மௌனவோலம்
‘ரிஷி’
..............................................................................................
//*2000த்தில் வெளியான அலைமுகம் என்று தலைப்பிடப் பட்ட என் முதல் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது//
.................................................................................
வழியெங்கும் சிதறியிருக்கின்றன வாளறுத்த யோனிகள்.
அப்பொழுதே அறுபட்டுக் குருதி பெருக்கி யிருப்பவை.
அனாதி காலந் தொட்டு ஆறாக் காய முற்றவை.
விழிநீரும் உதிரமுமாய் நிலைகுலைக்கும் பாதைகளில்
அடிக்கொன்றாய் மிதிபடும் முறிக்கப்பட்ட முலைகள்.
தெறித்துதிரும் கண்மணிகள் அலைகடலாழம் மூழ்க
துடிக்கத் துடிக்கப் பிடுங்கி யெறியப்பட்ட பூந்தொடைகள்
ஐந்து வயதிற்கும் அறுபதெழுபதுக்கும் இடைப்பட்டவை.
நைந்தழியும் கனவுகளை யெல்லாம் கழுகுகள்
கொத்திக் கொழிக்கும்.
கழுத்தில் முடிச்சிட்டு மூச்சிறுக்கி
மேளதாளத்துடன் கிழிபடுவன
வலிபொறுத்து விருப்பறுத்து வம்சவிருத்திக் கடன்
கழிக்கும்.
வறுமை யொரு வாளாய் விபச்சாரக் குழி வழிய
தழும்பணிந்த யோனிகள்.
யோனி பிளத்தல் இங்கே வீர விளையாட்டாக
காட்டு மேட்டிலும் கோட்டைக் கொத்தளங்களிலும்
மூலை முடுக்குகளிலும் முச்சந்திகளிலும்
காலை மாலை யெவ்வேளையும்
நாளை நிலாவிலும் நடக்கும்
மூர்க்கத் தாக்குதல்கள் - மீட்பறு வியூகங்கள்.
நாய்க் குதறலில் வேய்ங்குழல்கள் நொறுங்கிப் போக
ஆய கீதமெலாம் ஓயாக் கதற லொன்றே யாக
உள்ளொளி யடங்கிப் போக,
ஊர் வாய் அமிலமாக
கொள் ளெண்ணம் செயல் எல்லாம் பெண்ணை
அந்நியமாக்கும் தன்னிடமிருந்தும்.
காணி நிலம் வேண்டவில்லை. அவள்
யோனியும் அவளுக்கில்லை.
அங்கிங் கெனாதபடி ஆணியறைந் தறைந்து
இந்திரக் கண்களாய் அவள் மேனி நிறையும்
யோனித் துளைகள் - ஈ ஊற, எறும்பூற.
திரைதோறும் தீராப் பகடை யுருளும்.
பிரபுதேவா அடவுகளில் பனிக்குடம் தடம் புரள
கருவறுக்கும் தில்லானா தில்லானாக்கள்.
மாக்களாய் பெண்டாளும் சண்டாளர்க்கு
எந்நாளும் புரியாது யோனிப் பரிபாஷைகள்.
வானவில்லாய்ப் பெறும் இன்னுறவை அருகழைத்து
உள்வாங்கிக் குழைந்துருகும் யோனிகளுமுண்டிங்கு.
முள்மலராகு மந்த மூன்றாம்பிறைப் பொழுதும்
முதுகழுந்தும் சிலுவைகள்...
எங்கும்
தாக்க வாளும் துலாக் கோலுமாய்
பூக்கப் பூக்கப் பூ பொசுங்கும் நாற்றம்
தேக்கித் தேக்கி உயிர்ச்சூழல் பட்டுப் போக _
பண்டு தொட்டு கண்டதுண்டமாகி விட்ட
யோனி மனம் ஊமை ரணம்;
யோனி நலம் உலக பலம்.








