LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, February 13, 2025

அன்பின் துன்பியல் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 2023, FEBRUARY 11 - மீள்பதிவு//

அன்பின் துன்பியல்
’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
எல்லோரிடமும் அன்பாக
எல்லோருடைய கருத்துகளையும் அங்கீகரிப்பதாக
எல்லோருடைய வலதுகரமாக
எல்லோருடைய வலியுணர்வாளராக
வீங்கிப்புடைத்திருக்கும் அன்பெனக் கருதும்
ஒன்றை
வர்ஜாவர்ஜமில்லாமல் வினியோகித்துத்
தன்னை வள்ளலாக்கிக் காட்டும் முனைப்பில்
தன் கையிலிருக்கும் அன்புப்பண்டத்தை
சின்னச்சின்னத்துண்டுகளாகக் கிள்ளியெடுத்து
அனைவருக்குமாய் ஆங்காங்கே வீசியெறிவதாய்
அணையாத விகசித்த புன்னகையோடு
விருப்பக்குறியிட்டவாறிருக்கும்
அன்பே யுருவானவராய்த்
தன்னைத்தான் கட்டங்கட்டிக் காட்டிக் கொண்டிருப்பவருக்கு
என்றேனுமொரு ’அன்புக்கடல்’ விருது
மட்டுமாவது
கிட்டாமலா போய்விடும்....?.

கவிதை வாசிப்புக் காணொளிகளும் கவிதையும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவிதை வாசிப்புக் காணொளிகளும் கவிதையும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
நவீன கவிதையாகச் சொல்லப்படும் சமகாலக் கவிதையை
மசாலா சினிமா பாணியில் கிசுகிசுக்கும் குரலொன்று வாசித்துக்கொண்டிருக்கிறது……
கவிதைக்குள் இருக்கும் சோகம் அந்தக் குரலின்
மிகையுணர்ச்சியில் எரிச்சலூட்டும் அவலமாக மாறுகிறது.
ஆனால் 'அடடா என்ன அருமை!'களும் 'Woo hoo!' களும்
’வாரே வா’க்களும்
அனேகரிடமிருந்து எழுந்தவண்ணமே.
அந்தக் கவிதையை எழுதியவர் உட்பட.
இடையிடையே கவிதை வாசிக்கும் குரல் விடும் பெருமூச்சுகள் கவிதைக்குள் கேட்கவில்லையே
என்று
எவரொருவரும் கேட்கலாகாது.
எவருக்கும் எவரொருவருக்குமிடையேயான அர்த்தபேதங்களைப்பட்டியலிடத் தொடங்கும்
அந்தக் குரல்
ஏழுக்குப் பிறகு பத்தைச் சொல்லும்போது
அதில் கிளம்புமொரு (எத்தனை நன்றாகப் படிக்கிறேன் பார்த்தாயா) குழந்தைத்தனமான பெருமையில்
கவிதைக்குள்ளிருக்கும் தத்துவமும் குறியீடும்
காணாமல் போய்விடுகின்றன.
ஒப்பனைக்கண்ணீர்விட்டு அழுதபடியே வாசிக்கும் குரலில்
என் கண்களிலிருக்கும் குளங்கள்
ஒரேயடியாக வறண்டுபோகின்றன.
கவிதையின் பாதியில் தூரத்தே ஒரு ரயில் போய்க்கொண்டிருப்பது காட்டப்படுகிறது.
அத்தனை தொலைவாக விரைந்துகொண்டிருக்கும் அதில் எப்படி ஏறிக்கொள்வது என்று புரியாமல்
அலங்கமலங்க விழிக்கிறது கவிதை
வாசிக்கும் குரல் கவிதை நேசிக்கப்படவேண்டியது
என்று குறிப்புணர்த்துவதாய்
ஒரு மாதிரி உயர்ந்துதாழ்கிறது.
ஒரு கணம் அந்தரத்தில் அறுந்து தொங்குவதா
யுணர்ந்து
அஞ்சி நடுங்குகிறது கவிதை.
வாசிக்கும் குரல் கவிதையை இழைபிரித்துத்
தருவதான நினைப்பில்
துண்டுதுண்டாகக் கடித்துப் போட _
வாசிப்பு முடிகிறது.
குதறப்பட்டுக் கிடக்கும் கவிதை
அந்த வாசிப்பையும்
அதை ரசித்துக் குவிந்தவண்ணமிருக்கும்
லைக், கமெண்ட், ஷேர்களையும் கடந்துபோய்க்கொண்டிருக்கிறது
தனக்கான மௌ(மோ)ன வாசகரைத் தேடி....
தனியறையொன்றில் நகம் கடித்தபடி
எழுதிக்கொண்டிருக்கும் கவியை நாடி.....reactions:
Shanmugam Subramanian

அறிவாளி – அறிவீலி - அரசியல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அறிவாளி – அறிவீலி - அரசியல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
தன்னை யறிவாளி யென்று சொல்கிறவரின் சொல்கேட்டு
சொல்லமுடியாத ஆனந்தத்தில் சொக்கிநிற்கிறார்கள்;
சுற்றிச் சுழல்கிறார்கள்;
சுடரொளி வீசுகிறார்கள்;
சுநாதமிசைக்கிறார்கள்….
சொல்பவர் அந்தச் சொல்லைச் சொல்லத் தகுதியானவரா
வென்றெண்ணத் தலைப்படாமல்
சொல்பவரின் சொல்படி தானே அறிவாளி யென்று சுற்றுமுற்றுமுள்ளவர்க்கெலாம் தன்னைச்
சுட்டிக்காட்டும் முனைப்பில்
காரணகாரியங்களோடு மறுத்துப்பேசுவோரை
கோமாளிகளாகச் சித்தரித்து
சொந்த சகோதரர்களுக்கு முட்டாள் பட்டம்
கட்டப்படுவதை கைதட்டி ரசித்து _
சிறகசைத்துப் பறக்காத குறையாய்
சீக்கிரசீக்கிரமாய் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து
வரிசையில் நின்று
வாழ்நிலத்தைத் தன் வம்சாவளிச் சொத்தாக பாவிக்கும்
வெள்ளி ஸ்பூனோடு பிறந்தவர்க்கே
வாக்களித்துவிட்டு வந்தார் வெற்றிப்புன்னகையோடு.
அந்த வாக்காளரே அறிவாளி என்று அறைகூவலிட்டவாறே
அறிவாளிக்கெல்லாம் அறிவாளி
அரியணையில் அமர்ந்துகொள்ளுமோர் நாளில்
அடுத்தவர்களை முட்டாள்களாய் மட்டுமே
அடையாளங்காணப் பயிற்றுவிக்கப்பட்ட
பரிதாபத்துக்குரிய உண்மையான அறிவீலி
அடிமையாய் அந்த வேலியிட்ட திறந்தவெளியில்
அம்மணமாய் நின்றுகொண்டிருக்க
ஆயிரங்கால் ஜந்து ஒன்று
எங்கிருந்தோ சீறிப்பாய்ந்து
கடித்துக் குதறத் தொடங்கும்.

Friday, February 7, 2025

உண்மை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 உண்மை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
உண்மையெனும் ரோஜாவின் மணம்
ஊர்முழுக்கப் பரவும் என்றபடியே
இதழிதழாய்ப் பிய்த்துக்கொண்டார்கள்.
ஆளுக்கொரு பிடி யள்ளிக்கொண்டார்கள்.
சிலர் வாயில் போட்டு மென்றார்கள்
சிலர் மூடிய உள்ளங்கையில் முனைப்பாகக் கசக்கியெறிந்தார்கள்.
சுருங்கிக்கிடந்த இதழொன்றை யெடுத்து
இதுதான் முழு ரோஜா என்றார் ஒருவர்.
பின்னோடு வந்தவர்கள் ’அதேதான், அதேதான்’ என்றார்கள்.
வழியெங்கும் காலையில் இறைந்துகிடந்த
இதழ்களின் வண்ணம்
அந்தியில் வெளிறிப்போயிருந்தது.
இதுதான் அசல் ரோஜா நிறம் என்றார் ஒருவர்.
‘அதேதான் அதேதான்’ என்றார்கள்
அருகே நின்றிருந்தவர்கள்.
நூற்றுக்கு நூறு உண்மை
சில பத்திருபதுகள் குறைந்து திரிந்து
அரைகுறை உண்மையாகி
கரைகடந்து நகர்வலம் போய்க்கொண்டிருப்பதைக்
கண்ணால் பார்த்ததாய் யாரோ சொல்ல
யாரோ கேட்க..........


நீள அகல வரையறைகள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நீள அகல வரையறைகள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

பந்திப்பாயை விரித்துப்போட்டால்
நான் முந்தி நீ முந்தி என்று
பெரியவர் சின்னவர் பக்கத்துவீட்டுக்காரர்
உற்றமித்ர பந்துக்கள் ஊர்ப்பெருந்தனக்காரர்கள்
படித்தவர் படிக்காதவர்
பிடித்தவர் பிடிக்காதவரெல்லாம்
பாயாசம் சாப்பிட,
பப்படம் சாப்பிட
பிரியாணி லட்டு பாசந்தி பிஸிபேளாபாத்
வறுவல் பொரியல் வச்சதெல்லாமே
பிரமாதம் பிரமாதம் அருமையோ அருமையென
உருகிக்கிறங்கி
திரும்பத்திரும்ப கடைவாயில் எச்சிலொழுகியவாறு
உறங்கும்போதும் உச்சாடனம் செய்ய
விழுந்தடித்துக்கொண்டு வருவார்களெனக்
கச்சிதமாய்ப் போட்ட கணக்கெல்லாம்
பொய்யாக_
வந்தவர்கள் அன்போடு மாப்பிள்ளை – பெண்ணை
வாழ்த்திவிட்டு
வழக்கம்போல் சுந்தரத் தமிழினில் உரையாடியவாறே
சமோஸாவையும் சிங்கிள்-டீயையும் ருசிக்க
தெருவோர தேனீர்க்கடைக்காய் காலெட்டிப்
போடக்கண்டு
பட்டுவேட்டி ஜரிகை அங்கவஸ்திரக்காரர்
பத்துநூறு பவுன் தங்கச்சங்கிலிக்காரர்
காலிக் கூடத்தில்
ஓலமிட்டபடியே…….

விதைப்பும் அறுப்பும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 விதைப்பும் அறுப்பும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஒவ்வொரு நகர்விலும்
ஒருவகை ‘method in madness’ இரண்டறக் கலந்திருக்க
தனக்கு மிகவும் பிடித்த வெட்டாட்டத்தை
இடையறாது விளையாடிக்கொண்டிருக்கிறார் விமர்சகர்.
சுழற்றப்படுவது கிழிந்த காகிதவாள் என்று
புரிந்துகொள்ளாமல்
எளியோர் சரிந்துவிட
இறந்துபட
வி்ழுந்து விழுந்து சிரிக்கிறார்.
பெருங்குரலெடுத்து.
இல்லாத அரியணையில் பொருந்தியமர்ந்தபடி
கையிலிருக்கும் பட்டியலில் அவ்வப்போது
சில பெயர்களை சேர்த்தும் நீக்கியும்
பொழுதுபோக்கிக்கொண்டிருக்கும்
அவருக்குப் பிடிபடுமோ
தயாராகிக்கொண்டிருக்கும் இன்னொரு பட்டியலின்
வடிவமும்……
அதில் அவருடைய இடமும்?



அரைக்கண காலவெளிகளும் உன் அறைகூவல்களும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அரைக்கண காலவெளிகளும்

உன் அறைகூவல்களும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

கொஞ்சம் பொறு
தட்டாமாலை சுற்றிக்கொண்டிருக்கிறேன்.
இன்னமும் நிலா வரவில்லை.
அழைத்தபடியிருக்கிறேன்.
விண்மீனின் கண்சிமிட்டலைக் கண்டு ரசித்தபடி
அண்ணாந்திருக்கிறேன்…..
கண்ணீர் பாதையை மறைக்கிறது.
தத்தளித்துக்கொண்டிருக்கிறேன்.
கடும்புயல் – வெள்ளத்தில்
கலகலத்துச் சரிந்தவண்ணமிருக்கிறேன்.
காலன் எதிரில் கையறுநிலையில்
மண்டியிட்டவாறு….
‘கிட்டாதாயின் வெட்டென மற’வின் உட்பொருளைத்
துருவிக்கொண்டிருக்கிறேன்.
எட்டாக்கனி எதற்கெல்லாம் குறியீடாகும் என்பதையும்.
உடனடியாக எதிர்வினையாற்றவில்லையென்பதால்
உன் அறைகூவலைக் கேட்டு பயந்துவிட்டதாக அர்த்தமல்ல.
[காலநிலை என்ற தலைப்பிட்ட எனது ஏழாவது கவிதைத்தொகுப்பிலிருந்து (2010ஆம் ஆண்டு வெளியானது.

முதிர்வயதின் மகத்துவம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 முதிர்வயதின் மகத்துவம்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


யாராலும் பார்க்கப்படாமல்,
பார்க்கப்படுகிறோமோ என்ற தர்மசங்கடவுணர்வோ
பார்க்கப்படவில்லையே என்ற பரிதவிப்போ
இல்லாமல்
ஒரு சிற்றுண்டிவிடுதியில் வெகு இயல்பாய் நுழைந்து
சீராகச் சுழன்றுகொண்டிருந்த மின்விசிறியின் கீழ்
எனக்கான இடத்தைத் தேடிக்கொண்டபோது
முதிர்வயதின் மகத்துவம் புரிந்தது.

காலநிலை என்ற தலைப்பிட்ட எனது ஏழாவது கவிதைத்தொகுப்பிலிருந்து (2010ஆம் ஆண்டு வெளியானது