LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, February 20, 2025

தமிழுக்கும் அமுதென்று பேர் - பாரதிதாசன் கவிதை

 தமிழுக்கும் அமுதென்று பேர்

பாரதிதாசன் கவிதை





தமிழுக்கும் அமுதென்று பேர்

அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்!
இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
சுடர்தந்த தேன்
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
வயிரத் தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
பாரதிதாசன்



பொருள்பெயர்த்தல் _ ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 பொருள்பெயர்த்தல்

_ ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
நல்லதோர் நாலுவரி்கவிதையென்றார் ஒருவர்.
கேட்டு
நாலுவரியே கவிதையென்று
சொல்லாமல் சொல்வதாய்
நாலுவரிகளாக கூட்டிப்போட்டு
எழுதிக்கொண்டே போனார் ஒருவர்.
நாலுவரிகள் வரைந்து
நவீனசித்திரக்கவிதையென்றார் ஒருவர்.
சொத்துவரி, வருமானவரி என்று இன்னுமிரண்டை
சேர்த்தெழுதிக்கொண்டிருந்தார் ஒருவர்.
இன்னொருவர்
நாலு வரி என்றெழுதி
பூர்த்திசெய்தார் கவிதையை.

படைப்பு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 படைப்பு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
'புத்தகம் எழுதினால் போதாது
அதை ‘ப்ரமோட்’ செய்யவேண்டும்'
என்றார்கள்.
’அல்டாப்பு’ப் புத்தகத்தை
’அல்டிமேட்’ இலக்கியமாகக் காட்டி
’ப்ரமோட்’ செய்ய
ஆயிரம் உத்திகளோடு அத்தனை பேர்
இயங்கிக்கொண்டிருக்க
அதையும் தாண்டி எதையாவது புதிதாகச்
செய்துவிட முடியுமா என்ன?’
கேள்வியில் கிளர்ந்த புன்னகையோடு
தனக்குத் தெரிந்த
எப்போதுமான ஒரே எளிய வழியில்
தன் படைப்பை ஒரு புட்டிக்குள் திணித்து
காலசமுத்திரத்தில் மிதக்கவிட்டு
தன் வழியே கிளம்பிச்செல்கிறாள்!

மாற்றீடுகள் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மாற்றீடுகள்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


குழந்தைகள் இயல்பிலேயே புரட்சியாளர்கள்.
விலைமதிப்பற்றதென சமூகம் வைத்திருக்கும் பட்டியலில் உள்ள பொருட்களை யெல்லாம் விலக்குவதாய் அவர்களிடம் ஒரு பட்டியல் உள்ளார்ந்து இருக்கும்.
அழுக்கு மண், கசங்கிய தாள், சிகரெட் துண்டு, கையால் தொட்டுணரத் தூண்டும் சிறுநீர், ஆட்டுப்புழுக்கைகள், யாரோ துப்பிப்போட்டிருக்கும் தூசிபடிந்த மீதி மிட்டாய் விரல் நுழைத்துப் பரவசக்கூடிய ஓட்டைகளை வைத்தி ருக்கும் சாயம்போன சட்டை…..
கோலிகுண்டைக் கண்ணருகே வைத்து உள்ளே தெரியும் வானவிற்களைப் பார்த்துப் பரவசப்பட்டுக்கொண்டி ருக்கும் சிறுவனிடம் வைரக்கல்லைக் கொடுத்தால்
அவன் அதை மறுகையால் அப்பால் ஒதுக்கும் சாத்தியங்களே அதிகம்.
மணல்வீடு கட்டிவிளையாடும் குழந்தைகளுக்கு மண லின் விலை குறித்தோ, அதன் ஒப்பீட்டு மதிப்பீடு குறித்தோ என்ன கவலையுமில்லை.
கஷ்டப்பட்டுக் கட்டிய மணல்வீட்டை ஒரு நொடியில் காலால் எட்டியுதைப்பது எத்தனை அளப்பரிய, விடுதலையுணர்வு, தாமரையிலைத்தண்ணீர்த்துவம்.
விளையாடும் சிறுமிக்கு காதில் லோலாக்கும் கணுக்காலில் கொலுசும் இடைஞ்சலாகவே இருக்கும். தாகூர் சொல்லியிருக்கிறார். அவர் சொல்லாவிட்டாலும் அதுவே உண்மை.
குழந்தையின் பொம்மைகள் உயிருள்ளவை . அவை அழும் சிரிக்கும் அவற்றுக்கும் வலிக்கும் பசியெடுக்கும்.
ஊர்ந்துசெல்லும் சிற்றெறும்புகளை வேண்டுமென்றே நசுக்கிவிடுவதில்லை குழந்தைகள். அவற்றோடு சேர்ந்து பொந்துக்குள் சென்று பார்க்கவே ஆவலாயிருக்கின்றன.
கெட்ட வார்த்தை நல்ல வார்த்தை என்றெல்லாம் குழந் தைக்குத் தெரியாது. கெட்டவர் நல்லவர் ஏழை பணக் காரர் என்பதெல்லாமும்கூட.
ஒரு குழந்தையின் சேமிப்பில் இருக்கலாகும் குந்துமணி கள் விலைமதிப்பற்றவை.
குழந்தைக்குள்ளிருக்கும் பிரபஞ்சம் அதற்குப் போதுமான தாக இருக்கிறது.
வாழ்வதும் வளர்வதும் குழந்தைக்கு ’இங்கே – இப்போது’ மட்டுமேயாகிறது.
தங்களுடைய தேர்வுகளுக்காக அடியுதைகளை, ஆங்கார வசைகளை எதிர்கொள்ள அவர்கள் மன அளவில் அஞ்சு வதேயில்லை.
ஒருவேளை அவர்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும் வளர்ந் தவர்கள் சூழ்நிலைக் கைதிகள், சமூக பலியாடுகள், என்பதெல்லாம்....






திருமிகு வெறுப்புணர்வாளர் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

திருமிகு வெறுப்புணர்வாளர்
- ‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



மெய்வருத்தம் பாராமல்
பசி நோக்காமல்
கண்துஞ்சாமல்
வெறுப்புமிழ்ந்துமிழ்ந்துமிழ்ந்து
வாயெல்லாம் வறண்டுபுண்ணாகிப்போனவர்
அருகிலிருந்த தெருவோரக்கடைக்குச் சென்று
குடிக்கத் தண்ணீர் கேட்டார்.
தாகந்தணித்துக்கொள்ள வீட்டிலிருந்து எடுத்துவந்திருந்த
மூடியுடனான குவளையை அக்கறையோடு எடுத்துத்தந்தார்
கடைக்குச் சொந்தக்காரர்.
அந்திப்பொழுது கடந்தும் அங்கேயே இருக்கவேண்டிய
கடைக்காரருக்கு மிச்சம் மீதி வைக்காமல் எல்லாத் தண்ணியையும்
மடக் மடக்கென்று குடித்துமுடித்தவர்
மீண்டும் வீதிநடுவே வந்துநின்று
வெறுப்புமிழத் தொடங்குகிறார்.
வரும் நாட்களி லொரு நாள் அவருக்கு
வெறுப்புச்செம்மல் விருது வழங்கப்படும் என்று முன்கூட்டியே வாழ்த்துச்சொல்கிறார்
வழிபோகுமொருவர்.
செம்மலை விட வள்ளலே சாலப்பொருத்தம்
என்கிறார் இன்னொருவர்.
செம்மலுக்கும் வள்ளலுக்குமிடையே நுண்வேறுபாடு
இருக்கிறதா இல்லையா என்று தன்னைத்தான் கேட்டவாறு
வெறுப்பின் உச்சத்திலும் கவனமாய்
மல்லாக்கப் படுக்காமல் குப்புறக் கிடந்தபடி
வெறுப்புமிழத் தொடங்குமவர் உள்வெளியெங்கும்
கொழகொழத்து நாறிக்கொண்டிருக்கிறது.
இருந்தும்
மெய்வருத்தம் பாராமல்
பசி நோக்காமல்
கண்துஞ்சாமல்
வெறுப்புமிழ்ந்துமிழ்ந்துமிழ்ந்து
வாயெல்லாம் வறண்டுபுண்ணாகிப்போனவர்
வீதியோர மருந்தகம் ஏதாவது இருக்கிறதா என்று சுற்றுமுற்றும் பார்க்கிறார்
SUPRADIN, BECOSULES RIBOFLABIN, இன்னும் சில வாங்கிக்கொள்வதற்காக.

குடியுரிமை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 குடியுரிமை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


கோவில் தேவாலயம் மசூதி என்று
எங்கும் காண முடியும் இவர்களை.
தங்கள் மதத்தினரா என்று பார்த்து
தர்மம் செய்பவர்கள் உண்டுதான்.
என்றாலும் பிச்சைக்காரர்கள் என்பதே
இவர்களது பொது அடையாளமும்
தனி அடையாளமும்.
இவர்கள் நம் நாட்டு மக்கள் என்பதைப் பற்றியோ
இவர்களுக்குப் பேச்சுரிமை கருத்துரிமை
வாக்குரிமை இல்லாதது பற்றியோ
மதவாதிகளோ அரசியல்வாதிகளோ
இலக்கியவாதிகளொ ‘இய’வாதிகளோ
பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை.
’ஒரு பிச்சைக்காரரிடம் குறைந்தபட்சம்
பத்தாயிரம் ரூபாய் இருக்கும்’ என்று
வீதியோரம் சுருண்டு கிடந்த ஒரு மூதாட்டிக்குப்
பத்து ரூபாய் கொடுக்கப்போன
வெள்ளைக்காரரிடம் சொன்ன
நம்மூர்க்காரர்
வழிகாட்டி என்ற போர்வையில்
வழிபறிப் பகற்கொள்ளைக்காரராய்
நடமாடிக்கொண்டிருப்பவர்.
பிச்சைக்காரர்களின் பாதாள உலகத்தைப்
பற்றிப் படமெடுத்தவருக்கு
விருதுகள் கிடைத்தன.
வருமானம் கிடைத்ததா தெரியவில்லை.
‘பிச்சைக்காரிக்கு கர்ப்பம் ஒரு கேடா’
என்று கேட்கிறார்
மாபெரும் மனிதநேயவாதி ஒருவர்.
இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் தெரியுமா
என்று கண்ணையுருட்டிக் கேட்டார்
இன்னொருவரை மொட்டையடித்து
விரைவில் திகில் படம் ஒன்றை
எடுக்கப் போகிறவர்.
திண்டுதிண்டாய் கைகாலிருக்கு,
வேலை செய்தால் என்ன என்று
குண்டுசட்டியில் குதிரையோட்டுபவரும்
கேட்கத் தவறவில்லை.
’இறப்பதற்குள் ஒரு முறையேனும்
தேர்தலில் வாக்களித்துவிடவேண்டும்’
என்று கூறிய பிச்சைக்கார முதியவரின் முகச்சுருக்கங்களுக்காகவாவது
ஏதேனும் ஓவியப்பள்ளி
மாடலாக அமர்த்திக்கொண்டு
அவருக்கு இருவேளை சோறுதந்தால்
எத்தனை நன்றாயிருக்கும்.
அன்ன சத்திரமா, எழுத்தறிவித்தலா
எது அதிகம் தேவை ஏழைக்கு
என்று பேச
பொன் மணி பட்டுப்புடவையில்
மின்னும் பலர்.
என்னவொரு மவுசு இங்கே
பட்டிமன்றத்துக்கும்
கண்டனக்கூட்டங்களுக்கும்!
உலகக்குடிகளாய் பலதும் பேசியபடியே
வீதியோரம் நலிந்தழிவோரைக்
கண்டுங்காணாமல்
இன்னும் பல நாட்கள் இப்படியே
கடந்துபோய்க்கொண்டேயிருப்போமாக.

கலைக்கொலைகளும் பிறழ்சாட்சிகளும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கலைக்கொலைகளும் பிறழ்சாட்சிகளும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
'அன்பே உருவான அவளைக் கொன்றுவிடலாம்' என்றான் ஒருவன்
'அவளை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கி தற்கொலை செய்துகொள்ளச் செய்வது மேல்' என்றான் இன்னொருவன்.
ஆம் என்று ஆமோதித்தாள் சக பெண்ணின் வலியறிந்த பாவத்தில் ஒருத்தி, சிரித்தபடி.
'அறிந்து ஓடோடிவரும் அவளது அம்மா இந்த நாட்டுப்புறப்பாடலைப் பாடி ஒப்பாரி வைக்கட்டும்' என்றார் அங்கிருந்த தமிழறிஞர் ஒருவர்.
அப்போது சமீபத்தில் பிரபலமாகியிருக்கும் திரைப்படப் பாடலைசன்னமாகப் பின்னணியில் ஒலிக்கச்செய்யலாம் என்றார் ஐந்தாமவர்.
அந்தப் பெண்ணின் உதட்டோரத்திலிருந்து ரத்தம் வழிந்தால் பார்க்க நன்றாயிருக்கும் என்றார் மேசையின் இடப்பக்க ஓரம் அமர்ந்திருந்தவர்.
உதட்டோரமா அல்லது முழங்காலின் கீழிருந்து வழிவதுபோலவா என்று கண்களால் குறிப்புணர்த்தி புருவத்தை உயர்த்தியபடி கேட்டார்
அவர்களில் மூத்தவர்.
அவ்வப்போது அங்கிருந்த நான்கைந்து தட்டுகளிலிருந்த ’சிப்ஸ்’ஸை ஆளுக்கொரு கை அள்ளி வாயில் போட்டுக்கொண்டார்கள்.
அடுத்திருந்த சிற்றுண்டிவிடுதியிலிருந்து சற்றைக்கொருதரம் சூடாக காப்பி வர
அது வேண்டாமென்போருக்கு குளிர்சாதனப்பெட்டியில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது லிம்க்கா, ஸ்ப்ரைட், செவன் அப், கொக்கோகோலா பெப்ஸி ஆவின் பாதாம் பால் அவை போல்
பிற வேறு.
புதிதாக அந்தத் தொலைக்காட்சி சேனலின் ‘கதைக்குழுவில் வேலைக்குச் சேர்ந்தவனாய் கால்கடுக்க ஜன்னலோரம் நின்றிருந்தவன்
கண்களில் துளிர்த்த நீரை யாருமறியாமல் துடைத்துக்கொண்டான்;
அவனறியாத அந்தப் பெண்ணிடம் மனதுக்குள் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.

காலமும் கவிஞர்களும் _ லதா ராமகிருஷ்ணன்

 காலமும் கவிஞர்களும்

_ லதா ராமகிருஷ்ணன்

(*மீள்பதிவு)







கவிஞர் பிரம்மராஜனின் கவிதை ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. இது அவருடைய மஹாவாக்கியம் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

தருணமிது
பிரம்மராஜன்

எனதருள் தந்தை என்னை அழைக்கும் தருணம்
அமிலப் புண்கள் ஓட்டைச் சல்லடையாய் ஆக்கியிருக்கக்கூடாது இந்த இரைப்பையை.
தலையில் ஒருவன் கொல்லன் உலை நடத்துவது
நிறுத்தப்பட்டிருந்தால் நலம்.
மாமிசச் சிலையின் சுவடுகள் பதிந்த தடம்கூட
இல்லையாக வேண்டும்.
கருணை மிச்சமிருக்கும் கோயில் வளாகங்களில்
பிச்சைபுக முடிவதாயிருக்க வேண்டும்.
ஆகாய நிறத்தில் மனமும் நிற்கவேண்டும் சற்றேனும்
இவ்வளவு அறிவினால் என்ன பயன் என்பது பொய்த்திருக்கவேண்டும்.
காலையில் கேட்கும் பண்கள்
இரவில் ஒலியாது
இருக்கவும்._

நவீன – பின் நவீனத்துவ புனைகதை எழுத்தை மாற்றியமைத்த அர்ஜெண்டீனிய எழுத்தாளர் ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ்-இன் கவிதை கீழே தரப்பட்டுள்ளது. கவிஞர் பிரம்மராஜன் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தது.

கவிஞன் தன் பெருமையை அறிவிக்கிறான்
_ ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ்

சொர்க்கத்தின் வீச்செல்லை என் புகழை அளக்கிறது.
கிழக்கு நாடுகளின் நூலகங்கள் போட்டியிடுகின்றன என் படைப்புகளுக்காக.
எமீர்கள் என்னை நாடிவருகின்றனர்
என் வாயைத் தங்கத்தால் நிறைக்க.
தேவதூதர்களுக்கு என் மிக சமீபத்திய பாடல்வரிகள் தெரியும்.
நான் பணி செய்யும் கருவிகள் வலியும் அவமதிப்பும்
நான் இறந்து பிறந்திருக்கக் கூடாதா.

(* யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ள 320 பக்கங்களைக் கொண்ட இந்த நூலின் தொகுப்பும் மொழிபெயர்ப்பும் கவிஞர் பிரம்மராஜன். இதில் பிரம்மராஜனின் ஆழ்ந்த வாசிப்பின் வழி தேர்ந்தெடுக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டுள்ள, போர்ஹெஸ் ஸின் 26 சிறுகதைகள், ஏழு கட்டுரைகள், பதினைந்திற்கு மேற்பட்ட கவிதைகள், மற்றும் போர்ஹெஸ்ஸின் படைப்பும் வாழ்வும் குறித்து கவிஞர் பிரம்மராஜனால் எழுதப்பட்ட அகல் விரிவான அறிமுகக்கட்டுரை ஆகியவை இடம் பெற்றுள்ளன.)