LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, February 7, 2025

விதைப்பும் அறுப்பும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 விதைப்பும் அறுப்பும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஒவ்வொரு நகர்விலும்
ஒருவகை ‘method in madness’ இரண்டறக் கலந்திருக்க
தனக்கு மிகவும் பிடித்த வெட்டாட்டத்தை
இடையறாது விளையாடிக்கொண்டிருக்கிறார் விமர்சகர்.
சுழற்றப்படுவது கிழிந்த காகிதவாள் என்று
புரிந்துகொள்ளாமல்
எளியோர் சரிந்துவிட
இறந்துபட
வி்ழுந்து விழுந்து சிரிக்கிறார்.
பெருங்குரலெடுத்து.
இல்லாத அரியணையில் பொருந்தியமர்ந்தபடி
கையிலிருக்கும் பட்டியலில் அவ்வப்போது
சில பெயர்களை சேர்த்தும் நீக்கியும்
பொழுதுபோக்கிக்கொண்டிருக்கும்
அவருக்குப் பிடிபடுமோ
தயாராகிக்கொண்டிருக்கும் இன்னொரு பட்டியலின்
வடிவமும்……
அதில் அவருடைய இடமும்?



அரைக்கண காலவெளிகளும் உன் அறைகூவல்களும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அரைக்கண காலவெளிகளும்

உன் அறைகூவல்களும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

கொஞ்சம் பொறு
தட்டாமாலை சுற்றிக்கொண்டிருக்கிறேன்.
இன்னமும் நிலா வரவில்லை.
அழைத்தபடியிருக்கிறேன்.
விண்மீனின் கண்சிமிட்டலைக் கண்டு ரசித்தபடி
அண்ணாந்திருக்கிறேன்…..
கண்ணீர் பாதையை மறைக்கிறது.
தத்தளித்துக்கொண்டிருக்கிறேன்.
கடும்புயல் – வெள்ளத்தில்
கலகலத்துச் சரிந்தவண்ணமிருக்கிறேன்.
காலன் எதிரில் கையறுநிலையில்
மண்டியிட்டவாறு….
‘கிட்டாதாயின் வெட்டென மற’வின் உட்பொருளைத்
துருவிக்கொண்டிருக்கிறேன்.
எட்டாக்கனி எதற்கெல்லாம் குறியீடாகும் என்பதையும்.
உடனடியாக எதிர்வினையாற்றவில்லையென்பதால்
உன் அறைகூவலைக் கேட்டு பயந்துவிட்டதாக அர்த்தமல்ல.
[காலநிலை என்ற தலைப்பிட்ட எனது ஏழாவது கவிதைத்தொகுப்பிலிருந்து (2010ஆம் ஆண்டு வெளியானது.

முதிர்வயதின் மகத்துவம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 முதிர்வயதின் மகத்துவம்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


யாராலும் பார்க்கப்படாமல்,
பார்க்கப்படுகிறோமோ என்ற தர்மசங்கடவுணர்வோ
பார்க்கப்படவில்லையே என்ற பரிதவிப்போ
இல்லாமல்
ஒரு சிற்றுண்டிவிடுதியில் வெகு இயல்பாய் நுழைந்து
சீராகச் சுழன்றுகொண்டிருந்த மின்விசிறியின் கீழ்
எனக்கான இடத்தைத் தேடிக்கொண்டபோது
முதிர்வயதின் மகத்துவம் புரிந்தது.

காலநிலை என்ற தலைப்பிட்ட எனது ஏழாவது கவிதைத்தொகுப்பிலிருந்து (2010ஆம் ஆண்டு வெளியானது

அறிவாளி – அறிவீலி - அரசியல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அறிவாளி – அறிவீலி - அரசியல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

தன்னை யறிவாளி யென்று சொல்கிறவரின் சொல்கேட்டு
சொல்லமுடியாத ஆனந்தத்தில் சொக்கிநிற்கிறார்கள்;
சுற்றிச் சுழல்கிறார்கள்; சுடரொளி வீசுகிறார்கள்;
சுநாதமிசைக்கிறார்கள்….
சொல்பவர் அந்தச் சொல்லைச்
சொல்லத் தகுதியானவராவென்றெண்ணத்
தலைப்படாமல்
சொல்பவரின் சொல்படி தானே அறிவாளி யென்று சுற்றுமுற்றுமுள்ளவர்க்கெலாம் தன்னைச்
சுட்டிக்காட்டும் முனைப்பில்
காரணகாரியங்களோடு மறுத்துப்பேசுவோரை
கோமாளிகளாகச் சித்தரித்து
சொந்த சகோதரர்களுக்கு முட்டாள் பட்டம்
கட்டப்படுவதை கைதட்டி ரசித்து _
சிறகசைத்துப் பறக்காத குறையாய்
சீக்கிரசீக்கிரமாய் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து
வரிசையில் நின்று
வாழ்நிலத்தைத் தன் வம்சாவளிச் சொத்தாக பாவிக்கும்
வெள்ளி ஸ்பூனோடு பிறந்தவர்க்கே
வாக்களித்துவிட்டு வந்தார்கள்
வெற்றிப்புன்னகையோடு.
அந்த வாக்காளர்களேே அறிவாளிகள் என்று அறைகூவலிட்டவாறே
அறிவாளிக்கெல்லாம் அறிவாளி
அரியணையில் அமர்ந்துகொள்ளுமோர் நாளில்
அவருடைய தன்னலத்தால் அறிவாளிகளாக
போற்றிப் பாடப்பட்டு
அடுத்தவர்களை முட்டாள்களாய் மட்டுமே
அடையாளங்காணப் பயிற்றுவிக்கப்பட்ட
பரிதாபத்துக்குரிய உண்மையான அறிவீலிகள்
அடிமையாய் அந்த வேலியிட்ட திறந்தவெளியில்
அம்மணமாய்
ஒருவர் பின் ஒருவராய் அனுப்பிவைக்கப்பட
காட்டெருமை சிங்க வகையறாக்கள் எங்கிருந்தோ சீறிப்பாய்ந்து
அவர்களைக் குதறத் தொடங்கும்.
சக்கரவர்த்திகளின் அட்டகாசச் சிரிப்பைக் கேட்டவாறே விழுந்துகிடக்கும் குற்றுயிர்கள்.

மதிப்புரைகளும் மாஜிக்கல் ரியலிஸமும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மதிப்புரைகளும்

மாஜிக்கல் ரியலிஸமும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
‘மிகவும் அருமையான கதை யிது
இருக்கும் எட்டு பக்கங்களில் ஏழிலுள்ளவை
ஏற்கெனவே எழுதப்பட்டிருப்பதே யென்றாலும்’
என்கிறார் ஒரு விமர்சகர் _
‘ரேட்டிங்’குக்கான ஐந்து வட்டங்களை யடுத்து
இன்னும் ஐந்து வட்டங்களை யிட்டு
பத்தாவதில் ’டிக்’ கொடுத்து.
’பார்த்துக்கொண்டிருக்கும்போதே முளைத்த பரு
புதுமையான கதைக்கரு’
’முளைத்த’ என்பதற்கு பதில்
’இளைத்த’ என்று எழுதியிருக்கலாம்.
மற்றபடியெந்தக் குறையுமில்லை’
என்று இன்னும் ஐந்து வட்டங்களை யிட்டபடியே
வலிக்காமல் குட்டுகிறார் ஒரு திறனாய்வாளர்.
வலித்தாலும் பரவாயில்லை யென்று
எல்லா விரல்களிலும் வகைவகையாய்
மோதிரங்களை அணிந்தபடி.
ஒரு கதையை யொருவர் எழுதினால்
அது அருமையாவதும் புதுமையாவதும்
அதை யின்னொருவர் எழுதினால்
கழுதையின் பின்னங்காலால்
உதைக்கப்படவேண்டியதாவதும்
மதிப்புரைகளின் மாஜிக்கல் ரியலிஸமாக…..

மெய்த்தோற்றங்கள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 மெய்த்தோற்றங்கள்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

பிறவி நடிகர் திலகங்களும்
நடிகையர் திலகங்களும்
தருவித்துக்கொண்ட நவரச முகபாவங்கள்
புகைப்படங்களை ஒரு திரைப்படத்தின் காட்சித்துணுக்குகளாக நம் முன் வைத்தவாறே.
அழும்போதும் ஆத்திரப்படும்போதும்
அழகாகக் காட்சியளிக்கவேண்டும் என்ற கவனமாகவே யிருக்கும் நடிகையர் திலகங்கள்
இயல்பாக நடப்பதாய்
இடுப்புவளைவை எடுப்பாக்கிக் காட்டியவாறே
ஒயிலாக நடந்துகொண்டிருக்கிறார்கள்
இணையப்பக்கங்களில்.
அவர்கள் வெட்டியொட்டும் வாசகங்களை
யெல்லாம்
அவர்களுடையதாக மாற்றிவிடும் வித்தையை
வெகு இயல்பாகக் கைக்கொண்டவர்கள்
இருகைகளிலுமான இருபதுவிரல்களால் எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள்.
இருக்கையை விட்டு இம்மியும் நகராமல்
வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பவர்கள்
இந்தத் திரைப்படம் ‘ஆர்ட்’ படமா ‘மசாலா’ப் படமா
என்று தங்களைத்தாங்களே கேட்டுக்கொள்ளும் நாள்
தொலைவிலோ அருகிலோ
இருக்கிறதோ இல்லையோ….






இதன் மூலம்…. ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 இதன் மூலம்….

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

மூலக்கவிதையில் ’குரல்வளையில் சிக்கிக்கொண்ட கனன்றெரியும் கங்கு’ என்றிருந்தது
மொழிபெயர்ப்பில்
’கனன்றெரியும் கங்கின் குரல்வளையில் சிக்கிக் கொண்டு’ என்றானதில்
ஏதும் தவறில்லை யென்பாரும்
எல்லாமே தவறாகிவிட்டதென்பாரும்
இதுவே மொழிபெயர்ப்பின் creativity என்பாரும்
இல்லையில்லை atrocity என்பாரும்
இஃதன்றோ மொழிபெயர்ப்பின் தனித்துவம் என்பாரும்
இதுவொரு கேடுகெட்ட தடித்தனம் என்பாரும்
கிசுகிசுப்பாய்த் தர்க்கித்தவாறிருக்க
நமுட்டுச்சிரிப்போடும்
நிஜமான வருத்தத்தோடும் சிலர்
மெல்ல நகர்ந்துவிட
இவையேதுமறியாது அருள்பாலிக்கும் அறியாமையில்
மொழிபெயர்ப்பாளர் ‘லைக்’குகளைக் கணக்கிட்டுக் கொண்டிருக்க
அணைய வழியின்றி அந்தக் கங்கு
குரல்வளையில் இன்னமும் கனன்றெரிந்து
கொண்டிருக்கக் காண்போம் –
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்....


அன்புப்போலிகள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அன்புப்போலிகள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


எல்லோருக்கும் நல்லவராக இருப்பதாகக் காட்டிக்கொள்பவர்களிடம்
அன்பு ததும்பிக்கொண்டிருப்பதற்கு பதிலாக
தன் பெருந்தன்மை குறித்த கர்வமே அதிகம்.
கூடவே அதில் பாசாங்கும் பயமும்
பிழைப்பிற்கான யத்தனமும்.
எதிரியற்ற போரில் வெல்லும் பிரயத்தனமும்.
குதிரையை கழுதையென்றாலும் மறுத்துப்பேசத்
தடுத்துவிடும் தோழமை யென்ற
கணக்கும்.
எனத் தெரிந்து பல காலமாகிறது
எனக்கும் உனக்கும்.
முன்பும் பின்பும் அன்புப்பழமாக
அனைவருக்குமானவராக
நெஞ்சு நிமிர்த்தி புன்னகைத்துக்
கொண்டேயிருப்பவரிடம்
கேட்கவேண்டும்
பதில் கிடைத்துவிட்ட அந்த ஒரே கேள்வி:
நீங்கள் நல்லவரா? கெட்டவரா?