LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, October 9, 2025

அழகு - ‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 அழகு

‘ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

சுடர்விடும் கண்களில்லை;
அடர்கூந்தல் அலைபாயவில்லை;
கன்னம் குழியவில்லை;
குரலில் தேன் வழியவில்லை;
குலுங்கிச் சிரிக்கும் அரிய பொழுதுகளில்
சதைப்பிடிப்பற்ற அந்த தேகத்தில்
ஆங்காங்கே எலும்புகள் புடைத்து
சுருக்கங்கள் வெளிப்பட்டன.
குறுக்குமறுக்கான வினோத வரிசையிலிருந்த பற்கள்
COLGATE, SENSODYNE DABUR RED பற்பசை
விளம்பரங்களுக்கான வெண்மையில்
மின்னவில்லை.
என்ன யிருந்தாலும் அதிபலவீன தருண
மொன்றில்
கதிகலங்கிநின்றவனை
கைப்பிடித்தழைத்துச்சென்றொரு
ஆலமர நிழலில் அமரச்செய்தவளின்
கனிவு
அழகோ அழகு!
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி
என்றவனின் கண்ணம்மா
என்னமாயிருந்தாளோ –
யார் கண்டது?

வெற்றி - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 வெற்றி

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


”உன்னால் ஓடமுடியாது” என்கிறாய்;
”உன்னால் ஓடவே முடியாது” என்கிறாய்;
”உன்னால் அத்தனை தொலைவு ஓடமுடியாது” என்கிறாய்;
”உன்னால் அத்தனை வேகமாக ஓடவே முடியாது” என்கிறாய்;
”நீ முயலுமல்ல, நான் ஆமையுமல்ல” என்கிறாய்.
“உன் கால்கள் கால்களெனில் என்னுடையவை
சிறகுகள்” என்கிறாய்;
உன் மனத்துணிவு ஒரு கூடையெனில்
எனதோ கடற்கரைமணலளவு” என்கிறாய்…….
உன் என்னிடையேயான
தன்மை முன்னிலை மயக்கத்தை எண்ணியபடி
அன்போ வன்மமோ அற்றுச் சொன்னேன்:
என்னை நீ வெல்லவே யியலாது _
ஏனெனில் நான் பந்தயத்தில் இல்லவே யில்லை.

கண்ணோட்டம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


 கண்ணோட்டம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


தன்னைச் சுற்றி முட்களைப் படரவிட்டபடியேயிருக்கும்
அந்த ஒற்றைச் சொல்
என்னை அந்தக் கவிதைக்குள் சரண்புகவிடாமல்
தடுக்கிறது.
குறியீடாகத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது –
அறிவேன். என்றாலும்
குரூரமாகவே ஒலிக்கிறது.
A rose by any other name would smell as sweet’
போலவே
A thorn by any other name would prick and pierce’.
அக்கக்கோ பறவையாய்க் கூவிக்கூவி
களைத்துப்போயிருக்கும் மனது
அந்தக் கவிதைக்குள் நுழைந்து
இளைப்பாறவேண்டும் என்று
எத்தனை கெஞ்சினாலும்
இயன்றபாடில்லை.
அப்படியெனில் கவிதை என்பது
அதிலுள்ள ஒற்றைச் சொல் மட்டுமா?
ஆமென்றால் ஆம் இல்லையென்றால்
இல்லையாமா?
எட்டுமா எனக்கொரு வழி
இந்தக் கவிதைக்குள் நுழைய?
பழையன கழிதலும் புதியன புகுதலுமான வாழ்வில்
ஏன் நான் மட்டும் எப்பொழுதும்
எதிர்மறைப் பொருளிலேயே வருகிறேன்
என்று திரும்பத் திரும்பக் கேட்டபடியே
என் கால்களை இறுகப்பற்றிப்
பின்னுக்கிழுத்துக்கொண்டிருக்கிறது
அந்த ஒற்றைச் சொல்.
இல்லாத பதில் அதன் தொலைந்த சாவியாக,
இறுக மூடிக்கொண்டுவிட்ட கவிதையின் முன்
நான் நிராதரவாய் நின்றவாறு…

ஏக்கம் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஏக்கம்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
சிறுமியின் கொட்டாவி
தூவும் கனவுகளைக்
கவிதையாக்கத்
தாவும் மனதைத்
தடுத்தாட்கொள்ளும் தூக்கம்!

வயதின் வயது - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 வயதின் வயது

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


* தனிமொழியின் உரையாடல் என்ற தலைப்பிட்ட என் தொகுப்பில் நிழற்படம் என்ற தலைப்பில் வெளியான கவிதை இது. இதற்கு வயதின் வயது என்ற தலைப்பும் பொருந்தும் என்று தோன்றியது.
//Dedicated to AGELESS Padmini (Gopalan) Madam(93 years) and to my Mother Bhagyalakshmi (89 years)//
*இருவருமே பின்னோக்கிப் பார்த்துப் புலம்பாதவர்கள். சுயமாய் சிந்திப்பவர்கள்; தன்மதிப்புடையவர்கள்; முடிந்த உதவிகளை மற்றவர்களுக்குச் செய்யத் தயங்காதவர்கள்
........................................................................................................................................
வயதின் வயது (அ) நிழற்படம்
மிக மிக நீண்ட தூரம் கடந்துவந்தபின்
கழுத்து முறிய திரும்பிப் பார்த்தால்....
தெரிவது இடிந்த சுவரில் காணும்
நிழலின் நிழலின் நிழலின் நிழலின்
நகலின் நகலின் நகலின் நகலின் நகலின்
முனை மழுங்கிய பாதி கிழிந்த மஞ்சளோடிய புழுதியப்பிய
அழுக்குப் பிரதியின்
பிரதியின் பிரதியின் பிரதியின் பிரதியின்
மறதியாய் ஒன்று....
ஒரு கணம் உறைந்து நின்றதொரு
தருநிழலின் கீழ் சிறு இளைப்பாறலா...?
அணுமேலமர்ந்தொரு பின்னோக்கிய ஒளிப்பயணமா?
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசம் இருள்தானா?
இக்கணமென்பதொன்றா எண்ணிறந்ததா....?
இகம் பரம் எல்லாம் வெறும் கண்கணக்குதானா?
நகமும் சதையும் உணர்த்துவதைச் சொல்ல
நாலாயிரம் வரிகள் போதுமா?
ஆலுமா டோலுமா ஐஸாலக்கடி மாலுமா
அர்த்தமனர்த்தமெல்லாம் இருவேறுபோலுமா?
இன்னமுள காதங்கள்.....
முன்னேகவேண்டும்....
திரும்பவும் நடக்கத் தொடங்கியபோது
இருகால்களில் பெருகும் வலி
இருப்பின் அருமையாய்......

போலி பாசாங்குக்காரர்களை அடையாளங்காண 10 வழிகள்

 போலி பாசாங்குக்காரர்களை அடையாளங்காண 10 வழிகள்

1.நடத்தை ஒரேபோல் இராது
2. அதீத புகழ்ச்சி; முகஸ்துதி செய்தல்
3. பரிவுணர்ச்சி, புரிந்துகொள்ளல் இல்லாமை
4. தன்னலவாதி
5.வம்பு பேசுதல்; வஞ்சகம் செய்தல்
6. மற்றவர் கவனத்தை ஈர்ப்பதிலேயே 7. முனைப்பாக இருத்தல்
7. தகிடுதித்தக்காரர்; சூழ்ச்சித்திறன் வாய்ந்தவர்;
8. நம்பத்தகாதவர்
9. பொய்யாக வருத்தம் தெரிவித்தல்
10.பொறாமை, உள்ளெரிச்சல்All reactions:

A NEW 'MADE-IN-INDIA' MESSAGING PLATFORM

 ZOHO'S (SRIDHAR VENMBU'S)

NEW MESSAGING PLATFORM


இது இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டிருக்கும் ‘வாட்ஸ் அப்’ போன்ற தகவல் பரிமாற்ற ஊடகம். இதன் பயனாளர்களின் எண்ணிக்கை வெகுவேகமாக அதிகரிக்கிறது.

Arattai, a #MadeInIndia messaging platform