சொற்களும் சொல்பவர்களும்
தம்மைப் போற்றற்குரியராகவும்
பொதுவுடைமையாளராகவும்
பேரறிவாளராகவும்
பெருமதிப்புக்குரியராகவும்
பேரன்புடையோராகவும்
பென்னம்பெரிய சமூகப்பிரக்ஞை
யாளராகவும்
பின்னும் என்னென்னவோவாளராகவும்
படம்பிடித்துக்காட்டி
போற்றி போற்றி போற்றிப்
பாடிக்கொள்வதோடு
நில்லாமல்
மற்றவர்களை
சொற்ப அறிவுக்காரர்களாகவும்
சுயநலமிகளாகவும்
சுத்தமாய் சமூகப்பிரக்ஞை
யற்றவர்களாகவும்
சிறிதும் சொரணையற்றவர்களாகவும்
இன்னும் என்னென்னவோவாளராகவும்
தூற்றி தூற்றி தூற்றிக்
கட்டங்கட்டி மட்டந்தட்டும்
மட்டந்தட்டிக் கட்டங்கட்டும்
எட்டு பதினாறு நாற்பத்திநான்கு வரிகளில் புகுந்துபுறப்பட்டு
வெளியேறிவிடும் வழியறியாமல்
திருதிருவென்று விழித்துக்கொண்டிருக்கும்
சொற்களைத்
தரதரவென்று இழுத்துக்கொண்டோடும்
கவிதை
பன்னாட்டு இலக்கியப் பரிமாற்ற
பவள விழா மண்டபத்திற்கு
No comments:
Post a Comment