LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, June 10, 2025

’லைக்’ வள்ளல் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ’லைக்’ வள்ளல்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
கொலைகாரர்களுக்கும் தருவார் ‘LIKE’
கொல்லப்படுகிறவர்களுக்கும் தருவார் ‘LIKE’
குழந்தைகளுக்கும் தருவார் LIKE
குட்டிச்சாத்தான்களுக்கும் தருவார் LIKE
பெண்ணியவாதிக்கும் தருவார் LIKE
ஆணாதிக்கவாதிக்கும் தருவார் LIKE
கொடுமைக்கார மாமியாருக்கும் தருவார் LIKE
கொடூர மருமகளுக்கும் தருவார் LIKE
இந்தி எதிர்ப்பாளருக்கும் தருவார் LIKE
தமிழ் வெறுப்பாளருக்கும் தருவார் LIKE
மறைவேத நம்பிக்கையாளருக்கும் தருவார் LIKE
இறை மறுப்பாளருக்கும் தருவார் LIKE
வெறுப்பு அருவருப்பானது என்பாருக்கும் தருவார் LIKE
அரும்பெருமையுடையது என்பாருக்கும் தருவார் LIKE
காதல் கட்டாயம் வேண்டும் என்பாருக்கும் தருவார் LIKE
கூடவே கூடாது என்பாருக்கும் தருவார் LIKE
எழுத்தில் கண்ணியம் காப்பவருக்கும் தருவார் LIKE
கண்ணியமா மண்ணாங்கட்டி என்பாருக்கும் தருவார் LIKE.
கட்டெறும்புக்கூட்டங்களுக்கும் தருவார் LIKE
சுட்ட அப்பளங்களுக்கும் தருவார் LIKE
விட்டகுறை தொட்டகுறையாய் அவரிடம் அத்தனை LIKE
எவருக்கோ எதற்கோ தர எக்கச்சக்க LIKE
அன்றாடம் அரிசிமிட்டாயாய் அவர் இறைக்கும் LIKE
அவருக்கு என்றாவது பெற்றுத்தரலாம் ‘LIKE வள்ளல்’ பட்டம்!
அதற்கும் இப்போதே போட்டுவிட்டார் ஒரு LIKE!!

சில்லறை விஷயங்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

சில்லறை விஷயங்கள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஒருகாலத்தில் பத்துபைசாவுக்கு மூன்று பட்டர் பிஸ்கெட்டுகள்
சுடச்சுட கிடைக்கும் பேக்கரியிலிருந்து.
இன்று ஒரு ரூபாய் நாணயமே சில்லறை.
”இந்தா சில்லறைப்பணம் போகும் வழியில் யாருக்கேனும் தருவாயே”
என்று அன்போடு என்னிடம்
சில ஐம்பது ரூபாய்த் தாள்களைத் தரும்
நல்ல முதலாளி இன்றில்லை.
சில்லறையில்லையென்று பேருந்திலிருந்து
இறக்கிவிடப்பட்ட முதியவர்களில் யாரேனும்
இருபதடி வேகாத வெயிலில் நடந்து
இரண்டாக மடிந்து விழுந்து
மாரடைப்பால் இறந்திருக்கக்கூடும்.
கடலலையில் கால் வைத்து மகிழ்வது
சில்லறை விஷயமாயிருக்குமா?
சரியாகத் தெரியவில்லை.
சில்லறை நாணயத்தைச் சுண்டித்தான்
பூவா தலையா பார்க்கமுடியும்.
காயா பழமா வளர்ந்தவர்களுக்கு சில்லறை விஷயம்
குட்டிப்பெண்ணுக்கு உயிர்வலி.
கோயில் உண்டிகளை நிரப்புவது இரண்டாயிரம் ரூபாய்த் தாள்களை விட
எளிய மக்கள் முடிந்துவைத்துக் கொண்டுவந்து போடும்
சில்லறைகளே.
கண் தெரியாத பாட்டியொருவர் தள்ளாடி தட்டுத்தடுமாறி
வந்துகொண்டிருந்தார்.
வாய் மட்டும் விடாமல் முனகிக்கொண்டிருந்தது.
யாராவது ஒரு ரூபாய் தர்மம் தாங்கய்யா
_ ஒரு கப்பு டீத்தன்னிக்கு ஒரு ரூபாய் குறையுதும்மா….”
சில்லறைகளை மட்டுமே சேமிக்கமுடிந்த கட்டுமானப்பணித் தொழிலாளியொருவரின் மனதில்
ஐந்துநட்சத்திர ஹோட்டலின் சில்லறையில்
உறங்கவேண்டும் என்ற
தாகம் தகித்துக்கொண்டிருக்கிறது.
ஒருவகையில் கல்லறையும்
சில்லறையே.
சௌந்தர்யலட்சுமி வங்கி விளம்பரம் சொல்லும் _
”சிறுதுளி பெருவெள்ளம்”
சில்லறையைக் களவாடினால் திருடன்;
கோடிகளை விழுங்கியவர் திருவாளர் கள்ளர்.
கதையைத் திருடுதல் சில்லறை விஷயம் சிலருக்கு
கையுங்களவுமாகப் பிடிபட்டால்
அவமானம் அவர்களுக்கா சில்லறைக்கா?
சிலருக்கு கவிதை சில்லறை விஷயம்
சிலருக்கு சகவுயிர்கள் சில்லறை விஷயம்
சில்லறை யில்லையென்றால் இந்தப் பிச்சைக்காரர்களே யிருக்க மாட்டார்கள்
என்று முகஞ்சுளித்துச் சொல்வாரும்
சில்லறையா? இவர்களெல்லாம் ஸ்விஸ் வங்கியில் பணம் வைத்திருப்பார்கள் என்று பல்லைக் கடித்துக்கொண்டு சொல்வாருமாய் _
எல்லோரோடும்தான் வாழ்ந்தாகவேண்டியிருக்கிறது
பொல்லா இலக்கியவுலகு மட்டும் விதிவிலக்கா என்ன?

செயற்கைச் சிடுக்கு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 செயற்கைச் சிடுக்கு

‘ரிஷி’


(லதா ராமகிருஷ்ணன்)
சொல்லும் சொல்லுக்காய்
அடர்காட்டில் அனாதிகாலம்
ஆரவாரமற்று
ஒற்றைக்காலில் நின்றபடி
மோனத்தவமியற்றுபவன் சடாமுடியை
சினிமாவில் கண்ட ‘விக்’ என்று
சுலபமாகச் சொல்லி
நக்கலாய்க் கெக்கலித்துச் சிரிக்கும்
ஒலி
பெருங்காட்டின் நிசப்தப் பேரோசையிலும்
அருந்தவ ஆழ்மௌன ரீங்காரத்திலும்
வலுவிழப்பதே இயல்பாக………

படைத்தால் மட்டும் போதுமா? - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 படைத்தால் மட்டும் போதுமா?

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)


எந்த மேடையில் எந்தெந்தப் பெயர்களைப் பட்டியலிடவேண்டும்
என்று தெரிந்துவைத்திருக்கும் எளிய சூட்சுமம்கூடக் கைவரப்பெறாதவர்
எத்தனை சிறந்த எழுத்தாளராயிருந்தா லென்ன?
என்ன இருந்தாலும் அந்த மேடையில் அவர்
இந்தப் பெயரைச் சொன்னது அபத்தம்.
இந்த மேடையில் அந்தப் பெயர்களைச் சொன்னது அபச்சாரம்
ஏதோ அழைத்தார்களே என்று
எந்தவிதமான ’ஹோம்வர்க்’கும் செய்யாமல் போய்
பேசத்தொடங்கினால் எப்படி?
நான்கைந்து மேடைகளில் அவரைப் பேச அழைத்தவர்கள்
நல்லது என்று தான் மனமார நம்புவதைப் பேசுபவர் நமக்கெதற்கு
என்று ஒருமனதாக முடிவெடுத்தனர்.
பிறகு எத்தனையோ இலக்கியக்கூட்டங்கள் நடந்தேறின.
அந்தப் படைப்பாளி அழைக்கப்படவேயில்லை.
அப்பா, ஏன் இப்போதெல்லாம் கூட்டத்திற்கு அழைப்பதில்லை உங்களை?
போனால் அழகான பூங்கொத்து கொண்டுவருவீர்களே என்றாள் மகள்.
பின்னே, பொற்கிழியா கிடைக்கும் என்று
வழக்கம்போல்அலுத்துக்கொண்டாள் மனைவி.

நிலை(ப்)பாடு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நிலை(ப்)பாடு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அதிகபட்சமாக அறுபதுபேர் கூடியிருக்கும் அரங்கில் அவர்
ஆயிரம்பேர் இருப்பதான மயக்கத்தில் இருகால்களால் உருண்டவாறிருக்கிறார்.
பொருட்படுத்திக் குனிந்து அரிய முத்து என்று கையிலெடுத்து
விறுவிறுவென அரங்கெங்கும் பொடிநடையாய் நடந்து அவரிவரெவரெவரிடமோ தன்னை அறிமுகப்படுத்தி
தன் அருமைபெருமைகளையெல்லாம்
சிறு சிறு ஹைக்கூ கவிதைகளாகவோ
அல்லது இறுதியற்ற நீள்கவிதையாகவோ
விரித்துரைப்பார் என்ற அவரது நம்பிக்கை
பொய்யாக
சுருட்டியெறியப்பட்ட காகிதக்கிழிசல்களாய்
சிறு பெரு பாதங்களால் இரக்கமற்று எத்தப்பட்டும்
திரும்பத்திரும்ப அரங்கரங்காய்ப் போய்க்கொண்டிருந்தவருக்கு
அறுபதென்பது அறுபதாயிரமாய்ப் புரியத்தொடங்கியபோது
அவருக்கு வயது அறுபத்தொன்பதுக்கு மேலாகியிருந்தது.
வருத்தமாயிருக்கிறது அவரைப் பார்க்க
கவிதைக்கான மனப்பிறழ்வின் முழுவிழிப்பை
யொருபோதுமடைய மாட்டாதவர்கள்தான்
புகழுக்கான பிரமைபிடித்தவர்களாகி
விடுகிறார்கள் என்று
அவரிடம் எப்படிச் சொல்லிப் புரியவைப்பது?

ஏற்ற இறக்கங்கள் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஏற்ற இறக்கங்கள்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

முனைப்பாகப் படித்துக்கொண்டிருந்தார் கேள்விகளை
மனக்கண்ணால்.
நான்கைந்து சொற்கள், சொல்வழக்குகள் தரப்பட்டிருந்தன
வினாத்தாளில்.
ஒவ்வொன்றுக்கும் ஐந்து முதல் ஐம்பது வரை மதிப்பெண்கள்.
’மலையேறிவிட்டது காலம்’ என்ற வரியை மொழிபெயர்க்க
எத்தனை முயன்றும் முடியாமல்
மூச்சுத்திணறிக்கொண்டிருந்தார் மொழிபெயர்ப்பாளர்.
’வடக்கிருத்தல்’ என்ற சொல்வழக்கு நல்லவேளையாக தரப்பட்டிருக்கவில்லை.
அதற்காய் ஆறுதலடைய முடியாதபடி
‘அவன் சரியான சாம்பார்’
ஆறாவது கேள்வியாக இடம்பெற்றிருந்தது.
தலைசுற்றவைக்க அதுபோதாதென்று
’விழல்’ கண்ணில் பட்டு
அழத்தூண்டியது.
’கீழே விழலா’ ’விழலுக்கு இறைத்த நீரா’ என்று
contextஇல் வைத்துப் புரிந்துகொள்ளலாமென்றால்
இருபொருளையும் தருமொரு சொல்லாயிருந்த அது
அத்தனை வெள்ளந்தியாய்ச் சிரித்துக்கொண்டிருந்தது.
முதலில்,
மலையேறிவிட்ட காலத்தை இறக்கவேண்டும்.
எப்படி?
முதன்முதலில் காலம் மலையேறியது எப்போது?
எதன்பொருட்டு ஏறியது?
மலையில் வடக்கிருக்கிறதோ காலம்?
ஒருவேளை இது ஆங்கில columnமோ?
சாம்பார் ஜெமினிகணேசன் மட்டும்தானா?
வேறு யாரேனுமா?
நிஜமா நிழலா சாம்பார்?
அப்படியானால் குறியீடு நிழலா?
நிழல் shadow நிழல் shade….
ஒன்றும் இரண்டும் மூன்றென்பது
சரியும் சரியல்லவும் _
மொழிபெயர்ப்பிலும்.
மொழியேறியும் இறங்கியும்
வழிபோகியபடி
இருந்தவிடமிருந்தவாறு
காத்துக்கொண்டிருக்கிறது காலம்
ஏறவும் இறங்கவுமான மலைக்காக.
காத்துக்கொண்டிருக்கிறார்கள்
மொழிபெயர்ப்பாளர்கள் சிலரும்
மிகச் சரியான இணைச்சொற்களுக்காய்.
’போயும் போயும் இதற்காகவா பொழுதை வீணடிப்பார்கள்’
என்று வேறு சிலர்
கையில் கிடைத்த வார்த்தைகளைக்கொண்டு
குத்துமதிப்பா யொரு பொருளைத் தந்து
பத்தரைமாற்று இலக்கணப் பிழைகளோடு
அயர்வென்பதறியாமல்
பெயர்த்துக்கொண்டிருக்கிறார்கள் இருமொழிகளை.

பூதகணங்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பூதகணங்கள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

(*நான்காம் தொகுப்பு – காலத்தின் சில ‘தோற்ற’ நிலைகள்
(2005 இல் வெளியானது)
1
காலாதிகாலம் குடுவைக்குள்ளிருந்துவரும் பூதம்.
மூச்சுத் திணறி விழி பிதுங்கி
வெளிவந்தாகவேண்டிய நாளின்
நிலநடுக்கங்களை
நன்றாக உணர முடியும் அதன்
நானூறு மனங்களால்.
முதலில் தகரும் குடுவையின்
உறுதியை
அறுதியிட்டபடி நகரும்
பகலிரவுகள்.
பாவம் பூதம் குடுவை காலம், நான் நீ யாவும்….
2
நிராதரவாய் ஒரு மூலையில் சுருண்டு கிடக்கும்
பூதத்திற்கு
ஆடிக்கொரு நாள் அரைவயிற்றுக் கஞ்சியும்
அமாவாசைக்கொரு நாள்
சிறு துளி நிலவும்
ஈயப்படும்.
செவிக்குணவு ஸ்ருதிபேதங்கள்,
நிராசைகளின் பேரோசைகள்,
நாராச நிசப்தங்கள்
என்றாக
போகும் வழியெல்லாம் பெருகிவரும் அகதிமுகாமில்
இருகால் மிருகங்களாய் சிறு
புழுப் பூச்சிகளாயும்
பாவம் பூதம் குடுவை காலம் நான் நீ யாவும்….
3
வாரிசைப் பெற்றெடுக்காததால்
வெறும் பூனையாகிவிடுமோ பூதம்?
எலியைக் குடுவைக்குள் விட்டால்
என்ன நடக்கும் பார்க்கலாமென
காதுங் காதுமாய் கிசுகிசுத்துக்கொண்டார்கள்.
கத்தித் தீர்த்தார்கள் குரல்வளை கரிந்தெரிய.
குடுவை மூடியைத் திறக்கத் துணிவில்லை.
உள்ளே
தனது மூன்றடி மண்ணுக்காய்
தவமிருந்துகொண்டிருக்கக்கூடும் அது.
பாவம் பூதம் குடுவை காலம் நான்
நீ யாவும்…..
4
இன்னும் தன்னை நுண்ணுயிராக்கிக்கொண்டு
இரத்தவோட்டத்தில் நீந்திச்செல்லும் பூதம்
இரப்பை, நுரையீரல், மலப்பாதை, சிறுநீரகமென
மென்மேலும் பயணமாகி
உடலியக்கத் தொழில்நுட்பத் திறன் கண்டு
வெட்கிப் போனதாய்
அடிமுடியெல்லாம் செந்நிறமணிந்து
கோலம் புதிதாகக் கொண்டாடிய கணமொன்றில்
குடுவை தாயின் கருவறையாகத் தோன்ற
தலைசாய்த்துக் கண் மூடியது
கோபதாபங்களில்லாது.
பாவம் பூதம் குடுவை காலம் நான்
நீ யாவும்….
5
வீதியெங்கும் பெருகியோடிக்கொண்டிருக்கின்றன
கழிவுநீர்கள்…..
பாதாளச் சாக்கடையிலிருந்து கிளம்பிவரும்
மனிதவுடல் நாறும் மலக்கிடங்காய்.
கண்ணாடியின் சன்னத்திலான மென்தேக
இடுப்பின் வளைவு தாங்கும்
குடங்கள் எண்ணிறந்ததாய்.
ரயில் நிலையப் படிக்கட்டுகளின் ஓரங்களில்
நீளும் கைகளின் மொண்ணை விரல்கள்
தகரத்தை விழுங்கியதாய் இருமியவாறு.
வராத சவாரிக்காய் விழி பூத்திருக்கும்
சைக்கிள்ரிக்‌ஷாக்காரர்.
சுடச்சுட ‘சிங்கிள் டீ’யை கை வேக
விநியோகிக்கும்
விடலைச் சிறுவர்கள்.
சீறிச்செல்லும் வாகனங்களுக்கிடையே
சிக்கிநிற்கும் வெறுங்காலாட்கள்….
வர்ணமயமாக்கலுக்கு அப்பால் அவர் தம்
கால்களின் வெறுமை
உயிர்நிலையைக் கிழித்தெறிய
காதறுந்த ஊசியும் கூட வராத வாழ்வில்
அழிந்துகொண்டிருப்பவர்களுக்கு
ஆதரவாக
தன் விசுவரூபத்திற்கான ஏக்கம்
தாக்கி மோதும் எப்போதும்.
பாவம் பூதம் குடுவை காலம் நான்
நீ யாவும்…..