மலையின் உயரம்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
*2016 இல் எழுதிய கவிதைகள் என்று நினைக்கிறேன். நான் மிகவும் மதிக்கும் கவிஞரை யாரோ கொச்சையாக மதிப்பழித்துக் கருத்துரைத்திருந்தற்காக வருந்தி அந்தத் தாக்கத்தில் எழுதிய கவிதைகள் என்று நினைக்கிறேன். எல்லா நேரங்களிலும் எல்லோருடைய நியாயமற்ற எதிர்வினைகளுக்கும் எதிர்வினைகள் புரிந்துகொண்டே யிருக்க முடிவதில்லை. அவர்களுக்கு நம்முடைய எதிர் வினைகள் நியாயமற்ற வையாகத் தோன்றக்கூடும். எனவே, இம்மாதிரி சமயங்களில் கவிதையெழுதுவதே வடிகாலாய்; வலிநிவாரணமாய்.
....................................................................................................................................................................................................
(1)
ஒருபோதும் மலைகளாக முடியாதவர்கள்,
மலைமேல் ஏறக்கூட முடியாதவர்கள்
மலையின் அடிவாரத்தில் நின்று அண்ணாந்துபார்த்தாலே
மளுக்கென்று கழுத்து சுளுக்கிக்கொள்கிறவர்கள்
மலையிலிருந்து உருளும் ஒரு கல்லைக் காட்டி
மலை மாபாதகம் செய்துவிட்டதாக
மண்ணை வாரித்தூற்றுகிறார்கள்;
காலமெல்லாம் கையில் கற்களோடு
சுற்றிக்கொண்டிருப்பவர்கள்
பாவனைக் கண்ணீர் பெருக்கிக்
கருணைக்கடலாகிவிடுகிறார்கள்.
கனியிருப்பக் காய் கவரலாமோ என்ற குறட்பாவை
மேற்கோள் காட்டி கையோடு
தனித்துவமான தமது வசைபாடலை
ஒலிக்கச்செய்கிறார் கோரஸ்களோடு.
‘கலி முத்திப் போச்சு’ என்பதாய் கவனமாய்
நவீன தமிழில் கருத்துரைத்து
எலிப்பிள்ளை என்றுரைப்பார் கிளிப்பிள்ளையாய்
வலிய சிங்கத்தை.
எத்திசையிலும் அலைபாய்ந்திருக்குமவர் கண்கள்
பித்தளையாகக் காட்டி ஒரு ஒப்புநோக்கலில்
தன்னைப் பத்தரைமாற்றுத் தங்கமாகப் பறைசாற்ற
எங்கேனுமிருப்பாரோ இளிச்சவாயர்கள்
என்று கண்காணித்தபடி.
ஒருவரிடம் காரியம் ஆகவேண்டியிருந்தால்
அவரை ஆதரிப்பார்;
இன்னொருவரிடம் இன்னொரு காரியம் ஆகவேண்டியிருந்தால்
அவரையும் ஆதரிப்பார்.
பாரபட்சமே நீதிநெறியாக
கையில் எப்போதுமிருக்கும் துலாக்கோல்
தட்டின் அடியில் ஒட்டிய புளியோடு.
எவரைப் பரிச்சயப்படுத்திக்கொண்டால் என்ன ஆதாயம்
என்ற மனக்கணக்கில்,
மருந்துக்கும் புத்தகங்களைத் தொடாமலேயே
சேருமிடம் சென்று வென்று கொன்று மென்று
பாஸ்மார்க், முதல் வகுப்பில் தேர்ச்சி, டிஸ்டிங்ஷன்
தங்கப்பதக்கம் என்று படிதாவிப்படிதாவிச்
செல்பவர்களுக்குத்தான்
குறிப்பாக மலையைக் கண்டால் வெறுப்போ வெறுப்பு.
’தட்டாமாலை தாமரப்பூ சுத்திச்சுத்தி வந்தாராம்’ என்ற
குழந்தைக்குதூகலமாய்
”விளையாட வாயேன்” என்று வெள்ளந்தி பாவனையில்
மலையை அழைப்பார்;
தலையைத் தழைத்தால் முகடு வெட்ட வாகாய்
வெட்டரிவாளை ஒளித்துக்கொண்டு.
இறங்கிவர மறுக்கும் மலையைப்
பெருமுதலாளி என்று பழிப்பார் _
இருபத்தியிரண்டு செல்லப்பிராணிகள் வைத்திருப்பார்.
இன்னும் என்னென்ன ரகங்கள் இங்கே என்றெண்ணி
புன்னகை பூக்கிறது
இயல்பே உயரமான மலை.
உயரேயிருந்து பார்க்க எல்லாம் தெரியும் மலைக்கு.
மலையை மடுவாக்கும் கனவைக்கூட
நாம் கண்டுவிட இயலாது.
முன்னே நின்று நீ உறுமுவதெல்லாம்
முனகல் மட்டுமே மலைக்கு;
முட்டிமோதினாலோ சேதாரம் உன் தலைக்கு.
(2)
எது உன் உயரம்?
குட்டையாய் இருப்பதாய் மற்றவர்களை மட்டம்தட்டிக்கொண்டேயிருப்பதா?
எது உன் உயரம்?
அன்றொருநாள் அன்பின் மிகுதியால் கட்டிப்பிடித்து முத்தமிட்டவளை
ஆசைதீரத் தொட்டுத்தீண்டிவிட்ட பின்
தட்டுக்கெட்டவள் என்று நட்பினரிடமெல்லாம் சொல்லித் திரிவதா?
எது உன் உயரம்?
விட்டுவிடுதலையாகி நிற்கும் சிட்டுக்குருவியின் சிறகு முறித்து
சிறுகூண்டிலடைத்துவிட்டு
தட்டுச்சோறு தந்து அதன் ரட்சகன் என்று மார்தட்டிக்கொள்வதா?
எது உன் உயரம்?
மொட்டைத்தலையைப் பார்த்து
எள்ளிநகையாடிவிட்டு
உன் வழுக்கை அழுக்கை மட்டும்
எண்ணிப்பார்க்க மறுப்பதா?
எது உன் உயரம்?
களர்நிலமாய்ப் பலரைச் சுட்டி
உளறுவாயர்களாய் பட்டம் கட்டி
வளர்பிறையாய் உன்னை மட்டும்
விரிவானில் கட்டங்கட்டிக் காட்டுவதா?
உன் அளவுகோல் அறிந்ததெல்லாம்
உன் உயரம் மட்டுமே.
அதன் ஒற்றைப்பரிமாணம் மட்டுமே.
தூல உயரமே தெரியாத நிலை;
சூக்கும உயரமோ காற்றணுவலை.
தலை-கால் உயரமும், கால்-தலை உயரமும் சரிசமமானதா?
வலைமீனின் கடலுயரம் கணநேரக் கனவா?
இலைப்பச்சயத்தின் உயரம் ஏறிப்பார்க்க முடியுமா?
பள்ளத்தாக்கின் உயரம் புரிய
உள்ளிறங்கிப் பார்க்கப் பழகவேண்டும்.
உள்ளபடியே,
மலையறியாது அதன் உயரம்.
...........................................................................................................
3. அவரவர் உயரம்
உயரத்தில் உங்களை உட்கார்த்தத் தயார்
உங்களுக்குத்தான் அதற்கான உத்வேகம் இல்லை
யென்பவரிடம்
உயரம் என்றால் என்ன என்று கேட்க
உன்மத்தம்பிடித்தவரைப் பார்ப்பதுபோல்
அரையடி பின்வாங்கி
உற்றுப்பார்க்கிறார்.
பின் பயம் நீங்கி பரிகாசம் பொங்க
’உருப்பட்டாற்போல்தான்’ என்றுகூறி
படபடவென்று கைதட்டிக் கெக்கலிப்பவரைப் பார்த்து
ஒன்றும் புரியாமல் நிலம்படர்ந்தபடி
அத்தனை இயல்பாய் நகர்ந்துகொண்டிருக்கின்றன
ஆகாயமும்
அந்திச் சூரியனும்.
No comments:
Post a Comment