LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, May 21, 2018

கண்காட்சி - ரிஷி(latha Ramakrishnan)


ரிஷி(latha Ramakrishnan)



ஒருவிதத்தில் அதுவுமோர் அருவவெளிதான்….
அந்த விரிபரப்பெங்கும் அங்கிங்கெனாதபடி அலைபாய்ந்துகொண்டிருக்கின்றன
ஆட்கொல்லிப் புகைப்படக்கருவிகள்,
அனுமதியின்றியே ஸெல்ஃபியெடுக்கும் கைபேசிகள்,
வாயைக் கிழித்துப் பிளப்பதாய் நீட்டப்படும் ஒலிவாங்கிகள்…..
போர்க்கால நடவடிக்கையாய்,
பேசு பேசு பேசு….’ என்று அவசரப்படுத்திக்கொண்டேயிருக்கின்றன
அத்தனை காலமும் பொதுவெளியில்
பரஸ்பரம் கடித்துக்குதறிக்கொண்டிருந்தவர்கள்
ஆறாக்காய ரணமாய் அவமதித்துக்கொண்டிருந்தவர்கள்
ஆயத்த ஆடையாய் நேச அரிதாரம் பூசி
போஸ்கொடுப்பதைப் பார்க்க பிரமிப்பாயிருக்கிறது.
ஒரு நொடியில் வெறுப்பை விருப்பாக்கிக்கொள்ள முடிந்தவர்கள்
பித்துக்குளி போலா? புத்தனுக்கும் மேலா? பெரும்
வித்தக வேடதாரிகளா….?
ஆடலரங்கை யாருமற்ற வனாந்திரமாக பாவித்து நான் ஆசைதீர
ஓடிக்கொண்டிருந்தால் எப்படி?
வாள்வீச்சாய் ஆரவாரமாய் அழைத்தபடி துரத்திவந்து
தோள்மீது கையிடாத குறையாய் இறுக்கி
யென்னை நெருக்கித் தள்ளுகிறார்கள் ஸெல்ஃபிக்குள்….
சொல்லிவைத்தாற்போல்கொல்லென்று எல்லோரும் சிரிக்க
சிரிக்கிறது என் முகமும்.
ஊரோடு ஒத்து வாழ் எனக் கேட்குமோர் அசரீரி உள்ளிருந்து
பரிகாசமா, அறிவுரையா? வெனப் புரியாத் தொனியில்.
யூ-ட்யூபில் நாளை காணக்கிடைக்கலாம் இந்த அன்புப்பிணைப்பு.
அதில் விகசித்துநிற்பது நானல்ல என்பதென் நியாயக்கணிப்பு.


அவரவர் – அடுத்தவர் - ’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)



ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)


வி பறக்கக் காப்பியருந்தினேன்என்று
அதிநவீனமா யொரு வரி எழுதியவர்
அருமையின் அரிச்சுவடியும் அகராதியும் இஃதேஎன்று
ஆட்டோகிராஃப் இட்டு முடித்தபின்
தன் வலியை உலகக்கண்ணீராகப் புலம்பினால்
கவிதையாகிடுமாவென
அடுத்தகவியை இடித்துக்காட்டி
நிலம் விட்டு நிலம் சென்றாலும்
நகம்வெட்டித்தானேயாகவேண்டும்என்று
தன் கவிதையின் இன்னுமொரு வரியை எழுதிவிட்டு.
பின்குறிப்பாய்,
கவிதைவரலாற்றில் க்வாண்ட்டம் பாய்ச்சல் இதுவென்றால்
ஆய்வுக்கப்பாலான சரியோ சரியது கண்டிப்பாய்
எனச் சிரித்தவாறு முன்மொழிந்து வழிமொழிந்து
வந்துபோன என் வசந்தம் தந்ததொரு தனி சுகந்தம் என்று
சொத்தைக்ளீஷேக்களைக் கவிதையாக்கி
தத்துப்பித்தென்று உளறி வதைக்கிறாரெ
சக கவியைக் கிழிகிழித்து
சத்தான திறனாய்வைப் பகிர்ந்த கையோடு
முத்தான முத்தல்லவோ, என் முதுகுவலி
உலகின் குத்தமல்லவோஎன
கத்துங்கடலாய்க் கண்கலங்கிப்
பித்தாய் பிறைசூடிப் பிரபஞ்சக் கவிதையாக்கி
மொத்தமாய்  மேம்படுத்திக்கொண்டிருக்கிறார்
வெத்துக்காகிதத்தை!


’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்






ஊருக்கு உபதேசம்


நாவடக்கம்
வேண்டும்
நம்மெல்லோருக்கும்.


ஆபத்தானவர்கள்

அவரவர் கோபுரத்துள் அமர்ந்தபடி
அக்கிரமக் கருத்துரைத்து
அமைதியிழக்கும் ஊருக்காகவும்
அடிபட்டுச் சாவும் சகவுயிர்களுக்காகவும்
கவனமாய்
’க்ளோசப்’ பில் கண் கலங்குபவர்கள்.

Ø

புதிர்விளையாட்டு.

காயம்பட்ட ஒருவரை
ஸ்ட்ரெச்சரில் ஏந்தி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதற்கும்
பாடையில் தூக்கி சுடுகாட்டிற்குக் கொண்டுசெல்வதற்கும்
இடையே
குறைந்தபட்சம் ஆறு வித்தியாசங்களாவது உண்டுதானே.

Ø

முகமூடி

அதிவேகத்தில் விரையும் ரயிலின் அருகில் நின்று ஸெல்ஃபி எடுத்துக்கொண்டால் ஆபத்து.
அன்பே உருவாயொரு களங்கமில்லாக் குழந்தையாய்
என்றேனும் சிரிக்கக் கிடைத்திருந்தால்
அதை மறவாமல் ஸெல்ஃபி எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.
தேவைப்படும்போதெல்லாம் அதை வெளியிட்டுக்கொள்ளலாம் –
ரத்தவெறிபிடித்த கோரமுகத்தைக் உள்ளுக்குத் தள்ளி.

Ø

பார்வைப்பரப்பு

அரைக்கோப்பை நிறைந்திருக்கிறதென்றார் ஒருவர்.
அரைக்கோப்பை காலியாக இருக்கிறது என்றார் ஒருவர்.
வாழ்க்கை குறித்த அவரவர் பார்வை என்று
உளவியலாளர் கூறுவது
அவர் பார்வையென்றுரைக்க
இன்னொருவர்…….

Ø

கவிமூலம்

இவர் சில வார்த்தைகளை உதிர்க்க
அவர் சில வார்த்தைகளை உதிர்க்க
ஒரு வரி உருவானது….. வரிவரியாய்
இருநான்கு பத்திகளைக்கொண்டமைந்த
அக்கவிதையில்
இரண்டறக் கலந்திருந்தவர்கள்
இன்று எங்கெங்கோ….
எதிரெதிர்துருவங்களாய்…
இறுகிப்பிணைந்திருக்கும் சொற்களாலான
கவிதை
சப்பரமாய் நின்றபடி.

Ø

அஷ்டாவதானம்

அன்பை ஒரு கையால் எழுதியவாறே
மண்டையையொன்றைப் பிளக்க
மறுகையால் கோடரியைத் தேடிக்கொண்டிருக்க,
வாழ்வின் நிலையாமையை வாய் போதிக்க
வகையாய் சிக்க ஏதேனும் பெண் கிடைப்பாளா
என்று கண் அலைய,
சமூகத்துத் துர்வாடைகளுக்கெல்லாம்
எதிர்ப்புகாட்டுவதாய் மூக்கு சுளித்து,
காதுகள் கவனமாய்
ஊர்வம்பை உள்வாங்கியபடி….