LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, May 2, 2019

பறவைப் பார்வை -2 ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


பறவைப் பார்வை -2


ரிஷி’ 
(லதா ராமகிருஷ்ணன்)


அம்புகள் துளைத்தபோதும்,
ஆழ்கிணறில் விழுந்து
குருதிபெருகிக் களைத்தபோதும்
தன்னந்தனியாய் மீண்டெழுந்துவந்த
பறவை
இருகால்களும் ஒரு மனமுமே
இறக்கைகளாய்
என்னாளும் சிறகடிப்பதை நிறுத்தாமல்
சுற்றிச்சுற்றிவந்துகொண்டிருக்கிறது
படைப்புவெளியில் _
இயக்கமே ஆனந்தமாய்….
சகோதரத்துவம் பற்றி சதா
screech-
இட்டுக்கொண்டே யிருக்கும்
மற்றவை
கண்டுங்காணாமல் போயின
தங்களுக்கான இரையைக்
கவ்விக்கொண்டு.
அப்படியிருக்கலாகாது என்று
தன் சின்னப்பிள்ளைக்குக்
கற்றுக்கொடுத்து
உயர உயரப் பறக்கவும்
வழியமைத்துத் தந்தது பறவை.
அயரா முயற்சியில்
இன்று அந்தக் குட்டி இறக்கைகள்
தொடுவானத்தைத் தொட்டுவிட _
எங்கள் இனம் என்று மார்தட்டும்
மற்றவை
பிள்ளையின் ஒளிவட்டத்தில் தங்களைப்
பொலிவாக்கிக்கொண்டே
தாயைக் கொண்டாடுகின்றன _
தாயாக மட்டும்.
*** *** ***
[*தங்கள் துறையில் தங்களோடு தொடர்ந்து இயங்கிவரும் சக பெண்ணைப் பாராட்டாதவர்கள், அவருடைய துறை சார் பங்களிப்புகளைப் பேச முன்வராதவர்கள், அவர் தனக்குச் செய்த உதவிகளைப் பேசாமல் தான் அவருக்குச் செய்த உதவிகளை மட்டுமே பேசிவருபவர்கள் என்று பலரும் இன்று தன்னந்தனியாய் அந்தப் பெண் போராடி வளர்த்த மழலைச் செல்வத்தின் சாதனைக் காக, ஒரு அன்னையாக (மட்டுமே) தங்கள் துறை சார்ந்த அந்தப் பெண்ணைப் புகழ்வதும், அந்த இரண்டு தனிப்பெண்களின் அயராத உழைப்புக்குக் கிடைத்த பெருமையையும் கௌரவத்தையும் தங்கள் அனைவருக்குமானதாய் பொதுமைப்படுத்து வதும் என்னவிதமான சகமனிதத்துவம் என்று தெரியவில்லை.
இந்த முரண் என் மனதை அலைக்கழித்துக் கொண்டேயிருக்கிறது. இதை நேரடியாகப் பேசினால் எதிர்வினைகள் என்னவாயிருக் கும் என்பது ஊகிக்கக்கூடியதே என்பதால் ஒரு கவிதையில் இதைப் பூடகமாகப் பதிவுசெய்து அமைதியுற விரும்புகிறது மனம் - அது சாத்தியம்தானா என்று தெரியாத போதும்.]


No comments:

Post a Comment