LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, December 31, 2024

அவரவர் உலகம் - ‘ரிஷி ’(லதா ராமகிருஷ்ணன்)

 //2018, DECEMBER 23 - மீள்பதிவு//

அவரவர் உலகம்
‘ரிஷி
’(லதா ராமகிருஷ்ணன்)



அந்த பிரம்மாண்ட விழாவில்
அலங்கரிக்கப்பட்ட மேடையில்
ஒருவர்
அரங்கதிர முழங்கிக்கொண்டிருந்தார்
”கூழாங்கல் வைரமாகிவிடுமா என்ன?”

சோப்புக்குமிழில் பிரபஞ்சத்தை நிறைத்து
ஊதிக்கொண்டிருந்த சிறுமி சொன்னாள்:

ஆகவே ஆகாது;
கூழாங்கல் எத்தனை அழகு!
அம்மாடியோ! என்னென்ன வண்ணம்!
எத்தனை வழுவழுப்பு!

தன்மதிப்பு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 //2019, DECEMBER 26 - மீள்பதிவு//

தன்மதிப்பு
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
நாங்கள் ஆளுக்கு நான்கு பிரம்மாண்டக் கப்பல்களின் அதிபதிகள் என்கிறார்கள்.
அப்படியா என்று கேட்டு அப்பால் நகர்கிறேன்.
அவர்களில் ஒருவருக்குத் தலைசுற்றுவதுபோலிருக்கிறது.
இன்னொருவர் அதிர்ச்சியில் தடுக்கிவிழப் பார்க்கிறார்.
மூன்றாமவர் என்னை அப்படி முறைக்கிறார்.
நான்காமவர் நிதானமிழந்து வேகவேகமாய்த் தொடர்ந்துவந்து
ஆகாயவிமானங்கள் கூட எங்களிடமிருக்கின்றன என்கிறார்.
ஆளுக்கு நாலாயிரமா என்று கேட்கிறேன்
சலிப்பையும் சிரிப்பையும் அடக்கிக்கொண்டு.
அத்தனை மண்டைகனமா என்று ஆத்திரத்துடன் கேட்டபடி
அடிக்கவருகிறார்கள்
அப்படியில்லை, என்னிடமிருப்பதை நீங்கள் அறியவில்லையே என்ற ஆதங்கம் என்கிறேன்.
”அப்படி யென்னதான் வைத்திருக்கிறாய் பெரிதாக?”
”என்னை” யென்றபடி பிரதிசெய்யமுடியாத
வரிரூபமாகிறேன்

’ஷெர்லாக் ஹோம்ஸு’ம்(நானே!) ’வாட்ஸனு’ம்(நானே!) - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 //2016, DECEMBER 26 - மீள்பதிவு

’ஷெர்லாக் ஹோம்ஸு’ம்(நானே!) ’வாட்ஸனு’ம்(நானே!)

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

நகசமும் நகரசமும் 'தும்பிக்கை-தந்த'ப் பிராணியின்
ஒருபொருட்பன்மொழியாக, பல்பொருளொருமொழியாகும்
நகாயுதம் குறிக்கும் பறவைகளிலும் விலங்குகளிலு முள
கொம்பும் வாலும் கடைவாய்க் கூர்பல்லும், வளைநகமும்,
வண்ணச்சிறகும் இன்னென்னவும் பதிலியாகுமோ உன் என் ஒரு சொல்லுக்கு?
நகுலன் சிவனும் அறிஞனும் பஞ்சபாண்டவர்களில் ஒருவனும் மட்டும்தானா? நல்ல கவியும்தானே!
நகிலம் நக்கிதம் நசலுண்டாக்க,
நிழல்யுத்தம் செய்தவன் மன நகுலம் மூச்சுத்திணறும் நாகமின்றியே.
நகதியன்ன நல்வார்த்தைகள் சொல்பித்து நசைநர்
நகுதத்தினடியில் வழிநடத்திக் கிடத்த,
அந்த நக்கவாரப் பக்கவாட்டுகளி லுள்ள நீர்நிலைகளில்
நக்கரமுண்டா வென்றறியும் நகுதாவும் உண்டோ?
நகேசனின் உள்ளாழத்தில் நடுங்கத்தொடங்கிவிட்டதோ நிலம்?
என் நகரூடத்திற்கும் நகாசிக்கு மிடையே உள்ளோடும் நரம்புகளின் சிக்குகளை சிடுக்குகளை நானே நேரிடையாய் காணமுடியுமோ?
நக்கிரை, நக்குடம் என்றே நாசியைச் சுட்டும் நகாசுவேலை
நவீனமா? புராதனமா?

............................................................................................
(பி.கு: தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதி ஒன்றின் பக்கங்களைப் புரட்டிப்பார்க்க நேர்ந்தபோது ‘ந’ என்ற எழுத்தின் பக்கங்களில் கீழ்க்கண்ட பல வார்த்தைகளையும், அவற்றிற்கான அர்த்தங்களையும் படித்தேன். மலைப்பாக இருந்தது! அதன் விளைவே இக்கவிதை! – ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)
நகரூடன் – மூக்கு
நக்கிரை – மூக்கு
நக்குடம் - மூக்கு
நகாசி – நெற்றி
நகதி – பொன்கட்டி, கருவூலம்
நகரசம் – யானை
நகசம் – யானை
நகாசுவேலை – பொற்கொல்லர்களால் செய்யப்படும் நுணுக்கமான பொன்நகை வேலைப்பாடு
நகாயுதம் – சேவல், சிங்கம், புலி, கருடன், கழுகு
நகிலம் – பெண்ணின் மார்பகம்
நகுலம் – கீரி
நகுதா – மாலுமி
நகுத்தம் – புங்கமரம்
நகுலன் – சிவபெருமான், அறிஞன், பஞ்சபாண்டவருள் ஒருவன்
நகேசன் – மலைகட்குத் தலைவனாகிய இமயமலை.
நக்கரம் – முதலை
நக்கவாரம் – ஒரு தீவு, வறுமை
நக்கிதம் – இரண்டு
நசலாளி – நோயாளி
நசல் – நோய்
நசைநர் - நண்பர்கள்




எழுத்தின் உயிர் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 எழுத்தின் உயிர்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஒரு நல்ல புத்தகம் நூறு தலைவர்களுக்கொப்பானது.
தலைவரின் கடைக்கண் பார்வை நம்மீது படுமா என்று நாம் தவித்துக்கொண்டிருக்கத் தேவையில்லை.
அத்தனை எளிமையாய் நம் புத்தக அடுக்கில் ஓர் ஓரமாய் ஒதுங்கியிருக்கும்.
அல்லது ஒரு முக்காலியில் கிடக்கும்
அல்லது ஒரு கை உணவு உண்டுகொண்டிருக்க
மறுகையில் அலட்சியமாய் ஏந்தப்பட்டிருக்கும்.
ஆசானாய் காதலியாய் நண்பனாய் குழந்தையாய் அன்பளிப்பாய் அந்திப்பொழுதாய் அகிலாண்டகோடியாய்
அடைக்கலம் தந்திருக்கும்.
நம்மை சிறு பறவைகளாய் பாவித்து
அது பாட்டுக்குப் புதுப்புது அர்த்தங்களை
வழியெங்கும் இறைத்துக்கொண்டே போகும்.
சூரியனில் இறைமை தன்அடையாளமற்றுக்
கலந்திருப்பதுபோல் புத்தக ஆசிரியர்.
வாசிக்கும் நேரம் வலது கை கொடுப்பதை
இடது கை யறியாத திறம் நூலாசிரியம்.
காலம் மீறி வாழ்வது நல்லெழுத்தின் அடையாளம்
எல்லாமறிந்தும் புத்தகங்களைப் புதைகுழியிலிட்டுப் பார்ப்பவர்
பிரசவிக்கக்கூடும் இறந்த குழந்தைகளை.
l reactions:
இயற்கை, Sivarasa Karunakaran and 7 others

50 ஆண்டுகால தமிழ் சினிமாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய சித்தரிப்புகள்.

 

https://youtu.be/3v4vledEzLU?si=27-sf9fFSCcG8yes


அருமை நண்பர் சஃபியின் உரை இது. கண்டிப்பாக அனை வரும் கேட்கவேண்டியது. இலக்கியவுலகில் உளவியல் குறித்த விழிப்பையும் வெளியையும் உருவாக்கிய / உருவாக்கிவரும் மிகச் சிலரில் இவரும் ஒருவர். ஆரவாரமில்லாமல் எனில் அவசியமான சமூக-இலக்கியப் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்.

நல்வாழ்த்து களும் நன்றியும் சஃபி.
திரள் மக்கள் மனநல இணையம் நடத்திய
பேரா.ஒ.சோமசுந்தரம் நினைவுக் கருத்தரங்கம்
கலை இலக்கியமும் மனநலமும்
டிசம்பர் 7ல்
உளவியல் நிபுணர்
எழுத்தாளர்
துணை பேராசிரியர்
திரு.முகமத் ஷஃபி அவர்களின்
உரை‌:
50 ஆண்டுகால
தமிழ் சினிமாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய சித்தரிப்புகள்.
மிக முக்கியமான உரை..
தாமத்திற்கு மன்னிக்கவும் Mohamed Safi