அடைந்து கணக்கெழுத இன்னொரு
கம்ப்யூட்டர் வாங்கிக்கொள்ளட்டும்.
நான் தந்த வாக்குறுதிகளை யெல்லாம்
காற்றுக்கும், நான் செய்த நற்பணித்
தீர்மானங்களை யெல்லாம் இனி எதிர்
பார்க்க முடியாத எதிர்காலத்துக்கும்
வாரி அளித்துவிடுகிறேன். எனக்கும்
அரசியல் ஆசைகள் இருப்பதுண்டு.
அவற்றை நேருவின் சந்ததியாருக்கு
அளித்துவிடுகிறேன்.
இந்திரன்
சந்திரன், காற்று, வெளில் நீர்
உள்ளளவும் கொள்ளுப் பேத்தி
எள்ளுப் பேரன் என்று அரசாண்டு
வரட்டும் என்று வாழ்த்துகிறேன்.
எனது எழுதப்பட்ட கவிதைகள் மக்கள்
கண்ணில் படாமல் புஸ்தகங்களின்
பக்கங்களில் மறைந்து கிடைக்கட்டும்
ஆனால் எழுதப்படாத கவிதைகளை
விமர்சகர் போற்றி அலசி ஆனந்தித்துப்
பேராசிரியர்கள் ஆக ஒரு ஊன்றுகோலாக
உபயோகித்துக்கொள்ளட்டும்.
என் வீணாகிப்போன நொடிகள் நாழிகைகள்
நாட்கள், வாரங்கள், மாதங்கள்,
ஆண்டுகள் எல்லாம் தேசப் பொதுச்
சொத்தாகி எல்லோருக்கும் உதவட்டும்
உதவட்டும். நான் கட்டாத மாளிகைகளில்
உயிரோடு பிறக்காதவர்கள், நடைப்பிண
மாக நடப்பவர்கள் குடியேறட்டும்.
மற்ற என் ஜங்கம சொத்துக்களை
தட்டுமுட்டு சாமான்களை,கந்தல்
துணிகளை, கந்தாடையான் பெயரை
என் பிறக்காத பிள்ளைகளுக்கு
விற்கக்கூட பாத்தியமில்லாமல்
தந்துவிடுகிறேன். என் அபிமான
சிஷ்யர்களுக்கென்று நான்
சிந்திக்காத சிந்தனைகள் எல்லாம்
கிடைக்கின்றன.
வேறு ஒன்றும்
எனது என்று சொல்ல சாகும் சமயத்தில்
என்னிடம் இருக்கக்கூடாது. காதற்ற
ஊசியும் உடன் வராது காண் என்று
சொன்னவன் வாக்கு என் விஷயத்தில்
பலிக்கட்டும். என் பெயரையும் நான்
துறந்துவிடுகிறேன் _ என் பெயரை
யாருக்கு இஷ்டமோ அவர்கள்
எடுத்துக்கொள்ளட்டும்.