LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, July 7, 2015

கடந்துவிடும் இதுவும்……’ரிஷி’யின் கவிதைகள்

’ரிஷி’யின் கவிதைகள்

            கடந்துவிடும் இதுவும்……

ரிஷி


1.   அறிவிப்பு

அடுத்தவேளை சோற்றுக்காக
அவசர அவசரமாய் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
அழைக்கும் தொலைபேசியின் மறுமுனைப் பெண்குரல்
தன் தத்துப்பிள்ளையை சிலமணிநேரங்கள்
எனக்குக் காதலனாய் குத்தகைக்கு விடுவதாய்
அறிவிக்கிறது.
என்ன மாதிரியான விளம்பர உலகம் இது….
வசதிபடைத்தவர்களின் வாய்வழி
எப்படியெல்லாம் வக்கரித்துப்போகிறது அன்பு…
உப்புக்கரிக்கும் துக்கத்தை என் செய்வது….


2.   இடைவெளி

ஒரு ஊடகத்தின் மூலம் உணர்த்தப்படுகிறது அன்பு.
ஊடகம் உயிருள்ளதென்கையில்
உணர்த்தப்படும் அன்பா, ஊடகமா
எது முன்னிலை பெறுகிறது…?
என்றெழும் கேள்வி
தவிர்க்கமுடியாமல்
திணறும் சுவாசமாக.


3.நரமாமிசம்

அன்பிலூறிய மனம் ஒன்றை
அறுபது துண்டங்களாக வெட்டி யெடுத்து
அவற்றில் ஒரு சிலவற்றை
அண்டங்காக்கைகளுக்குத்  தின்னக் கொடுக்கிறார்கள்.
பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளும் பெருவிருப்பில்
அலைபேசியில் படம்பிடித்துக்கொள்கிறார்கள் அதை.
நாக்கைச் சப்புக்கொட்டியவாறு சொல்லிக்கொள்ளவும் கூடும்:
 “நரமாமிசம் தனிருசிதான்”.


4.எச்சில்

வேலை, வெய்யில் அன்னபிற வரவாக்கும் மிகு அயர்வில்
வாடிச் சோர்ந்து
சற்றே இளைப்பாற நாடிவந்தேன்
நதியோரமாய் அந்தரத்தில் நீண்டகன்ற திண்ணைப்பக்கம்.
மடியில் கனமில்லை.
மனமே தலையணையாய்
கண்ணயர்ந்துபோனேன் காற்றின் தண்வருடலில்.
போகிறபோக்கில் ஏனோ அத்தனை வன்மமும் அலட்சியமுமாய்
என்மீது துப்பிவிட்டுச் செல்கிறார்கள்.


5.ஊழ்வினை.

மேலோங்கி வளர்ந்திருந்த மரத்தின் கிளைகளை
மும்முரமாய் உலுக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
மலர்மழை பொழியச்செய்யவோ
என்று ஒருகணம் மனம் நெகிழ்ந்துபோகிறது….
இல்லை, இலைகளிடையே சிக்கிக்கிடக்கும் அம்பு
நேரே என் நெஞ்சில் பாயும்படியாக
விரைவாய் விழச் செய்தபடி
அவர்களது ஒருநாள் நிறைவடைகிறது.


6. செத்தகாட்சிச்சாலை

வளிமண்டல அடுக்கொன்றில் கரியமிலவாயு அடர்ந்துகொண்டே போகிறது.
இரண்டு பிரும்மாண்ட விமானங்கள் மாயமாய் மறைந்துவிட்டன.
நட்சத்திரங்கள்கூடத் தொடர்ச்சியாகக் களவாடப்பட்டுவருகின்றன என்று கேள்வி…..
செத்தகாட்சிசாலையின் கூண்டுகளெங்கும் கம்பிகளுக்குப் பின் மனிதர்கள்
எட்டுக் காலும் ஈரிரண்டு வாலுமாய்….
ஆயினும் இந்த எளிய மனம் மட்டும் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறது
புல்லின் நுனியில் காணும் பனித்துளி நிரந்த மென்று.


 7. நான் கட்டிவளர்த்திருந்த உலகு

உண்மைதான், பெயரில் என்ன இருக்கிறது……
புனைப்பெயரில் மட்டும்….
எட்டும் அறிவிற்கப்பால்
என் புனைப்பெயரில் நான் கட்டிவளர்த்திருந்த உலகின்
வெட்டுக்கிளிகளும் வண்ணத்துப்பூச்சிகளும்
விவரிக்கவியலா அவசங்களும் பரவசங்களும்
புதிதாய் என் புனைப்பெயரில்
சிற்றிதழ்வெளியில் களமிறக்கப்பட்டிருக்கும்
(சட்டச்சிக்கலுக்கு ஏதும் வழியில்லை என்பதாலோ)
கவிதைகளைக் கண்டு
நேயம் பொய்த்த நெஞ்சின் பாங்கில்
கூடிழந்து, நட்ட நடு வெளியில் நிலைகுத்தி நின்றவாறு…..

8. பன்மடங்கு

என் னொரு வார்த்தைப் பட்டு வெட்டுப்படலாகும் இதயத்திலிருந்து
கசியும் ரத்தச்சொட்டு
இன்னுமின்னும் என்னைப் பட்டுப்போகச் செய்யும்.
அன்பைத் துண்டாடும் வன்முறைப் பிரயோகமாய்
அடுத்தடுத்துக் கிளம்பும் வீச்சரிவாள்களோ
என் ஆன்மாவைப் பிளந்தவண்ணம்….


 9. நீள்பயணம்

பத்துவருடத்தை நீட்டிப்போட்டதிலான
பல்லாயிரங் காத தூரமெல்லாம்
பிரளயங்கள் _
உருள்பாறைகள் _
முறிமரங்கள் _
பெருவாகனத் தடம்புரளல்கள் _
பசிவயிறுகள் _
பிரிவின் உதிரப்பெருக்கு _
இறந்தவர்களின் அழுகிய உடலங்கள் _
சிறிதுசிறிதாக அழிந்துபடும் வழித்தடங்கள்…..
கண்டுருகிச் சோர்ந்திறுகிச்
சிதையும் இதயம்
இன்னும் போகவேண்டும் நீள்பயணம்.


10.   இயக்கவியல்

எத்தனைமுறை எண்ணினாலும்
கிடைக்கும் விடை பூஜ்யமாகிறது.
”கணக்குத் தெரியவில்லை யுனக்கு
வடிகட்டின மக்கு” எனக்
கைகொட்டிச் சிரித்தபடி செல்கிறார்கள்
‘காட்டேஜு’க்கு.
மடைதிறக்கும் கையறுநிலை.

மீட்டெடுக்கும் ‘CODE NAME GOD’.


(மலைகள்.காம் ஜூலை முதல் இதழில் வெளியாகியுள்ளது)
 Ø      

கஸ்தூரி - சிறுகதை

சிறுகதை


கஸ்தூரி
’அநாமிகா’
(லதா ராமகிருஷ்ணன்)

{’அநாமிகா கதைகள்’ -  சிறுகதைத் தொகுப்பு, கலைஞன் பதிப்பகம், 2002}

[இம்மாத பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது]





”ஏறிக்கொள்ளுங்கள்” என்றவனுக்கு நன்றி கூறியவாறே மூட்டை முடிச்சோடு முண்டியடிக்க முயன்றும் முயலாமலு மாய் உள்ளே ஏறி பதினான்காம் எண் இருக்கைப் பக்கம் போன போது அங்கே ஏற்கெனவே ஒருவர் தொந்தியும் தொப்பையுமாகப் பொருந்தியமர்ந்திருந்தார்.


“ஸார், இது என்னுடைய இடம்.”


“மன்னிக்கவும், இது என்னுடையது.”


அவரவருடைய இடத்தைக் கண்டுபிடிப்பது தான் உலகி லேயே அதிசிரமமான காரியமாக இருக்கும் என்று தோன்றியது. ’அவரவர் இடம்’ என்பதிலும் அவரவருக்கு விதிக்கப் பட்ட இடங்கள், வாய்த்த இடங்கள், அவரவர் விரும்பிய இடங்கள் என்று எத்தனை பிரிவுகள்…. விதிக்கப்பட்டதற்கும் வாய்த்த தற்கும் என்ன வேறுபாடு என்ற கேள்விக்கு ‘நிச்சயம் ஏதோ வேறுபாடு இருக்கிறது’ என்பதாக மனம் இடக்காகக் கூறியது. அப்படி வேறுபாடு இருக்கும் பட்சத்தில் விதிக்கப்பட்டதும் சரி, வாய்த்ததும் சரி, விரும்பிய – விரும்பாத என்பதாக வேறு சிலவாகவும் கிளை பிரியும்…..


“என்ன ஸார், அங்ஙனேயே நிக்கிறீங்க? இந்த வண்டி தானே நீங்க?”


“ஆமாம், ஆனா இவர் என் இடத்தைத் தன்னுடைய துன்னு சொல்றார்.”


”அதெப்படி? என் இடத்தை நீங்கள் தான் உங்களு டைய தென்று சொல்கிறீர்கள்.” உட்கார்ந்திருந்தவர் விறைப்பா கக் கூறினார்.


“அட, யார் இடம் யாருக்கு சாசுவதம் சார்…. அதுவும், ஒரு ஆறு மணி நேரத்துக்குப் போய் எதுக்கு இத்தனை எடக்குமுடக்குப் பேச்சு?” சலிப்பாகத் தத்துவத்தைச் சிதற விட்டபடியே நடத்துனர் வந்துபார்த்து என் பயணச் சீட்டை ‘டபுள் செக்’ செய்வதற்காய் ஓட்டுநர் இருக்கைப் பக்கம் அமர்ந்திருந்தவ ரிடம் கொண்டு சென்றார்.


“ஐயா, நீங்க அடுத்த வண்டிக்குப் போகணும். இது ஒன்பதரை வண்டி. லேட்டு. அதான் குழப்பம்.”


“அப்ப, என் பத்து மணி வண்டி பத்தரைக்கு வருமா?”


“பத்தரையும் ஆகலாம், பனிரெண்டும் ஆக லாம். எதைத் தான் உறுதியாகச் சொல்ல முடிகிறது?”


என் முறைப்பும், ஓட்டுநரின் எக்ஸ்பர்ட் காமெண்ட்டும் மோதிக்கொண்ட கணத்தில் என்னிடமிருந்து வாங்கப் பெற்ற பயணச்சீட்டு என் கையில் பரிவோடு திணிக்கப் பட, நான் இறங்கிக்கொண்டேன்.


அடுத்த வண்டி இரண்டுபேருடைய கணிப்பிற்கும் பொதுவில் பதினோறு மணியளவில் வந்தது. ஏறி எனது பதினான்காம் எண் இருக்கையை அடைந்து அது காலியாக இருக்கக்கண்ட ஆசுவா சத்தில் அமர்ந்து நடத்துநரிடம் காண்பிக்க சௌகரியமாய் பயணச் சீட்டைப் பிரித்து நீவிவிட்டபோதுதான் பார்த்தேன் – என் பெயர் இருக்கவேண்டிய இடத்தில் ‘கஸ்தூரி’ என்ற பெயர் இருந்தது.


நானேதான் போய் பயணச்சீட்டு வாங்கியது. பின், எப்படி….?


வண்டி கிளம்பிவிட்டது.


கஸ்தூரியாகப் பயணம் செய்வது என்ற தீர்மா னத்தில் நின்று நிலைக்கவேண்டிய நிர்பந்தம்.


‘பெண்களுக்கென்று தனி இருக்கைகள் சில இருக்கும்போது இங்கே எதற்கு ஒரு பெண்ணுக்கு இடம் தரப்படவேண்டும்…..?’ இந்தக் கேள்வியும், நடத்துனர் எந்தவித சந்தேகப் பார்வையும் இன்றி பயணச் சீட்டைப் பார்வையிட்டுத் திரும்பத் தந்த விதமும் கஸ்தூரி என்பது ஓர் ஆணின் பெயராகவே இருக்கக்கூடும் என்று கருத வைத்தது.


போன வண்டியில் ‘டபுள் செக்’ செய்தவர் தவறுதலாக மாற்றித் தந்திருக்க வேண்டும். அப்படியானால், என் பெயரிலும் யாரோ பயணம் செய்துகொண்டிருப்பார். அது யாராக இருக்கும்…?


கூடுவிட்டுக் கூடு பாய்ந்தது போன்ற குறு குறுப்பு உள்ளே ஏற்பட்டது.


கஸ்தூரியின் பயணம் எதற்காக மேற்கொள் ளப்பட்டிருக்கும்? கஸ்தூரி என்ற மனிதன் எப்படிப்பட்டவன்? வாழ்வில் இந்தத் தருணத் தில் அவனுடைய இழப்புகளும் வரவுகளும் என்னென்ன? அவனுடைய வாழ்க்கையில் எத்தனை பெண்கள் நேரிட்டிருப்பார்கள்? எனக்கெதற்கு இந்த ஆராய்ச்சியெல்லாம்….?


ஜன்னல் வழியாகப் பார்வையையோட்டி வந்ததில் நிலாவும் கூடவே ஓடிவந்தது.


* * *


YOUTH WILL BE SERVED’. தோற்கத்தான் போகி றோம் என்று தெரிந்தே, தோற்றாலும் கிடைக்கக் கூடிய பணம் பசியைப் போக்கிக்கொள்ள உதவுமே என்பதற் காய், இளைஞனை எதிர்த்துக் களமிறங்கும் முன்னா ளைய குத்துச்சண்டை வீரனின் வாசகம்.   JACK LONDONஇன் A PIECE OF STEAK….. படித்த கதையின் வரியும் கூடவே ஓடி வந்தது.


பாவனை வெகுளித்தனத்தில் அல்லது பட்ட வர்த்தன அலட்சியத்தில் ‘படா’ரெனத் தழைந்து முழு மார்புகளையும் தளும்ப வைத்துக் காட்டும் பெண்களை எனக்குப் பிடிக்காது. ஆனால் நிறைய பேருக்கு அத்தகைய தளுக்கும் குலுக்கும் தேவையாக இருக்கிறதுதான். நானாகி யிருக்கும் கஸ்தூரி க்கும் தேவையாக இருக்குமோ…..’


கஸ்தூரி கல்யாணம் ஆனவனா, ஆகா தவனா….


நிலா கூடவே ஓடி வருவது இம்சையாக இருந்தது…. ‘எல்லோருடனும் ஓடி ஓடி என்ன நிரூபிக்க முயன்று கொண்டிருக்கிறாய் நீ… எல்லோரிடமும் ஒரேயளவாய் அன்பு செலுத்த முடியும் என்றா? எல்லோருக்கும் ஒரேயள வாய் முக்கியத்துவம் தரமுடியும் என்றா…?’


* * *


உங்களுக்கு வேண்டாத சந்தேகம். உடைமை யுணர்வு.”


“இருக்கலாம்”


“என்னோடு ஒரே செக்‌ஷனில் பணிபுரிபவரோடு நான் சினேகமாகப் பழகுவதில் என்ன தவறு?’


“தவறு என்று நான் சொல்லவில்லையே.”


“பின், உம்மென்று நீங்கள் இருப்பதற்கு அது தானே காரணம்?”


“இன்னும் சொல்லேன் – ஜாங்கிரி இனிக்கு மென்றால் மைசூர்பாகு கசக்குமென்றா அர்த்தம்? கரும்பு தித்திக்குமென்றால் கல்கண்டு கசக்குமென்றா அர்த்தம்?  இன்ன பிற…. I AM TIRED அமுதா. என்னைப் பொறுத்தவரை பொஸ ஸிவ்நெஸ், பொறாமை எல்லாமும் எந்த உறவிலும் தவிர்க்க முடியாதது. ஆண் – பெண் உறவில் அதற்குக்  கூடுதல் இடமும் உண்டு. TWO IS COMPANY; THREE IS CROWD கேள்விப்பட்டிருக்கிறாயல்லவா?”


“இதென்ன அநாவசியப் பேச்சு? இப்போது நாம் மட்டும் தானே இருக்கிறோம். அவன் வருவது  பிடிக்கவில்லை என்று நீங்கள் சொன்ன நாளிலிருந்து நான் அவனை இங்கே கூட்டிக்கொண்டே வருவதில்லையே_”


கசப்பாய் ஒரு சிரிப்பு வெளிப்பட்டது என்னி டமிருந்து. கஸ்தூரியிடமிருந்தும் வெளிப்பட் டிருக்குமோ….


“நீ அவனை எங்கேயும் விட்டுவிட்டு வருவதில்லை அமுதா. என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் அவனைக் கூட்டிக் கொண்டு வருகிறாய். அவனைப் பார்க்கச் செல்லும்போதெல்லாம் என்னையும் உடன் அழைத்துச் செல்கிறாய். எங்களிருவரிடையே நட்பு உண்டாக்குவதாய் நீ மேற்கொள்ளும் முயற்சிகளெல்லாம் உண்மையில் எங்களி டையே ஒரு நிழல் யுத்தத்தைத் தான் முனைப்பாக நடத்துகின்றன. நீ என்னை அணைக்கும் போதெல்லாம் நமக்கிடையே அவன் இருப்பதாகவும், நான் உன்னை முத்தமிடும் போதெல்லாம் என் உதடுகளில் நீ அவனுடையதை உணர்வதாகவும்…. எத்தனை நாட்கள் எத்தனை அல்பமாக உணர்கிறேன் தெரியுமா?”


சொல்லும்போதே ஒரு கழிவிரக்கத்தில் என் கண்கள் சுரப்பதை முள்வலியாய் உள்வாங்கிக் கொள்கிறேன்.


“இத்தனை குறுகிய மனதா உங்களுக்கு?”


“பார்த்தாயா, இப்படியே தொடர்ந்தால் இனி நான் உன்னை ‘வேசி’ என்பேன். நீ என்னை MCP என்பாய். இதுநாள் வரை நாம் அனுபவித்த இனிமையெல்லாம் மறைந்துபோகும்வரை ஒரு வரையொருவர் தூற்றிக் கொண்டே தொடர்ந்து காதலித்துவரவேண்டும் என்று என்ன கட்டாயம் சொல்?.”


ஒரு மன்றாடலாய் என் குரல் தெறித்தது.


“நான் இனிமேல் அவனைப் பார்க்கக்கூடாது, பேசக் கூடாது – அவ்வளவு தானே?”


அப்படிச் சொல்ல நான் யார்? அப்படி நான் சொல்லச் சொல்ல அவனுடனான உன் சூக்கும சந்திப்புகள் அதிகரித்துக்கொண்டேதான் போகும்…. இனிமேல் நாமிருவரும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொள்ள வேண்டாம், பேசிக்கொள்ள வேண்டாம், பரஸ்பர நல்லெண்ணங்களோடு பிரிந்துவிடுவோம் என்றுதான் நான் சொல்கிறேன்….” 

– எனக்குள் வழிந்தோடுகின்ற குருதி எத்தனைக் குடங்கள் இருக்கும்….. மிகவும் பலவீனமாய் உணர்கிறேன்….


“இது EMOTIONAL BLACKMAIL”


“உன்னைப் பொறுத்தவரை. எனக்கு, என் அமைதிக்கான விண்ணப்பம்.”


“நான் உன் நிம்மதியைக் கெடுக்கிறேன் என்கிறா யல்லவா?”


“நீ வேண்டுமென்றே செய்கிறாய் என்று நான் சொல்ல வில்லை. ஆனால் அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறாய்.”


“இது அநியாயப்பழி/”


“இருக்கலாம்.”


“நம்முடைய பிரிவுக்கு நீதான் காரணம்.”


“நேரிடைக் காரணம், அல்லது, உடனடிக் காரணம் மட்டுமே.”


* * *


“கஸ்தூரி…. உங்களுக்குத் தெரியுமா, இறுதி வரை, ஒரே யொரு தடவை கூட, ஒரு பேச்சுக்காகக் கூட, ‘அவனை விட நீதான் எனக்கு முக்கியம்’, என்று அவள் கூற வில்லை. அப்படி எதிர்பார்ப்பது என் ஆணாதிக்க மனோ பாவம் என்கிறீர்களா? TO HELL WITH YOU. அவள் என்னை மாங்காய்மடையனாக்குவது மட்டும் சரியா? இன்னொரு ஆணோடு பேசுவதில் என்ன தவறு என்கிறீர் களா? படுத்துக்கொள்ளக்கூடச் செய்யட் டும். தவ றில்லை. அதற்கு என்னால் ‘விளக்குப் பிடித்துக்கொண் டிருக்க முடியாது ‘ என்றுதான் சொல்கிறேன். அப்படிச் சொல்ல எனக்குக் கட்டாயம் உரிமையிருக்கிறது.


நாளை தீபாவளி. பண்டிகைக் கொண்டாட்டம் என்ற பெயரில் வீட்டில் ‘ஜமா’ கூடும். கட்டாயம் அவன் வரு வான். என்னைவிட எட்டுவயது இளையவன். அவளை விட இரண்டு வயது பெரியவன்.


‘YOUTH WILL BE SERVED’….’


திடுமென ஞாபகம் வந்தவர்களாய் என்னைக் கண்களால் சுட்டிக்காட்டித் தங்களுக்குள் மௌனமாய் எதையோ குறிப் பாலுணர்த்திக் கொண்டு, வரவழைத்துக்கொண்ட அக்கறை யோடு வேறு வேறு விஷயங்களை என்னிடம் பேசப்புகுவார் கள். அதைவிட அதிகமாய் ஒரு மனிதனை அவமானப்படுத்த முடியுமா கஸ்தூரி? சொல்லுங்கள்? அதனால்தான் இன்று கிளம்பிவிட்டேன். கடைசி நேரத்தில் முன்பதிவு செய்து தேனியைத் தாண்டியுள்ள மலையோர கிராமங்களில் ஒன்றான ‘ஏமாந்தான்பேட்டை’க்குக் கிளம்பிவிட்டேன். இயற்கையோடும் தனிமையோடும் அளவளாவுவதும் உறவாடுவதும்தான் உண்மை யிலேயே ஆசுவாசம் தரும் விஷயமாகத் தோன்றுகிறது கஸ்தூரி…..


* * *


வண்டியின் தாலாட்டில் அரைத்தூக்கத்தில் ஆழ்கி றேன்…. பக்கத்தில் அமர்ந்தபடி கஸ்தூரி யிடம் கலகல வென்று அமுதா பேசிக்கொண்டே வர, அதனாலெல்லாம் கவரப்படா தவராய் கஸ்தூரி அரைச்சொல், ஒரு சொல்லில் எதிர்வினை யாற்றிக்கொண்டிருந்தது பெரிய ஆறுதலாக இருந்தது எனக்கு. அதைவிட, அடிக்கொரு தரம் குனியும் அவளுடைய தளும்பும் மார்பகங்கள் கஸ்தூரியை அலைக்கழிக்கவில்லை என்ற விஷயம் என் மனதின் அதலபாதாளங்களையெல் லாம் சீர்படுத்தியது.


* * *

‘கஸ்தூரி….நீங்கள் உண்மையாலுமே மனத் திடம் வாய்ந்த நேர்மையான மனிதர்தான். உங்களால் என் தரப்பு நியாயத்தைக் கண்டிப்பாய் உள்வாங்கிக்கொள்ள முடியும்…. ஆனால், அதற்காய், அமுதாவை ‘ஆம்புளைப்பொறுக்கி’  என்ற மாதிரியெல்லாம் எண்ணிவிடாதீர்கள் ப்ளீஸ்…. அவள் மட்டும் என் வாழ்வில் எதிர்படாமலிருந் திருந்தால் எனக்குக் கைகால்களின் பயனெல்லாம் காலை-மாலைக் கடன்களை முடிப்பது மட்டுமே என்றாகி யிருக்கும்… சங்கோஜியான, SOLITARY REEPERஆன என்னைத் தேடித்தேடி வந்து அவள் கொண்டாடிய சொந்தம் எனக்கு வாழ்வில் கிட்டிய வரப்பிரசாதம். அருகேக ஏக, உரிமைப் பிரச்னைகள் விசுவரூபமெடுப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அதனால்தான் பிரிவு மேல் என்று தோன்றுகிறது. எது என்னுடையதோ, எது எனக்கு விதிக்கப்பட்டிருக் கிறதோ அது என்னிடமே வரும். ஆனால், நான் ஞானி யில்லை கஸ்தூரி… வலி கூடிய சாதாரண மனிதன். ஒரு இதயத்தில் ஒரு நேரத்தில் ஒருவரைத் தவிர அதிகமாய் ஏந்திக்கொள்ளத் தெரியாதவன்; முடியாதவன். ஆனால், அமுதா சென்ற விடமெல்லாம் அன்பர்களைத் திரட்டிக் கொள்பவள். அதில் அவளுக்கு மமதை என்று சொல்ல முடியாது… ஆனாலும் மைய அச்சாக அமைந்து பல வட்டங் களை ஒரே சமயத்தில் சுழலச் செய்வதில் யாருக்குத்தான் சந்தோஷம் இருக்காது? எல்லா வட்டமாகவும் நான் இருக்க ஆசைப் பட்டது என் தவறுதான். அதனால்தான், நானே எனக் கான அச்சும் வட்டமுமாகிவிடுவது என்று முடிவெடுத் தேன்… என் முடிவு சரிதானே கஸ்தூரி….?


’கஸ்தூரீ…. நீங்களும் ஆண் தானா? அல்லது, பெண்ணா? பெண் என்றால் நான் பேசியதை நீங்களும் ஆணாதிக்கப் பன்றித்தனமாகத்தான் பகுப்பீர்கள். இன்னொருவனிடம் பேசினாலே இவனுங்களுக்கெல்லாம் ஜன்னி கண்டுவிடும் என்று குதறுவீர்கள். அமுதாவின் சினேகிதர்களெல்லாம்  அவளோடு படுக்கையிலிருக்கக் கண்டால் மட்டும்தான் என் மனம் பதற வேண்டும் என்பது என்னவிதமான நியதி? அன் பின் விஸ்தீரணத்தையே குறுக்கிவிடுமல்லவா இத்தகைய நியதிகள்…?


என் உடைமையுணர்வைத்தான் நான் உண்மை யான அன் பாக எடுத்துக்காட்ட முயல்கிறேனா? அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்கிறீர்களா? அதனால் தானோ என்னவோ, புதிதாய் ஓர் அன்பு உள்ளே நுழைய, உள்ளிருக் கும் பழைய அன்பு வெளியேறிவிடுவது நேர் கிறது.


என் அணுகுமுறை சரிதானே? சொல்லுங்கள் கஸ்தூரி… நீங்கள் ஆணா – பெண்ணா? கடைசி நேரத்தில் பெண்களுக் கான இருக்கைகளில் இடமில்லாமல் பொது இருக் கைகளில் இடம்தரும்படியாகிவிட்டதா? அறுபதுக்கும் இருபதுக்கும் இடையில், மணமாகியோ, ஆகாமலோ, கணவன் இருந்தோ, இல்லாமலோ, அவ்வண்ணமே கனவுகள் இருந்தோ இல்லா மலோ, ஒரு பெண்ணாக நீங்களிருக்கும் பட்சத்தில், ஆணுக் கும் பெண்ணுக்கும் உடல் ரீதியானவற்றைத் தவிர்த்து மற்றபடி என்ன வித்தியாசமிருக்க முடியும் என்று என்றாவது யோசித் திருக்கிறீர்களா?


என்னில் பொருந்தியுள்ள கஸ்தூரி அதை நிச்சயம் யோசித் திருக்கும். அஃறிணையாக அல்ல, அன்பின் மிகுதியாலே ‘இருக்கும்’ என்கிறேன். கஸ்தூரி…. என்னில் பொருந்தி யுள்ள கஸ்தூரியாகிய நீங்கள்தான் எத்தனை அழகு! என்றும் மாறா இளமையோடு, எனக்கேயெனக்கான அன்போடு என்றைக்குமாய் கூடவரும் நீங்கள் இல்லாமல் நான் மட்டும் எப்படி ‘ஏமாந்தான்பேட்டை’க்குப் போவது கஸ்தூரீ… வாருங்கள், இந்த இரவில் நம்மோடு வரும் நிலவொளியின் துணையோடு, ஜன்னல் வழியே பறந்து சென்றுவிடலாம்…. அப்படி மட்டும் செய்ய முடிந்து விட்டால்,……



Ø  





Thursday, July 2, 2015

கவிதை 1. வெந்து தணியும் காடு…’2. கனலும் சாம்பல் _. ‘ரிஷி

கவிதை
1.  வெந்து தணியும் காடு….
ரிஷி



துண்டுப்பெண்ணொருத்தியிடம் இவளது அந்தரங்கத்தை
 யவர்கள் விண்டுவைத்துக்கொண்டிருக்கும் நேரம்
ஒருவேளை கள்ளச்சிரிப்புடன் கண்ணடித்துக்கொண்டிருக்கக்கூடும்;
வியூகம் அமைத்து வென்று சூடிய வாகைகளைக்
கணக்கெடுத்துக்கொண்டிருக்கக்கூடும்….

ன்றேனும் அறிவார்களோ _
கூண்டுக்குள் வசிக்கப் பழகிவிடும் கிளி யல்ல இவள்;
அரசனருகில் அப்பாவியாய் ஆரோகணித்திருக்கும் அன்னமும் அல்ல.
கழுகின் கூர்விரிவைக் கைக்குள் பிரபஞ்சமாக்கி
விட்டு விடுதலையாகிநிற்கும் சிட்டுக்குருவி!

ருந்தும் சக்ரவர்த்தியின் திருத்தோள்களைக் கூடாகத் தரித்திருந்ததெல்லாம்
அவர் அருமை பெருமை அறிந்ததாலேயே.

ரசவையோ, பரிவாரமோ பரிசில்களோ ஒரு பொருட்டில்லை யென்றுமே.
ஆன்மாவின் அடியாழத்தைத் தீண்டுமவர் ஆலோலங் கேட்கவே
தத்தித்தத்தி நடைபழகிவந்த திக் குருவி யவர் காலடியில்.

தானியம் கேட்டதில்லை, மானியம் கேட்டதில்லை
ஆனமட்டும் அன்பையே இறகுசிலிர்த்துத் தூவிக்கொண்டிருந்தது
வானமுதாய்!

மேவுங்காலத்தே தன் குட்டிமூக்கா லவர் நிழலை நீவித்தருவதையே
தன் நல்வினைப்பயனாய் எண்ணியிருந்தது….

ன்குரலால் என்னவெல்லாம் பாட்டிசைத்தது இப்பூங்குருவி!
கேட்டிருப்பார்தானே மாமன்னரும்……..

தோ
பொசுங்கிக்கொண்டிருக்கின்றன இதன் இறக்கைகள்.
பொந்தில் யார் வைத்தாலும்
நெருப்பு நெருப்பு தான்……

ணவலியினூடாய் விர்ரென்று உயரப் பறக்கும் எத்தனத்தில்
சிட்டுக்குருவியின் விசுவரூபம் வெளிப்படும்!

றக்கத் தெரியும் இதற்கு; பறக்க முடியும் எப்போதும்.
அதுபோதும்.
குருவியின் விரிசிறகுத் தடங்கள் பரவும் ’வெளி’யெங்கும் இனி _

மேலும்.

ழிந்துவரும் இனம் எனவும் அவர்கள் பழிக்கக்கூடும்….

ரிணாம வளர்ச்சியில் அது ஃபீனிக்ஸ் பறவையுமாகிவிட்டதை
யின்னும் அறிந்திலர் போலும்……



2. கனலும் சாம்பல்

தொழில்முறைக் கொலைஞர்கள் எல்லாம் உங்கள் செயல்நேர்த்தியின் முன்
வெறும் கத்துக்குட்டிகள் என்றாகுமாறு எப்படி
இத்தனை துல்லியமாய் ஒற்றைச் சொடுக்கில்
உயிர்நாடியை எளிதாய்
இற்று நைந்த கயிறாய்ப் பிய்த்தெறிந்துவிட முடிகிறது உங்களால்…..?

சித்திரம் மட்டுமா கைப்பழக்கம்…..

ன்னமும் துடித்துக்கொண்டிருக்கும் குற்றுயிரை
அடுத்தவீட்டுச் சிறுமியின் கையில் கொடுத்து
அரைரூபாய்க்கு விற்று ஐஸ்க்ரீம் வாங்கிச் சாப்பிடச்சொல்லி
அனுப்பிவைக்கிறீர்கள் அத்தனை இயல்பாய்.

ருமானமல்ல, வீறிட்டுக் கேட்கும் வலியோலம் அளிக்கின்ற
பரவசமே சிலருக்குப் பிரதானமாய்.

மோதிப்பதாய் விரியும் சின்ன முறுவலோடு
அப்பால் செல்கிறீர்கள்.

ண்டிப்பாக பத்தோடு பதினொன்றல்ல
உங்கள் வித்தகம்.
தன்னிகரில்லா நிபுணத்துவம்.

ன்னவொன்று,
அதற்கான முன் தயாரிப்புகள்
அரதப்பழசாகிவருகிறது.

ங்கள் பட்டறை முகப்பில் மாட்டிவைக்கப்
பரிசளிக்கிறேன் இந்தப் பெயர்ப்பலகையை:

”மறுபிறவியாகுமாம் மரணம்.








Ø       

Wednesday, July 1, 2015

குகை என்பது ஓர் உணர்வுநிலை - கவிதை

 குகை என்பது ஓர் உணர்வுநிலை
அன்பின் பெயரால்...
ரிஷியின் ஆறாவது கவிதைத் தொகுப்பு


 புதுப்புனல் வெளியீடு







1)


காற்றாடிகளாக முடியாத காகிதத் துண்டு
துணுக்குகள் என்றாலும்
சொடுக்கியிழுக்கும் கைகளின் பிடியில்
சிக்காத பூரணத்துவம் கொண்டவை.
தலைக்கு மேலே சுற்றிச் சுழன்று
தரையிறங்கிக் கொண்டிருந்தன.
விழுந்த இடம் பொசுங்க
எழுந்த பிணவாடை
உனக்கு துர்நாற்றமென்றால்
எனக்கு சுகந்தம்.
அகராதியிலடங்காது இந்த மாற்றம்;
இரண்டறக் கலந்திருக்கும் இருட்குகையில்.


2)


குகைவாயிலில் தினமும் மாலை
பீறிட்டுயரும் ஊற்றைப் பார்ப்பதில்
வரவாகும்
நீர்த்துப் போகாத பரவசம்.
அன்றும் பார்த்துக் கொண்டிருந்தபோது
செங்குத்தாய் உயர்ந்து விரிந்து
பரவியது
செந்நிறத் தண்ணீர்.
வண்ண விளக்கைத் தேடிய கண்களுக்குத்
தட்டுப்பட்டது
வெட்டுண்ட மனமொன்று.
கிளம்பியது குருதியென்று விளங்கியதில்
கலங்கி
வாலைச் சுருட்டிக் கொண்டு குகைக்குள்
ஒடுங்கிக் கொண்டது காட்டுவிலங்கு
.

3)

தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது
தன்னைத் தானே.
கண்ணில் ததும்பிக் கண்ட வலியைக் கண்டு
வேடிக்கையாக இருந்தது.
காக்கைக் கொண்டாட்டமல்ல.
'உண்டென்றால் உண்டு; இல்லையென்றால் இல்லை'.
வலியும், இழப்பும், அவமானமும்
கையறுநிலையும் கூட
கடவுள் தான்.
குகையிருளில் பலவீனமாய் படுத்துக் கிடக்கும்
பெண்புலியின்
புண்பட்ட மென்மார்பை ரணப்படுத்துவதாய்
வீசியெறியப்படும்
எலும்புத் துண்டத்தால் எப்படி வயிறு நிறையும்?
தன்னையுந்திக் கொண்டு எழுந்து புறப்பட்டால்
தானே கிடைக்கும் பொழுதும் இரையும்.

4)


கண்களை இடுக்கிக் கொண்டு காத்து நின்றாள்
பார்த்த விழி பூத்து.
பூப்பெய்திய நாள் நினைவுக்கு வரவில்லை.
பசிக்கிறது என்றால் அதைக் கொச்சையாகப்
பொருள்பெயர்த்து
பெருங்குரலெடுத்துச் சிரிக்கத் தயாராய்
நாலாயிரம் பேர்.
ஊர் மறந்துவிட்டது.
நசநசவென்று பெய்யத் தொடங்கிவிட்டது
மழைமனம்.
வசவுச் சொற்களின் நிண ருசியை
வாய்க்குள் உணர்ந்தவளாய் மீண்டும் குகைக்குள் நுழைந்தவாறே
முனகிக் கொண்டாள் மூதாட்டி:
காசு தராமலே கிடைப்பாள் என்றாலும்
கிழப்பரத்தையைப் புறக்கணித்தல் தானே
குடும்பத்தலைவர்களுக்கு அழகு...



5)


வெளியுலகின் இடையூறின்றி வேண்டுமட்டும் கூடிக்களிக்க
இந்தக் குகையைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பெண்புலி.
பூனையாகி புதைந்து கொண்டது
அடுத்துப் படுத்துக் கிடந்த இணையின் அடிவயிற்றில். கண்துஞ்சிய நேரம் போக மீதி காலமெல்லாம்
நக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தது நேசமிகுதியில்.
ஆடாமல் அசையாமல் படுத்தவாறே
பங்கெடுத்துக் கொண்டிருந்த இணையின் மனதில்
நிலைகொண்டிருக்கக் கூடும்
அடுத்த வேளைக்கான இரையின் நினைவு.
சிந்தாநதியொன்று குகையின் அடியில் சீராக
ஓடிக் கொண்டிருந்தது.
பார்த்ததில்லை என்றாலும் அதன் ஒலிகேட்டுத்
தண்ணெனக் கனியும் பெண்மனம்.
குகைப்பாறையின் திண்மையைக் கொண்டாடுவதாய்
மறுபடி மறுபடி முகர்ந்து பார்க்கும்.
வினைமுடித்ததாய் வெளியேறி மறையும் இணையின்
தளதளவென்று பொலியும் வாலைப் பார்த்து
களிப்பு பெருகும்.
'பாவம், எவ்வளவு தொலைவு செல்ல வேண்டுமோ' என்று
தனக்குள் கேட்டுக் கொள்ளும்,
விசனமும், கரிசனமுமாய்.
திரும்பி வரும்போதெல்லாம் விருந்துண்ட கிறக்கமாய்
நாவைச் சுழற்றி மிச்ச ருசியை அசைபோட்டவாறிருக்கும்
இணையின் தரிசனத்தில்,
ஒரு துண்டு இறைச்சியும் தனக்குத் தரப்படவில்லை என்ற
நிதர்சனம் ஓரங்கட்டப்படும்.
திரும்பாமலே போகும் நாட்களில்
திரும்பாமலே போயிற்று ஒருநாள்.
இரண்டு மூன்று நான்காய் உருண்டோடிய பொழுதுகளில்
சுருண்டு கிடந்தது பெண்புலி, குகையின் ஒரு மூலையில்.
இதுநாள்வரை இருளிலேயே ஆனந்தமாய்க் கண்மூடி
மல்லாந்து கிடந்ததில்
கடந்துபோய்விட்ட காலத்தின் நீள்பரப்பு
சுருக்கென்று தைக்கிறது பிரக்ஞையில்.
சற்றே திரும்பிப் படுத்தபோது
பக்கவாட்டில் புதரொன்று முட்களோடு வளர்ந்திருப்பது
புரிந்தது.
அதிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கும் சீறலொலி
பிரமையாக இருக்கலாம், அல்லது,
பாம்பினுடையதாக இருக்கலாம்.
பலவீனம் மனம் உடலாக
மெதுவே எழுந்து நின்றது.
தலை படீரென்று இடித்தபோது தான்
குகையின் மேற்புறம் சரிந்திருப்பது தெரிந்தது.
மூச்சடைத்தது.
முன்னோக்கி எடுத்து வைத்த கால் பதிந்த இடம்
ஒரு பெரும்பள்ளத்தில் புதைய
பின்னுக்கிழுத்த வேகத்தில்
முதுகு சாய்ந்த இடத்திலிருந்த பாறை பெயர்ந்து
மோதித் தள்ளியது.
முன்மண்டையும், மூக்கும் நசுங்கி
குருதி பெருகத் தொடங்க
எப்படியாவது வெளியேறி விட வேண்டும் என்ற
விருப்பு ஒரு வன்மமாக
மீண்டும் புலியாகி
ஒரே பாய்ச்சலில் வெளியேறிக் கொண்டிருக்கும்
பெண்புலியின் உடலெங்கும் படரும்
தண்காற்று
இன்னொரு வாழ்வாய்.