LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, June 20, 2023

பூதகணங்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்

 பூதகணங்கள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்
(*நான்காம் தொகுப்பு – காலத்தின் சில ‘தோற்ற’ நிலைகள்)
(2005 இல் வெளியானது)
1

காலாதிகாலம் குடுவைக்குள்ளிருந்துவரும் பூதம்.
மூச்சுத் திணறி விழி பிதுங்கி
வெளிவந்தாகவேண்டிய நாளின்
நிலநடுக்கங்களை
நன்றாக உணர முடியும் அதன்
நானூறு மனங்களால்.
முதலில் தகரும் குடுவையின்
உறுதியை
அறுதியிட்டபடி நகரும்
பகலிரவுகள்.
பாவம் பூதம் குடுவை காலம், நான் நீ யாவும்….

2

நிராதரவாய் ஒரு மூலையில் சுருண்டு கிடக்கும்
பூதத்திற்கு
ஆடிக்கொரு நாள் அரைவயிற்றுக் கஞ்சியும்
அமாவாசைக்கொரு நாள்
சிறு துளி நிலவும்
ஈயப்படும்.
செவிக்குணவு ஸ்ருதிபேதங்கள்,
நிராசைகளின் பேரோசைகள்,
நாராச நிசப்தங்கள்
என்றாக
போகும் வழியெல்லாம் பெருகிவரும் அகதிமுகாமில்
இருகால் மிருகங்களாய் சிறு
புழுப் பூச்சிகளாயும்
பாவம் பூதம் குடுவை காலம் நான் நீ யாவும்….

3
வாரிசைப் பெற்றெடுக்காததால்
வெறும் பூனையாகிவிடுமோ பூதம்?
எலியைக் குடுவைக்குள் விட்டால்
என்ன நடக்கும் பார்க்கலாமென
காதுங் காதுமாய் கிசுகிசுத்துக்கொண்டார்கள்.
கத்தித் தீர்த்தார்கள் குரல்வளை கரிந்தெரிய.
குடுவை மூடியைத் திறக்கத் துணிவில்லை.
உள்ளே
தனது மூன்றடி மண்ணுக்காய்
தவமிருந்துகொண்டிருக்கக்கூடும் அது.
பாவம் பூதம் குடுவை காலம் நான்
நீ யாவும்…..

4

இன்னும் தன்னை நுண்ணுயிராக்கிக்கொண்டு
இரத்தவோட்டத்தில் நீந்திச்செல்லும் பூதம்
இரப்பை, நுரையீரல், மலப்பாதை, சிறுநீரகமென
மென்மேலும் பயணமாகி
உடலியக்கத் தொழில்நுட்பத் திறன் கண்டு
வெட்கிப் போனதாய்
அடிமுடியெல்லாம் செந்நிறமணிந்து
கோலம் புதிதாகக் கொண்டாடிய கணமொன்றில்
குடுவை தாயின் கருவறையாகத் தோன்ற
தலைசாய்த்துக் கண் மூடியது
கோபதாபங்களில்லாது.
பாவம் பூதம் குடுவை காலம் நான்
நீ யாவும்….

5

வீதியெங்கும் பெருகியோடிக்கொண்டிருக்கின்றன
கழிவுநீர்கள்…..
பாதாளச் சாக்கடையிலிருந்து கிளம்பிவரும்
மனிதவுடல் நாறும் மலக்கிடங்காய்.
கண்ணாடியின் சன்னத்திலான மென்தேக
இடுப்பின் வளைவு தாங்கும்
குடங்கள் எண்ணிறந்ததாய்.
ரயில் நிலையப் படிக்கட்டுகளின் ஓரங்களில்
நீளும் கைகளின் மொண்ணை விரல்கள்
தகரத்தை விழுங்கியதாய் இருமியவாறு.
வராத சவாரிக்காய் விழி பூத்திருக்கும்
சைக்கிள்ரிக்‌ஷாக்காரர்.
சுடச்சுட ‘சிங்கிள் டீ’யை கை வேக
விநியோகிக்கும்
விடலைச் சிறுவர்கள்.
சீறிச்செல்லும் வாகனங்களுக்கிடையே
சிக்கிநிற்கும் வெறுங்காலாட்கள்….
வர்ணமயமாக்கலுக்கு அப்பால் அவர் தம்
கால்களின் வெறுமை
உயிர்நிலையைக் கிழித்தெறிய
காதறுந்த ஊசியும் கூட வராத வாழ்வில்
அழிந்துகொண்டிருப்பவர்களுக்கு
ஆதரவாக
தன் விசுவரூபத்திற்கான ஏக்கம்
தாக்கி மோதும் எப்போதும்.
பாவம் பூதம் குடுவை காலம் நான்
நீ யாவும்…..

நிலை(ப்)பாடு ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நிலை(ப்)பாடு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அதிகபட்சமாக அறுபதுபேர் கூடியிருக்கும் அரங்கில் அவர்
ஆயிரம்பேர் இருப்பதான மயக்கத்தில் இருகால்களால் உருண்டவாறிருக்கிறார்.
பொருட்படுத்திக் குனிந்து அரிய முத்து என்று கையிலெடுத்து
விறுவிறுவென அரங்கெங்கும் பொடிநடையாய் நடந்து
அவரிவரெவரெவரிடமோ தன்னை அறிமுகப்படுத்தி
தன் அருமைபெருமைகளையெல்லாம்
சிறு சிறு ஹைக்கூ கவிதைகளாகவோ
அல்லது இறுதியற்ற நீள்கவிதையாகவோ
விரித்துரைப்பார் என்ற அவரது நம்பிக்கை
பொய்யாக
சுருட்டியெறியப்பட்ட காகிதக்கிழிசல்களாய்
சிறு பெரு பாதங்களால் இரக்கமற்று
எத்தப்பட்டும்
திரும்பத்திரும்ப அரங்கரங்காய்ப் போய்க்கொண்டிருந்தவருக்கு
அறுபதென்பது அறுபதாயிரமாய்ப் புரியத்தொடங்கியபோது
அவருக்கு வயது அறுபத்தொன்பதுக்கு மேலாகியிருந்தது.
வருத்தமாயிருக்கிறது அவரைப் பார்க்க
கவிதைக்கான மனப்பிறழ்வின் முழுவிழிப்பை
யொருபோதுமடைய மாட்டாதவர்கள்தான்
புகழுக்கான பிரமைபிடித்தவர்களாகி
விடுகிறார்கள் என்று
அவரிடம் எப்படிச் சொல்லிப் புரியவைப்பது?

திரௌபதியின் துகிலும் துரியோதனத் தூரிகைகளும்

 திரௌபதியின் துகிலும் துரியோதனத் தூரிகைகளும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
எத்தனையெத்தனை அவலங்கள்
அலைச்சல்கள்
அஞ்ஞாதவாசங்கள்
மதிப்பழிப்புகள் மரணங்கள்
மரத்துப்போக மறுக்கும் உணர்வுகள் கருவறுக்க
மடிந்துகிடந்தவர்கள் மேல் கால்படாமல்
கனத்த மனதோடு பார்த்துப்பார்த்து
நடந்துவந்த திரௌபதி
ஆங்கே யொரு கருங்கல்லில்
சாக்கட்டியால் வரையப்பட்டிருந்த
கோட்டோவியத்தில்
தன் கைகள் அண்ணாந்து
அபயம் தேடி உயர்ந்திருக்க
துகில் மறைக்காத மார்பகங்கள்
தொங்கிக்கொண்டிருக்கக் கண்டாள்
நிலைகுலைந்து குனிந்து பார்த்துக்கொண்டாள்
மார்பை மறைத்திருந்தது துகில்.
சுற்றுமுற்றும் பார்த்தாள்.
அது அரசவையில்லை.
கீழே சிதறிக்கிடந்த மனித உடலங்களை
யானை குதிரைச் சடலங்களைப்
பார்த்தாள்.
கண்ணீர் வழியத் தொடங்கியது.
தம் மக்கள் யார் மானத்தைக் காப்பாற்ற
உயிர்த்தியாகம் செய்தனரோ
அந்த மானம் அதோ கப்பலேற்றப்
பட்டிருக்கிறது.
தீட்டப்பட்டிருந்த கோடுகளின் வளைவும்
நெளிவும்
தீர்க்கமான நீட்டலும்
ஓவியனின் கைநேர்த்திக்குக் கட்டியங்கூறின.
ஆனாலுமென்ன
அவற்றில் உள்ளார்ந்து உணரக்கிடைத்த ஆணாதிக்கவெறி்
அவள் ஆன்மாவைப் பிளந்து பெருக்கிய வலி
யோலம் எட்டா வெளியில்
அதேபோல்
இன்னும் சில பாரிய ஓவியங்களுக்காகத்
தயாராகிக்கொண்டிருக்கும்
தூரிகைகள்.

ஃபேஸ்புக் டைம்லைன் என்னும் நிலைக்கண்ணாடியும் நாடகமேடையும்

 ஃபேஸ்புக் டைம்லைன் என்னும்

நிலைக்கண்ணாடியும் நாடகமேடையும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

மிகை ஒப்பனை வரிகளின் உதவியுடன்
தன்னை அலங்கரித்துக்கொள்ள ஆரம்பித்தவர்
பெண்ணெனில் ஒரு பட்டாம்பூச்சியைத் தன் காதோரக் கூந்தலில் செருகிக்கொள்கிறார்
ஆணெனில் அதைத் தன் சட்டைப்பையில் சொருகிக்கொள்கிறார்.
பட்டாம்பூச்சி படபடவென சிறகுகளை பயத்தில் அடித்துக்கொள்வதைப் பார்த்து
ரத்தக்கண்ணீர் வடிப்பவர்
பெண்ணெனில் ஒரு சோகப்பாட்டு பாடுகிறார்.
ஆணெனில் கண்ணீரை அடக்கிக்கொள்ள உதடுகளும் தாடையும் இறுக
தலைகுனிந்து அமர்ந்தபடியிருக்கிறார்.
பெண்ணோ ஆணோ துயரத்திலாழ்ந்திருக்கும்போது தம் முகம் கோணலாகக்காணப்படவில்லையே என்ற கவலை இருவருக்குமே இருப்பது இயல்புதானே...
அந்த ஆணும் பெண்ணும் ஆளுக்கொரு கவிஞரை மறவாமல் இரண்டுநாட்களுக்கு ஒருமுறை நினைவுகூர்கிறார்கள்.
பெண் என்றால் ஆணையும் ஆண் என்றால் பெண்ணையும்
அதிகம் நினைவுகூர்வதும் இயல்புதானே
நினைவுகூரப்படுபவர் அகில உலகம் அறிந்தவராக இருப்பதும் ஆறே ஆறு பேர் அறிந்தவராக இருப்பதும் அந்தந்த நேரத்துத் தேவையைப் பொறுத்தது
நினைவுகூரப்படுபவர் நினைவுகூரப்படுவதாலேயே அதிகம் நினைவுகூரப்படுபவராகி அதற்கான நன்றியுணர்வில் நிர்க்கதியாகி நிற்கும் தோற்றத்தை நிலைக்கண்ணாடி பிரதிபலிக்க
தாம் ஏற்கும் பாத்திரம் அதுவேயாகிய நடை யுடை பாவனையுடன்
மேடையேறிச் செல்கிறார். மணியடிக்கிறது. மேலேறிச் செல்கிறது திரை.
காலவரையற்ற நாடகம் நடந்துகொண்டிருக்கிறது.

PEEPING TOMகளும் பூமிஜா(சீதா)ப் பிராட்டியும்

 PEEPING TOMகளும் 

பூமிஜா(சீதா)ப் பிராட்டியும்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

இரவுபகலாய் இடையறாப் பட்டிமன்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஐந்து நட்சத்திர விடுதிகளின் அகன்ற கூடங்களில் ஒன்றில்

ஆரண்யமாய் ஆங்காங்கேபேப்பர் மஷாய்மரங்கள் நட்டுக் கட்டமைக்கப்பட்ட அரங்கொன்றில்

ஆன்றோரென அறியப்பட்டோர் அவைகளில்

அடுக்குமாடிக்கட்டிடத்தின் மொட்டைமாடிப் பந்தலில்

இலக்கியப் பெருமான்களுக்கிடையே

இணையவழிகளில் _

இன்னும்

ஆர்ட்டிக் அண்டார்ட்டிக் துருவப் பிரதேசங்களிலும்

புவியின் தென் அரைக்கோளப்பிரதேசங்களின்

பெங்குவின்களைப் பார்வையாளர்களாகக் கொண்டும்

சீதை இராவணனோடு உறவுகொண்டாளா?

கொண்டாள்!

கொண்டாளே !!

கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது

[அது பதிவு செய்யப்பட்ட கைத்தட்டல் என்பது

பாவம் நிறைய பேருக்குத் தெரியாது]

தன்மானத்திற்கு இழுக்கு என்றானபோது

காதலித்த ராமனையே உதறிவிட்டுச்சென்றவள்

கடத்தியவனையா வரிப்பாள்?

விஜய் Zee Sun இன்னும் நான் பார்க்காத சேனல்களின்

மெகாத்தொடர்களில்

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்

மாமியார் நாத்தனார், முதலாளி தொழிலாளி

மூத்த அண்ணன் இளைய அண்ணன்

வில்லியும் நல்லவளும்

ஐந்து வயதுச் சிறுமியும்

அடுத்த நாள் பிறக்கப்போகும் குறைப்பிரசவக் குழந்தையும்

மாறி மாறிச் செய்யும்

வகைவகையான சத்தியங்கள்

சடங்குகள் குறிபார்த்தல், சகுனம் பார்த்தல்

இத்தியாதிகளுக்கிடையிலிருந்து ஒரு பூக்குழியைத்

தேர்ந்தெடுத்து

கோயில் வாசலில் பரத்தி

அதில் நடந்து தன் பத்தினித்தனத்தை

நிரூபிக்கச் சொல்லும்

மெத்தப் படித்தவர்கள் மிட்டா மிராசுதாரர்கள்

மெகாத்தொடர் மாண்பாளர்களை

மெல்ல ஒரு பார்வை பார்த்து

மேலே நடக்கிறாள் பூமிஜா.

மனம்நிறை மணாளனுக்கு நிரூபிக்கவோ

மக்களுக்குப் புரியவைக்கவோ

-ஒரு முறை நெருப்பில் இறங்கி

மீண்டாயிற்று…..

முறைவைத்து மனம்பிளந்து பார்த்தவர்களாய்

மறுபடி மறுபடி

கடத்தியவனை மருவியவளாய்க்

காட்ட முனையும் குணக்கேடர்களுக்காய்

அவள் வனத்தில் தீ மூட்டினால்

அது தன்னை மட்டுமல்லாமல்

அன்னை நெருப்பையே அவமதிப்பதாகும்.

அவள் அறிவாள்தானே?

அடுத்த விளம்பரதாரர் யார் மாட்டுவார் என்று

ஆலோசித்தபடி

அய்யனார் சிலையின் காலடியில்

வில்லனும் நல்லவனும் சேர்ந்து

மெகாத்தொடர் கதாபாத்திரங்களில் ஒருவரை

(குத்துமதிப்பாக அந்தத் தங்கையாக இருக்கலாம்

அல்லது தாத்தாவாக இருக்கலாம்)

கொலைசெய்வது குறித்து காரசாரமாக

கீழ்ஸ்தாயியில் வாக்குவாதம் நடத்திக்கொண்டிருக்கும்

அரைத்தமாவுக் காட்சிகளைக்

கச்சிதமாய் வழித்தெடுத்துமுடித்துவிட்டு

வெளியேறும்போது படக்குழுவினர்

கன்னத்தில் போட்டுக்கொண்டபடி

அல்லது கிண்டலாய்ச் சிரித்தபடி

'பொறுப்புத்துறப்பு' என்ற நொறுக்குத்தீனியை

சுவைக்கத்தொடங்கியதைக் கண்டு

துன்பம் வரும் வேளையிலே சிரிக்கப் பழகியவளாய்

புன்னகைக்கிறாள் பூமிஜா.


*