LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, February 21, 2025

A POEM BY KOSINRA

 A POEM BY

KOSINRA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


WOMEN TALKING TO TREES
Three women
Standing under a tree
Were pointing at the tree and talking
Of them one woman stretches her finger
And saying something laughs
I watch them from a little distance away.
I could see nothing.
Leaves were swaying
No sign of nests
There was no bird sitting
Their chitchatting went on unabated
Does the tree conceal a secret
Does it appear differently to
men and women
does it appear differently to adolescents
and married ones
are they watching the tree
or the tree relishing the sight of them?
While conversing
Why does one woman blush?

மரங்களிடம் பேசும் பெண்கள்

மூன்று பெண்கள்
மரத்தினடியில் நின்றுக்கொண்டு
மரத்தைக்காட்டி பேசுகிறார்கள்
அதிலொரு பெண் விரல் நீட்டி
ஏதோ சொல்லி சிரிக்கின்றாள்
சற்று தூரத்திலிருந்து பார்க்கின்றேன்
எதுவும் தென்படவில்லை
இலைகள் அசைந்துக்கொண்டிருந்தது
கூடுகள் இருந்தது போலவும் தெரிய வில்லை
பறவை எதுவும் அமர்ந்திருக்கவில்லை
பேச்சு குறைந்திடவில்லை
மரம் ரகசியத்தை மறைக்கின்றதா
பெண்களுக்கு ஒரு மாதிரியும்
ஆண்களுக்கொரு மாதிரியும் தெரிகிறதா
விடலைப் பையன்களுக்கு ஒரு மாதிரியும்
மணமானவர்களுக்கு ஒரு மாதிரியும் தெரிகிறதா
மரத்தை அவர்கள் பார்க்கிறார்களா
மரம் அவர்களைப்பார்த்து ரசிக்கின்றதா
மரத்திற்கும் பெண்களுக்குமான
உரையாடலில்
ஒரு பெண் ஏன் வெட்கப்படுகிறாள்


Thursday, February 20, 2025

யாதுமாகி நின்றாய்….. 'ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 யாதுமாகி நின்றாய்…..

'ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
கனவுகள் குமுறல்கள் கண்ணீர் கோபம் தாபம்
கனிவு துணிவு உணர்வு அறிவு எண்ணம் செயல்
எல்லாவற்றிற்கும் வடிவம் தந்து
எத்தனையோ வடிகால்கள் அமைத்துத் தந்து
நம்மை நாம் வெளிப்படுத்த
நம்மொத்தவர்களோடு நல்லுறவாட
நேற்றும் இன்றும் நாளையும்
நற்பாலம் கட்டித்தந்து
நம்முள் கலந்திருக்கும்
தாய்மொழியாம் தமிழை
காற்றென்பதோ
காலத்தின் ஊற்றென்பதோ
உலகென்பதோ
உயிர்த்துடிப்பென்பதோ….
எத்தனை கோடி நன்றி சொன்னாலும்
ஈடாகுமோ தமிழின் வழித்துணைக்கு!


கண்மணி தமிழ்! - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கண்மணி தமிழ்!

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் அள்ளித்தரும்
வள்ளன்மை
மழை, காற்று, சூரியனுக்கு மட்டுமா?
நிற்க நிழல் தரும்; நிழலெனக் கூடவரும்
நட்பாகச் சொல்லித்தரும்
நாலும் மேலும் நாளும் தந்து
இன்துணையாகும்
அன்புத்தமிழ்
என்றும் நம்மைப் புரந்துகாக்கும்

அன்புத் தமிழுக்கு என்றுமான நன்றி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அன்புத் தமிழுக்கு என்றுமான நன்றி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

மொழியின் மீதுள்ள மாறாக்காதலைச் சுமந்தபடி
வழிபோகிறேன்.
கைபர் கணவாய் எங்கிருக்கிறதென்று
எனக்குத் தெரியாது.
குமரிமுனையை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்.
அடுத்தென்னவாகுமென்று அறியாத
அகால வாழ்விதில்
எனக்குத் தெரிந்ததெல்லாம் தமிழும்
கொஞ்சம் ஆங்கிலமும்.
தெரிந்த தமிழ் என்று நான் சொல்லக்கேட்டு
செல்லமாய்க் குட்டிச் சிரிக்கிறது தமிழ்!
கற்றது கையளவு; கல்லாதது கடலளவு.
நான் வந்த வழியெங்கும்
வாழும் வழியெங்கும்
அன்புத் தமிழின் அரவணைப்பே
திசைகாட்டியாக
திக்கற்றவருக்கான பாதுகாப்பு
அரணாக....
தன் தாயை உத்தமியென்றபடி
இன்னொரு தாயை அவிசாரி என்று
நடுத்தெருவில் வசைபாடுபவருக்கொப்பாய்
என் மொழியைப் போற்றிய கையோடு
இன்னொரு மொழியைத் தூற்ற மாட்டேன்.
செத்த மனிதர்கள் உண்டு.
செத்தமொழி என்று எதுவுமில்லை.
அவரவர் அன்பு அவரவருக்கு.
அவரவர் மொழியின் அருமை
அவரவரே அறிவார்.
அத்தனை பேரின் தாய்மொழிகளுக்கும்
உரித்தாகட்டும் நம்
அன்பு வணக்கம்.

பாரதியாரின் கவிதை வரிகள்

 பாரதியாரின் கவிதை வரிகள்



யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்;
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்பரவும்வகை செய்தல் வேண்டும்.

பிப்ரவரி 21 - சர்வதேச தாய்மொழி நாள்

 


தமிழுக்கும் அமுதென்று பேர் - பாரதிதாசன் கவிதை

 தமிழுக்கும் அமுதென்று பேர்

பாரதிதாசன் கவிதை





தமிழுக்கும் அமுதென்று பேர்

அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்!
இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
சுடர்தந்த தேன்
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
வயிரத் தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
பாரதிதாசன்



பொருள்பெயர்த்தல் _ ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 பொருள்பெயர்த்தல்

_ ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
நல்லதோர் நாலுவரி்கவிதையென்றார் ஒருவர்.
கேட்டு
நாலுவரியே கவிதையென்று
சொல்லாமல் சொல்வதாய்
நாலுவரிகளாக கூட்டிப்போட்டு
எழுதிக்கொண்டே போனார் ஒருவர்.
நாலுவரிகள் வரைந்து
நவீனசித்திரக்கவிதையென்றார் ஒருவர்.
சொத்துவரி, வருமானவரி என்று இன்னுமிரண்டை
சேர்த்தெழுதிக்கொண்டிருந்தார் ஒருவர்.
இன்னொருவர்
நாலு வரி என்றெழுதி
பூர்த்திசெய்தார் கவிதையை.

படைப்பு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 படைப்பு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
'புத்தகம் எழுதினால் போதாது
அதை ‘ப்ரமோட்’ செய்யவேண்டும்'
என்றார்கள்.
’அல்டாப்பு’ப் புத்தகத்தை
’அல்டிமேட்’ இலக்கியமாகக் காட்டி
’ப்ரமோட்’ செய்ய
ஆயிரம் உத்திகளோடு அத்தனை பேர்
இயங்கிக்கொண்டிருக்க
அதையும் தாண்டி எதையாவது புதிதாகச்
செய்துவிட முடியுமா என்ன?’
கேள்வியில் கிளர்ந்த புன்னகையோடு
தனக்குத் தெரிந்த
எப்போதுமான ஒரே எளிய வழியில்
தன் படைப்பை ஒரு புட்டிக்குள் திணித்து
காலசமுத்திரத்தில் மிதக்கவிட்டு
தன் வழியே கிளம்பிச்செல்கிறாள்!

மாற்றீடுகள் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மாற்றீடுகள்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


குழந்தைகள் இயல்பிலேயே புரட்சியாளர்கள்.
விலைமதிப்பற்றதென சமூகம் வைத்திருக்கும் பட்டியலில் உள்ள பொருட்களை யெல்லாம் விலக்குவதாய் அவர்களிடம் ஒரு பட்டியல் உள்ளார்ந்து இருக்கும்.
அழுக்கு மண், கசங்கிய தாள், சிகரெட் துண்டு, கையால் தொட்டுணரத் தூண்டும் சிறுநீர், ஆட்டுப்புழுக்கைகள், யாரோ துப்பிப்போட்டிருக்கும் தூசிபடிந்த மீதி மிட்டாய் விரல் நுழைத்துப் பரவசக்கூடிய ஓட்டைகளை வைத்தி ருக்கும் சாயம்போன சட்டை…..
கோலிகுண்டைக் கண்ணருகே வைத்து உள்ளே தெரியும் வானவிற்களைப் பார்த்துப் பரவசப்பட்டுக்கொண்டி ருக்கும் சிறுவனிடம் வைரக்கல்லைக் கொடுத்தால்
அவன் அதை மறுகையால் அப்பால் ஒதுக்கும் சாத்தியங்களே அதிகம்.
மணல்வீடு கட்டிவிளையாடும் குழந்தைகளுக்கு மண லின் விலை குறித்தோ, அதன் ஒப்பீட்டு மதிப்பீடு குறித்தோ என்ன கவலையுமில்லை.
கஷ்டப்பட்டுக் கட்டிய மணல்வீட்டை ஒரு நொடியில் காலால் எட்டியுதைப்பது எத்தனை அளப்பரிய, விடுதலையுணர்வு, தாமரையிலைத்தண்ணீர்த்துவம்.
விளையாடும் சிறுமிக்கு காதில் லோலாக்கும் கணுக்காலில் கொலுசும் இடைஞ்சலாகவே இருக்கும். தாகூர் சொல்லியிருக்கிறார். அவர் சொல்லாவிட்டாலும் அதுவே உண்மை.
குழந்தையின் பொம்மைகள் உயிருள்ளவை . அவை அழும் சிரிக்கும் அவற்றுக்கும் வலிக்கும் பசியெடுக்கும்.
ஊர்ந்துசெல்லும் சிற்றெறும்புகளை வேண்டுமென்றே நசுக்கிவிடுவதில்லை குழந்தைகள். அவற்றோடு சேர்ந்து பொந்துக்குள் சென்று பார்க்கவே ஆவலாயிருக்கின்றன.
கெட்ட வார்த்தை நல்ல வார்த்தை என்றெல்லாம் குழந் தைக்குத் தெரியாது. கெட்டவர் நல்லவர் ஏழை பணக் காரர் என்பதெல்லாமும்கூட.
ஒரு குழந்தையின் சேமிப்பில் இருக்கலாகும் குந்துமணி கள் விலைமதிப்பற்றவை.
குழந்தைக்குள்ளிருக்கும் பிரபஞ்சம் அதற்குப் போதுமான தாக இருக்கிறது.
வாழ்வதும் வளர்வதும் குழந்தைக்கு ’இங்கே – இப்போது’ மட்டுமேயாகிறது.
தங்களுடைய தேர்வுகளுக்காக அடியுதைகளை, ஆங்கார வசைகளை எதிர்கொள்ள அவர்கள் மன அளவில் அஞ்சு வதேயில்லை.
ஒருவேளை அவர்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும் வளர்ந் தவர்கள் சூழ்நிலைக் கைதிகள், சமூக பலியாடுகள், என்பதெல்லாம்....