’ரிஷி’ கவிதைகள்
1. சாக்கடையல்ல
சமுத்திரம்
ஒவ்வொரு நதிக்கும் உயிருண்டு என்றுதான் உண்மையாகவே எண்ணியிருந்தேன்.
உயிரோடு ஒட்டிவரும் உடம்பும், உள்ளமும், உணர்வும் எல்லாமும்தான்...
வெக்கையைப் போக்கி, தவித்த வாய்க்குத் தண்ணீர் தந்து
இக்கரைக்கும் அக்கரைக்கும் இடையே எத்தனையோ காற்றுப்பாலங்கள் உருவாக்கி
அள்ளும் கொள்கல அளவுக்கேற்பத் தன்னை தகவமைத்துக் கொள்ளும் நதியின் நன்னீர்
பொங்குமாக் கடலின் மங்கலத்தை உள்வாங்கிக்கொண்டிருக்கும்;
இனங்கண்டுகொள்ளும் தன்னை அத னோர் அங்கமாய் என்றே இன்றுவரை நம்பியிருந்தேன்.
தன்மேற் செல்லும் தோணியிலிருந்தும் படகிலிருந்தும்
சாகரப்பரப்பில் சவாரி செய்யும் கப்பலின் பிரம்மாண்டத்தைப்
புரிந்துகொண்டிருக்கும் என்று உறுதியாயிருந்தேன்.
வரம்புக்குட்பட்ட தன் நீரளவிலிருந்து விரிகடலின் அகல்விரிவை
விளங்கிக்கொண்டிருக்கும் என நினைத்தேன்.
சிறுகுழந்தையாய் தன்னில் வந்துசேரும் நதிநீர்களை
அரவணைக்கும் சமுத்திரத்தின் அருமை பெருமையை
ஆராதிக்க அதற்குத் தெரிந்திருக்கும் என்று தீர்மானமாயிருந்தேன்.
நதியோ இன்று சமுத்திரப் பிறப்பைச் சாக்கடையாக்கிப் பழித்து
காறித்துப்பிய வன்மத்தில்
விண்விண் என்று வலிக்கிறது; கண்கலங்குகிறது....
கடந்துவிடும் இதுவும்.
வறண்டுபோகலாம்; வரலாற்றில் மட்டுமே காணக்கிடைக்கலாம்
நதியொரு நாள்;
நிரந்தரம் சாகரம் நான் வாழுங்கால மெல்லாம்.
இதுநாள் வரை நதிக்கரையோரமிருந்தேன் நல்விருந்தாடியாய்....
உரித்தாகும் அதற்கு என் அன்பும் நன்றியும்.
சாகரப் பிரவாகத்தில் நான் இரண்டறக்கலந்துவிட்ட சிறுதுளி யென்றும்.
2. பிறவிப் பெருங்கடல்
சமுத்திரத் தண்ணீர் சாப்பாட்டிற்கு சரிவராது என்பாய்;
சதாசர்வ காலமும் சுனாமியைக் கக்கக்
காத்துக்கொண்டிருக்கிறது என்பாய்.
சாப்பாடு மட்டுமல்லவே வாழ்க்கை!
சத்தியத்திற்குக் கட்டுப்பட்டதேபோல்
தரையரண் தாண்டி ஊரில் புகா சமுத்திரம்
உத்தமம் தான்.
வெளித்தள்ளிய ஆழிப்பேரலைகளினூடே
நேராப் பிரளயம் என் நெஞ்சில் தளும்புகிறது.
நன்றிக்குரியது.
சிறியதும் பெரியதுமாய்
சமுத்திர உயிரிகள் லட்சோபலட்சம்
சொல்லித் தீரா கவிதைவரிகளாய்.
என்றேனும் எழுதிப் பார்ப்பேன்…
சென்று வருகிறேன் நதியே
சாகர சங்கமம் பிறவிப் பயனாக.
No comments:
Post a Comment