LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, June 20, 2024

சொல்லத்தோன்றும் சில.....

 சொல்லத்தோன்றும் சில.....

.........................................................................................................

மதமாற்றம் ஒருவருடைய தனிப்பட்ட உரிமை.
பல காரணங்களால் ஒருவர் மதம் மாறலாம்.
விரும்பியும் வலுக்கட்டாயமாகவும் வலுவான நம்பிக்கையாலும் வாழ்வியல்சார்ந்த தேவை களாலும்......
ஆனால் சமீபகாலமாக முகநூலில் மதமாற்றம் குறித்து சில படைப்பாளிகள் பரிந்துரை செய்து வருவதைப் படித்தறிய முடிகிறது.
அதற்கு அம்பேத்கரையும் துணைக்கழைத்துப் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப் பரிந்துரை செய்பவர்கள் மதம் மாறி யிருக்கிறார்களா என்று அறிய விருப்பம்.
மாறியிருந்தால் அதை தைரியமாக, வெளிப் படையாக அவர்கள் வெளியே சொல்கிறார் களா?
அம்பேத்கர் இந்துமதத்தைப் பற்றிச் சொன் னதை மட்டும் மேற்கோள் காட்டுபவர்கள் அவர் மற்ற மதங்களைப் பற்றிச் சொல்லியிருப்பதை ஏன் சௌகரிய மாகப் புறந்தள்ளிவிடுகிறார் கள்?
படைப்பாளிகள் தங்கள் எழுத்தில் நேர்மையாக இருப் பதே மற்றெல்லாவற்றையும்விட மிக முக்கியம் என்பது என் தாழ்மையான கருத்து.
Like
Comment
Send
Share

குழந்தைநலன் - குழந்தை உரிமை - பெரியவர்களாகிய நாம்

இன்னொரு டைம்லைனிலிருந்து தோழி பத்மினி கோபாலனின் FACEBOOK டைம்லைன்ல் பகிரப் பட்டிருந்த பதிவு இது. பத்திரிகைச் செய்தி.

இந்தச் செய்தி மிகவும் கவலையளிக்கிறது.

பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றவர்கள் எல்லோருக்குமே குழந்தைகளின் நலன், உரிமைகள், அவை சார்ந்த சட்டங்கள், உளவியல்சார் விவரங்கள் குறித்தெல்லாம் SENSITIZATION SESSIONS நடத்தவேண்டியது அவசர, அவசிய இன்றியமையாத் தேவை.

ஒருவர் - இன்னொருவர் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஒருவர் - இன்னொருவர்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
அவரைத் தூற்றிக்கொண்டேயிருந்தார் இவர்....
அவர் அல்ட்டாப்பு என்றார்;
அவர் அராஜகவாதி என்றார்;
அவரால்தான் பறவைகளால் பேசமுடியாமல் போனது என்றார்;
அவரால்தான் மீன்களால் தரையில் துள்ளிக்குதித்து விளையாட முடியவில்லை யென்றார்;
அவரால்தான் நட்சத்திரங்கள் பகலில் வெளிப்படுவ தில்லை யென்றார்;
அவரால்தான் முதுமையில் ஒருவருக்கு தோலில் சுருக்கங்களும் ஞாபகமறதியும் ஏற்படுகின்றன என்றார்.
அவர் அசிங்கம்பிடித்தவர் என்றார்;
அவர் ஆணவக்காரர் என்றார்;
அவர் நட்டு கழண்ட கேசு என்றார்;
அவர் நிராகரிக்கப்படவேண்டியவர் என்றார்;
'நன்றி நண்பரே – நாள்தோறும் என்னைப் பற்றியே எண்ணிக்கொண்டிருப்பதற்கும் பேசிக்கொண்டிருப்பதற்கும்' என்றபடி
தன்வழியே செல்லலானார்
அந்த இன்னொருவர்.

All reactions:

நேர்கொண்ட பார்வை - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நேர்கொண்ட பார்வை

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


அவள் நல்லவளாகவே இருக்கக்கூடும்;
வல்லவளாகவும்கூட.
நடுவகிடு எடுத்துத் தலைவாரினாலும் சரி
கோணவகிடு எடுத்துத் தலைவாரினாலும் சரி
அவள் அழகென்றே அறியப்படத் தகுதிவாய்ந்தவளே.
அத்தனை சீக்கிரம் அழாத திட மனது வாய்க்கப்பெற்றவளாயிருக்கலாம் ;
அவரிவருக்கு அனேக உதவிகள் செய்பவளாயிருக்கலாம்;
முத்துமுத்தான கையெழுத்து வாய்த்திருக்கலாம் அவளுக்கு;
முதல் மதிப்பெண் பெற்றிருக்கக்கூடும் பள்ளி கல்லூரிகளில்.
பெற்ற குழந்தைகளுக்கு நற்றவத்தாயாயிருக்கக்கூடும்;
கற்ற வித்தைகளை காசு வாங்காமல் நாலுபேருக்கு சொல்லிக்கொடுக்கக்கூடும்;
கோனார் நோட்ஸ்ஸின் உதவியில்லாமலேயே பரிட்சைகளில் தேறியிருக்கக்கூடும்;
கோஹினூர் வைரத்தில் ஒட்டியாணம் அவள் நகைப்பெட்டியில் இருக்கக்கூடும்;
குழலிசைக்குரலுக்குச் சொந்தக்காரியாக.
இருக்கக்கூடும்;
கூடுவிட்டுக்கூடுபாயும் வித்தையைக்
கற்றிருக்கக்கூடும்;
ஆடலும் பாடலும் அறிந்திருக்கக்கூடும்;
அநாயாசமாய் ஆறுக்குமேல் பெரிய தோசைகளை சாப்பிடக்கூடும்.....
எப்படியிருந்தாலும் சரி _
தயவுசெய்து இப்படி எல்லாப் புகைப்படங்களிலும்
ஒருபுறமாய் தலையை சாய்த்து
சகிக்கமுடியாதவொரு கிறக்கப்பார்வை வீசியவாறே
’போஸ்’ கொடுக்கவேண்டாம்
என்பதே
மண்டியிட்டு தெண்டனிட்டு
அவருக்கு நான் சமர்ப்பிக்கும்
பணிவான கோரிக்கை.

ஓர் அதிசாதாரணக் கவிதையை அசாதாரணக் கவிதையாக்கும் வழிமுறைகள் சில…. 'ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஓர் அதிசாதாரணக் கவிதையை அசாதாரணக் கவிதையாக்கும் வழிமுறைகள் சில….

'ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
......................................................................................................

தேவைப்படும் பொருட்கள்:
• கொஞ்சம் சாம்பிராணி
• நான்கைந்து ஊதுபத்திகள்
• எதிரிலிருப்பவர் முகம் தெளிவாகத் தெரியாத
அளவு நிழலார்ந்த பகுதி
• பின்னணியில் நிறைய இலைத்திரள்களுடனான பெரிய மரம் அல்லது நீண்டுகொண்டே போகும் கடற்கரை மணற்பரப்பு
கூடுதல் குறிப்புகள்:
மரம் பட்டுப்போய்க்கொண்டிருக்கும் நிலையில் உள்ளதாக இருந்தால் மிகவும் நல்லது.
அல்லது
கடற்கரை மணற்பரப்பில் ஒரு குறிப்பிட்ட தொலைவிற்குக் கண்ணெட்டும்படியாக காலடித்தடங்கள் தெரியவேண்டும் –
தெளிவாகவும், மங்கலாகவும், இரண்டும் கலந்தும்.
புரியாத மொழியில் ஒரு பாட்டு சன்னமாக ஒலித்துக்கொண்டிருக்கட்டும்.
(புரிந்த மொழி என்றால் ஒருவேளை அது உங்கள் கவிதையை விட மேம்பட்டதாகப் புலப்பட்டுவிட வழியுண்டு. எதற்கு வம்பு).
திடீர்திடீரென்று உங்கள் தோள்களில் சிறகுகள் முளைத்து நீங்கள் பறக்கவேண்டும் (பயப்படவேண்டாம். நிஜமாக அல்ல; காணொளித் தொழில்நுட்பத்தின் உதவியுடன்).
ஒரு விஷயத்தில் நீங்கள் வெகு கவனமாக இருக்கவேண்டும் _
தரையில் நின்றிருந்தாலும் சரி, அந்தரத்தில் மிதந்துகொண்டிருந்தாலும் சரி உங்கள் கண்கள் மட்டும் அரைக்கிறக்க ‘பாவ’த்தில் அண்ணாந்து பார்த்தபடியே இருக்கவேண்டும்.
ஒரு வரியை வாசித்தவுடன் அரங்கிலுள்ளோர் பக்கமாகப் பார்வையைச் சுழலவிடுவது பழைய கவியரங்க பாணி.
நீங்கள் ஒரு வரியை வாசித்துமுடித்தவுடன் கைகளைக் கோர்த்துக்கொண்டு தலைகுனிந்து மௌனமாயிருத்தல் வேண்டும்.
கைத்தட்டலுக்கான இடைவெளி பலவிதம் என்று இத்தனை வருடங்களாக வாசித்துக்கொண்டிருப் பவர்களுக்குத் தெரியாதா என்ன?
இவர்களில் சிலருக்கு இன்னும் சிலபலவும் தெரியும் என்பதுதான் இங்குள்ள சிக்கல்.
இலக்கியத்தின்பால் உள்ள மெய்யான அக்கறையோடு இருக்கும் அவர்களுக்கு
தன்னை மறந்த பாவத்தை முழுப் பிரக்ஞையோடு தாங்கி என்னதான் அழகிய ‘prop’களோடு நீங்கள் இயங்கினாலும்
உங்கள் கவிதையில் எந்த அசாதாரணக் கவித்துவமும் இல்லையென்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கிவிடும்.
அதைப் பெரிதுபடுத்தி வெளியே சொல்லாமலிருக் கும்வரை அவர்களைப் பொருட்படுத்த வேண்டாம்.
சொன்னாலோ அதிசாதாரணம் என்பதில் உள்ள ’தி’, ’சா’வுக்கு பதிலாக வந்துவிட்ட அச்சுப்பிழை என்று கூறத் தெரிந்திருக்கவேண்டும் எப்போதும்.
அதைவிட எளிதாக _
இன்று இலக்கியவாதிகளிடையே பெருகிவரும் எதிர்மறை முத்திரைகளில் ஒன்றைக்
(வலதுசாரி, அதிகார வர்க்கம், சாதித்திமிர், ஃபாசிஸம், நார்ஸிஸம் அன்னபிற பிற பிற பிற….)
கொண்டு அவர்களுக்குக் கரும்புள்ளி செம்புள்ளி குத்திவிடத் தெரிந்திருந்தால் போதும்.

பிரதி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பிரதி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
.......................................................................


”எதற்கு ?
வேண்டாம் _
போதும்.”
உறவு முறிவின் அறுதிப்புள்ளியாய்
எழுத்தாளர் பிரதி;
கலவியின்பக் கிறக்கச்சிணுங்கலாய்
இருபதாயிரம் மைல்களுக்கப்பால்
சுயமைதுனஞ்செய்யும்
வாசகப்பிரதி;
கண்சிமிட்டிப் புன்சிரிக்கிறது
கவிதை
கன்னங்களில் நீர் படிய.

Tuesday, February 20, 2024

பாயுமொளி நீயெனக்கு பார்க்கும் விழி நானுனக்கு

 பாயுமொளி நீயெனக்கு

பார்க்கும் விழி நானுனக்கு


...........................................................


39 வயதில் முடிந்துவிட்ட பாரதியின் வாழ்க்கை. அதற்குள் எத்தனை உணர்ச்சிமயமான கவிதைகள்!

அவர் கவிதைகளுக் கான அர்த்தம் தருவோர் முடிந்த முடிவாக அவர் இதைத்தான் சொன்னார் என்று எப்படி சொல்கிறார்களோ, தெரியவில்லை.

அவர் அப்படி’இதை நினைத்துத் தான் இந்தக் கவிதை எழுதினேன்’ என்று எந்த ஒப்புதல் வாக்குமூலமும் தந்துசென்றதாகத் தெரிய வில்லை.
இங்கே தரப்பட்டுள்ள கவிதை காதல் கவிதை என்று புரிகிறது. ஆனால், அவருடைய எல்லாக் கவிதைகளும் அப்படியென்று சொல்லவியலாது.

உதாரணத்திற்கு, ‘ திக்குத் தெரியாத காட்டில்’ என்று தொடங்கும் கவிதை. அவருடைய பல கவிதைகள் ‘திறந்த முனை’க் கவிதைக ளாக ஒன்றுக்கு மேற்பட்ட வாசகப்பிரதிகளை உள்ளடக்கியவை.
எனவே, அவருடைய கவிதைகளுக்கு உரை எழுத முற் படாமல் அவற்றை வாசிப்பதே அவருக்கு வாசகராக நாம் செய்யும் குறைந்தபட்ச மரியாதை என்று தோன்றுகிறது.
.........................................................................................................................................
பாரதியார் கவிதை
பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!

வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மானுடைய பேரர சே! வாழ்வு நிலையே! கண்ணம்மா!

வான் மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு
ஞான வொளி வீசுதடி; நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணம்மா!

வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுகதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!

வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே; நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா!

காதலடி நீ யெனக்குக் காந்த மடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!

நல்லவுயிர், நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா!

தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஒருருவமாய்ச் சமைந்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா!

குழந்தைகள் என்னும் கொத்தடிமைகள் _ லதா ராமகிருஷ்ணன்

 

_ லதா ராமகிருஷ்ணன்
(15.2.2024 தேதியில் பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது)


குழந்தைகளை அடிப்பது கொடூர வன்முறைச் செயல்.  காலத்திற்கும் குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. சக குழந்தை அடிவாங்குவதைக் கையறுநிலையில் பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தையும் மனரீதியாக பாதிப்படையும் என்று பல உளவியல் ஆராய்ச்சிகள் எடுத்துரைக்கின்றன.

’அடியாத மாடு படியாது’ என்றும், ’அடிக்கிற கைதான் அணைக் கும்’ என்றும் குழந்தையை அடிப்பதை பலவாறு விதவிதமாக நியாயப்படுத்தும் பெரியவர்களை என்ன சொல்ல?

சில நாட்களுக்கு முன் ஒரு குறுகிய சந்தில் போய்க் கொண்டிருந் தேன். அங்கிருந்த பள்ளியொன்றிலிருந்து ஸ்கேலில் பளீர் பளீ ரென்று அடி விழும் சப்தமும், ஒரு சிறுவன் வீறிட்டழும் சப்தமும் தெருவரை வந்து கேட்டுக்கொண்டேயிருந்தது. தாங்கமுடியாமல் பள்ளிக்குள் சென்றேன்.


இருட்டான அறைகள். காற்று வசதியே கிடையாது. உள்ளறை யொன்றில் பருமனான பெண்மணி ஒருவர் கையில் ஸ்கேலோடு நின்று கொண்டிருந்தார். அவருடைய வகுப்பறையிலும் சுற்றிலு மிருந்த வகுப்பறைகளிலும் குழந்தைகள் - ஐந்தாம் வகுப்புவரை யான பள்ளி போலும் - பயம் மண்டிய கண்களோடு அமர்ந்திருந் தனர்.


’குழந்தைகளை அடித்தல் சட்டப்படி தவறு என்று தெரியாதா - இப்படியா காட்டுத்தனமாக அடிப்பது?’ என்று கேட்டதற்கு தலைமையாசிரியர் போலும் ஒரு பெண்மணி வந்து ”நாங்கள் அடிக்கவேயில்லையே”, என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாகப் பொய்யுரைத்தார். 

இது குறித்து ஊடகங்களில் எழுதுவேன் என்று கூறி வெளியேறி னேன். எங்கள் பகுதியில் வரும் பத்திரிகைக்கு எழுதிப் போட்டேன். பிரசுரமாகவில்லை.

அந்தத் தெரு குறுகலாக இருந்ததால் எனக்கு அடிவாங் கும் குழந்தையின் அலறல் கேட்டது. அதுவே அகன்ற வீதியில் அமைந்திருந்தால்....? அந்தப் பள்ளிக்குள் என்னால் நேரடியாக நுழைந்து உள்ளே செல்ல முடிந்தது. வாயிற்காவலர் என்று ஒருவர் இருந்து வெளியிலேயே தடுத்திருந்தால்.... ? இத்தகைய கேள்விகள் எனக்குள் தொடர்ந்து எழுந்தவண்ணம்...?

பெரியவர்களுக்கு இருக்கும் வாழ்வியல் ஏமாற்றங்கள், மன அழுத்தங்களை யெல்லாம் குழந்தைகளை அடித்துத் தீர்த்துக் கொள்வதா தீர்வு? பல பெற்றோர்கள் கூட குழந்தைகளை வெகு இயல்பாக அடிப்பதைப் பார்க்க முடிகிறது.

ஒரு குட்டிக் குழந்தைக்கு அதன் தாயே வாயில் சூடு வைத்திருந் தார். கேட்டால், குழந்தை கெட்ட வார்த்தை பேசுகிறது”, என்றார். குழந்தைக்கு கெட்ட வார்த்தை என்று பகுக்கத் தெரியுமா? தன் அருகிலிருக்கும் பெரியவர்கள் பேசுவதைத்தானே அது பேசப்பழகு கிறது?

திரைத்துறையும் சின்னத்திரையும் இன்றைய சமூகத் தில் கணிச மான அளவு தாக்கம் செலுத்துவது வெளிப்படை. சின்னத்திரை யின் முக்கியப் பெண்மணி ஒருவர் தன் தாய் தனக்குத் தந்த தண்டனைகளை சர்வசாதாரணமாகப் பட்டிய லிடுகிறார்.


சமீபத்தில் பிக்-பாஸ் ஸீஸன் 7 - தமிழில் பங்கேற்ற இளம்பெண் ஒருவர் பள்ளிக்காலங் களில் மதிப்பெண் குறைந்தால் தன் தாய் ஊதுபத்தி, வத்திக்குச்சி போன்ற சாதனங்களால் கையில் அங்கங்கே சூடுவைப்பார் என்று சொல்ல அந்தத் தாய் அதைக் கேட்டு மகிழ்கிறார்.

 இதையெல்லாம் கேட்கும் பார்வையாளர்கள் மனங்களில் குழந்தைகளை அடித்துத் தண்டிப்பதே சரியான தாய்மை, வளர்ப்புமுறை என்ற எண்ணம் வலுப்பெறுகிறது.

வாழ்க்கைத்தத்துவங்களாக எழுதிக்குவிக்கும் படைப் பாளிகள் பலர், மற்றவர்களின் புறக்கணிப்பால், அடக்கு முறையால் தங்களுக்கு நேர்ந்த மன அழுத்தங்களை, பாதிப்புகளைப் பற்றி பக்கம்பக்கமாக எழுதிக்குவிப்பவர்கள் குழந்தைகளை அடிப்பது அவசியம் என்பதாகவே எழுதுகிறார்கள்.

சமீபத்தில் ஒரு பிரபல தமிழ் எழுத்தாளர் தன் சகோதரர் மக னைத் தான் அக்கறையாக வளர்த்தது பற்றி எழுதும் நோக்கில் ”என்னால் கடுமையாக அடிக்கப்பட்டு ஆங்கி லம் சொல்லிக் கொடுக்கப்பட்டவன்” என்று பெருமையாக சொல்லிக் கொள்வ தாக எழுதுகிறார். 


வளர்ந்த மனிதர்கள் யாருக்குமே குழந்தைகளிடம் இப்படி நடந்துகொண்டது, கொள்வது குறித்து எந்தவிதமான குற்ற வுணர்வோ, கூச்சநாச்சமோ இருப்பதில்லை என்பதைப் பார்க்க அதிர்ச்சியாக இருக்கிறது.

சமீபத்தில், விவாகரத்து செய்துகொண்ட கணவன் - மனைவி விஷயத்தில் கணவனிடம் குழந்தையை வாரத்திற்கொரு முறையோ மாதத்திற்கொரு முறையோ அழைத்துச்செல்ல வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு பிடிக்காமல் தன் நாலு வயது ஆண் குழந்தையையே கொலை செய்த படித்த வசதியான தாய் குறித்த செய்தி யொன்றைப் படிக்க நேர்ந்தது.

பெண் குழந்தைகள் மட்டுமல்லாமல் ஆண் குழந்தைக ளும் வீடுகளிலும் பள்ளிகளிலும், ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களிலும்கூட சில இடங்களில் பாலியல் அத்துமீறல் களுக்கு ஆளாகும் செய்திகளைப் படிக்க நேர்கிறது.

எல்லாவிடங்களிலும் இது நடைபெறுகிறது என்று பொதுப் படையாகப் பேசுவது சரியல்ல. முறையுமல்ல.

அதேசமயம், குழந்தைகள் தொடர்பான விஷயத்தில் எந்த விதமான அத்துமீறல்களும், வன்கொடுமைகளும் நிகழாமல் இருக்க அரசுகளும், உரிய துறைகளும் தொடர்ந்தரீதியில் கண்காணிப்பில் ஈடுபடவேண்டியதும், இது குறித்த பிரச்சார இயக்கங்களை மேற்கொள்ள வேண்டியதும் மிக மிக அவசியம்.

மனசாட்சிக்கு பயப்படாதவர்கள் சட்டத்திற்காகவது பயப்படு வார்கள் என்று நினைக்கிறேன். இது குறித்த சட்டங்கள் கீழே தரப்பட்டுள்ளன. சின்னத்திரை நாடகங்கள், திரைப்படங்களி லெல்லாம் ‘ குடிப்பதாக, புகைபிடிப்பதாக வரும் காட்சியில் ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்று சின்னதாக ஒரு வரி நெளியும். அப்படி, குழந்தைகளை அடிக்கும் காட்சிகள் இடம்பெறும் போதெல்லாம் அது சட்டப்படி தவறு என்ற வரி கட்டாயம் தரப் பட வேண்டும்.

ஆனால், சின்னத்திரை மகா சீரியல்களிலெல்லாம் பெரியவர் களே ஒருவரை யொருவர் - மாமியார் மருமகளை, அப்பா மகனை, கணவன் மனைவியை - இப்படி - சரமாரியாக அறைந்துகொள்வதான காட்சிகள் மிகப் பரவலாக இடம்பெறும் நிலையில் குழந்தைகள் அடிபடுவதைப் பற்றியெல்லாம் அவர் கள் கவலைப்படப் போகிறார்களா என்ன?

ஆனால், சமூக அக்கறை உள்ளவர்கள் பெரியவர்களை அண்டி வாழும் குழந்தைகள் நலன் குறித்து இன்னும் அதிகமாக கவனம் செலுத்தவேண்டியது, அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது மிக மிக அவசியம்.

* Legal ProvisionsSection 17 (1) of the Right of Children to Free and Compulsory Education Act, 2009 expressly bans subjecting a child to mental harassment or physical punishment. Cruelty to children is also prohibited under Section 23 of the Juvenile Justice (Care and Protection of Children) Act, 2000. *

INSIGHT - BILINGUAL BLOGSPOT FOR CONTEMPORARY TAMIL POETRY - NOV-DEC,2023

 INSIGHT

a bilingual blogspot for contemporary tamil poetry

www.2019insight.blogspot.com



Friday, December 29, 2023

உள்ளங்கையுலகு - 1

 உள்ளங்கையுலகு - 1

எனது - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் - இதுவரையான கவிதைகள்

நான்கு முழுத்தொகுப்புகளாக
உள்ளங்கையுலகு - 1,
உள்ளங்கையுலகு - 2,
உள்ளங்கையுலகு - 3,
உள்ளங்கையுலகு - 4
என்று புதுப்புனல் பதிப்பகத்தால் பிரசுரிக்கப்படவுள்ளன.

இவற்றில் முதல் தொகுப்பு
உள்ளங்கையுலகு _ 1 பிரசுரமாகிவிட்டது.
(500+ பக்கங்கள் - விலை ரூ.600)