LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, February 22, 2025

கவிதையும் வாசிப்பும் -4

 கவிதையும் வாசிப்பும் -4

‘ரமேஷ் பிரேதனி’ன் --
‘காந்தியைக்கொன்றதுதவறுதான்’ என்ற கவிதையை முன்வைத்து
_ லதா ராமகிருஷ்ணன்






கவிஞர் ரமேஷ் பிரேதனின் இந்த நீள்கவிதையைப் படித்த தாக்கம் இன்னும் அகலவில்லை. உலக இலக்கியத்தின் எந்தவொரு முதல்தரமான, கவித்துவம் மிக்க அரசியல்கவிதையோடும் இணையாக நிற்கக்கூடிய காத்திரமான கவிதை இது.
இந்த நீள்கவிதையின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனிக் கவிதைகளாக, தன்னிறைவு பெற்ற கவிதைகளாக வாசிக்கப்படத் தக்கவை; பொருள்தரத் தக்கவை.
இந்தக் கவிதை அல்லது கவிதைகளில் அங்கிங்கெனாதபடி காந்தி என்ற வார்த்தை அல்லது பெயர் வருகிறது. ஆனால், இந்தக் கவிதை காந்தியைப் பற்றியதல்ல என்பதே ஒரு வாசகராக எனக்கு ஏற்படும் முதல் புரிதல்.
[மீண்டும் சொல்லத்தோன்றுகிறது – நான் இந்தக் கவிதை குறித்து முன்வைக்கும் கருத்துகள் கவிதை வாசிப்பில், அதுவும் ஒருசில வாசிப்புகளில் எனக்குக் கிடைத்தவை மட்டுமே. இந்தக் கவிதைக்கான உரையாக இதை நான் தர முன் வந்தால் என்னைவிட அறிவிலி யாரும் இருக்கமுடியாது]
நான் காந்தியைக் கொன்றது
தவறுதான் - அதுமட்டுமல்ல இயேசுவைக் கொன்றதும்
சேகுவேராவைக் கொன்றதும்
லுமூம்பாவைக் கொன்றதும்
தவறுதான் - என்ன செய்வது
எனது தவறுகளை
ஒவ்வொருமுறையும் நீ
மன்னித்துவிடுவதால்
நேரும் தவறு இது
ஒவ்வொருவரையும் கொல்வதற்கான
காரணங்கள் என்னிடம் உண்டு
வலுவான காரணங்கள்
அவற்றை உன்னால் மறுக்கமுடியாது
நான் கொல்வதும்
நீ கொல்லாதிருப்பதும்
ஒரே வினைதான்
இந்த ஆரம்பவரிகளில் வரும் இருவர் , அந்த நான் – நீ யார் யார்? நான் என்பது நானில்லை என்பதேபோல் நீ என்பது நீயில்லை என்பதும் கவிதை வாசிப்போருக்குத் தெரிந்த விஷயம்தான். கவிஞரும் கவிதைக்குள் ஒலிக்கும் குரல் அல்லது குரல்களுக் குரியவர்களும் வேறுவேறு நபர்கள் என்பதையும் நம்மால் விளங்கிக்கொள்ள முடியும். நமக்குள் ளேயே வேளைக்கொன்றாக ஒலிக்கக்கூடிய வேறுவேறு குரல்கள் இருப்பதையும் நாமறிவோம். நான் இங்கே குறிப்பிடும் நான் என்ற சொல் கவிதையில் இடம்பெறுகிறது. ஆனால் நாம் இடம்பெறுவதில்லை. ஏனெனில் நான் தான் நான் நீ நாம் அவர்கள் இவர்கள் எல்லாம். நீ என்று சுட்டப்படு பவருக்கும், நான் என்று சுட்டப்படுவருக்கும் இந்தக் கவிதையில் தனித்தனி அடையாளம் இல்லை. நான் – நீ என்று சொல்வதெல்லாம் ஒருவகைத் தப்பித்தலே; ஒருவகையில் தப்பித்தலே. யாரிடமிருந்து அல்லது எதனிடமிருந்து தப்பித்தல்? நமக்குள் மேலோங்கியிருக்கும் நமக்குப் பிடிக்காத வர்களிட மிருந்து; நமக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் நம் வெறுப்புக்குரியவர்களிட மிருந்து; நமக்குள் இல்லாதிருக்கும் நாம் விரும்பத்தக்கவர்களிட மிருந்து. நமக்குள் பொன்சாய் மரமாய் குறுகி நின்றுகொண்டிருக்கும் கைப்பொம்மையா யிருந்து நம்மை இயக்கிக்கொண்டிருக்கும் நம் மனசாட்சி யாகிய நாமாகிய நாமுக்கு – நாமற்ற நாமுக்கு.
/ஒவ்வொருவரையும் கொல்வதற்கான
காரணங்கள் என்னிடம் உண்டு
வலுவான காரணங்கள்
அவற்றை உன்னால் மறுக்கமுடியாது/
’ஒவ்வொருவரையும் கொல்வதற்கான காரணங்கள் என்னிடம் உண்டு/ அவை வலுவான காரணங்கள்’ என்று சொல்லும் வரிகளில் வலு என்பது தீர்க்கமான காரணங்கள் என்ற பொருளில் கையாளப்பட்டுள் ளதா, அல்லது might is right என்ற /பொருளில் கையாளப்பட்டுள்ளதா ?
– வலுவான காரணங்கள் என்பது மிகச் சரியான, மிக நியாயமான காரணங்கள் என்ற பொருளைத் தருவதாக இருந்தாலும் ‘அவற்றை உன்னால் மறுக்கமுடியாது’ என்று கவி அல்லது கவிதைக்குள் ஒலிக்கும் குரல் யாரிடம் சொல்கிறது? தூலமான இன்னொருவரிடமா? அல்லது சூக்குமமான இன்னொருவரிடமா? Self-justification or self-defense?
ஏனெனில் கவிதையின் ஆரம்பத்திலேயே அக்குரல் காந்தியைக் கொன்றது தவறுதான் என்று சொல்லி விடுகிறது. அதோடு நில்லாமல் இயேசுவைக் கொன்றதும்,சேகுவேராவைக் கொன்றதும், லுமூம்பாவைக் கொன்றதும் தவறுதான் என்றும் சொல்லிவிடுகிறது. காரணங்கள் சரி – ஆனால், கொன்றது தவறு என்றால்…?
/நான் காந்தியைக் கொன்றது
தவறுதான் - அதுமட்டுமல்ல இயேசுவைக் கொன்றதும்
சேகுவேராவைக் கொன்றதும்
லுமூம்பாவைக் கொன்றதும்
தவறுதான் - என்ன செய்வது
எனது தவறுகளை
ஒவ்வொருமுறையும் நீ
மன்னித்துவிடுவதால்
நேரும் தவறு இது/
இங்கே தவறு என்பது ஒரு நல்லவரைப் படுகொலை செய்வதாகிறது. நல்லவரோ, கெட்டவரோ – யாரை யும் கொலை செய்ய யாருக்கும் உரிமையில்லை – உடல்ரீதியாகவும், உளரீதியாகவும். ஆனால், உடல்ரீதியாக எவரொருவரையும் கொலை செய்யாதவர் நம்மில் பப்பலர். கொலை தவறு என்பதாலா? அல்லது, தண்டனைக்கு பயந்தா என்ற கேள்வியும் உண்டு. ஆனால், மனரீதியாக நாளும் பொழுதும் யாரும் யாரையும் கொலை செய்யலாம்; செய்துகொண்டிருக்கிறோம். உயிரைப் போக்கினால் தான் கொலையா?
/நான் கொல்வதும்
நீ கொல்லாதிருப்பதும்
ஒரே வினைதான்/
மேற்கண்ட வரிகள் Non-Violence is a form of violence, என்ற வாசகத்தை நினைவுபடுத்தியது.
/ஆனால் ஒவ்வொருமுறையும்
நீ என்னை மன்னிப்பது போல நடிப்பதால்
குற்றமற்றவளாகிவிடமாட்டாய்
இந்த வரிகளில் நீ என்பது பெண்பாலினத்தைச் சேர்ந்தவர் ஒருவரைச் சுட்டுகிறதா? பெண்பாலினத்தையே சுட்டுகிறதா? கவிதைக்குள் ஒலிப்பது ஆண் குரல் தான் என்று உறுதியாகச் சொல்லமுடியுமா? [இறுதிப் பகுதியில் ‘நெற்றிக் குங்குமம் வழிந்துகொண்டிருந்தது’ என்ற வரி இருக்கிறது]
/ஆனால் ஒவ்வொருமுறையும்
நீ என்னை மன்னிப்பது போல நடிப்பதால்
குற்றமற்றவளாகிவிடமாட்டாய்/
மன்னித்தல், மன்னித்தல் போல நடித்தல் – குற்றமற்றவராக இருத்தல் ஆகிய மூன்று வெவ்வேறு நிலைகள் முன்வைக்கப்படுகின்றன. மன்னிப்பதாலேயே ஒருவர் குற்றமற்றவராகி விடுவாரா என்ற கேள்வி ஆகமாட்டார் என்ற பதிலை உள்ளடக்கியிருக்கிறதா? அப்படியெதுவும் இல்லையா? மன்னிப்பது போல் நடிப்பதாகச் சொல்வதன் மூலம் மேற்குறிப்பிட்ட அந்த பதில் அழுத்தம் பெறுகிறதா? அல்லது, அந்தக் கேள்வி அழுத்தம் பெறுகிறதா?
/வரலாறு நெடுக்கவும்
ஆணாகிய நான் கொலைத்தொழிலைத் தொடர்கிறேன்
பெண்ணாகிய நீ என்னை மன்னித்தபடியேஇருக்கிறாய்
கடைசியாக என்னை நானே
கொன்றுகொள்ளும்போது
உனது கைகளில் ரத்தக்கறை படியும் என்பதை
மறந்துவிடாதே/
வரலாறு நெடுக்கவும் ஆணாகிய நான் கொலைத்தொழிலைத் தொடர்கிறேன் என்ற வரி ‘யாருக்காக? என்ற கேள்வியை உள்ளடக்கி யிருக்கிறது என்று தோன்றுகிறது. ஒருவரைக் குற்றவாளியாக உணரவைத்துக்கொண்டேயிருப் பதன் மூலம் நம்முடைய குற்றங்களை பிறர் கண்களிலிருந்து மறைக்கவும், நம் குற்றங்களை நினைவுபடுத்திக்கொள்ளாமல் நம்மை பாதிக்கப்பட்டவர்களாக, பெருந்தன்மையாளர் களாகக் காண்பித்துக்கொள்ள முடிகிறது. பெண்கள் ஆண்டால் உலகில் போரே இருக்காது என்று பொதுப்படையாகப் பேசுபவர்கள் உண்டு. அப்படி திட்டவட்டமாகச் சொல்லமுடியுமா? ஆதிக்கப்போர், உரிமைப்போர் என்று போரில் இருவகை உண்டு என்ற கருத்து எத்தனை உண்மையோ அதேயளவு உண்மை ‘போர் போர்தானே’ என்பதும். இவர் குற்றவாளி, இவர் பலிகடா என்று வாழ்நாளுக்குமாக ஒருவரை முத்திரை குத்திவிட முடியுமா? ஒரு தருணத்தில் குற்றவாளியாகிறவர் இன்னொரு தருணத்தில் பலிகடா நிலையை எய்துவது நடப்பதேயில்லையா? ஒரு தற்கொலையில் வேறு யாரும் கொலையாளியில்லையா? தற்கொலையும், கொலையும் தனிமனிதச் செயல்பாடுகள் மட்டுமா?
/நீ
ஆயுதமற்ற கொலைகாரி
நான் கொலை செய்யும் நிரபராதி
சதாம் உசேனைப் போல/
ஆயுதமிருந்தால்தான் கொலைசெய்ய முடியுமா? கொலை செய்யும் நிரபராதி இருக்கமுடியாதா என்ன? சதாம் உசேனைப்போல கொலை செய்யும் நிரபராதி என்ற வரியை இன்னும் பெரிய படுகொலை யாளர்களுடனான ஒப்புநோக்கல் என்பதாகவும், ஒரு விஷயத்தில் நிரபராதி நிலையிலுள்ள ஒருவர் வேறொரு விஷயத்தில் கொலைசெய்பவராக இருப்பதுதான் இயங்கியல் என்பதாகவும் கொள்ளலாம்.
/நான் காந்தியைக் கொன்றது
தவறுதான் - ஆனால்
என்னை நீ மன்னித்தது
பெருந்தவறு/
கொலைசெய்வதைக் காட்டிலும் மன்னித்தது பெருந்தவறு என்ற வரிகள் மீண்டும் வருகின்றன. இதன் நோக்கம் என்ன? கொலைக்கும் மன்னிப்புக் கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டவா? ஒருவர் காந்தியைக் கொன்றதற்காக அவரை இன்னொருவர் எதற்கு மன்னிக்கவேண்டும்? காந்தியைக் கொன்றது என்றால் அவரது வாழ்நெறிகளையா? அவற்றில் குறிப்பாக எதை? நான் காந்தியைக் கொன்றேன் என்று ஒப்புக்கொள்ளும்போதே, அது தவறுதான் என்று சொல்லும்போதே நான் குற்றவாளிக்கான கடும்தண்டனையை அனுபவித்துவிடுகிறேன், அல்லது அனுபவித்துக்கொண்டி ருக்கிறேன் – இதில் மன்னிப்பு என்பது கூடுதல் தண்டனையா? பாவம் பார்த்துத் தரப்படும் தண்டனைக்குறைப்பா? ஒருவருக்குத் தரப்படும் மன்னிப்பு எப்போது தவறாகிறது? அந்த மன்னிப்பு பாவனையாகும் போதா? அந்த மன்னிப்புக்கான நோக்கம் தவறாகும் போதா? அந்த மன்னிப்புக்கான நோக்கம் நிறைவேறாத போதா?
’நான் காந்தியைக் கொன்றது தவறுதான் – ஆனால் என்னை நீ மன்னித்தது பெருந்தவறு என்ற நான்குவரிகள் இன்னும் நிறைய அர்த்தசாத்தி யங்களை மனதில் உருவாக்கிக்கொண்டேயிருக் கின்றன. ’நான் காந்தியைக் கொன்றதற்காக என்னை நீ மன்னித்தல் என்பது உன்னை நீ காந்தியாக்கிக் கொள்ளும் எத்தனம் – எங்கு என்ன தவறு நடந்தாலும் உடனே தவறிழைத்தவர்கள் சார்பாய் பேசப்புகு கிறவர்களின் உண்மையான நோக்கம் அந்தத் தவறுக்கான பொறுப்புத்துறப்புதான். என்னை நீயோ உன்னை நானோ கொன்றுவிட்டால் பின் ஒருவரையொருவர் மன்னித்துக்கொள்ள முடியாது. அதைவிட, காந்தியைக் கொன்றதுபற்றி கருத்து ரைத்துக் கொண்டிருப்பது சுலபம். இப்படியாக பலவிதமாய் இந்த வரிகள் அர்த்தமாகின்றன.
/எனது ஆயுதத்தை எப்படியேனும்
உன்னிடம் தந்துவிட வேண்டும்
ஆயுதம் கைமாறும் அக்கணம்
நான் உன்முன் செத்துவிழுவேன்
நீ உனது முதல் கொலையை
என்னிலிருந்து ஆரம்பிப்பாய்/
கையில் ஆயுதம் வைத்திருப்பதாலேயே ஒருவர் கொலையாளியாகிவிட மாட்டார். அதுவும் என் கையில் உள்ள ஆயுதம் கர்ணனின் கவசகுண்ட லம்போல் காலங்காலமாய் என் கையில் திணிக்கப் பட்டது. என்னை இயல்பாக இருக்க விடாமல் இம்சிக்கிறது. கொலைசெய்ய முடியும் என்று எனக்கு உருவேற்றிக் கொண்டேயிருக்கிறது. மிகவும் கனக்கிறது. இதைத் தூக்கிக்கொண்டே எத்தனை காலம் நடக்கமுடியும். எனக்கு மூச்சுவாங்குகிறது; தலை சுற்றுகிறது. கையிலுள்ள ஆயுதத்தை நான் இன்னொரு கைக்கு மாற்றிவிட விரும்புகிறேன். ’ஆயுதம் கைமாறும் அக்கணம் நான் உன் முன் செத்துவிழுவேன் என்றால் – இந்த ஆயுதத்தை சுமந்து சுமந்து நான் செத்துப்பிழைத்துக்கொண்டிருக் கிறேன் – எந்த நேரமும் இற்றுவிழுந்துவிடுவேன் என்ற அர்த்தமா? உன்முன் விழுவேன் என்றால்? நம் கண்ணால் காணாதவரை எந்தச் சாவும் செய்திதான் என்று அர்த்தமா? செத்துவிழுந்தவரிலிருந்து முதல் கொலையை ஆரம்பித்தல் என்றால் – பலவீனமான வர்களை, ஏற்கனவே குற்றுயிரும் குலையுயி ருமாகக் கிடப்பவர்களை ஏறி மிதித்துக் கொலை /செய்துதானே நம் சிற்றரசுகள், பேரரசுகள் எல்லாமே உருவாகின்றன.
/காந்தி ஆவேனா
இயேசு ஆவேனா
செத்த பிறகு சொல்/
ஆக, காந்தியோ இயேசுவோ ஆவேன் நான் என்பது நிச்சயம். அதாவது, நான் குற்றமற்றவன். அல்லது, இறந்ததாலேயே எனக்கும் ஒளிவட்டம் கிடைத்து விடலாம். ‘செத்த பிறகு சொல்’ –யார் செத்த பிறகு என்ற கேள்வி இங்கே தொடர்புடையதா? இல்லையா?
சாவு என்பது முடிவா? அல்லது ஆரம்பமா? சாபமா? வரமா? காந்தி இறந்துவிட்டாரா? இன்னும் வாழ்கி றாரா? காந்தியைச் சுட்டவரை மன்னிப்பதன் மூலம் நாம் காந்தியாகப் பார்க்கிறோமா? காந்தியாக முயற்சிக்கிறோமா? அவர் அறிந்த காந்தியும் இவர் அறிந்த காந்தியும் ஒருவர்தானா? காந்திக்கே காந்தி ஒருவர் மட்டும்தானா?
பின்வரும் வரிகள் இந்த நீள்கவிதையில் இடம்பெறும் 11 பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டவை. இவை மனதில் உருவாக்கும் அடுக்கடுக்கான எண்ணங் களை எழுதிக்கொண்டே போகலாம்.
/ஆம், ஒரு கொலைகாரன்
புரட்சிக்காரனையும்
மகாத்மாவையும் உருவாக்குகிறான்/
மேற்கண்ட மூன்றுவரிகள் ஒருவர் கொலைசெய்யப் பட்டதாலேயே தியாகி யாகிவிடுவதையும், கொடூரர்கள் இருப்பதாலேயே புரட்சிக்காரருக்கும், மகாத்மாவுக்குமான தேவை இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டுவதாகக் கொள்ளலாம்.
/மோகன்தாஸ் எனது கனவில் வந்து
சொன்ன முகவரியில்
நான் பெற்ற துப்பாக்கி
மேலும் ஓர் உண்மையைச் சொல்கிறேன்
எனக்குச் சுடத்தெரியாது
அத்துப்பாக்கி தன்னைத்தானே
இயக்கிக்கொண்டது./
துப்பாக்கி தன்னைத்தானே இயக்கிக்கொண்டது என்ற வரிகள் சுடத் தெரியாதவன் கையில் திணிக்கப் படும் துப்பாக்கி – சுயமாய் சிந்திக்கத் தெரியாதவன் மனதில் உருவேற்றப்படும் கருத்தாக்கங்களை உருவகப்படுத்து வதாகக் கொள்ளலாமா? ஆனால் மோகன் தாஸ் தந்த முகவரியில் பெற்ற துப்பாக்கி அது.... அதுவும் கனவில் வந்து சொன்ன முகவரியில் பெற்றது. அப்படியென்றால்....? கனவு என்பது ஆழ்மனத்தில் உழலும் நனவா? அப்படியெதுவும் நடக்கவேயில்லை என்று சால்ஜாப்பு சொல்வதா? சுயமாய் சிந்திக்கத் தெரியாதவர் தன்னைத்தானே இயக்கிக்கொள்ளும் துப்பாக்கியா?
/மோகன்தாஸ் ஒரு கோழை
அவன் ஒருபொழுதும் தற்கொலைக்குள்
அமிழமாட்டான்
நான் ஒருபொழுதும் கோழையைக் கொல்லமாட்டேன்
சரி தோழி
நீயாரைக் கொல்ல விழைகிறாய்
யாரைப் பிறப்பிக்க விழைகிறாய்
இக்கணம்
உடனே சொல்
மோகன்தாசையும்
மோகன்தாஸையும்
தோழா/
மோகன் தாசுக்கும் மோகன் தாஸுக்கும் இடையே யான வித்தியாசம் கண்டிப்பாக எழுத்தோடு நின்றுவிடவில்லையல்லவா? மோகன் தாசைக் கொன்று மோகன் தாஸை ஏன் பிறப்பிக்கவேண்டும்? நமக்கு எப்பொழுதும் யாரையாவது கொல்ல யாரையாவது பிறப்பித்துக்கொண்டே யிருக்கவேண்டுமா? ஒருவரைக் கொன்று இன்னொருவரைப் பிறப்பித்து இவரை அவராகக் காட்ட முயற்சி செய்வதே நம் வேலையா? ஒரு எளிய எழுத்து மாறியதற்காக நாம் ஒரு ஆளைக் கொலைசெய்யவும் தயங்கமாட் டோமா? இன்னுமின்னுமின்னும்.....
/எனக்குத் தெரியாது
என்னைச் சுட்டவனைப் பற்றி
ஆனால் எனது மரணத்திலிருந்து நீள்கிறது
அவனது வாழ்க்கையைப் பற்றிய வாக்கியம்
முடிவற்ற வாக்கியம்
எனது மரணத்தைப் போல
உண்மையாகத்தான் சொல்கிறேன்
நான் இன்னும் சாகவில்லை
ஏன் அவனை என்பொருட்டு
கொன்றீர்
உண்மையைத்தான் உங்களிடம் கேட்கிறேன்
என்னைக் கொன்றவனை நீங்கள் கொன்றீர்
இப்போழுது நானும் அவனும் ஒரே நிறையல்லவா
என்னை அவன் கொன்றது
தவறுதான் - ஆனால்
அவனை நீங்கள் கொன்றது
என்னை மீண்டும் ஒருமுறை கொன்றது/
கொலைக்குக் கொலை தீர்வாகக் கொள்ளப்படும் அவலநிலையும், ஒருவர் கொலைசெய்யப்பட்ட பிறகும் அவர் இறப்பற்று இருக்கும் முரணும் இந்த வரிகளில். அகிம்சை மன்னிப்பை மனதார போதித்தவரைக் கொன்ற நபரைக் கொல்வது ஒருவகையில் அவருடைய வாழ்நெறிகளை மதிப்பழிப்பதுதானே? அதுவும் ஒருவகை கொலை தானே? பழிக்குப் பழியும் கொலை; ஒருவகையில் மன்னித்தலும் கொலை…. பின், என்னதான் செய்யவேண்டும்?
/காந்திக்கு நாம்
செய்ய வேண்டியதெல்லாம்
காந்திக்கு காந்தியை
பலியிட்டுக் காட்டுவது
கடவுளுக்குக் கடவுளையே
பலியிட்டோம் நாம்/
இந்த வரிகளில் என்ன குறிப்புணர்த்தப்படுகிறது? காந்தியைக் கடவுளாக்கிவிட் டோம் – எனவே, அவரையே அவருக்கு ஆகுதியாக்கவேண்டும் என்றா? காந்தியை மட்டுமா கடவுளாக்கினோம்? கடவுளுக்குக் கடவுளையே பலியிட்டோம் என்பதில் கடவுள் என்பதாக நாம் கொள்ளும் அத்தனை நன்னெறிகளும் பலியிடப்பட்டுவிட்டன – அதாவது இல்லாதொழிக்கப்பட்டுவிட் டன என்பது சுட்டப்படுகிறதா?
இந்தக் கவிதை காந்தி என்ற பிம்பத்தை, கருத்தாக் கத்தை மறுதலிக்கிறதா? மதிப்பழிக்கிறதா? அப்படியல்ல என்பதை கீழ்க்காணும் பகுதி புலப்படுத்துவ தாகத் தோன்றுகிறது.
/நிலாவில் ஒரு சிறு பகுதியைச் செப்பனிட்டு
அதற்கு காந்தி நகர் எனப் பெயரிட்டு
நான் மட்டுமே வாழ்கிறேன்
வேறு யாரும் அந்த மண்டலத்தில் இல்லை
முதல் மனிதன் நான்
பூமிக்கு மேலே அந்தரத்தில்
ஒரு மணல் தீவு
காந்தியை நான் கொன்ற பிறகு
நிலாவுக்கு வந்துவிட்டேன்
கொன்றதன் காரணம் இங்குக் கூறத்
தேவையில்லை
ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு
கொன்றதற்கு நன்றி சொல்ல
காந்தி இங்கு வந்தபோது
நானும் அவரும் ஒருவரை ஒருவர்
முகம்கொள்ளக் கூசினோம்
காலம் எங்களைச் செப்பனிட்டது
இன்று கைகோர்த்து உலாவருகிறோம்
யாருமற்ற அந்தரத் தீவில்
காந்தியை யார்வேண்டுமானாலும் கொல்லலாம்
ஆனால், நான் காந்தியைக் கொன்றது தவறுதான்/
கொன்றதன் காரணத்தை ஏன் கவிதையில் கூறாமல் தவிர்க்கிறார் கவி? காரணம் இல்லையா? சரியில்லையா? அல்லது, அவரைக் கொன்றதற்கான காரணம் இருந்ததைப்போலவே கொல்லாமலிருப்
பதற்கான காரணமும் இருந்ததா? இருக்கிறதா?
/ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு
கொன்றதற்கு நன்றி சொல்ல
காந்தி இங்கு வந்தபோது
நானும் அவரும் ஒருவரை ஒருவர்
முகம்கொள்ளக் கூசினோம்/
தன்னைக் கொன்றவனுக்கு காந்தி ஏன் நன்றிகூறவேண்டும். செத்துச்செத்துப் பிழைப்பதற்கு பதில் ஒரேயடியாகச் சாகடித்ததன் மூலம் நிறைய மன உளைச்சல்களிலிருந்து, அலைக்கழிப்பி லிருந்து, அமைதியிழப்பிலிருந்து தான் காப்பாற்றப்பட்டுவிட்டோம் என்ற ஆசுவாசத்தில் எழுந்த நன்றியுணர்வா அது?
/காலம் எங்களைச் செப்பனிட்டது
இன்று கைகோர்த்து உலாவருகிறோம்
யாருமற்ற அந்தரத் தீவில்/
காந்தியை, காந்தி என்ற கருத்தாக்கத்தை, உணர்வைப் பெற மனிதமனம் முதிர்ச்சியடைய வேண்டுமா? யாருமற்ற அந்தரத்தீவில் ஏன் உலாவருகிறார்கள்? பலர் சூழ இவ்வுலகில் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியாது என்பதாலா?
/காந்தியை யார்வேண்டுமானாலும் கொல்லலாம்
ஆனால், நான் காந்தியைக் கொன்றது தவறுதான்/
யார் கொன்றாலும் காந்தி இறப்பார்; இருப்பார். ஆனால், நான் கொன்றதன் மூலம் நான் காந்தியை மட்டுமா கொன்றேன்? நான் கொன்றது காந்தியா? காந்தி என்பது யார்? நான் கொலைகாரனாகிவிட் டேனே? கொலையின் கறை படிந்துவிட்டதே என் கைகளில்?
கவிதையின் இறுதிப்பகுதி இதோ:
காந்தியைக் கொன்றது தவறுதான் - 10
நேற்று எனது கனவில்
காந்தி வந்தார்
எனது இருக்கையிலிருந்து எழுந்து
அவரை அமர்த்திவிட்டு
தரையில் அமர்ந்தேன்
என் கனவில் வந்த காந்திக்கு
வயது முப்பத்தியாறு
என்னைவிட மூன்று வயது இளையவர்
ஆழ்ந்த இறுக்கத்தில் இருந்தார்
சில நிமிடங்களுக்குப் பிறகு
ஆழ்ந்த மௌனத்திலிருந்து
கண்ணீர் வழிந்தது
சப்தமின்றி அழுதார்
மழை போலவோ
அருவி போலவோ
பேரோசை எழுப்பாத
நீரின் வீழ்ச்சி
சப்தமற்ற அழுகைதானே
என்னிடம் ஒரு துப்பாக்கியை எடுத்து நீட்டினார்
நான் பதற்றத்தோடு பெற்றுக்கொண்டேன்
தன்னைச் சுடச்சொல்லிச் சைகை செய்தார்
நான் தயங்கினேன்
பல மணி நேரம் வார்த்தையின்றி மன்றாடினார்
ஒரு கட்டத்தில் என்மீது
வெறித்த பார்வை நிலைகொள்ள
கண்களிலிருந்து முடிவற்று நீர்வழிய
ஆழ்ந்த இறுக்கத்தில் சமைந்தார்
வலி தாளமுடியவில்லை
அவரது நெற்றியில் பொருத்தி
வெடித்தேன்
திடுக்கிட்டு கனவிலிருந்து
வெளிப்பட்டேன்
உடம்பெல்லாம் பெரும் நடுக்கம்
விளக்கைப் போட்டேன்
சுவரில் கிழவர் சிரித்துக்கொண்டிருந்தார்
வியர்வைப் புழுக்கத்தில்
என் நெற்றிக் குங்குமம் வழிந்து
மூக்கின்மீது ஊர்ந்துகொண்டிருந்தது
நத்தையைப் போல
காந்தியின் ரத்தம்./
கனவில் வந்த காந்திக்கு முப்பத்தியாறு வயது. தன்னைவிட மூன்று வயது இளையவர் என்கிறார் கவிதைசொல்லி. அந்த வயதிற்குள் காந்தி என்ன வெல்லாம் செய்துவிட்டார் என்று சொல்லாமல் சொல்லுகிறாரா? தனக்கும் இன்னும் வயதிருக்கிறது என்று எண்ணிக்கொள்கிறாரா? கவிதைசொல்லி இருக்கையிலிருந்து எழுந்து காந்தியை அதில் அமர்த்திவிட்டு தான் கீழே அமர்ந்துகொள்வதில் சம்பிரதாயமான மரியாதை செய்தலைவிட ஒரு உணர்தலின் வழியான பிரியம்தானே அதிகம் வெளிப்படுகிறது. ஆனால், தயங்கினாலும் காந்தியின் வேண்டுகோளுக்கிணங்க அவரைச் சுட்டுவிடுகிறாரே. அது அவருக்கு அமைதியளிக்கும் என்று எண்ணியா?
’என்னிடம் ஒரு துப்பாக்கியை எடுத்து நீட்டினார்’ என்கிறார் கவிதைசொல்லி. ஏன் குறிப்பாக கவிதைசொல்லியிடம் நீட்டப்பட்டது? எங்கிருந்து எடுக்கப்பட்டது? துப்பாக்கி? எல்லோரிடமும் துப்பாக்கி இருந்தவண்ணமே.... யாரோ நம்மிடம் துப்பாக்கியை நீட்டியவண்ணமே....சுட்டால் இலேசாகிவிடுகின்றனவா நம் சுமைகளெல்லாம்....?
நிறைய நிறைய யோசிக்கவைக்கும் கவிதைகள், அல்லது நீள்கவிதையின் பகுதிகள். இந்தக் கவிதைகளில் கவித்துவம் மிக்க வரிகளைப் பற்றி தனியாக நிறைய எழுதலாம். சில வரிகள் மட்டுமே கீழே தரப்பட்டுள்ளன.
/ஆழ்ந்த இறுக்கத்தில் இருந்தார்
சில நிமிடங்களுக்குப் பிறகு
ஆழ்ந்த மௌனத்திலிருந்து
கண்ணீர் வழிந்தது
சப்தமின்றி அழுதார்
மழை போலவோ
அருவி போலவோ
பேரோசை எழுப்பாத
நீரின் வீழ்ச்சி
சப்தமற்ற அழுகைதானே/
ஒரு கவிஞரைத் தொடர்ந்து வாசித்துவரும்போது அவருடைய கவித்துவத்தின் குவிமையமாக, திட்டவட்டமாக அவைதான் என்று சொல்லமுடியா விட்டாலும், சில பார்வைகள் பிடிபடும். அப்படி கவிஞர் ரமேஷ் பிரேதனின் கவிதைகளுடைய குவிமையமாக எனக்குப் பிடிபடுவது ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’; தீர்ப்பளிக்காதே - நாம் எல்லோருமே பாவிகள்தான்’; COLLECTIVE CONSCIENCE – AS AGAINST MOB PSYCHOLOGY.
Ramesh Predan
January 30 at 10:26 AM •

மகாத்மாவுக்கு அஞ்சலி
--------------------------------------
காந்தியைக்கொன்றதுதவறுதான் - 1
நான் காந்தியைக் கொன்றது
தவறுதான் - அதுமட்டுமல்ல இயேசுவைக் கொன்றதும்
சேகுவேராவைக் கொன்றதும்
லுமூம்பாவைக் கொன்றதும்
தவறுதான் - என்ன செய்வது
எனது தவறுகளை
ஒவ்வொருமுறையும் நீ
மன்னித்துவிடுவதால்
நேரும் தவறு இது
ஒவ்வொருவரையும் கொல்வதற்கான
காரணங்கள் என்னிடம் உண்டு
வலுவான காரணங்கள்
அவற்றை உன்னால் மறுக்கமுடியாது
நான் கொல்வதும்
நீ கொல்லாதிருப்பதும்
ஒரே வினைதான்
ஆனால் ஒவ்வொருமுறையும்
நீ என்னை மன்னிப்பது போல நடிப்பதால்
குற்றமற்றவளாகிவிடமாட்டாய்
வரலாறு நெடுக்கவும்
ஆணாகிய நான் கொலைத்தொழிலைத் தொடர்கிறேன்
பெண்ணாகிய நீ என்னை மன்னித்தபடியேஇருக்கிறாய்
கடைசியாக என்னை நானே
கொன்றுகொள்ளும்போது
உனது கைகளில் ரத்தக்கறை படியும் என்பதை
மறந்துவிடாதே
நீ
ஆயுதமற்ற கொலைகாரி
நான் கொலை செய்யும் நிரபராதி
சதாம் உசேனைப் போல
நான் காந்தியைக் கொன்றது
தவறுதான் - ஆனால்
என்னை நீ மன்னித்தது
பெருந்தவறு
எனது ஆயுதத்தை எப்படியேனும்
உன்னிடம் தந்துவிட வேண்டும்
ஆயுதம் கைமாறும் அக்கணம்
நான் உன்முன் செத்துவிழுவேன்
நீ உனது முதல் கொலையை
என்னிலிருந்து ஆரம்பிப்பாய்
நான்
காந்தி ஆவேனா
இயேசு ஆவேனா
செத்த பிறகு சொல்
000
காந்தியைக்கொன்றதுதவறுதான் - 2
காந்தியைக் கொன்றது தவறுதான் என்றால்
என்னை நீ கொன்றது தவறில்லையா
காந்திக்கும் எனக்கும்
என்ன வித்தியாசம் சொல்
மனிதர்க்கு இடையே வித்தியாசம் என்பது
எதன்பாற்பட்டது
தயவு செய்து காந்தியைக் கடவுளாக்கி
என்னைச் சாத்தானாக்கிவிடாதே
கடவுள் இதுநாள்வரை கொன்றிருக்கிறார்
சாத்தான் இதுவரை யாரையும் கொன்றதில்லை
என்னை நீ கொன்றது தவறில்லையா
காந்தியும் நானும் ஒன்றா
அதே பழுதடைந்த பழைய துப்பாக்கியால்
ஏன் என்னைச் சுட்டாய்
வேறு புதியன எவையும்
கிடைக்கவில்லையா உனக்கு
அந்தக் கிழவனைச் சுட்ட துப்பாக்கி
உனக்கு எப்படிக் கிடைத்தது
அதைத் தேடிக் கண்டடைய
எடுத்துக்கொண்ட காலங்கள்
கொடூரமானவை
அகிம்சாவாதியைக் கொன்ற துப்பாக்கி
ஒரு அகிம்சைக் கருவி
என்னைக் கொல்ல அந்த அகிம்சைக் கருவியை
நீ இத்தனை காலம் தேடித் திரிந்திருக்கிறாயே
அச்செயல் எனக்குப் பயத்தைத் தருகிறது
என்னை நீ கொன்றதற்கு
அந்த காந்தியைக் கொன்ற
துப்பாக்கி தேவையில்லை
ஏனென்றால்
காந்தி தன்னைக் கொன்றுகொள்ள
நியமிக்கப்பட்ட மிக அந்தரங்கமான
ஆயுதம் நான்
எனது ஆயுதத்தால் என்னைக் கொல்லாதே
என்றேன்
ஏனென்றால் நீ இன்னுமொரு காந்தியைக்
கொல்வதிலிருந்து பிறப்பிக்கிறாய்
என்னைச் சுடாதே
சுட்டுவிட்டாய்
ஹே – ராவணா
000
காந்தியைக் கொன்றது தவறுதான் - 3
உலகில் எந்தப் புரட்சியாளனும்
காந்தியைப் போல
பரிதாபகரமான தோல்வியைச் சந்தித்ததில்லை
தானாகவே சாகவிருந்த அக்
கிழவனைச் சுட்டேன்
அதன் மூலம் கிழவன்
வெற்றிபெறுவார்என்ற எண்ணத்தில்
அவர் ஒரு புரட்சியாளர் அல்லர்
சராசரி இந்திய ஆன்மீகவாதி
சுடப்பட்டதால் புரட்சியாளர் ஆகிவிட்டார்
எனது தவறினால்
சுட்டதற்கான பலனை நான் அனுபவித்துவிட்டேன்
சுட்டதற்கான கூலியை அவர்
இன்னும் எனக்குத் தரவில்லை
ஆம், ஒரு கொலைகாரன்
புரட்சிக்காரனையும்
மகாத்மாவையும் உருவாக்குகிறான்
000
காந்தியைக் கொன்றது தவறுதான் - 4
மோகன்தாசை நான் சுடவில்லை
அவன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு
செத்தான் - பாவி
உன் கையிலிருந்துதானே
துப்பாக்கி வெடித்தது
ஆம், அது எனது துப்பாக்கி அல்ல
மோகன்தாஸ் எனது கனவில் வந்து
சொன்ன முகவரியில்
நான் பெற்ற துப்பாக்கி
மேலும் ஓர் உண்மையைச் சொல்கிறேன்
எனக்குச் சுடத்தெரியாது
அத்துப்பாக்கி தன்னைத்தானே
இயக்கிக்கொண்டது
எனது கையிலிருந்து
என்னால் பயன்படுத்த இயலாத
இடது கையிலிருந்து
இச்சம்பவம்
மோகன்தாஸின்
தற்கொலை என்கிறாயா
கொலைக்கும் தற்கொலைக்கும்
இடைவெளியும் இயங்கு மனமும்
வேறுவேறு
எனக்கும் மோகன்தாசுக்கும் உள்ள இடைவெளி
வேறுவேறு
மோகன்தாஸ் ஒரு கோழை
அவன் ஒருபொழுதும் தற்கொலைக்குள்
அமிழமாட்டான்
நான் ஒருபொழுதும் கோழையைக் கொல்லமாட்டேன்
சரி தோழி
நீயாரைக் கொல்ல விழைகிறாய்
யாரைப் பிறப்பிக்க விழைகிறாய்
இக்கணம்
உடனே சொல்
மோகன்தாசையும்
மோகன்தாஸையும்
தோழா
000
காந்தியைக் கொன்றது தவறுதான் - 5
நீ சுட்ட முதல் குண்டு
என் உடம்புக்குப் போதுமானது
மீண்டும் மீண்டும் ஏன் உனது
தோட்டாக்களை என்பொருட்டு வீணாக்கினாய் நண்பா
என்னை உடம்பு ரீதியாகத் துளைத்த
முதல் வலி
இவ்வலி அபூர்வமானது
மரணத்தின் தித்திப்பும் வாசனையும் கலந்த வலி
அது வலி அல்ல
மாபெரும் சுவை - அதை எனக்கு ஊட்டிய உனக்கு
ஒரு வாய் ஊட்ட முடியாமல் நான் சரிந்துவிட்டேன் நண்பா
நான் செத்த அக்கணம்
எனது வாய்க்கு நானே உணவாகினேன்
நான் இத்தனை ருசியா
என்னை எனக்கு ஊட்டிய உனக்கு நன்றி நண்பா
000
காந்தியைக் கொன்றது தவறுதான் - 6
எனக்குத் தெரியாது
என்னைச் சுட்டவனைப் பற்றி
ஆனால் எனது மரணத்திலிருந்து நீள்கிறது
அவனது வாழ்க்கையைப் பற்றிய வாக்கியம்
முடிவற்ற வாக்கியம்
எனது மரணத்தைப் போல
எனது மரணத்தைப் பற்றி
எனக்குத் தெரியாது
அவன் என்னைச் சுட்டபோது
அவனது உயிர்த்திருப்பிலிருந்து
நீளப்போகிறது எனது
மரணத்தின் வாழ்க்கை என்பது
உண்மையாகத்தான் சொல்கிறேன்
நான் இன்னும் சாகவில்லை
ஏன் அவனை என்பொருட்டு
கொன்றீர்
உண்மையைத்தான் உங்களிடம் கேட்கிறேன்
என்னைக் கொன்றவனை நீங்கள் கொன்றீர்
இப்போழுது நானும் அவனும் ஒரே நிறையல்லவா
என்னை அவன் கொன்றது
தவறுதான் - ஆனால்
அவனை நீங்கள் கொன்றது
என்னை மீண்டும் ஒருமுறை கொன்றது
000
காந்தியைக் கொன்றது தவறுதான் - 7
காந்திக்கு நாம்
செய்ய வேண்டியதெல்லாம்
காந்திக்கு காந்தியை
பலியிட்டுக் காட்டுவது
கடவுளுக்குக் கடவுளையே
பலியிட்டோம் நாம்
ஆனால், காந்திக்குத் தெரியாது
தான் ஒரு கடவுளாவோம் என்று
பா வ ம்
பலஹீனமானவர்களைக்
கடவுளாக்கிவிடுவது நமது இயல்பு
தூரத்திலிருந்து சிரிக்கிறான்
பு த் த ன்
கண்கள் விரிய பற்கள் தெரிய
முதன்முதலாகசிரிப்பு
பெருஞ்சிரிப்பு
துள்ளிக் குதித்தோடும் புத்தன்
காந்தியின் மீது மோதிக்கொள்கிறான்
இ ப் ப டி யா க
அவனை இக்கவிதையில்
கொன்றது தவறுதான்
000
காந்தியைக் கொன்றது தவறுதான் - 8
ஆட்டுப்பால் பொது பானமில்லை
மாட்டுப்பால் பொது பானம்
ஆட்டை அருந்துவது மனிதர்க்கு இயல்பன்று
நீ ஆட்டுப்பாலைக் குடித்தாய்
ஆட்டின் மடி அதன் இரண்டொரு
குழந்தைகளுக்கு மட்டுமே என்பது தெரிந்தும்
ஆட்டுப் பால் அருந்தி வாழ்ந்த நீ
எப்படி மகாத்மா ஆவாய்
நானொரு இடைச்சி
பசிக்கும்போது
குனிந்து அம்மாவின் காம்பிலிருந்து
பாலைத் திருடி என்
வாய்க்குள் பீய்ச்சிக்கொள்வேன்
மகாத்மாவை எனது ஆடுகளில் ஒன்று
சுட்டுக் கொன்றது
1948 ஜனவரி 30 அன்று
எனது ஆட்டைப் பிடித்து அடித்து
அதன் இறைச்சியை நீங்கள் பகிர்ந்தளித்தீர்
தேசம் முழுமைக்கும்
என் பங்குக்கு ஒரு வாய்
அதில் மகாத்மாவின் சாம்பல் நரநரத்தது
000
காந்தியைக் கொன்றது தவறுதான் - 9
நிலாவில் எனக்கொரு முகவரி உண்டு
அது பூமியில் கிடைக்கும் எனது
முகவரி அட்டையில் இருக்காது
நிலாவில் ஒரு சிறு பகுதியைச் செப்பனிட்டு
அதற்கு காந்தி நகர் எனப் பெயரிட்டு
நான் மட்டுமே வாழ்கிறேன்
வேறு யாரும் அந்த மண்டலத்தில் இல்லை
முதல் மனிதன் நான்
பூமிக்கு மேலே அந்தரத்தில்
ஒரு மணல் தீவு
காந்தியை நான் கொன்ற பிறகு
நிலாவுக்கு வந்துவிட்டேன்
கொன்றதன் காரணம் இங்குக் கூறத்
தேவையில்லை
ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு
கொன்றதற்கு நன்றி சொல்ல
காந்தி இங்கு வந்தபோது
நானும் அவரும் ஒருவரை ஒருவர்
முகம்கொள்ளக் கூசினோம்
காலம் எங்களைச் செப்பனிட்டது
இன்று கைகோர்த்து உலாவருகிறோம்
யாருமற்ற அந்தரத் தீவில்
காந்தியை யார்வேண்டுமானாலும் கொல்லலாம்
ஆனால், நான் காந்தியைக் கொன்றது தவறுதான்
000
காந்தியைக் கொன்றது தவறுதான் - 10
நேற்று எனது கனவில்
காந்தி வந்தார்
எனது இருக்கையிலிருந்து எழுந்து
அவரை அமர்த்திவிட்டு
தரையில் அமர்ந்தேன்
என் கனவில் வந்த காந்திக்கு
வயது முப்பத்தியாறு
என்னைவிட மூன்று வயது இளையவர்
ஆழ்ந்த இறுக்கத்தில் இருந்தார்
சில நிமிடங்களுக்குப் பிறகு
ஆழ்ந்த மௌனத்திலிருந்து
கண்ணீர் வழிந்தது
சப்தமின்றி அழுதார்
மழை போலவோ
அருவி போலவோ
பேரோசை எழுப்பாத
நீரின் வீழ்ச்சி
சப்தமற்ற அழுகைதானே
என்னிடம் ஒரு துப்பாக்கியை எடுத்து நீட்டினார்
நான் பதற்றத்தோடு பெற்றுக்கொண்டேன்
தன்னைச் சுடச்சொல்லிச் சைகை செய்தார்
நான் தயங்கினேன்
பல மணி நேரம் வார்த்தையின்றி மன்றாடினார்
ஒரு கட்டத்தில் என்மீது
வெறித்த பார்வை நிலைகொள்ள
கண்களிலிருந்து முடிவற்று நீர்வழிய
ஆழ்ந்த இறுக்கத்தில் சமைந்தார்
வலி தாளமுடியவில்லை
அவரது நெற்றியில் பொருத்தி
வெடித்தேன்
திடுக்கிட்டு கனவிலிருந்து
வெளிப்பட்டேன்
உடம்பெல்லாம் பெரும் நடுக்கம்
விளக்கைப் போட்டேன்
சுவரில் கிழவர் சிரித்துக்கொண்டிருந்தார்
வியர்வைப் புழுக்கத்தில்
என் நெற்றிக் குங்குமம் வழிந்து
மூக்கின்மீது ஊர்ந்துகொண்டிருந்தது
நத்தையைப் போல
காந்தியின் ரத்தம்

பிழைப்பு - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பிழைப்பு

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

”ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க எங்களை விட்டால் யார்?”
”கோழைகளல்ல நாங்கள் மேடைதோறும் தூக்கவில்லையா வாள்?”
”வாழையடிவாழையாக எங்களுக்கே தானே உங்கள் வாக்கு” என்பார்
மட்டந்தட்டித் தீர்க்கவேண்டிய எதிர்க்கட்சித் தலைவரை
கட்டங்கட்டிக் கச்சிதமாய்ப் போட்டுத்தாக்கிவிட்டு
அவரவர் கட்சி கொடுத்திருக்கும் இரண்டு லட்சம் அல்லது இருபது லட்சம் விலையுள்ள காரில் கட்டுசெட்டாக ஏறிக்கொண்டு
சுவர்களிலெல்லாம் முழங்கிக்கொண்டிருக்கும் தத்தம் தானைத்தலைவர்களின்
திருவுருவப்படங்களை தரிசித்தபடியே
’கவரை’ கவனமாகத் திறந்து உள்ளிருக்கும் ரொக்கத்தைத் தம் பைக்குள் திணித்தபின்
’மறவாமல் நாளை மகனுக்கொரு கட்சிப்பதவி கிடைக்க
அந்த ஆளைப் பார்க்கப் போகவேண்டும்;
மயிலாப்பூரின் மையப்பகுதியிலுள்ள ஏக்கராக்களை மேற்பார்வையிட வேண்டும்
வளைத்துப்போட வாகானதா என்று;
களைப்பாகத்தான் இருக்கும் விமானத்தில் பறந்தாலும்…..
அதையெல்லாம் பார்த்தால் முடியுமா _
வறுத்த முந்திரியை வழிநீள வாயில்போட்டுக் கொறித்துக்கொண்டே போகவேண்டியதுதான்
என்று ஆகவேண்டிய மக்கள்நலத்திட்டங்களை
மனதுக்குள் பட்டியலிடத் தொடங்குவார்.
(*(பின்குறிப்பு: இலக்கியவாதி விதிவிலக்காக இருக்கவேண்டும் என்று சட்டமா என்ன?)

Friday, February 21, 2025

சிவனும் சில தாண்டவங்களும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சிவனும் சில தாண்டவங்களும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
நடிப்பவர்களை நமக்கே நன்றாகத் தெரியும்போது
நடராஜ –சிவனுக்குத் தெரியாதா என்ன?
நன்றாக நடிப்பவர்கள்
சுமாராக நடிப்பவர்கள்
பணத்துக்காக நடிப்பவர்கள்
புகழுக்காக நடிப்பவர்கள்
நடராஜன் அறிவான் நானாவித மனிதர்களையும்.
நாக்கில் நரம்பற்றவர்களை
நாகவிஷங்கொண்டவர்களை _
நடராஜனுக்கு நெருக்கமானவராகத் தன்னைக்காட்டிக்கொள்ள
நடிப்பவர்களையும் அவனுக்கு மிக
நன்றாகவே தெரியும்.
நடிப்பது தானெனில் நடிப்புக்கலை
நடிப்பது எதிரணியாளனெனில் நடிப்பொரு பொய் புனைசுருட்டு.
நடிப்பது தானெனில் நல்லதுக்கு
நடிப்பது எதிரணியாளனெனில்
நாசம் விளைவிக்கவே…..
நியாயத்தராசுகளில்தான் எத்தனை அலைவுகள்,
ஏற்ற இறக்கங்கள்!
நியாயவான்களாக நடிப்பதிலோ
நாளெல்லாம் ஆர்வம் சிலருக்கு.
சிவராத்திரியில் சிவன் தூங்கினானென்று சர்வநிச்சயமாய்ச் சொல்லும் குரல்
அதே நிச்சயத்தோடு ஊழல்செய்யும்
சக மனிதர்களை சுட்டத்துணியுமோ
சந்தேகமே.
சிவனின் நாளுக்கு 24 மணிநேரம்தானா?
அர்த்தராத்திரி நமக்கானதுதானா?
சொல்லமுடிந்தால்
நான் சிவனாகிவிடமாட்டேனா?
சிவன் ஆடலில் லயித்தபடியிருப்பான் –
அதுவும் சுடுகாட்டில்
அவனுக்கு எதுவும் கேட்காது.
அப்படியே கேட்டு எதிர்ப்புக்குரல் எழுப்பினாலும்
அதை அங்கேயிருக்கும் இறந்தவர்களின் ஆவிகள் அல்லது ஆன்மாக்கள் மட்டுமே செவிமடுக்கும்
என்ற அனுமானத்தில்
சில பலவற்றைப் பேசிக்கொண்டிருக்கும் குரலைக் கேட்டு
ஒரு கணம் ஆட்டத்தை நிறுத்தி அரைக்கண் மூடி
சிரித்துக்கொள்ளும் சிவனுக்கு
உண்டொரு நெற்றிக்கண் சர்வநிச்சயமாய்.

வெறுப்புமிழும் பேச்சுகள் குறித்து இந்தியக் குற்றவியல் சட்டம் சொல்வது.....


 //சில யூட்யூப் சேனல்கள் குறிப்பிட்ட சமூகப் பிரிவினர் மீது தொடர்ந்து வெறுப்பு உமிழ்ந்து கொண்டிருக்கின்றன.

இவர்கள் PAID CHANNELகளாக இருக்கவும் வழியுண்டு.

சமூக அவலங்களை, நடப்புச்சூழலின் அவலங்களைச் சுட்டிக்காட்டி மக்கள் சார்பாகப் பேசும் முனைப்பின்றி ஒருதலைப்பட்சமாகவே பேசிக்கொண்டிருக்கும் இந்த சேனல்களை நடத்திக்கொண்டிருப்பவர்களும், அவர்க ளுக்குப் பேட்டி கொடுப்பதையே முழுநேர சமூகசேவை, சமூகப்புரட்சியாக நடத்திக் கொண்டிருக்கும் சில மேம் போக்குப் பகுத்தறி வாளப் புரட்சியாளர்களும் மத நல்லி ணக்கம், மக்கட்பிரிவினருக்கிடையேயான நல்லிணக் கம் எல்லாவற்றையும் இல்லாமலாக்கி அதில் குளிர் காய்வதையே தங்கள் hidden agenda வாகக் கொண்டு செயல்பட்டுக்கொண்டிருப்பதை வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது.
இவர்களெல்லோரும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளும் நம் அரசமைப்புச் சட்டத்தில் தரப்பட் டுள்ள சில விதிகள் பின்வருமாறு. இந்த விதிகளை மீறுபவர்கள் சட்டரீதி யான தண்டனைக்குரியவர்கள். ஆனால், அவர்கள் சிந்தனாவாதிகளாகப் பார்க்கப்படுகிறார்கள் என்பதுதான் அவலமான நடப்புண்மை
.............................................................................................................
Section 505 in The Indian Penal Code
1[505. Statements conducing to public mischief.—2[
(1) ] Whoever makes, publishes or circulates any statement, rumour or report,—
(a) with intent to cause, or which is likely to cause, any offi­cer, soldier, 3[sailor or airman] in the Army, 4[Navy or Air Force] 5[of India] to mutiny or otherwise disregard or fail in his duty as such; or
(b) with intent to cause, or which is likely to cause, fear or alarm to the public, or to any section of the public whereby any person may be induced to commit an offence against the State or against the public tranquility; or
(c) with intent to incite, or which is likely to incite, any class or community of persons to commit any offence against any other class or community, shall be punished with imprisonment which may extend to 6[three years], or with fine, or with both. 7[(2) Statements creating or promoting enmity, hatred or ill-will between classes.—Whoever makes, publishes or circulates any statement or report containing rumour or alarming news with intent to create or promote, or which is likely to create or promote, on grounds of religion, race, place of birth, residence, language, caste or community or any other ground whatsoever, feelings of enmity, hatred or ill-will between different reli­gious, racial, language or regional groups or castes or communi­ties, shall be punished with imprisonment which may extend to three years, or with fine, or with both.ons:

பேச்சுரிமை குறித்து இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்வது....

 










இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படியான பேச்சுரிமை, வெளிப்பாட்டுரிமை குறீத்து 19 சட்டவிதியின் கீழ் தரப் பட்டுள்ளவை பின்வருமாறு:

இவற்றைப் படிக்கும் போது தெரியவரும் முக்கியமான இரண்டு விஷயங்கள் - பேச்சுரிமை, வெளிப்பாட்டுரிமை யெல்லாம் இந்தியாவில் இந்திய மக்களுக்கே. வெளி நாட்டவருக்கு - தனிநபர் களோ, நிறுவனங்களோ - இல்லை.
The main elements of right to freedom of speech and expression are as under:
1. This right is available only to a citizen of India and not to foreign nationals.
2. The freedom of speech under Article 19(1) (a) includes the right to express one's views and opinions at any issue through any medium, e.g. by words of mouth, writing, printing, picture, film, movie etc.
// The Right To Freedom of Speech and Expression Under The Article 19 With The Help of Decided Cases. What Are The Grounds on Which This Freedom Could Be Restricted//
Article 19(1) (a) of the Constitution of India states that, all citizens shall have the right to freedom of speech and expression. The philosophy behind this Article lies in the Preamble of the Constitution, where a solemn resolve is made to secure to all its citizen, liberty of thought and expression. The exercise of this right is, however, subject to reasonable restrictions for certain purposes being imposed under Article 19(2) of the Constitution of India.
இந்தியக் குடிமக்கள் அளவிலும் இந்த உரிமைகள் சில சூழல்களில் கட்டுப்படுத்தப்பட முடியும்.
The Grounds on Which This Freedom Could Be Restricted
Clause (2) of Article 19 of the Indian constitution imposes certain restrictions on free speech under following heads:
I. Security Of The State,
II. Friendly Relations With Foreign States
III. Public Order,
IV. Decency And Morality,
V. Contempt Of Court,
VI. Defamation,
VII. Incitement To An Offence, And
VIII. Sovereignty And Integrity Of India.
இதேவிதமான நிலவரம் தான் உலகின் பெரும்பாலான நாடுகளில். முழுமுற்றான உரிமையோ, சுதந்திரமோ எங்கும் கிடையாது. இருக்க வழியில்லை.
3. This right is, however, not absolute and it allows Government to frame laws to impose reasonable restrictions in the interest of sovereignty and integrity of India, security of the state, friendly relations with foreign states, public order, decency and morality and contempt of court, defamation and incitement to an offence.
4. This restriction on the freedom of speech of any citizen may be imposed as much by an action of the State as by its inaction. Thus, failure on the part of the State to guarantee to all its citizens the fundamental right to freedom of speech and expression would also constitute a violation of Article 19(1)(a).

Share