LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, March 16, 2014

தமிழ் சினிமாவில் பெண்கள்

             கே.பாரதி எழுதிய நூல் (வெளியீடு - விகடன் பிரசுரம்)            
–  ஒரு சிறு அறிமுகம்

 _லதா ராமகிருஷ்ணன்






கே.பாரதி                     
கல்கி பத்திரிகையில் உதவியாளராகப் பணியைத் தொடங்கியவர்,  ‘இலட்சியப்பெண்’, ‘மகளிர் சிந்தனை’ ஆகிய பெண்கள் பத்திரிகையில் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். பெண் _ வளர்ப் பும் வார்ப்பும் என்ற இவரது கட்டுரைத் தொகுப்பு நம் சமூகத்தில் நிலவும் பால் ஏற்றத்தாழ்வு களை விவாதிக்கிறது. வெகுஜனப் பத்திரிகைகளிலும் இலக்கிய இதழ்களிலும் சிறுகதைகள், கட்டுரைகள் போன்ற இவரது எழுத்து முயற்சிகள் தொடர்கின்றன. பச்சையப்பன் கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். மாநகராட்சிப் பள்ளிக்குழந்தை களின் கல்வி வளர்ச்சிப் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். மறைந்த எழுத்தாளர் ஆர்.சூடாமணியின் பெயரில் இயங்கும் நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர்.                                          
                                                         (*நூலிலிருந்து)


மார்ச் எட்டாம் தேதி சர்வதேச மகளிர் தினம்.
பெண்களே முன்னேறுங்கள்! முன்னேறுங்கள்!! – எங்கள் தங்க வைர நகைகளை வாங்கி யணிந்து விடுதலையை உணருங்கள்!!! இப்படி பெண்விடுதலையைப் பட்டவர்த்தனமாக வர்த்தகப் பொருளாக்கும் போக்கு ஒருபுறம். மறுபுறம் சின்னத்திரை, சினிமாத்திரைப் பெண் பிம்பங்கள் கடந்த பல ஆண்டுகாலப் போராட்டங்களுக்குப் பிறகு பெண்களுக்குக் கிடைத்த வளர்ச்சி-மேம்பாடுகளையெல்லாம் நலிவுபடுத்திவரும் போக்கு…. இன்று வாழாவெட்டி, மலடி போன்ற வார்த்தைகள் இல்லாத சின்னத்திரை பெரீ…ய்…ய தொடர்நாடகங்களே கிடையாது எனலாம். இரண்டாவது ‘எபிஸோடி’லேயே இருபது வயது நிறம்பாத இளங் கதாநாயகிப் பெண்பாத்திரத்தின் கல்யாணத்தைப் பற்றி ஒரு நாற்பது பேர் நடுக்கூடத்தில் நீட்டி முழக்க ஆரம்பித்து விடுவார்கள், ’நம்ம சாதி என்ன சொல்லும்’ என்று சோகப்படுவார்கள்; ஆவேசப் படுவார்கள். அதில் ‘சாதிபேதம் தவறு’ என்று வலியுறுத்துவதைக் காட்டிலும் வலியுறுத்து வதைக் ‘சாதி முக்கியமல்லவா’ என்ற தொனியே தொக்கி நிற்கும். அதாவது நடப்பு வாழ்க்கையை அத்தனை துல்லியமாகப் பிரதிபலிக்கிறார்களாம். சின்னத்திரை ராணி என்று கொண்டாடப்படும் ராதிகாவின் சீரியல்களில் எத்தனை வகை ரவுடிகள் ஊரில் இருக்கலாம் என்று வகுப்பெடுக்காத குறை. நினைத்தமாத்திரத்தில்  முதுகுப்புறமிருந்து பட்டாக்கத்தியை உருவியெடுப்பவர்கள் யாருமில்லையே என்று விஜய் தொலைக்காட்சி ‘ஆபீஸ்’ தொடர்நாட கத்தை நினைத்து ஆறுதலடையலாமென்று பார்த்தால், அதில் உதாரணப் புருஷனாக அடையாளங்காட்டப்படும் மேலதிகாரி விசுவநாதன் பாத்திரம் தனக்குக் கீழே வேலை செய்பவர்களையெல்லாம் ஒருமையில் அழைக்கிறார், போய்யா வாய்யா என்கிறார். இது தான் இயல்பு என்று ஏற்றுக்கொள்ளும்படி இளைய தலைமுறையினருக்கு அறிவுறுத்தப் படுகிறதோ, மூளைச்சலவை செய்யப்படுகிறதோ என்று தோன்றுகிறது. இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பு, தொழிற்சங்கம் வலுவாக , நான் முன்பு வேலை பார்த்த அலுவலகத் தில் புதிதாக வந்திருந்த மேலதிகாரியொருவர் என் சக ஊழியை ஒருவரை “பத்மா” என்று அழைக்க, “மரியாதை தாருங்கள் ஸார், மிஸஸ் பத்மா” என்று கூறுங்கள்” என்று அவர் அழுத்தமாய் கூறீயது நினைவுக்கு வருகிறது. பல வருடங்களுக்குப் பிறகு, தெனாலி படம் பார்க்க நேர்ந்த போது அதில் அண்ணா, அண்ணி, அவர்களுடைய குழந்தைகளோடு கதாநாயகி தொடையில் மேல்பாகம் தெரியும்படியான குக்குட்டைக் காற்சட்டையோடு வந்ததைப் பார்த்து அதிர்ச்சியாகவே இருந்தது.
இந்தச் சூழலில் கே.பாரதி எழுதியுள்ள ‘தமிழ் சினிமாவில் பெண்கள்’ என்ற நூல் முக்கி யத்துவம் பெறுகிறது. (அவருடைய முனைவர் பட்டப் படிப்பிற்கான ஆய்வுப் பொருளும் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது). பெண்களுக்கான பத்திரிகை என்றாலே அதில் கோலக் குறிப்பு, சமையல் குறிப்பு, அழகுக் குறிப்பு ஆகிய அம்சங்களே பிரதானமாக இடம்பெற்றுவந்த 80களில் 1985 முதல் 87 வரை வெளிவந்த இலட்சியப்பெண் என்ற முன்னோடி மாதழின் ஆசிரியர்குழுவில் முக்கியப் பங்காற்றியவர் கே.பாரதி. ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக சுமார் ஆறு ஆண்டுகள் திரைப்படத் தணிக்கைக் குழுவில் இடம்பெற்ற அனுபவமும் அவருக்கு உண்டு. ஜனநாயக மாதர் சங்கத்தின் ‘மீடியா குழுவிலும் அவர் இடம்பெற்றிருந்தார். செறிவான சிறுகதையாசிரியரும் கூட.
இந்த நூலில் காணப்படும் அவருடைய முன்னுரையில் பின்வருமாறு கூறுகிறார் கே.பாரதி:

மிக அதிகப்படியான தாக்கம் கொண்ட சினிமா என்ற ஊடகம் பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற மற்ற ஊடகங்களிலும் ஆக்கிரமித்துள்ள கணிசமான இடத்தைக் கொண்டே அதன் செல்வாக்கை அனுமானிக்கலாம்.”
“ஆரம்பம் முதலாக இன்றுவரை சினிமா என்பது ஆணின் மொழியாகத்தான் இருந்துவந்திருக்கிறது. பெண் இயக்குனர்கள் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களின் முயற்சிகள் தனிப்பட்ட அடையாளம் எதுவுமின்றி ஏற்கெனவே ஆண்கள்  வகுத்த வாய்ப்பாடுகளையே வழிமொழிந்திருக்கின்றன”
“படித்தவர் பாமரர் என்ற வேறுபாடின்றி அனைவரும் துய்க்கக்கூடிய இந்த ஊடகத் தின் வீச்சும் வலிமையும் அசாதாரணமானது. தமிழக அரசியலில் சினிமாவுக்கு வசனம் எழுதியவர்கள், நடித்தவர்கள் என்று ஐந்து பேர் முதலமைச்சர்களாகப் பதவி வகித்திருக்கிறார்கள் என்பது இந்த மாநிலத்திற்கே உரிய யதார்த்தம். எதிர் கால அரசியலும் சினிமாப் பிரபலங்கள் நடத்துகின்ற கட்சிகளை எதிர்நோக்கியே இருக்கிறது”.
“தமிழ் சினிமாவுக்கும், அரசியல் இயக்கங்களுக்குமான தொடர்பு இந்த ஊடகத்தின் வரலாற்றுத் தன்மைக்கு மேலும் வலிமை சேர்த்திருக்கிறது. சினிமாவை அதன் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சாரப் பின்னணிகளை விலக்கிவிட்டு அணுக முடியாது. 1931 முதல் 2013 வரையிலான தமிழ் சினிமாவின் போக்குகளை அதன் பெண் கதாபாத்திரங்களுடனான சித்தரிப்பின் வாயிலாக மட்டுமே அணுகியிருக் கிறேன்.”

_ தேசிய இயக்க சினிமா, திராவிட இயக்க சினிமா, மிகையுணர்வு சினிமா, புதிய அலைப் படங்கள், மாற்றங்களும் பின்னடைவுகளும் என்ற ஐந்து அத்தியாயங்களில், ஏறத்தாழ 190 பக்கங்களில் ‘வழக்கு எண் 18/9, ஆதலினால் காதல் செய்வீர் போன்ற தற்காலப் படங்களையும் [அவற்றில் காணப்படும் நேர்மறையான அம்சங்கள் சிலவற்றையும்] குறித்து இந்த நூலில் ஆய்ந்தலசியுள்ளார் கே.பாரதி. ஆவேசத்தொனி அறவேயில்லாத எனில் அழுத்தமாகப் பெண்ணியக் கண்ணோட்டத்தில் தன் பார்வைகளை முன்வைக்கும் மொழிநடை அவருடையது.
தனது முன்னுரையில், “சினிமாவில் பெண்களின் சித்தரிப்பு என்றாலே எவரும் முதலில் சொல்லக்கூடிய கருத்து ‘சினிமா பெண்களை ஆபாசமாகச் சித்தரிக்கிறது என்பதாகத் தான் இருக்கும். இந்த ஒரு கோணத்தை முழுமையாகத் தவிர்த்துவிட்டு, கதையாடலில் பெண்கள் எவ்விதமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே இந்த நூலில் மையப்படுத்தப்பட் டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ள நூலாசிரியர் “ஆபாசம் என்பது நபருக்கு நபர், காலத்திற்குக் காலம் மாறுபடுகின்ற ஒரு கண்ணோட்டம். இரட்டை அர்த்த வசனங்களும், ஆபாசச் சித்தரிப்புகளும் மிகவும் ஆதித்தன்மை வாய்ந்தது. தமிழ் சினிமா தொடங்கிய போதே அதனுள் ஊடாடிவிட்ட வர்த்தகக் கூறுகளைத் தவிர்த்துவிட்டு அதன் கதையாடல் முன்வைக்கும் கருத்தாக்கத்தை விவாதிப்பதே எனது நோக்கமாயிற்று” என்று தனது நூலின் குவிமையத்தைக் கோடிட்டுக்காட்டுகிறார். அவருடைய வார்த்தைகளிலிருந்தே சினிமாக் களில் பெண் காலங்காலமாக எந்த அளவுக்கு ஆபாசமாகச் சித்தரிக்கப்படுகிறாள், பண்ட மாகக் கடைவிரிக்கப்படுகிறாள் என்பதும் அது குறித்து அவருக்கிருக்கும் எதிர்ப்புணர்வும் தெளிவாகிறது. அப்படியிருக்கும்போது, சினிமா பெண்களை ஆபாசமாகச் சித்தரிக்கும் விதம், அதன் சமூக ரீதியான விளைவுகள் ஆகியவை குறித்தும் ஒரு சிறு அத்தியாயமாவது இந்த நூலில் இடம்பெறச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்று தோன்றுகிறது. அதே போல், ‘ஆபாசம் என்பது நபருக்கு நபர், காலத்திற்குக் காலம் மாறுபடுகின்ற ஒரு கண்ணோட்டம்“ என்று அவர் குறிப்பிட்டிருப்பது ஒரு கோணத்தில் ஏற்றுக்கொள்ளத் தக்க தென்றாலும் இன்னொரு கோணத்தில் விவாதத்திற்குரியது.
சினிமாவையும் சினிமாக் கிசுகிசுக்களையும் பெரிதும் சார்ந்திருக்கின்ற வெகுஜன இதழ்கள், (சினிமா ரசனை என்ற பெயரில் தங்களுக்கு வேண்டியவர்களின்  சாதாரணப் படங்களையும் அசாதாரணப் படங்களாக முன்வைக்கும் சில மாற்றிதழ்களும் கூட) அதிகம் உள்ள நடப்புச்சூழலில் விகடன் பிரசுரம் இந்த நூலை வெளியிட்டிருப்பது கவனத்திற்குரியது.
”ஆணுக்கும், பெண்ணுக்குமான ஏற்றத்தாழ்வு குறித்த சமூகப்பிரக்ஞையை ஏற்படுத்துவதற் கான ஒரு சிறிய முயற்சியே இந்நூல் என்று தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் கே.பாரதி. உண்மையில் சிறப்புக் கவனம் பெற வேண்டிய முயற்சி இந்நூல். இளந்தலை முறையினர் (கடந்த தலைமுறையைச் சேர்ந்தவர்களும் கூட) சமூகப் பிரக்ஞை கூடிய சினிமா ரசனையில் தேர்ச்சி பெற உதவும் நூல் இது என்று கூறத்தக்கது.



0




அன்புக்கு ஓர் அஸ்வினி!

அன்புக்கு ஓர் அஸ்வினி!



· [பதிவுகள் இணைய இதழில் வெளியான கட்டுரை, ஜனவரி 2014]
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிநின்றார் வள்ளலார். காக்கை குருவி எங்கள் ஜாதி என்றார் பாரதியார்தெருநாய்களையும் பூனைகளையும் புரந்து காக்க அயராது பாடுபட்டுவருகிறார் அஸ்வினி. இளம்பெண். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. இருந்தும் தெருநாய்களையும் பூனைகளையும் பாதுகாத்து அவற்றின் பசியாற்றி பிணிதீர்க்கும் பரிவும் பிரியமும் கரிசனமும் அஸ்வினியிடம் கடலெனப் பரந்துகிடக்கின்றன! மெல்லிய குரலில் நிதானமாக பிராணிகள் மீதான தன் பிரியத்தையும் அக்கறையையும் வெளிப்படுத்தி இந்த உலகம் அவற்றிற்குமானதுதான் என்பதை அழுத்தமாக எடுத்துரைக்கிறார் ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளை என்ற தொண்டுநிறுவனத்தின் சார்பில் சென்னை மயிலையிலுள்ள மாநகராட்சி மழலையர் பள்ளியில் மாண்டிசோரி ஆசிரியையாக மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் அஸ்வினியின் வீட்டில் எப்பொழுதுமே தெருநாய்களுக்கும், பூனைகளுக்கும் தாற்காலிகத் தங்குமிடங்களுண்டு! நாயும் பூனையும் அங்கே தோழர்களாக நட்புறவாடிக் கொண்டிருக்கும். தெருவில் அடிபட்டுக் கிடக்கும் நாய்கள், வருவோர் போவோரின் கல்லடிக்காளாகின்றவை, நோய்வாய்ப்பட்டிருப்பவை, கருத்தரித்திருப்பவை, பிரசவித்திருப்பவை என உதவியும் சிகிச்சையும், ‘’ஸ்ட்ரெரிலைஸேஷனும் தேவைப்படும் தெருநாய்களுக்கு உணவளிப்பதோடு அவற்றைத் தன் செலவில் உரிய மருத்துவமனைகளுக்குக் கூட்டிச்சென்றுவருவதையும் தொடர்ந்து செய்துவருகிறார். செல்லப்பிராணிகள், குறிப்பாக தெருநாய்கள் பூனைகளின் பாதுகாப்புக்கு நம்மிடையே போதுமான அமைப்புகளோ விழிப்புணர்வோ இல்லை. அப்படியிருக்கும் அமைப்புகளும் இந்த வாயில்லா உயிர்களை அலட்சியமாக நடத்தும் அவலநிலையையே பரவலாகக் காணமுடிகிறது என்று வருத்தத்தோடு சுட்டிக்காட்டுகிறார் அஸ்வினி. மழலையர்களின் ஆசிரியையாக அவருடைய சிறந்த பணியைப் பாராட்டி சமீபத்தில் அவருக்குஇன்னர் வீல்என்ற அமைப்பு விருது வழங்கி கௌரவித்தது.
அஸ்வினியிடம் ஒரு அடர்செறிவான நேர்காணல் இதோ:
Description: அன்புக்கு அஸ்வினி:  அஸ்வினியிடம் ஒரு அடர்செறிவான நேர்காணல் இதோ!
விலங்குகளிடம், அதுவும் தெருநாய்களிடம் உங்களுக்கு எவ்வாறு இத்தனை பரிவும் பாசமும் அக்கறையும் ஏற்பட்டது?
என்னுடைய அம்மா, பாட்டி, பாட்டியின் சகோதரிகள் என எல்லோருமே செல்லப்பிராணிகள், குறிப்பாக தெருநாய்கள், பூனைகள் மீது பாசமுள்ளவர்களாக விளங்கினார்கள். எங்கள் வீட்டில் எப்போதுமே இந்த அநாதரவான விலங்குகளின் புழக்கம் இருந்ததுஅந்தச் சூழலிலேயே வளர்ந்தவள் நான். எனவே அந்தப் பாசமும் அக்கறையும் என்னிடம் இயல்பாகவே வளர்ந்து வேரூன்றியது எனலாம்.
குறிப்பாக உங்கள் கவனம் ஏன் தெருநாய்கள் மேல் திரும்பியது?
ஏழைமக்களைப் போலவே அவையும் அனாதரவானவை. பாதுகாப்பற்றவை. அலட்சியப்படுத்தப்படு பவை; புறக்கணிக்கப்படுபவை. ஆனால், பரந்து விரிந்த இந்த உலகில் மனிதர்களைப் போலவே அவற்றுக்கும் வாழ உரிமை உண்டு என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
பொதுவாக மனிதர்கள் தெருநாய்களை எவ்வாறு நடத்துகிறார்கள்?
வாழத் தகுதியற்றவையாகத்தான் பாவிக்கிறார்கள். ஆனால், நாம் யார் அதைத் தீர்மானிக்க? தெருநாய் அதுபாட்டுக்கு ஓரமாகப் படுத்திருந்தால் கூட  அதன் மீது கல்லெறிபவர்களும் தண்ணீர் ஊற்றுபவர் களுமே அதிகம்.
சக-மனிதர்களில் எத்தனையோ பேர் துன்பத்தில் உழன்றுகொண்டிருக்க, தெருநாய்கள் மேல் பரிவு தேவையா என்று யாரேனும் விமர்சித்ததுண்டா?
நேரடியாக அப்படிக் கூறியதில்லை. ஒருவேளை சிலர் அப்படி நினைத்திருக்கலாம். ஆனால், அப்படி விமர்சிக்கிறவர்கள் சக-மனிதர்களின் துயரைத் துடைக்க ஏதேனும் முயற்சி மேற்கொள்கிறார்களா என்பது கேள்விக்குறி. விலங்குகளின் மேல் கொள்ளும் அன்பு சக மனிதர்களோடான நம் உறவையும் மேம்படுத்தும் என்றே நான் நம்புகிறேன்.
தெருநாய்கள் மீது நீங்கள் காட்டும் இந்தக் கரிசனத்தை அக்கம்பக்கத்தார் எப்படிப் பார்க்கிறார்கள்?
ஏற்றுக்கொண்டு உதவிசெய்பவர்களும் உண்டு. ஆனால், தெருநாய்களுக்கு நான் சோறு போடுவதால், அவற்றைப் பராமரிப்பதால் தங்களுக்கு இடையூறு என்ற ஒரு முன்முடிவோடு என்னுடைய இந்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையிடுவோரை, கண்டனம் தெரிவிப்போரை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.
தெருநாய் கடித்துவிடுமோ என்று அவர்கள் பயப்பட்டால் அது நியாயம்தானே?
ஆனால், பொதுவாக அவை நம் வழிக்கு வருவதில்லை. அவை அந்நியர்களைப் பார்த்துக் குலைப்பது கூட அவர்களால் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தினால் தான். ஒரு முறை குட்டி போட்ட பிறகு அவற்றிற்கு கருத்தடை செய்துவிட்டால் போதுமானது. அந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு சில நாட்கள் மருத்துவப் பராமரிப்பில் வைத்திருந்து பிறக் அவற்றை மீண்டும் முன்பிருந்த தெருவிலேயே கொண்டுவிட்டுவிட வேண்டும். பழகிய இடத்தில் தான் தெருநாய்களால் உணவும் படுக்க இடமும் தேடிக்கொள்ள முடியும். நீங்கள் சொல்வது திடீரெனத் தங்கள் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு தொலைதூரப் பகுதிகளுக்கு வலுக்கட்டாயமாக இடம்பெயர்க்கப்படும் அடித்தட்டு மக்களின் அவல நிலையை நினைவூட்டுகிறது. ஆம், அதேபோல்தான், உணவுப்ப் பற்றாக்குறையால் தான் தெருநாய்களுக்கிடையே சண்டை ஏற்பட்டு அவை ஒரேயடியாகக் குரைக்கின்றன. அதனால், எங்களால் முடிந்த அளவு அண்டை அயல் தெருக்களிலுள்ள நாய்களுக்குச் சோறிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். வயிறு நிரம்பினால் அவை அமைதியாகிவிடும்.
தெருநாய்கள், பூனைகள் ஆகியவற்றோடு பழகுவது உங்களுடைய சகமனித உறவு களை எவ்வகையில் பாதிக்கிறது? எவ்வகையில் மேம்படுத்துகிறது?
இந்தச் செல்லப்பிராணிகளின் அன்பே எனக்குப் போதுமானதாக இருக்கிறது. என்னுடைய நட்புவட்டம் குறுகியது தான். அதை ஒரு குறையாகவோ இழப்பாகவோ நான் உணரவில்லை. அதற்குக் காரணம் இந்த விலங்குகளின் தோழமை. எனக்கும் இந்தப் பிராணிகளுக்குமான பிணைப்பைப் புரிந்துகொள் பவர்களே என்னுடைய நட்புவட்டத்தில் இடம்பெறுகிறார்கள். வாய் பேசவியலா இந்த விலங்குகள் தங்கள் கண்களால் மனங்களைத் திறந்துகாட்டிவிடும். அவ்வாறே குழந்தைகளின் உள்ளங்களும் அவர்களின் கண்கள் வழியாக எனக்குப் புலனாகிவிடுகின்றன.
நாய்கள், பூனைகள் இவற்றுக்கு உடல்நிலை சரியில்லை என்பதை எப்படித் தெரிந்துகொள்வீர்கள்?
சில அறிகுறிகள் காணப்படும். சாப்பிடாமல் இருக்கும். சோகமாகக் காணப்படும். அவற்றின் சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வரும். இதுபோல்மழலையர் வகுப்பில் மாண்டிசோரி ஆசிரியையாக நீங்கள் பணியாற்றி வரும் அனுபவம் பற்றிக் கூறுங்கள். ப்ளஸ் டூ முடித்த பீன் கடந்த ஆறு வருடங்களாகப் பணியாற்றிவருகிறேன். ஆசிரியப்பணி மகத்தானது. அர்ப்பணிஒப்பு நிறைந்த இந்தப் பணி நான் விரும்பி ஏற்றுக்கொண்ட வாழ்க்கைத்தொழில். குழந்தைகளை நாம் உடைமைகளாக பாவிக்காமல் சக மனிதர்களாக மதித்து நடக்கப் பழகவேண்டும்.
பொதுவாக குழந்தைகளுக்கான நூல்கள் எப்படியிருக்கின்றன?
நல்ல நூல்களாகப் பார்த்து தேர்வு செய்து அவர்களுக்குப் பரிச்சயப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு இயல்பாகவே விலங்குகளிடம் பிரியமுண்டு. நாய், விலங்குகளுக்கும் அப்படியே. எனவே, விலங்குகளை வில்லத்தனமாகக் காட்டும் கதைகள், பயமுறுத்தல்கள் கூடாது. மனிதர்களின் வன்மம், பகைமையையெல்லாம் விலங்குகள் மீது திணித்துப் புனையப்பட்ட கதைகள், உண்மையல்லாத விஷயங்களைப் பேசும் கதைகள் சிறு குழந்தைகளுக்கு ஏற்றவையல்ல. விலங்குகள் குறித்து, வாழ்க்கை குறித்து ஆக்கபூர்வமான விஷயங்களை எடுத்துக்காட்டும் கதைகளே குழந்தைகளின் வளர்ச்சிக்கு உகந்தவை.
மாண்டிசோரி கல்விமுறையில் பெரியவர்களுக்கு வணக்கம் தெரிவித்தல் போன்ற பண்புகளைக் கற்றுத்தருவதில்லை, மாண்டிசோரி கல்விமுறையில் படித்துவிட்டு வேறு கல்விமுறைக்குப் போகும் குழந்தைகள் தடுமாறும் என்று சிலர் கூறுவது?
இது உண்மையில்லை. குழந்தைகளுக்கான வாழ்வியல் பயிற்சிகளில் அவையெல்லாமே கற்றுத் தரப்படுகின்றன. ஆனால், மரியாதை என்பது மனதிலிருந்து வரவேண்டியது. குழந்தைகளை மிரட்டியுருட்டி பயங்காட்டி போலிப்பணிவும் மரியாதையும் காட்டவைக்க மாண்டிசோரி முறை கற்றுத்தருவதில்லை. சுயமரியாதையும், தன்னம்பிக்கையும் நேர்மையான அணுகுமுறையும் உள்ளவர்களாக குழந்தைகள் வளரவேண்டும் என்பதே மாண்டிசோரி கல்விமுறையின் குறிக்கோள். இந்தக் கல்விமுறையில் பயின்ற குழந்தைகள் வேறு பள்ளிகளிலும் தங்கள் நன்னடத்தையால் உதவும் பண்பால் தனித்துத் தெரிகிறார்கள் என்று அவர்களுடைய பெற்றோர்களும் ஆசிரியர்களும் கூறுகிறார்கள்.
தெருநாய்கள் பராமரிப்பு குறித்து அரசும் ஊடகங்களும் என்ன செய்கின்றன? என்ன செய்ய வேண்டும்?
ஊடகங்களில் இது குறித்து எத்தனையோ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தலாம். செய்வதில்லை. தெருநாய்களுக்கு கருத்தடை அறுவைசிகிச்சை செய்து அவற்றை முன்பிருந்த இடங்களிலேயே கொண்டுவிடுவதை அரசின் சம்பந்தப்பட்ட துறை தொடர்ந்த ரீதியில் செய்துவரலாம். செல்லப்பிராணிகளுக்கான, ஆதரவற்ற தெருநாய்கள், பூனைகள் போன்றவற்றின் பாதுகாப்புக்காக, பராமரிப்புக்காக இயங்கிவருபவை, ப்ளூ க்ராஸ் போன்ற அமைப்புகள் உண்மையாகவே இந்தப் பிராணிகளை சுத்தமான சூழலில் முறையாகப் பராமரிக்கின்றனவா என்பது குறித்த தொடர்கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம். நான் செல்ல நேர்ந்த இத்தகைய அமைப்புகள் சிலவற்றில் மிகவும் சுகாதாரமற்ற சூழல் நிலவுவதையும், பிராணீகள் குரூரமாக நடத்தப்படுவதையும் கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.
இந்தத் தெருநாய்களின் குட்டிகளை யாரேனும் கேட்டுவாங்கிப்போய் வளர்ப்பதுண்டா?
சிலர் ஏதோ வேகத்தில் அப்படிக் கேட்டுவாங்கிப்போவதுண்டு. ஆனால், சரியாக பராமரிப்பதில்லை. அதுதான் வருத்தமான விஷயம்.
பண்பாடு கலாச்சாரம் என்ற பெயரால் மிருகங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள்?
Description: அன்புக்கு அஸ்வினி:  அஸ்வினியிடம் ஒரு அடர்செறிவான நேர்காணல் இதோ!எந்தப் பெயரால் செய்தாலும் கொடுமை கொடுமை தான். அவை கண்டிப்பாகத் தடைசெய்யப்பட வேண்டியவை. அத்தனை கனிவும் கரிசனமுமாய் தெருநாய்கள் குறித்து பேசிக்கொண்டே போகும் அஸ்வினி தன்னுடைய குடும்பம் நண்பர்கள் ஆகியோரின் உதவியுடன் நாளொன்றுக்கு குறைந்த பட்சம் 40 தெருநாய்கள், 20 பூனைகளுக்கு சோறிட்டுவருகிறார். அவற்றில் சிலவற்றைத் தன் வீட்டில் வைத்தும் பராமரித்துவருகிறார். வழியில் உதவி வேண்டி கிடக்கும் தெருநாய்கள், பூனைகள், நாய்க்குட்டிகளைப் பார்த்தால் தன் கைக்காசைச் செலவழித்து, நேரத்தைச் செலவழித்து, பல்வேறு சிரமங்களுக்கிடையில், அவற்றுக்கு நிவாரணமளிக்கத் தவறுவதில்லை. இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம்அஸ்வினியின் பராமரிப்பிலுள்ள தெருநாய்கள், குட்டிகள் எல்லாமே பெண்ணினத்தைச் சேர்ந்தவை! பொதுவாக பெண்நாய்கள், குட்டிகளைப் புறக்கணிப்பதே இங்கே வழக்கமாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார் அஸ்வினி. ஆதரவற்ற தெருநாய், பூனை போன்றவற்றை ஆட்டோவில் ஏற்றிச்சென்று சிகிச்சையளித்துக் கூட்டிவர, அவற்றுக்கு கருத்தடை அறுவைசிகிச்சை செய்ய, மருந்து மாத்திரை வாங்கித் தர, உணவளிக்க என மாதமொன்றுக்குக் குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் செலவுசெய்ய வேண்டியிருக்கிறது. ஒருமுறை ஒரு தெருநாயைக் கூட்டிக்கொண்டு கருத்தடை அறுவைசிகிச்சை செய்துவைக்க குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. யாரேனும் இலவச வாகன வசதி செய்துதர முன்வந்தால், நிதிவசதி, இடவசதி செய்துகொடுத்தால் இன்னும் நிறைய தெருநாய்களுக்கும் பூனைகளுக்குத் தன்னால் உதவமுடியும் என்று மனம் நிறைய சக உயிர்களிடம் அன்பும் அக்கறையுமாகக் கூறும் அஸ்வினியின் நல்லெண்ணம் நிறைவேற நம்மாலான உதவிகளைச் செய்வோம்.
தொடர்புக்கு: ashwiniselvaraj87@gmail.com