கவிஞர்கள் நட்சத்திரங்களைப்
பரிசளிக்கப் பிறந்தவர்கள்!
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
இத்தனை காலைவேளையில் யார் கதவைத் தட்டுவது என்று
கவிஞர் யூமா வாசுகி தூக்கக்கலக்கத்துடன் எழுந்துவந்து
கதவைத் திறந்தார்.
அன்று பூத்த மலராய் அதிகாலைச் சூரியக் கதிராய்
ஒரு சிறுமி நின்றுகொண்டிருந்தாள்.
”என் அப்பா ஒரு பள்ளிக்கூடம் திறந்திருக்கிறார்.
பிள்ளைகளை அடிக்காத, அவமானப்படுத்தாத நல்ல பள்ளிக்கூடம்.
அதை நீங்கள்தான் திறந்துவைக்கவேண்டுமென்று சொல்லிக்கொண்டேயிருந்தார். அதனால்தான் அவருக்குத் தெரியாமல் உங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறேன் – உங்களைக் கையோடு கூட்டிச்செல்ல” என்று விவரம் தெரிவித்தாள்.
”இதோ இறக்கைகள் – சீக்கிரம் மாட்டிக்கொள்ளுங்கள்” என்று சின்னவாயால் சிறுமி இட்ட அன்புக்கட்டளையைத் தட்டமுடியுமா என்ன?
இருவருமாக இறங்கக்கண்ட அந்தத் தந்தை முகம் தழுதழுத்துப்போனது.
”என்னைத் தெரிகிறதா? உங்கள் ’சாத்தானும் சிறுமியும்’ கவிதைத்தொகுப்பில் மதுக்கடையில் வேலைபார்த்த சிறுவன் நான் –
என் சட்டைப்பையிலிருந்து உருண்ட கோலிகுண்டுகள் பற்றி அத்தனை கரிசனத்தோடு எழுதியிருப்பீர்களே – நினைவிருக்கிறதா?
’இந்தத் தரமான இலவசப்பள்ளியை நீங்களே திறந்துவைக்கத் தகுதியானவர்!”
என்று தன் சின்ன மகளை நன்றியுடன் பார்த்தார் தந்தை.
ஏழைக் கவிஞனிடம் மாத முதலிலேயேகூட
அப்படி என்ன பணமிருக்கப்போகிறது?
’ஆனாலும் இந்த நல்ல காரியத்தைப் பாராட்டி ஏதேனும் பரிசளிக்காவிட்டால் எப்படி?’
என்று கவி மனதிலோடிய எண்ணத்தைப் படித்தவளாய் சிறுமி
யாருமறியாமல் ரகசியமாய்
கவிஞரின் சட்டைப்பைக்குள்
போட்டாள் _
முதல்நாள் பின்னிரவில்
ஆகாயத்தை நோக்கி நீட்டிய கை நீண்டுகொண்டேபோய்
திரட்டியெடுத்துவந்த நட்சத்திரங்களை!
No comments:
Post a Comment