கவிதையெழுதுதல் வாசித்தல், மொழிபெயர்த்தல்
LIFE GOES ON.....
Sunday, May 1, 2022
கவிதையெழுதுதல் வாசித்தல், மொழிபெயர்த்தல் குறித்து சொல்லத்தோன்றும் சில…. 4
Tuesday, February 15, 2022
மனக்குருவி - கவிஞர் வைதீஸ்வரனின் முழுக்கவிதைத் தொகுப்பு, மற்றும் இரண்டு நூல்கள்
புதுப்புனல் பதிப்பகத்தில் வாங்கலாம். தொடர்புக்குகவிஞர் வைதீஸ்வரனின் (2017 வரை எழுதப்பட்ட கவிதைகள் அடங்கிய) முழுத்தொகுப்பு. கவிஞரின் அருமையான கோட்டோவியங்களும் கவிதை பற்றிய அரிய சில கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
கவிஞர் வைதீஸ்வரனைப் பற்றிய கட்டுரைகள், அவரது எழுத்தாக்கங்கள் அடங்கிய நூல். புதுப்புனல் பதிப்பகத்தில் கிடைக்கும்
CITY WALLS
-SELECTED POEMS OF VAIDHEESWARAN IN ENGLISH
Tuesday, January 25, 2022
பாடகனின் அநாதிகாலம்! - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
பாடகனின் அநாதிகாலம்!
’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
(சமர்ப்பணம்: சித் ஸ்ரீராமுக்கு)
என்று பாடிக்கொண்டேயிருக்கிறான் அவன்
மேடையில்.....
காதல் என்று அவன் பாடுவது எனக்குக்
காலம் என்பதாய் குழம்புகிறது.
அவனை மாற்றியிருக்குமோ காதல்?
ஒரு தேவதையிடம் மனுஷி நான் எப்படிக் கேட்பது?
எதையும் மாற்றும் காதலை மாறாத ஒரே ராகத்தில்
மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேயிருக்கிறான்.
சமயங்களில் சுருதி பிசகுவதாய்த் தோன்றுகிறது.
குரலில் கரகரப்பு கூடுகிறது.
ஆனாலும் அவனுடைய ஆனந்தத் துள்ளலில்
கரடிக்குட்டியும் முயலும் சின்ன பப்பியும்
செல்லப் பாப்பாவும் வரக் காண்பது
சொல்லிலடங்கா சூட்சும தரிசனமாய்…!
இசையின் உன்மத்தநிலையில்
சூரிய சந்திரராய் சுடர்விடும் அந்த விழிகள்
அனந்தகோடிமுறை அருள்பாலிக்கின்றன!
'கண்ணான கண்ணே கண்ணான கண்ணே'
என்று அழைக்கும் அந்தக் குரல்
கண்ணனுடையதாக _
கிறங்கிக்கிடக்கும் கோபியர் கூட்டம்
பாலினங் கடந்து!
வியர்வையில் நனைந்த முதுகுப்புறச் சட்டையும்
முன்நெற்றி முடிச்சுருளுமாய்
அந்தப் பாடகனின் குரல்
அநாதி காலத்திலிருந்து கிளம்பி
அரங்கில் ரீங்கரித்துக்கொண்டிருக்கிறது.
மேடையிலிருந்த வாத்தியக்காரர்களெல்லாம்
அவனுடைய பிரதிபிம்பங்களாய்….
அல்லது, அந்தப் பாடகன் அவர்களுடைய
விரல்களனைத்தின் ஒற்றைக்குரலாய்....
பாடலை எழுதிய, இசையமைத்த
கைகளும் மனங்களும்
தனி அடையாளம் இழந்து அந்தக் குரலில்
இரண்டறக் கலந்து
ஈரம் நிறைக்கும் இசையில்
அரங்கமெங்கும் க்வாண்ட்டம் அணுக்களாய்
விரவிய ரசிகர்களின்
காலம் இல்லாமலாகியது.
அன்பின் குறுக்குவழி அல்லது சுற்றுப்பாதையின்
அரூப ஓவியங்களைத் தீட்டிமுடித்து
அவன் விடைபெற்றுக்கொள்ளும்போது
அரங்கிலுள்ளோர் எழுந்து நின்று கைதட்டி
அவனை அத்தனை அன்போடு
வழியனுப்பிவைக்கிறார்கள்.
நான்கு சுவர்களுக்குள் ஒரு பிரபஞ்சவெளியை
உருவாக்கித்தந்தவனுக்கு
என்னவென்று நன்றிசொல்வது என்று தெரியாமல்
நீர் தளும்பி வழிகிறது கண்களிலிருந்து.
