LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, December 31, 2024

’ஷெர்லாக் ஹோம்ஸு’ம்(நானே!) ’வாட்ஸனு’ம்(நானே!) - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 //2016, DECEMBER 26 - மீள்பதிவு

’ஷெர்லாக் ஹோம்ஸு’ம்(நானே!) ’வாட்ஸனு’ம்(நானே!)

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

நகசமும் நகரசமும் 'தும்பிக்கை-தந்த'ப் பிராணியின்
ஒருபொருட்பன்மொழியாக, பல்பொருளொருமொழியாகும்
நகாயுதம் குறிக்கும் பறவைகளிலும் விலங்குகளிலு முள
கொம்பும் வாலும் கடைவாய்க் கூர்பல்லும், வளைநகமும்,
வண்ணச்சிறகும் இன்னென்னவும் பதிலியாகுமோ உன் என் ஒரு சொல்லுக்கு?
நகுலன் சிவனும் அறிஞனும் பஞ்சபாண்டவர்களில் ஒருவனும் மட்டும்தானா? நல்ல கவியும்தானே!
நகிலம் நக்கிதம் நசலுண்டாக்க,
நிழல்யுத்தம் செய்தவன் மன நகுலம் மூச்சுத்திணறும் நாகமின்றியே.
நகதியன்ன நல்வார்த்தைகள் சொல்பித்து நசைநர்
நகுதத்தினடியில் வழிநடத்திக் கிடத்த,
அந்த நக்கவாரப் பக்கவாட்டுகளி லுள்ள நீர்நிலைகளில்
நக்கரமுண்டா வென்றறியும் நகுதாவும் உண்டோ?
நகேசனின் உள்ளாழத்தில் நடுங்கத்தொடங்கிவிட்டதோ நிலம்?
என் நகரூடத்திற்கும் நகாசிக்கு மிடையே உள்ளோடும் நரம்புகளின் சிக்குகளை சிடுக்குகளை நானே நேரிடையாய் காணமுடியுமோ?
நக்கிரை, நக்குடம் என்றே நாசியைச் சுட்டும் நகாசுவேலை
நவீனமா? புராதனமா?

............................................................................................
(பி.கு: தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதி ஒன்றின் பக்கங்களைப் புரட்டிப்பார்க்க நேர்ந்தபோது ‘ந’ என்ற எழுத்தின் பக்கங்களில் கீழ்க்கண்ட பல வார்த்தைகளையும், அவற்றிற்கான அர்த்தங்களையும் படித்தேன். மலைப்பாக இருந்தது! அதன் விளைவே இக்கவிதை! – ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)
நகரூடன் – மூக்கு
நக்கிரை – மூக்கு
நக்குடம் - மூக்கு
நகாசி – நெற்றி
நகதி – பொன்கட்டி, கருவூலம்
நகரசம் – யானை
நகசம் – யானை
நகாசுவேலை – பொற்கொல்லர்களால் செய்யப்படும் நுணுக்கமான பொன்நகை வேலைப்பாடு
நகாயுதம் – சேவல், சிங்கம், புலி, கருடன், கழுகு
நகிலம் – பெண்ணின் மார்பகம்
நகுலம் – கீரி
நகுதா – மாலுமி
நகுத்தம் – புங்கமரம்
நகுலன் – சிவபெருமான், அறிஞன், பஞ்சபாண்டவருள் ஒருவன்
நகேசன் – மலைகட்குத் தலைவனாகிய இமயமலை.
நக்கரம் – முதலை
நக்கவாரம் – ஒரு தீவு, வறுமை
நக்கிதம் – இரண்டு
நசலாளி – நோயாளி
நசல் – நோய்
நசைநர் - நண்பர்கள்




எழுத்தின் உயிர் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 எழுத்தின் உயிர்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஒரு நல்ல புத்தகம் நூறு தலைவர்களுக்கொப்பானது.
தலைவரின் கடைக்கண் பார்வை நம்மீது படுமா என்று நாம் தவித்துக்கொண்டிருக்கத் தேவையில்லை.
அத்தனை எளிமையாய் நம் புத்தக அடுக்கில் ஓர் ஓரமாய் ஒதுங்கியிருக்கும்.
அல்லது ஒரு முக்காலியில் கிடக்கும்
அல்லது ஒரு கை உணவு உண்டுகொண்டிருக்க
மறுகையில் அலட்சியமாய் ஏந்தப்பட்டிருக்கும்.
ஆசானாய் காதலியாய் நண்பனாய் குழந்தையாய் அன்பளிப்பாய் அந்திப்பொழுதாய் அகிலாண்டகோடியாய்
அடைக்கலம் தந்திருக்கும்.
நம்மை சிறு பறவைகளாய் பாவித்து
அது பாட்டுக்குப் புதுப்புது அர்த்தங்களை
வழியெங்கும் இறைத்துக்கொண்டே போகும்.
சூரியனில் இறைமை தன்அடையாளமற்றுக்
கலந்திருப்பதுபோல் புத்தக ஆசிரியர்.
வாசிக்கும் நேரம் வலது கை கொடுப்பதை
இடது கை யறியாத திறம் நூலாசிரியம்.
காலம் மீறி வாழ்வது நல்லெழுத்தின் அடையாளம்
எல்லாமறிந்தும் புத்தகங்களைப் புதைகுழியிலிட்டுப் பார்ப்பவர்
பிரசவிக்கக்கூடும் இறந்த குழந்தைகளை.
l reactions:
இயற்கை, Sivarasa Karunakaran and 7 others

50 ஆண்டுகால தமிழ் சினிமாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய சித்தரிப்புகள்.

 

https://youtu.be/3v4vledEzLU?si=27-sf9fFSCcG8yes


அருமை நண்பர் சஃபியின் உரை இது. கண்டிப்பாக அனை வரும் கேட்கவேண்டியது. இலக்கியவுலகில் உளவியல் குறித்த விழிப்பையும் வெளியையும் உருவாக்கிய / உருவாக்கிவரும் மிகச் சிலரில் இவரும் ஒருவர். ஆரவாரமில்லாமல் எனில் அவசியமான சமூக-இலக்கியப் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்.

நல்வாழ்த்து களும் நன்றியும் சஃபி.
திரள் மக்கள் மனநல இணையம் நடத்திய
பேரா.ஒ.சோமசுந்தரம் நினைவுக் கருத்தரங்கம்
கலை இலக்கியமும் மனநலமும்
டிசம்பர் 7ல்
உளவியல் நிபுணர்
எழுத்தாளர்
துணை பேராசிரியர்
திரு.முகமத் ஷஃபி அவர்களின்
உரை‌:
50 ஆண்டுகால
தமிழ் சினிமாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய சித்தரிப்புகள்.
மிக முக்கியமான உரை..
தாமத்திற்கு மன்னிக்கவும் Mohamed Safi

Saturday, July 6, 2024

யாதுமாகி நின்றாய் காளி - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 யாதுமாகி நின்றாய் காளி

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


வெளிபரவித் திரிந்து நிரம்பித்தளும்பும்
காற்றை
வேகவேகமாகத் தமதாக்கிக்கொள்ள
வலமும் இடமுமாய்
வட்டமடித்துக்கொண்டிருந்தார்கள்.
சின்னக் குடுவை முதல்
பென்னம்பெரிய பீப்பாய் வரை
அவரவர் வசதிக்கேற்ப
வழித்துத் திணித்துக்கொண்டு
ஆளுயரக் அண்டாவிலோ
அந்த வானம் வரை உயரமான
தாழியிலோ
நிரப்பிவைக்க முயன்றால் எத்தனை
நன்றாயிருக்கும்
என்று அங்கலாய்த்தபடி
நானே காற்றுக்கு அதிபதி
நானே காற்றின் காதலன்
நானே காற்றின் ஆர்வலன்
நானே காற்றின் பாதுகாவலன்
நானே காற்றைப் பொருள்பெயர்ப்பவன்
நானே காற்றை அளந்து தருபவன்
நானே காற்றைக் குத்தகைக்கு எடுத்திருப்பவன்
நானே காற்றைக் கூண்டிலடைத்திருப்பவன்
என்று நானே நானேக்களால்
நன்கு வளர்ந்தவர்கள்
நாளும் மூச்சுத்திணறியவாறிருக்க
நான்கு வயதுக் குழந்தையொன்று
தளர்நடையிட்டுவந்து
நன்றாய்த் தன் காலி உள்ளங்கைகளைத்
திறந்து காண்பித்துச்
சொன்னது:
“என் கையெலாம் காற்று!”

பங்களிப்பின் பல்பொருள் அகராதி : ஓர் அறிமுகம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பங்களிப்பின் பல்பொருள் அகராதி :

ஓர் அறிமுகம்


‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)



கவனமாக வெளிச்சமூட்டப்பட்ட
ஒளிவட்டங்களுக்கு அப்பால்
காரிருளார்ந்த நள்ளிரவில்
மினுங்கிக்கொண்டிருக்கின்றன
நட்சத்திரங்கள்.
கருத்தாய் மேற்கொள்ளப்பட்ட
ஒத்திகையின் பிறகான
கைத்தட்டல்களுக்கு மேலாய்
ககனவெளியில் கலந்திருக்கின்றன
ஒருகையோசைகள்.
காண்பதும் காட்சிப்பிழையாகும்;
கேட்பதும் அழைப்பாகாதுபோகும்...
ஆனபடியால் ஆகட்டும் _
உம் ஒளிவட்டங்கள் உமக்கு;
எம் விண்மீனகங்கள் எமக்கு.

INSENSITIVITYயின் இருபக்கங்கள் : பெரிசு – கிழவர்

ஜூலை 7, 2018இல் ஃபேஸ்புக்கில் பதிவேற்றியது - மீள்பதிவு

 INSENSITIVITYயின் இருபக்கங்கள் :

பெரிசு – கிழவர்



லதா ராமகிருஷ்ணன்

வயதின் காரணமாக உடலில், தோற்றத்தில் கண்டிப்பாக மாற்றங் கள் நிகழ்கின்றன என்றாலும் வயது என்பது உண்மையில் மன தால் நிர்ணயிக்கப்படுகிறது என்று தோன்றுகிறது.

சமீபத்தில் யதேச்சையாக தொலைக்காட்சியில் காணநேர்ந்த பழைய திரைப்படக் காட்சியொன்றில் 60 வயது நிரம்பிய கதாநாயகி ‘இனி தன் வாழ்க்கை சூன்யம் என்று அழுவதைக் காணநேர்ந்தது. வேடிக்கையாகவும் விசனமாகவும் இருந்தது. வாழ்வு சூன்யமாக வயதா காரணம்?

பாதிப்பேற்படுத்தாத ‘தலைமுடிச்சாயம் எல்லாம் வந்துவிட்ட பின்பு, நிறைய மருந்து மாத்திரைகள் கிடைக்கும்போது, முதுமை என்பது குறித்த சமூகத் தின் பார்வையில் நிறைய மாற்றம் ஏற்பட்டுவிட்ட நிலையில் இந்த 60 வயது இப்போது பழைய 60 வயதாக பாவிக்கப்படுவதில்லை என்பதைப் பார்க்க முடிகிறது.

ஆனாலும் நிறைய திரைப்படங்களிலும் தொலைக் காட்சித் தொடர்களிலும், (இதன் தாக்கத்தால் என்றும் சொல்லலாம்) தெருவில் எதிர்ப்படும் இளையதலை முறையினர் மத்தியிலும் ‘பெரிசு’ என்று கேலியாக 60, 60+ வயதினரைக் குறிக்கும் வார்த்தை பரவலாகப் புழங்குகிறது.

‘ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லாதது, வீணாக தனக்குத் தேவை யில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பது, வாயைப் பொத்திக் கிட்டுப் போக வேண்டியது, என இந்த ஒற்றைச்சொல் பலவாறாகப் பொருள்தருவது.

சுருக்கமாகச் சொல்வதென்றால், சமூகம் என்பது இந்த வயதிலா னவர்களையும்(60, 60+ அதற்கு மேல்) உள்ளடக்கியது, இவர்களை யும் உள்ளடக்கியே முழுமை பெறுகிறது என்ற புரிதலை அறவே புறந்தள்ளும் சொல் இந்த ‘பெரிசு’.

சமீபத்தில் இந்தச் சொல்லுக்கு இணையான கிழவர் / கிழவர்கள் என்ற, ஒப்பீட்டளவில் நந்தமிழ்ச் சொல்லை தன்னளவில் அந்தப் பிரிவைச் சேர்ந்த ஒரு சீரிய இலக்கியவாதி யும் இளக்காரமாகப் பயன்படுத்தியிருக்கும் INSENSITIVITYஐ எண்ணி வருத்தப்படாமல் இருக்கமுடியவில்லை.

Friday, July 5, 2024

INSIGHT (a bilingual blogspot for contemporary tamil poetry) - JUNE 2024

INSIGHT 
a bilingual blogspot for
 contemporary tamil poetrY 
 
- JUNE  2024

www.2019insight.blogspot.com


21 POETS - 27 POEMS 
 ORIGINAL POEMS IN TAMIL AND THEIR ENGLISH TRANSLATIONS